புதன், 24 டிசம்பர், 2014

இப்படியும் ஒரு வியாபாரம் - மதுரைஏற்கெனவே பரபர அவசரம். 

வீட்டில் உடம்பு சரியில்லாத அப்பாவைப் பார்த்துக்கொள்ளப் பரீட்சைக்குப் படிக்கும் பையனை வைத்து விட்டு பெரியவர்கள் மூன்று பெரும் மதுரை டவுன்ஹால் ரோட் வந்திருந்தோம். 

                                       
மகன் வாங்கி வரச்சொன்ன 32 GB SD மெமரி கார்டும், OTG அடாப்டரும் வாங்கிக் கொண்டு அப்படியே ஒரு 'பவர் பேங்க்' ட்ராவலிங் சார்ஜரும் வாங்கிக் கொண்டு அரிசி அப்பளம், மெட்ரோ சாம்பார்ப் பொடி, மதர்ஸ் ரெசிப்பி மிக்சட் வெஜிடபிள் வாங்கிக் கொண்டு, ஹோட்டல் கௌரி கங்கா அருகில் மெடிகல் ஷாப்பில் இன்டிரால், ஃப்ளுனாரின், சைநோரஸ்ட் வாங்கிக் கொண்டு திரும்புகையில்......
                                                            

செருப்பு அறுந்து விட்டது! அதுவும் மிக மோசமாக.

ஏற்கெனவே ஓரிருமுறை ஒட்டுப் போட்டு விட்டதால் புதுசு வாங்கி விடலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தால் ஹிந்துஸ்தான் என்ற பெயரில் ஒரு செருப்புக்கடை.

                                    
உள்ளே நுழைந்தோம். கண்ணாடியை மேலே தலையில் ஏற்றிக் கொண்டு வெளியிலேயே நின்றிருந்த மத்திய வயதைத் தாண்டிய இளைஞரின் பார்வையில் ஏனோ அவ்வளவு நட்பு இல்லை.
அவர் காட்டிய முதல் செருப்பு 750 ரூபாய்.

தயங்கி, இது வேண்டாம் என்ற போது, விரலசைப்பால் கீழே காட்டி மிரட்டலான குரலில் ஆங்கிலத்தில் 'கீழே போடுங்க' என்று கூறி, அதே வேகத்தில் பின்னால் நின்றிருந்த ஊழியரிடம் 'எடுத்து வை' என்று கூறி, அடுத்து அவர் காட்டியது 900 ரூபாயில்.


"இந்த.... 150 ரூபாய் அளவில் எல்லாம்.... இல்லையா?" என்றேன் பலவீனமாக.

அதே விரல் சுட்டில் இதையும் கீழே தட்டி, ஊழியரை விரல் சுட்டில் எடுத்து வைக்கச் சொல்லி விட்டு 'அங்க போங்க' என்று எங்களைத் தாண்டிக் கொண்டு ஓரத்துக்கு நடந்தார்.

விடாமல் கியாரண்டி, வாரண்டி, தயாரிப்புச் செலவு, லெதர், கிதர் என்று ஏதோ பேசிக் கொண்டே இருந்தார்.

அப்புறம் அவர் காட்டிய 140 ரூபாய் வெரைட்டி, 170 வெரைட்டி ஆகியவற்றை அவரின் கடுமையான விரலசைவுகளுக்கு நடுவே நிராகரித்தேன்.  கொஞ்சம் ஓகே என்றால்தான் இரண்டாவது செருப்பையும் கையில் (காலில்?) கொடுத்து, போட்டுப் பார்க்கச் சொன்னார். 

அடுத்து காட்டிய ஒரு 200 ரூபாய் செருப்பை ஓகே செய்தேன்.  'இதுவா? (இரண்டாவது செருப்பையும் கொடுத்து) இதையும் போட்டுப்பாருங்க... நடந்து பாருங்க.... இதுதானா? அதெல்லாம் (750 ரூபாய்ச் செருப்பு) வேண்டாமா...அதுக்கெல்லாம் கியாரண்டி உண்டு. இதற்குக் கிடையாது.  இது நீங்கள் போடும்போதே கூட அறுந்து போகும்... வாசல் தாண்டும்போது கூட அறுந்து போகலாம்... நான் திருப்பி எடுக்க மாட்டேன்..."

"அப்புறம் ஏன் விற்கறீங்க..?"

