பிடித்ததின்/ரசித்ததின் பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடித்ததின்/ரசித்ததின் பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.10.12

படித்ததிலிருந்து.....


=================================



.....வேண்டுமானால் ஒரு விளையாட்டாக நீங்கள் இதைச் செய்து பார்க்கலாம். ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள். அதுதான் கைவந்த கலையாயிற்றே! ஆனால் இந்தக் காப்பி பற்றி யாரிடமும் 'மூச்சு' விடக் கூடாது. பின்பு நீங்கள் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அதை அவர் மனத்தில் நினைக்க வேண்டும் என்று நினையுங்கள் உதாரணமாக, பத்து என்ற எண்ணை அவர் நினைக்க வேண்டும் என்று அவருடைய மனத்துக்கு உத்தரவு கொடுங்கள். ரொம்ப 'ஸ்ட்ராங்'காக. ஆனால் இப்படி உத்தரவு கொடுக்குமுன் அவருடைய மூச்சோட்டத்துக்கு நீங்கள் வந்து விட வேண்டும். பின் அவரை பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் பின் மறுபடியும் பத்துதான் அவர் நினைக்க வேண்டும் என்று உத்தரவு கொடுங்கள். பின்பு, 'நீ நினைத்தது பத்து' என்று சொல்லிப் பாருங்கள். "ஆமாம் பத்துதான் நினைத்தேன். எப்படிக் கண்டுபிடித்தாய்" என்பார்.....

                                                                                             ='ஆல்ஃபா தியானம்' - நாகூர் ரூமி.

=======================================



அமுதசுரபியைத்தான் நீ தந்து சென்றாய் 

இப்போது....

எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம் 

அணைக்கட்டுகளில் திறக்கப்படும் தண்ணீர் 

பள்ளங்களை ஏமாற்றிவிட்டு 

மேட்டை நோக்கியே பாய்கிறது 

சேரிகளில் மட்டுமே யாத்திரை செய்வாய் என்பதைத் 

தெரிந்துகொண்டதால் உன்னை நேசித்தவர்கள் 

தேசத்தையே சேரியாக மாற்றி விட்டார்கள்!

                                                                                                                                        -மு.மேத்தா.

========================================



.....சிவாஜி கணேசனைப் போன்ற நடிப்பும், எம் ஜி ராமச்சந்திரனைப் போன்ற சண்டைப் பயிற்சியும், இந்த இருவரிடமும் இல்லாத பாட்டுத் திறமையும் கொண்ட ஒரே கலைஞர் பி யு. சின்னப்பாதான். ஆனால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தத்திற்கு உரியதுதான்.

பாகவதரிடம் பாட்டுத் திறமை மட்டுமே இருந்தது. தோற்றப் பொலிவு அவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. பொது ஜனங்களுக்கு ஏற்ற புகழ்மிக்க சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்டார். அவர் பெயரில் சில நூல்கள். அவருக்கான சில அங்கீகாரங்கள்.

ஆனால் சின்னப்பாவோ பாட்டுத் திறமையுடன் நடிப்பும், சண்டைப் பயிற்சியும், மானமிக்க மறவாழ்வும் கொண்டிருந்தார். எனினும் இவரைப் பற்றி ஒரு நூல் கூட வெளிவரவில்லை. இதுவே இவரைப் பற்றிய முதல் நூல்........

....உத்தமபுத்திரனில் இரட்டை வேடம்.



மங்கயர்க்கரசியில் மூன்று வேடம்.

ஜகதலப்ரதாபனில் ஐந்து வேடம்.

காத்தவராயனில் பத்து வேடம்......

                  -'தவ நடிக பூபதி சகலகலா வல்லவன் ஜகதலப்ரதாபன் பி யு சின்னப்பா- காவ்யா சண்முகசுந்தரம்.'

========================================



.......இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்த அப்போதைய இந்தியாவின் ஜனாதிபதி முதல்வர் எம் ஜி ஆரை மதிய உணவுக்கு ராஜ் பவனுக்கு அழைத்தார். எம் ஜி ஆர் தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணியிலிருந்தே இருந்தார். நானும் உடன் இருந்தேன். மிகத் தீவிரமாக தலைமைச் செயலக அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் மாநிலம் பற்றிய விவாதங்களில் ஆழ்ந்திருந்தார். மதியம் 12.15 மணிமுதலே ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எம் ஜி ஆரின் தனிச் செயலருக்கு பதட்டமான தொலைபேசிகள் வந்தவண்ணம்  இருந்தன. தொந்தரவு தாங்காத தனிச் செயலர் எம் ஜி ஆரிடம் சென்று விவரத்தை எடுத்துரைத்தார். கண்களைக் கூட இமைக்காமல் எம் ஜி ஆர் அவரிடம், "தயவுசெய்து ஜனாதிபதியிடம் நான் மிகவும் முக்கிய வேலைகளில் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்து, மதிய உணவிற்கு வர முப்பது நாற்பது நிமிடங்கள் தாமதமாகும் என்பதைத் தெரிவித்து விடுங்கள் எனது வருத்தங்களையும் தெரிவித்து விடுங்கள்" என்றார்! 

அதுதான் எம் ஜி ஆர்!

                                                                                  -MGR : Tha Man and The Myth - K. Mohandas.

===============================================



.... அந்த நாட்களில் நான் மற்ற பையன்களால் லேசாக நிராகரிக்கப்பட்டதும் என் எழுத்துக்கு ஒருவாறான ஆதாரம் என்று சொல்லலாம். எந்த ஆட்டத்திலும் எனக்கு என் அண்ணன் போலத் திறமை இல்லை. அவன் கிரிக்கெட் நன்கு ஆடுவான். பம்பரம் நன்றாக ஆடுவான். தீபாவளியில் தெள்ளு குண்டு ஆட்டத்தில் விற்பன்னன். எனக்குக் கிரிக்கெட்டின் 11வதாக அனுப்புவார்கள். ஃபீல்டில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் லாங் ஸ்டாப் என்றொரு இடம். பம்பரத்தில் தலையாரி விளையாட்டில் என் பம்பரத்தை சொறிநாய் மாதிரிக் குத்தி விடுவார்கள் 'குச்சி ப்ளே' என்று ஒரு ஆட்டம். யாரோ ஒரு Masochist கண்டுபிடித்தது. தெற்குவாசல் வரை என் குச்சியைத் தள்ளிக் கொண்டு பொய், அங்கிருந்து நொண்டச் சொல்வார்கள் இளவயது விளையாட்டுகளில் மெளனமாக நிறைய அழுதிருக்கிறேன். இழந்து போன பந்துகளைத் தேடி வரவும், இழந்து போன பட்டங்களைத் துரத்தவும் பயன்படுத்தப்பட்டேன். இந்த நிராகரிப்பும் ஓர் எழுத்தாளனுக்குத் தேவை எனப் படுகிறது.....

...வல்லபபாய் பட்டேல் பற்றி அறுசீர் விருத்தம் எழுதி, அது தென்றலில் பிரசுரமாக, கீழச் சித்திரை வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதை எழுதியவர் மனதில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. வாசகங்கள் ஞாபகமில்லை.

                      -'அக்னி' அமைப்பு அளித்த விருதை ஏற்றுக் கொண்டபோது சுஜாதா உரை.

==================================================


படங்கள் உதவி : நன்றி இணையம்.