ஒரு பொழுது போகாத மாலை.
மழைமேகம். சென்னையில் மழைமேகம் அபூர்வம். மழை அதை விட அபூர்வம். . வந்தால் வெள்ளம்தான். ஆனால் வராது! காஞ்சா(காய்ந்தால்) கரு.. பேஞ்சா (பெய்தால்) பெரு!
எல்லோரும் வீட்டில் இருக்க, இப்போ என்ன நடக்கும்? நாக்கு நமநம என்று வரும்.
வந்தது!
வந்தது!
கைகளும், கண்களும் தேடி கைக்கு கிடைத்ததை எடுத்தன. இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தது போக மிச்சமிருந்த எம்ப்டிப்பூ! அதாங்க.. காலிஃப்ளவர் கிடைத்தது. ஆனால் தேடிய கடலை மாவு உள்ளிட்ட சில துணைப் பொருட்கள் கிடைக்கவில்லை.
பெரிய வெங்காயம் இரண்டு, சிறிய வெங்காயம் நான்கு, நான்கைந்து பல் பூண்டு, கொஞ்சம் இஞ்சி, காய்ந்த மிளகாய் தேவையான அளவு உப்பு எல்லாம் போட்டு (கொஞ்சம் யோசித்து சிறிது புளியும் சேர்த்துக் கொண்டேன்) மிக்சியில் அரைத்து எடுத்துக் கொண்டேன். வெங்காயம் பூண்டை வதக்கிக் கூடச் சேர்த்திருக்கலாம். ஒரு சோதனைதானே! அதெல்லாம் அடுத்தடுத்த முறைகளில். அதுவும் பொறுமை இருந்தால்!
காலிஃப்ளவரை வெந்நீரில் போட்டு சோதனை செய்து எடுத்துக் கொண்டேன். அரைத்த கலவையில் போட்டேன். ரவா கொஞ்சம், அரிசி மாவு கொஞ்சம் சேர்த்துப் பிசறி (பிசிறி?) எண்ணெயில் பொறித்து எடுத்தேன்.
ஸ்லைஸ்ட் பிரெட் எடுத்து சிறிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொண்டேன். அதைத்தவிர சில முழு ஸ்லைஸையும் தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொண்டேன்.
இப்போது என் முன்னால் இருந்த ஆப்ஷன்ஸ்.. பிரெட் டோஸ்டின் நடுவே இதை வைத்து எடுத்துச் சாப்பிடலாம். அல்லது பிரெட்டுக்கு இதைத் தொட்டுக்க கொண்டு சாப்பிடலாம்.
நாங்கள் செய்தது : பொறித்து எடுத்த காலிஃப்ளவரில் பொறித்து எடுத்த பிரெட் துண்டுகளை போட்டோம். லேசாகப் புரட்டி விட்டோம். சாப்பிட்டு விட்டோம். என்னதான் பொறித்து எடுத்திருந்தாலும் காலிஃபிளவர் கொஞ்சம் சவசவ என்றுதானிருக்கும். அதற்கு எதிர்த்திசையாக மொறுமொறு என்று ப்ரெட் துண்டுகள். சாப்பிடும்போது வித்தியாசச் சுவை!