"எல்லாம்தான் வச்சிருப்போம். எது உபயோகம்னு நீங்கள்தான் முடிவு செய்யணும். இது உருப்படாது... இந்தச் செருப்பு உருப்படாது..." என்று காசை வாங்கி உள்ளே போட்டுக் கொண்டார். 

இந்தக் கவனக் கலைப்பில் பில் கூட வாங்காமல் வெறுத்துப்போய் வெளியே வந்தோம்.  ஏண்டா... கியாரண்டி வாரண்டிதான் தர மாட்டீங்க... பில் கூடவாடா...! என்றது மைண்ட் வாய்ஸ்.

"இதைப் போட்டுகிட்டா நீ நாசமாப் போயிடுவே போலேருக்குடா... அவர் அப்படித்தான் சொல்றார்" என்றார் மாமா, நக்கலாக!

சிரித்துக் கொண்டோம்.

கௌரி கங்காவில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

மறுநாள்தான் ஒன்றைக் கவனித்தேன். முக்கியமான விஷயம் அது. அப்போது நான் வைகையில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்!

கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் இரண்டும் வெவ்வேறு வகைச் செருப்புகள்! 

தருமி நாகேஷ் மாதிரி உள்ளே மனக்குரல் ஒலித்தது.

"ஏண்டா... ஏண்டா... ஏண்டா இப்படி! காசு கொடுத்து வாங்கித்தான் செருப்புப் போட்டிருக்கேன்னு சொன்னாலும் பாக்கறவன் 'இது ஒரு மாதிரி இருக்கு, அது ஒரு மாதிரி இருக்கே, எந்த மண்டபத்தில திருடினே' ன்னு கேட்பானேடா.... இப்படிப் புலம்ப வச்சிட்டானே.... புலம்ப வச்சிட்டானே..."

38 கருத்துகள்:

 1. ஐயையோ, பக்கத்தில பேட்டா கடை ஏதும் இல்லீங்களா?

  பதிலளிநீக்கு
 2. செருப்பு எல்லாம் எனக்குத் தனியாச் சொல்லி செய்து வந்ததைத் தான் போட முடியும். கடையில் வாங்கிப் போட முடியாது. ஆகவே இந்தப் பிரச்னை இல்லை. :))))

  பதிலளிநீக்கு
 3. அது என்ன, சாம்பார்ப் பொடியெல்லாம் விலைக்கு வாங்கிக் கட்டுப்படி ஆகுமா? :)))) மிக்சட் வெஜிடபிள் தான் இன்னிக்குப் பண்ணலாம்னு இருந்தேன். காலம்பர பண்ணின சாம்பார் இருக்கிறதாலே இன்னிக்கு ராத்திரி தோசை தான். :)))

  பதிலளிநீக்கு
 4. முதல்லேயே கவனிச்சிருந்தா அங்கேயே திரும்பப் போய்க் கேட்டிருக்கலாம். :)

  பதிலளிநீக்கு
 5. அவர் மிரட்டுனதில் கதி கலங்கி சரியாக் கவனிக்கலை போல இருக்கே!


  இதுக்குத்தான் சின்னப்பசங்களோடு கடைக்குப் போகணும்..அவுங்க கண்ணுலே எல்லாம் தெளிவுதான்:-)

  பதிலளிநீக்கு
 6. செருப்பில்லாமல் வீடு வந்தாலும் இந்தக் கடையில் நீங்கள் வாங்கியிருக்கக் கூடாது. அப்பகுதியில் இது ஒரு கடைதான் போலும்.

  பதிலளிநீக்கு
 7. இதே மாதிரி சென்னை பர்மா பஜாரில் ஷர்ட் துணியை ரொம்ப நேரம் பேரம் பேசி வாங்கி வந்தேன். முழுக்கை சட்டை என்பதால் 2 மீட்டர் துணி எடுத்திருந்தேன். தையல் காரரிடம் கொடுத்தபோது 1.80 மீட்டர் மட்டுமே இருந்தது. அதனால் என்ன..? அரைக்கை சட்டையாக தைக்க சொல்லிவிட்டேன். மறுபடியும் பர்மாபஜாருக்கு போனா வேலைக்கு ஆகாதுன்னு தெரியும்

  பதிலளிநீக்கு
 8. மாடிப்படி மாது, பர்மா பஜார் என்றாலே கொஞ்சம் கவனம் தேவை! :)))

  பதிலளிநீக்கு
 9. மெடிகல் ஷாப் பக்கத்தில் கெளரி கங்காவா, அல்லது கெளரி கங்கா பக்கத்தில் மெடிகல் ஷாப்பா?..

