புதன், 12 ஆகஸ்ட், 2015

அத்திரிமாக்கு - (இது அரசியல் பதிவு அல்ல!)ஒரு பழைய கதை.  அம்மாவுக்கு அவர்கள் அம்மா சொன்ன கதை.  எனக்கும் அதே அம்மாவுக்கு அம்மா சொன்ன கதை!
 
 
ஒரு கிராமத்து இளைஞன் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றானாம்.
 
அந்த வீட்டில் இருந்தபோது அந்த உறவினர் அவனுக்கு ஒரு தின்பண்டம் செய்து போட்டார்.  அதைச் சாப்பிட்ட இளைஞனுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.
 
"இது எங்கம்மா செஞ்சதே இல்லையே...  காரமாவும் ஒண்ணு இருக்கு, இனிப்பாவும் ஒண்ணு இருக்கு..  என்ன பேர் அத்தே இதுக்கு?" என்றான்.
 
"இதாண்டா கொழுக்கட்டை.  இது எப்பவும் செய்யறதுதானடா மருமவனே..." என்றாளாம் அந்தக் கிழவி.
 
பெயரைப் பலமுறை கேட்டு ஞாபகத்தில் வைத்துக் கொண்டான் இளைஞன்.  அடிக்கடி மறந்துபோகவே, கிளம்பும் வரையும் சரி, கிளம்பும்போதும் சரி, மறுபடி மறுபடி கேட்டு, தொல்லைப் படுத்தி அந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொண்டான்.
 
பயணம் செய்யும் வழியெங்கும் பெயர் மறந்து விடாதிருக்க "கொழுக்கட்டை!  கொழுக்கட்டை!" என்று சொல்லியவண்ணமே வந்தான்.
 
நடு வழியில் ஒரு பள்ளம். 

 
அதைத் தாண்டிக் குதிக்க வேண்டிய சூழ்நிலையில்,  தாண்டிக் குதிக்கும்போது "அத்திரிமாக்கு" என்று தன் வழக்கப்படியே சொல்லிக் கொண்டு தாண்டிக் குதித்தான் அந்த இளைஞன்.
 
அப்போதிலிருந்து "கொழுக்கட்டை... கொழுக்கட்டை" என்று சொல்வதை மறந்து  "அத்திரிமாக்கு.... அத்திரிமாக்கு"  என்று சொல்லியவண்ணம் வீடு வந்து சேர்ந்தான்.
 
தன் அம்மாவிடம் அந்த வீட்டில் ஒரு அதிசயப் பண்டம் சாப்பிட்டதாய்ச் சொல்லி, அம்மாவை அந்தப் பண்டத்தைச் செய்யச் சொன்னான்.
 
அதன் பெயர் கேட்ட தாயிடம் "அத்திரிமாக்கு....  எனக்கு அத்திரிமாக்கு செய்து கொடு"  என்றான்.
 
அம்மா திட்டினாள்.  "என்னடா உளர்றே?  அது மாதிரி எதுவுமே கிடையாதேடா"  என்றாள்.
 
"உனக்குத்தான் தெரியலே...  அங்க பாட்டி ன்ன அழகா செஞ்சு கொடுத்தா...  உடனே எனக்கு அத்திரிமாக்கு செஞ்சு கொடு"  என்று நச்சரித்தான் அவன்.
 
போகப்போக அவன் நச்சரிப்பின் தொல்லை தாங்காத அம்மா, அவனை நையப் புடைத்து விட்டாள்.
 
அழுது கொண்டு உட்கார்ந்திருந்தவனைப் பார்க்க அவன் நண்பன் வந்தான்.
 
"என்னடா..  உன் கன்னம் கொழுக்கட்டை போல வீங்கி இருக்கு?" என்றான்.

"ஆ...... கொழுக்கட்டை.... கொழுக்கட்டை... அம்மா... கொழுக்கட்டை.. கொழுக்கட்டை..  கொழுக்கட்டை செஞ்சு கொடு"  என்று அலறத் தொடங்கினான் அவன்!

42 கருத்துகள்:

 1. கதை ஜோரா இருக்கு. எனக்கு இப்போ அத்தரிமாக்கு இல்லை கொழுக்கட்டை சாப்பிட வேண்டும் போல இருக்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கந்தசாமி ஸார். நிறைய கடைகளில் இப்பொழுது கொழுக்கட்டை விற்கிறார்களே...

   நீக்கு
 2. / எனக்கும் அம்மாவுக்கு அம்மா சொன்ன கதை!/ :)!

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் அம்மா சொன்னது , உங்கள் கதையில் அம்மா மகனை அடிப்பது போல் இருக்கிறது, ஆனால் எங்கள் பக்கம் கணவன் மனைவியை செய்து தரச் சொல்லி கேட்பதும், தெரியாது என்ற சொன்ன மனைவியை அடிப்பதும் அதைப் பார்த்த பக்கத்துவீட்டு பாட்டி என்னடா? கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி இருக்கே இப்படியா அடிப்பே? என்று கேட்கும் போது அதுதான், அதுதான் செய்து கொடுக்க சொன்னேன் என்று கணவன் அசடு வடிவது. கதை., இடத்துக்கு இடம் மாறுபடும் போல் இருக்கிறது. உங்கள் கதை நல்லா இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் பாட்டி, அம்மா எல்லோருமே ஒரிஜினல் கதைகளில் அவர்கள் கற்பனைகளைக் கலந்துவிடுவார்கள்.

