அதிகமாக ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன்.
கீழே ஒரு 50 ரூபாய் நோட்டும், அதற்குள் இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளும் பொதிந்தபடி கிடந்தது.
அதைக்
கையில் எடுத்துப் பார்த்து விட்டு கையில் வைத்துக் கொண்டு நடந்தவன் சற்று
தூரத்தில் ஒரு 5 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்தேன். என்னவோ தோன்ற
மேலும் பார்த்துக் கொண்டே நடந்ததில் இரண்டு, இரண்டு ரூபாய் நோட்டுகள்
கிடைக்கவும், என் எண்ணம் சரிதான் என்று புன்னகைத்தபடி மேலும்
சுற்றுமுற்றும் பார்த்தபடி சுற்றி வந்தேன்.
நிச்சயம் 100 ரூபாய் இருக்க வேண்டும். அந்த ஒரு ரூபாய் இங்குதான் எங்கோ கிடக்க வேண்டும்.
புற்களுக்கு நடுவே பார்த்த படி நடந்தேன். ஒரு யு டர்ன் அடித்து அடுத்த லேனில் பார்த்தபடி நடந்தேன்.
இவ்வளவு கிடைத்தது, அது கிடைக்காதா என்ன!
99
ரூபாய் இருக்கிறது என்றால், அந்த ஒரு ரூபாய் எங்கே? இங்கேதான் எங்கோ
கிடக்க வேண்டும்? மற்ற நோட்டுகள் 'சட்சட்'டெனக் கிடைத்தது போல இதுவும்
கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பில் மீண்டும் மீண்டும் குனிந்து
பார்த்துக் கொண்டே நடந்தேன்.
கீழே கிடந்த சில சிறு குப்பைக் காகிதங்கள் கூட ஒரு ரூபாய் நோட்டோ என்று சந்தேகப் படவைத்து எடுத்துப் பார்க்கச் செய்தன.
அது கிடைக்காமல் திரும்பிச் செல்வதில் விருப்பமும் இல்லை. எனவே தேடிக் கொண்டே மீண்டும் ஒரு சுற்று வந்தபோது அவர் எதிர்ப்பட்டார்.
"என்ன தேடறீங்க?"
"ஒரு ரூபாய்!" சொல்லி விட்டு அவரைப் பார்த்தேன். அவரும் ஏதோ தேடிக் கொண்டிருந்தார்.
"நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?"
"99
ரூபாய் சட்டைப் பையில் வைத்திருந்தேன். பொடிமட்டை எடுத்தபோது
விழுந்திருக்க வேண்டும். அதைத்தான் தேடுகிறேன். ஒரு ரூபாய்க்கு வாங்கிய
பொடிமட்டைதான் சட்டைப்பையில் மிச்சம்" என்றார்.
கையில் வைத்திருந்த 99 ரூபாயை அவரிடம் சேர்த்து விட்டு என் வழி நடந்தேன்!
படங்கள் : இணையத்திலிருந்து.