  அந்தக் கால டவுன் ஹால் தெரு பக்கவாட்டில் நீள தெப்பக்குளம் இருந்தது. இப்போ எப்படி தெரிலே; கண்ணுக்குப் பட்டால் சரிதான்.

  கொஞ்சம் அசந்தால் மனிதர் ஜோடி- செருப்பு ஜோடி எது முக்கியம் என்று தொலைக்காட்சியில் பட்டிமன்றமே வைத்துவிடும் அளவுக்கு இந்தப் பதிவில் விஷயம் இருக்கிறது.

  ஹி..ஹி.. கதை 'பண்ணற' புத்தி.
  வைகையில் ரூபாய் 100/-க்கு இதே மாதிரியான செருப்பு விற்பனை செய்யப்பட இரண்டு ஜோடி வாங்கிக் கொண்டு டவுன் ஹால் ரோடு வியாபார இழப்பை சரிக்கட்டி விட்டதாக மனசை ஒத்துக்கொள்ள வைத்து...

  பதிலளிநீக்கு
 10. வலைப் பூ நண்பருக்கு,
  வணக்கம்!
  அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.fr

  (இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
  பங்கு பெற வாருங்கள்
  குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
  நன்றி!

  பதிலளிநீக்கு
 11. பழனி.கந்தகசாமி ஸார்... சாதாரணமாவே பேட்டா கடைன்னு பர்டிக்குலரா எல்லாம் தேடிப்போய் வாங்கறதில்லை. அதுவும் அன்று வீடு திரும்பும் அவசரம் வேறு!

  கீதா மேடம்.... தனியா ஆர்டர் செய்தா? ஏன்? மதர்ஸ் ரெசிப்பி மிக்சட் வெஜிடபிளில் எனக்கு நான் சின்ன வயதில் சாப்பிட்ட டி ஆர் ஆர் ஊறுகாய் வாசனை அடித்தது ஒரு காரணம். சாம்பார்ப்பொடி அரைக்க அளவு சொல்லி, வாங்கி அரைக்கச் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். அண்ணனுக்கும், அண்ணன் பையனுக்கும் இதெல்லாம் தெரியாது. மன்னி காலமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. நான் அங்கு சென்று வந்த நாட்களில் தோசை/இட்லி மிளகாய்ப்பொடி, அடை மாவு, தோசை மாவு, தக்காளித் தொக்கு ஆகியவை செய்து வைத்து விட்டு வந்தேன்.

  அந்தச் செருப்புகளைக் கவனித்தீர்கள் இல்லையா? உடனே கண்டு பிடிக்க முடியவில்லை!

  யோகன் பாரிஸ் வருகைக்கு நன்றி. நம்ம ஊராச்சேன்னு நம்பி உள்ளே நுழைந்தோம். வேறு கடைகள் இருக்கும். பெரிய கடைத்தெரு அது. சட்டென்று முடிக்க நினைத்ததால் வந்த வினை!

  மாடிப்படி மாது.. பர்மா பஜாரை எல்லாம் நம்ப மாட்டேன்! அதே சமயம் இதே மதுரையில் ஒரு சட்டைத்துணி வியாபாரத்தில் நான் சிக்கிச் சீரழிந்ததை ஆரம்ப கால 'எங்கள்' பதிவு ஒன்றில் எழுதி இருந்தேன்! பதிவின் தலைப்பு 'அதான் அடி வாங்கலை இல்லை விடுங்க!' :)))

  இல்லை டிடி... தவறும் நம் மீதும் தான்! ஒரு 'ம்' அங்கு அவசியம் தேவை. ஒருவேளை அவரும் கவனிக்காமல் தந்து விட்டாரோ என்னவோ...

  நன்றி ஜீவி ஸார்... தெப்பக்குளம் கடைகளால் மறைக்கப் பட்டிருக்கிறது! கௌரி கங்கா பக்கத்தில் மெடிக்கல் ஷாப்... மெடிக்கல் ஷாப் பக்கத்தில் கௌரி கங்கா... ஹிஹிஹி.. ரெண்டும் பக்கத்துல பக்கத்துலதானே! வைகைல இன்னொரு ஜோடி செருப்பு வாங்கினால் எக்ஸ்ட்ரா செலவுதானே! :)))

  நன்றி புதுவை வேலு.

