மதுரை அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.12.14

இப்படியும் ஒரு வியாபாரம் - மதுரை



ஏற்கெனவே பரபர அவசரம். 

வீட்டில் உடம்பு சரியில்லாத அப்பாவைப் பார்த்துக்கொள்ளப் பரீட்சைக்குப் படிக்கும் பையனை வைத்து விட்டு பெரியவர்கள் மூன்று பெரும் மதுரை டவுன்ஹால் ரோட் வந்திருந்தோம். 

                                       
மகன் வாங்கி வரச்சொன்ன 32 GB SD மெமரி கார்டும், OTG அடாப்டரும் வாங்கிக் கொண்டு அப்படியே ஒரு 'பவர் பேங்க்' ட்ராவலிங் சார்ஜரும் வாங்கிக் கொண்டு அரிசி அப்பளம், மெட்ரோ சாம்பார்ப் பொடி, மதர்ஸ் ரெசிப்பி மிக்சட் வெஜிடபிள் வாங்கிக் கொண்டு, ஹோட்டல் கௌரி கங்கா அருகில் மெடிகல் ஷாப்பில் இன்டிரால், ஃப்ளுனாரின், சைநோரஸ்ட் வாங்கிக் கொண்டு திரும்புகையில்......
                                                            

செருப்பு அறுந்து விட்டது! அதுவும் மிக மோசமாக.

ஏற்கெனவே ஓரிருமுறை ஒட்டுப் போட்டு விட்டதால் புதுசு வாங்கி விடலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தால் ஹிந்துஸ்தான் என்ற பெயரில் ஒரு செருப்புக்கடை.

                                    
உள்ளே நுழைந்தோம். கண்ணாடியை மேலே தலையில் ஏற்றிக் கொண்டு வெளியிலேயே நின்றிருந்த மத்திய வயதைத் தாண்டிய இளைஞரின் பார்வையில் ஏனோ அவ்வளவு நட்பு இல்லை.
அவர் காட்டிய முதல் செருப்பு 750 ரூபாய்.

தயங்கி, இது வேண்டாம் என்ற போது, விரலசைப்பால் கீழே காட்டி மிரட்டலான குரலில் ஆங்கிலத்தில் 'கீழே போடுங்க' என்று கூறி, அதே வேகத்தில் பின்னால் நின்றிருந்த ஊழியரிடம் 'எடுத்து வை' என்று கூறி, அடுத்து அவர் காட்டியது 900 ரூபாயில்.


"இந்த.... 150 ரூபாய் அளவில் எல்லாம்.... இல்லையா?" என்றேன் பலவீனமாக.

அதே விரல் சுட்டில் இதையும் கீழே தட்டி, ஊழியரை விரல் சுட்டில் எடுத்து வைக்கச் சொல்லி விட்டு 'அங்க போங்க' என்று எங்களைத் தாண்டிக் கொண்டு ஓரத்துக்கு நடந்தார்.

விடாமல் கியாரண்டி, வாரண்டி, தயாரிப்புச் செலவு, லெதர், கிதர் என்று ஏதோ பேசிக் கொண்டே இருந்தார்.

அப்புறம் அவர் காட்டிய 140 ரூபாய் வெரைட்டி, 170 வெரைட்டி ஆகியவற்றை அவரின் கடுமையான விரலசைவுகளுக்கு நடுவே நிராகரித்தேன்.  கொஞ்சம் ஓகே என்றால்தான் இரண்டாவது செருப்பையும் கையில் (காலில்?) கொடுத்து, போட்டுப் பார்க்கச் சொன்னார். 

அடுத்து காட்டிய ஒரு 200 ரூபாய் செருப்பை ஓகே செய்தேன்.  'இதுவா? (இரண்டாவது செருப்பையும் கொடுத்து) இதையும் போட்டுப்பாருங்க... நடந்து பாருங்க.... இதுதானா? அதெல்லாம் (750 ரூபாய்ச் செருப்பு) வேண்டாமா...அதுக்கெல்லாம் கியாரண்டி உண்டு. இதற்குக் கிடையாது.  இது நீங்கள் போடும்போதே கூட அறுந்து போகும்... வாசல் தாண்டும்போது கூட அறுந்து போகலாம்... நான் திருப்பி எடுக்க மாட்டேன்..."

"அப்புறம் ஏன் விற்கறீங்க..?"

"எல்லாம்தான் வச்சிருப்போம். எது உபயோகம்னு நீங்கள்தான் முடிவு செய்யணும். இது உருப்படாது... இந்தச் செருப்பு உருப்படாது..." என்று காசை வாங்கி உள்ளே போட்டுக் கொண்டார். 

இந்தக் கவனக் கலைப்பில் பில் கூட வாங்காமல் வெறுத்துப்போய் வெளியே வந்தோம்.  ஏண்டா... கியாரண்டி வாரண்டிதான் தர மாட்டீங்க... பில் கூடவாடா...! என்றது மைண்ட் வாய்ஸ்.

"இதைப் போட்டுகிட்டா நீ நாசமாப் போயிடுவே போலேருக்குடா... அவர் அப்படித்தான் சொல்றார்" என்றார் மாமா, நக்கலாக!

சிரித்துக் கொண்டோம்.

கௌரி கங்காவில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

மறுநாள்தான் ஒன்றைக் கவனித்தேன். முக்கியமான விஷயம் அது. அப்போது நான் வைகையில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்!

கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் இரண்டும் வெவ்வேறு வகைச் செருப்புகள்! 

தருமி நாகேஷ் மாதிரி உள்ளே மனக்குரல் ஒலித்தது.

"ஏண்டா... ஏண்டா... ஏண்டா இப்படி! காசு கொடுத்து வாங்கித்தான் செருப்புப் போட்டிருக்கேன்னு சொன்னாலும் பாக்கறவன் 'இது ஒரு மாதிரி இருக்கு, அது ஒரு மாதிரி இருக்கே, எந்த மண்டபத்தில திருடினே' ன்னு கேட்பானேடா.... இப்படிப் புலம்ப வச்சிட்டானே.... புலம்ப வச்சிட்டானே..."