   :))))

   நீக்கு
 4. கேட்ட கதை...

  அத்திரி பாச்சா என்று சொல்வார்கள் எங்கள் பக்கங்களில்! :)

  பதிலளிநீக்கு
 5. வெங்கட் நாகராஜ் சொல்வது போல் கதையின் பெயரே அத்திரி பாச்சா கொழுக்கட்டைதான்.
  அத்திரிமாக்கு என்று கேள்வி பட்டது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் சொன்னேனே கோமதி அரசு மேடம்...எங்கள் வீட்டில் அவர்கள் சரக்கைக் கொஞ்சம் சேர்த்து வேறு மாதிரியாக்கி விடுவார்கள்.

   :))

   நீக்கு
 6. வணக்கம்,
  கேட்டுள்ளேன் ஸ்ரீராம்,,,,,,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கேட்ட கதைதான்! நாங்கள் கேட்டவரையில் கணவன் மனைவியை அடித்து கொழுக்கட்டை மாதிரி வீங்குவதாகவும் பக்கத்து வீட்டார் வந்து இப்படி கொழுக்கட்டை மாதிரி வீங்கறாப்பலயா அடிப்பே? என்று கேட்பதாக வரும். அதே போல அத்திரி பாச்சா என்று பள்ளத்தை தாண்டுவான். நன்றி!

  பதிலளிநீக்கு
 8. இந்த வயதுவரை நான் கேட்காதகதை. ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாடி.... இதுவரை இந்தக் கதையைக் கேள்விப்படாத ஒரு ஆளும் இருக்கிறார். நன்றி ஜி எம் பி ஸார்.

   நீக்கு
 9. தெரிந்த கதையே ஆனாலும் தங்கள்
  கைவண்ணத்தில் சிறந்தது!

  அருமை! வாழ்த்துக்கள்!

  த ம +

  பதிலளிநீக்கு
 10. இது நாங்கள் கேட்ட கதைதான்...என்ன நாங்கள் கேட்ட கதையில் அத்திரிபச்சா என்று வரும்.....

  பதிலளிநீக்கு
 11. கதை சூப்பராக இருக்கு கொழுக்கட்டை நல்ல ருசிதான்.

  பதிலளிநீக்கு
 12. நான் கேட்ட வெர்சன் கோமதி அரசு சொன்னது போல்தான்.
  இது ஏன் அரசியல் பதிவு இல்லை எனச் சொல்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன்னா இதில் ஏதும் அரசியல் இல்லாததால் சென்னை பித்தன் ஸார்! நன்றி.

   நீக்கு
 13. உங்க அத்திரி பாச்சா வேலையெல்லாம் அரசியவல்வாதிகளிடம் செல்லாது :)

  பதிலளிநீக்கு
 14. கொழுக்கட்டை சித்த முன்னது பின்னதா இருந்தால் இது என்ன அத்ரிபாச்சா கொழுக்கட்டைமாதிரி இருக்கே என்று சொல்வதுகூட உண்டு. ரஸிக்கும்படியான நம்மூர்க்கதை .கேட்ட கதையானாலும் படிக்க ஞாபகமூட்டியது. நல்ல கொழுக்கட்டை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 15. ம்ம்ம்ம், கோமதி அரசுவையும் அவரை ஆமோதித்த மற்றவர்களையும் வழிமொழிகிறேன். அத்திரிபாச்சா தான்! கொழுக்கட்டைக் கதை! இன்னொண்ணும் உண்டு. எலி கொழுக்கட்டை தின்றது! அதை வேணா இன்னிக்குப் பதிவாப் போட்டு ஒப்பேத்திடவா? :)

  பதிலளிநீக்கு
 16. பௌர்ணமி வெள்ளிக்கிழமை அன்று தான் கொழுக்கட்டை செய்தேன். உளுந்துக் கொழுக்கட்டை, தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை இரண்டும். :)

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே.

  கதை நன்றாக இருக்கிறது. பாட்டி அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். கணவன் மனைவியிடம் செய்து தர சொல்லி அவளுக்கு புரியாததால் அடிவாங்குவது மாதிரி ஒரு கதையை சமயத்தில் படித்தேன்.எப்படியோ.! கொழுக்கட்டை சாப்பிடும் ஆவலை தூண்டி விட்டு விட்டது தங்கள் கதை. நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. நானும் சிறு வயதில் இக்கதையை அத்திரிபாச்சா கொழுக்கட்டை எனக் கேட்டிருக்கிறேன். வழிவழியாக வரும் பாரம்பரியக் கதை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!