  பதிலளிநீக்கு
 12. செருப்பு வாங்க வேணூமா?
  ஓரு முறை பாண்டிச்சேரி "குபேர் பஜார்" பக்கம் வாங்க!
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 13. இப்படிக்கூட மதுரையில் நடக்கிறதா?

  செருப்பை சட் என்று பார்த்தால் வித்தியாசம் தெரியாத மாதிரிதான் இருக்கிறது.

  இப்போது 200 ரூபாய் போச்சா?

  பதிலளிநீக்கு
 14. வாங்க கோமதி அரசு மேடம்... மதுரை மட்டும் விதிவிலக்கா என்ன!

  //200 ரூபாய் போச்சா? //

  அதை எல்லாம் பார்த்தால் முடியுமா? இப்படியே போட்டுக்கொண்டு ஓட்ட வேண்டியதுதான்! :)))

  பதிலளிநீக்கு

 15. மாடிப்படி மாது... நான் சொன்ன பதிவின் சுட்டி!

  http://engalblog.blogspot.in/2009/11/blog-post_9966.html

  பதிலளிநீக்கு
 16. எவ்வளவு விலையுயர்ந்த செருப்பானாலும் ஒரு மழையில் நனைந்தால் பிய்ந்து போய் விடுகிறது.

  பதிலளிநீக்கு
 17. ஒரு முறை இரண்டும் வெவ்வேறு அளவுடையதாக இருந்ததை வீட்டுக்கு வந்துதான் கவனித்தேன். பின்னர் மாற்றிக் கொண்டு வந்து விட்டேன்.

  கருத்திடுமோது Iam not robot நிருபிக்க சொல்லி கேட்கிறதே . அதனை நீக்கி விடவும்

  பதிலளிநீக்கு
 18. அன்புள்ள முரளிதரன்,

  ரோபாட் கேள்வியெல்லாம் லட்சியம் செய்யாமல் கருத்திடுங்கள். வெளியாகி விடும். நாங்கள் வைத்திருப்பது அல்ல அது. தானே வருவது!

  :))))

  பதிலளிநீக்கு
 19. :))))

  சில கடைகளில் இப்படித்தான் லொள் லொள் ஆசாமிகள் இருந்து வருபவர்களை பயமுறுத்துகிறார்கள்.

  தில்லியில் ஒரு கடையில் ரெடிமேட் சட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு சட்டைக்கு மேலே எடுத்துக் காட்ட மாட்டேன் என்று கறாராக சொன்னார். நான் வேறு கடையில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அகல, “சட்டை வாங்கற மூஞ்சியைப் பாரு!” என்று சொல்ல, ஒரே ரகளை!

  பதிலளிநீக்கு
 20. ஹா....ஹா... ஹிந்தியில் சொன்னாரா, தமிழிலா வெங்கட்?

  ரிதம் பட டயலாக் நினைவு இருக்கிறதா?

  :))))

  பதிலளிநீக்கு
 21. ஹிந்தியில் தான் ஸ்ரீராம்! :)))

  ஒரே தூ தூ மே மே! தான்! :)

  பதிலளிநீக்கு
 22. அந்த கடைக்காரன் திரும்ப எடுத்துக் கொள்ளப் போவதில்லை ,நாளைக்கோ ,புத்தாண்டுக்கோ மதுரை வரும்போது இதேமாதிரி ஜோடி மாறிய செருப்பை வாங்கினால் சரியாப் போச்சு :)

  பதிலளிநீக்கு
 23. ஹா...ஹா... ஹா... பகவான் ஜி... இது நல்லா இருக்கு!

