பொங்கல் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.1.13

பெயரில் என்ன இருக்கிறது?


இதோ கடந்து விட்டது இன்னுமொரு திருநாள். பொங்கலானால் என்ன, தீபாவளியானால் என்ன? பெயரில் என்ன இருக்கிறது? 

                
தீபாவளி நினைவுகளில் பழைய நினைவுகளின் சுகம் இப்போது இல்லை. அதைச் சொன்னால் இப்போது இருப்பவர்களுக்குப் புரியவும் இல்லை. முன் காலத்தில் கூடி விளையாடவும், வெடிக்கவும் இடம் இருந்தது. அதைவிட  வேறு கவனக் கலைப்புகள் இன்றி பண்டிகைகளை உணர்ந்து கொண்டாட  நேரம் இருந்தது! இந்தக் காலப் பிள்ளைகளுக்கு தீபாவளி என்பது நரகாசுரனோ, கௌரி நோன்போ, நண்பர்களுடன் விளையாட்டோ, வெடி வெடிப்போ இல்லை. ஒன்று, 25 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு வாங்கி முதல் நாள், முதல் ஷோ படங்கள். அல்லது இந்தியத் தொலைகாட்சி வரலாற்றில் முதல்முறைப் படங்கள். இல்லாவிட்டால் விவேககஞ்சாசந்தானவடிவேலுக் காமெடிகள்... புத்தாடை அணியும் மகிழ்ச்சியோ, தீபாவளிப் பலகாரங்கள் மகிழ்ச்சியோ கூடக் கொண்டாடப் படுவதில்லை. விளையாட்டு மைதானங்களை விழுங்கிய கான்க்ரீட் கட்டடங்கள் மனங்களையும் இறுக்கி விட்டன.

ஆனால், இந்நாள் குழந்தைகள் பின்னாட்களில் பெரியவர்களானதும் அவர்கள் குழந்தைப் பருவம் மாதிரி இல்லை என்று அப்போது நிலை குறித்து வருத்தப் படுவார்களோ என்னமோ...!

பொங்கலுக்கும் இதே தொலைக்காட்சி, சினிமா தொந்தரவுகள் உண்டு. முகநூலில் இப்போது கொஞ்சம் பேர் பழைய பொங்கல் வாழ்த்துகள் போல படங்களை எடுத்துப் பகிர்கிறார்கள். பார்க்கும்போது பழைய நினைவு வருகிறது. 15 பைசா கார்டிலிருந்து, 1.50 பைசா, 2.50 பைசா என்று பைசாக் கணக்கில் ஏறிக் கொண்டே போகும் காஸ்ட்லி பொங்கல் வாழ்த்துகள். 

                
யாருக்கு வாழ்த்துகள் நிறைய வந்திருக்கிறது என்று நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். யார் யார் அனுப்பி இருக்கிறார்கள், என்ன படம் என்று அறிவதில் ஆர்வம் இருக்கும். பண்டிகைக் குறித்த படங்கள் சாதாரணம். வெட்டி ஒட்டியது போலச் சிறப்புத் தோற்றத்திலும், கலரில், கார்டில், கவரில் ஜிகினா ஒட்டி, முன்பக்கம் ஒன்று பின்பக்கம் ஒன்று என விதவிதமாய் வாழ்த்துகள் வரும்....  

          
அப்புறம் நடிக, நடிகையர் படங்கள் விசேஷம். பொங்கல் வாழ்த்துகளில் அச்சிட்டிருக்கும் வாழ்த்துகளைக் காபி செய்து 10 பைசா, அப்புறம் 15 பைசா கார்டில் ழுதி அனுப்பும் 'ஏழை'ப் பொங்கல் வாழ்த்துகளும் உண்டு.  நான் தபால் கார்டில், என் கையால் படங்கள் வரைந்து, டிசைன் போட்டு அனுப்பியிருக்கிறேன்!! பொங்கலன்று தபால் நிலையம் விடுமுறை என்பதால் அதற்கு முந்தய வேலை நாட்களில் கிடைக்குமாறு  அனுப்புவது வழக்கம்.

          
தபால் அலுவலகம் அந்த ஒரு வாரம் அல்லகல்லோலப் படும். பாவம் தபால்காரர்கள். கட்டுக் கட்டாக வாழ்த்துக் கவர்கள், அட்டைகளைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக அலைவார்கள். பொங்கல் காசும் அவர்களுக்குக் கிடைக்கும். இப்போது வெறிச்சிட்டு நிற்கின்றன தபால் நிலையங்கள்.

                             

காவிரியில் தண்ணீர் இல்லை. தண்ணீர் விட சக இந்தியர்களுக்கே மனதில் ஈரம் இல்லை. பொய்த்துக் கொண்டே வரும் பருவ மழைகள். காய்ந்து கிடக்கும் விளை நிலங்கள்.  தவித்து நிற்கும் விவசாயிகள். விளைச்சல் சரியில்லாத கரும்புகளுக்கு கொள்முதல் விலை சரியில்லாத சோகத்தில் கரும்பு சாகுபடிக்காரர்கள். 

                                                     
விலையில்லா அரிசியில் யாரும் பொங்கல் செய்தார்களா, தெரியாது. ஆனால் அரசாங்கம் தந்த இலவச வேட்டி சேலையை, 100 ரூபாயை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. இலவசம் கொடுக்கும் / வாங்கும் வழக்கம் என்று நிற்குமோ!

         
தீபாவளி, பொங்கலானால் என்ன, குடியரசு தினம், சுதந்திர தினமானால் என்ன, அந்தந்த தின தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை.

பெயரில் என்ன இருக்கிறது? எல்லாப் பண்டிகை தினங்களும் ஒரே விதமாய்த்தான் இருக்கின்றன.