  பதிலளிநீக்கு
 24. இந்தப் பதிவைப் படித்ததும் ஒருமுறை ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. ரயிலில் ஏறியதிலிருந்தே அந்த மாமாவிற்கும், எதிர் சீட்டில் இருந்த ஒரு பெண்மணிக்கும் எட்டாம் பொருத்தமாக இருந்தது. தன்னுடைய கீழ் பெர்த்தை அந்தப் பெண்மணிக்கு வேண்டாவெறுப்பாக கொடுத்தார் அந்த மாமா. ஒரே முணுமுணுப்பு. காலையில் அந்தப் பெண்மணி பெரம்பூரில் இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் மாமா ஒரே கூச்சல்! என்னவாயிற்று என்றால் மாமாவின் ஒரு செருப்பை அந்த பெண்மணி போட்டுக் கொண்டு இறங்கி விட்டார்! இருட்டில் பாவம் அவருக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. லைட் போட்டுப் பார்த்தால் மாமாவின் கையில் இருந்த இரண்டு செருப்புகளும் ஒரே மாதிரி!
  மாமா எப்படிக் கண்டுபிடித்தார் தன் செருப்பை அந்தப் பெண்மணி போட்டுக் கொண்டு போய்விட்டார் என்று என்பது புரியாத புதிர்!

  உகள் பதிவில் இருந்த இரண்டு ஜோடி செருப்புகளைப் பார்த்தவுடன் இந்த சம்பவம் தான் நினைவிற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 25. ஹா...ஹா...ஹா...

  ரஞ்சனி மேடம்... இது போல அனுபவங்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இருக்கிறது என்று தெரிந்தால் கொஞ்சம் ஆறுதலாய்த்தான் இருக்கிறது!

  :)))))))

  பதிலளிநீக்கு
 26. ஸ்ரீராம் சார்,
  தைரியமாகப் போட்டுக் கொள்ளுங்கள். நீங்களே சொன்னால் தான் தெரியும். போட்டோவைப் பார்க்கும் போது ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே

  பதிலளிநீக்கு
 27. நன்றி ராஜலக்ஷ்மி மேடம்... தைரியம் கொடுத்திருப்பதற்கு நன்றி. எப்படியும் போட்டுக்கொண்டுதான் ஆகணும்!

  பதிலளிநீக்கு
 28. //வைகைல இன்னொரு ஜோடி செருப்பு வாங்கினால் எக்ஸ்ட்ரா செலவுதானே! :))) //

  இல்லை, ஸ்ரீராம்!

  கணக்கு சொல்கிறேன், கேளுங்க:

  டவுன் ஹால் ரோடு-- ஒரு ஜோடி-- ரூபா. 200

  வைகையில் இரண்டு ஜோடி= ரூ.200/=

  ஆக மூணு ஜோடி = ரூபா.400/=

  ஆக ஒரு ஜோடி: 400/3= ரூ.133.30

  டவுன் ஹால் ரோடு ரூ.200-ஐ இப்போ ரூ.133.30 ஆக்கியாச்சா?..

  உங்க அதிர்ஷ்டம், இப்போ வைகைலே வாங்கின இரண்டு ஜோடிலே, மதுரைலே வாங்கின மாறி இருக்கிற ஏதாவது ஒரு செருப்பு பொருத்தமா இருந்தா,
  அந்த மாறியிருக்கிற அவலத்தையும் நேர் படுத்திடலாமில்லையா?..

  ஆக, எல்லாமே பொருத்தமா மூணு ஜோடி செருப்புகள் கிடைச்சிடும்!
  அதுவும் each pair Rs.133.30
  சல்லிசான விலைலே!

  இப்படி எல்லாத்திலேயும் குருட்டாம் போக்கில் ஏதாவது யோசனை தான் கதைகள் ஆகின்றன!

  பதிலளிநீக்கு
 29. அந்த கடைக்காரரே எந்த மண்டபத்தில் திருடியிருப்பாரோ?
  இப்படியெல்லாம் கூடவா ஏமாத்துறாங்க!

  பதிலளிநீக்கு
 30. [[மாடிப்படி மாது said...
  இதே மாதிரி சென்னை பர்மா பஜாரில் ஷர்ட் துணியை ரொம்ப நேரம் பேரம் பேசி வாங்கி வந்தேன். முழுக்கை சட்டை என்பதால் 2 மீட்டர் துணி எடுத்திருந்தேன். தையல் காரரிடம் கொடுத்தபோது 1.80 மீட்டர் மட்டுமே இருந்தது. அதனால் என்ன..? அரைக்கை சட்டையாக தைக்க சொல்லிவிட்டேன். மறுபடியும் பர்மாபஜாருக்கு போனா வேலைக்கு ஆகாதுன்னு தெரியும்]]

  பர்மா பஜார் என்றல்ல எங்கு பிட் துணி விற்க்கிறார்களோ அங்கு இப்படிதான் செய்வார்கள்-கவனம் தேவை. உதாரணமா 3.8 மீட்டர் துணியில் சாய்வாக வெட்டி (diagnolly) இரண்டு பீஸ் இரண்டு மீட்டர் என்று விர்ப்பர்கள். ஒரு பக்கம் 2 மீட்டர் மறு பக்கம் 1.8 மீட்டர். மழு பெல் துணியில் இருந்து வெட்டினால் பிளாஸ்டிக் டேபில் நடுவில் ஒரு 10 சென்டிமீட்டர் வெட்டி எடுத்து டேப்பை ஒட்டிவிடுவார்கள். பார்க்க ஒரு மீட்டர் மாதிரி இருக்கும் ஆனால், 90 சென்டிமீட்டர் தான் இருக்கும். சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களிடம் ஏமாற்ற முடியாது. ஒரு டேப் மோட்டார் பைக்கில் போட்டு கொள்ளுங்கள். நான் ஆறு அடி உயரம்; எனக்கு ஒரு ஜான் எவ்வளவு நீளம் என்று தெரியும். சந்தேகப்படு! தமிழனிடம் சந்தேகப்படு!

  பதிலளிநீக்கு
 31. //கீதா மேடம்.... தனியா ஆர்டர் செய்தா? ஏன்?//

  ஹெஹெஹெஹெ, நான் தான் எல்லாத்திலேயும் தனி ஆச்சே, இதில் மட்டும் எப்படி ஊரோடு ஒத்துப் போக முடியும்? என் கால் அளவே சாதாரணமாகப் பெண்களுக்கு இருக்கும் அளவை விடப் பெரிசு. அது காரணம் இல்லை. கால் வலி, உள்ளங்கால் பிரச்னை எல்லாம் உண்டு. அதற்கேற்றாற்போல் முன்னால் எல்லாம் சென்னை ஜிடியில் மருந்து மொத்த வியாபாரம் செய்யும் தெருவில் உள்ள கடைகளில் ஒரு கடையில் இப்படிச் செருப்புகள் மருத்துவரின் ஆர்டரின் பேரில் செய்து தந்தார்கள். அப்புறமா அம்பத்தூரிலேயே இதை ஒருத்தர் வீட்டிலேயே தொழில்முறையில் செய்து மருத்துவமனைகள், தனிப்பட்ட நபர்கள்னு கொடுக்கிறார். எங்க குடும்ப மருத்துவர் ஆலோசனையின் பேரில் அங்கே போய் அளவு கொடுத்துட்டு வந்து தைச்சுத் தந்ததும் வாங்கிப்பேன்.:))))

  பதிலளிநீக்கு
 32. தங்களின் அனுபவம் எனக்கு பாலசந்தரின் மன்மத லீலை திரைப்படத்தை நினைவூட்டியது. அத்திரைப்படத்தில் ஒருவர் தன் ஒரு காலில் தன் செருப்பையும் மற்றொரு காலில் இன்னொருவர் செருப்பையும் அணிந்திருப்பார். அதனை மறைக்க கநாநாயகன் படும் பாடு. மிகவும் ரசனையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 33. :))! நல்லாவே கலவரப்படுத்தியிருக்கிறார் கடைக்காரர் எனத் தெரிகிறது:).

  பதிலளிநீக்கு
 34. ஹாஹாஹா! உங்க பார்வையில கோளாறா? எதுக்கும் கண்டாக்டரை செக் செய்துடுங்க!

  பதிலளிநீக்கு
 35. ஹா.. ஹா...
  கடைக்காரர் அரட்டிய அரட்டலில் ஜோடி மாறிப்போச்சா அண்ணா...

  பதிலளிநீக்கு
 36. பின்னூட்டங்களே வெகு சுவாரஸ்யம். மதுரையில் கூட இப்படி வ்னடக்கிறதான்னு கேட்கமாட்டேன். எல்லா ஊரும் போல் மதுரையும் மாறிவிட்டது. நீங்கள் முன்னேற்பாடாக எல்லாம் செய்து வைத்துவிட்டு வந்தது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு. அடுத்த செருப்பை நி தானமாகப் பார்த்துவாங்கவும்..பையனுக்கு இவ்வளவுய் சமாசாரம் வாங்கும்போ து உங்கள் செருப்பில் இன்னும் கொஞ்சம் பணம் போட்டு இருக்கலாம்.பாதங்களுக்கு கவனம் தேவை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!