சம்பாரப்புளி 'கேள்வி'க்கான விடை சென்ற வாரமே 'லீக்'காகி விட்டதால் அதனை விடுத்து ( !....! ) அதே புத்தகத்திலிருந்து அடுத்த உணவுக்குறிப்புக்குப் போவோம்.
================================================================
மாங்காய் மசியல் :
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - கால் ஆழாக்கு
மாங்காய் -1
ப.மிளகாய் - 2
வற்றல் மிளகாய் - 1
சாம்பார்ப்பொடி - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
துவரம்பருப்பை அரை டம்ளர் நீர் விட்டு நன்றாகக் குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
மாங்காயை மெல்லியதாகச் சிறிது நீளநீளமாக நறுக்கி ஒரு கரண்டி தண்ணீர் விட்டு சாம்பார்ப்பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்தவுடன், இதில் வெந்த பருப்பைப் போட்டு, உப்பு சேர்த்து, வற்றல் மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், அரை ஸ்பூன் துவரம்பருப்பு இவற்றைச் சிறிது எண்ணெயில் வறுத்துக் கடைசியில் பச்சை மிளகாயையும் சேர்த்து ஒரு தடவை வறுத்து அதையும் கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
மாங்காய் போடுவது போலவே அரை நெல்லிக்காயையும் சேர்க்கலாம்.25 நெல்லிக்காய் எடுத்துக் கொண்டு கொட்டை நீக்கி சிறு துண்டுகளாகச் செய்து வேக வைத்துக் கொள்ளலாம்.
=====================================================================
நான் கீரை மசியல் தவிர வேறு மசியல் எதுவும் சாப்பிட்டது கிடையாது.
அல்லது சாப்பிட்டிருந்தாலும் அதற்கு வேறு நாமகரணங்கள்
இருந்திருக்கக்கூடும்!
முளைக்கீரையோ,
அரைக்கீரையோ, மணத்தக்காளிக் கீரையோ ஏதோ ஒன்றைப்போட்டு மசியலோ, அல்லது
மோர்க்கூட்டு போலவோ செய்வார்கள். வாழைத்தண்டு, முட்டைகோஸ் போட்டுக் கூட
மோர்க்கூட்டு செய்வார்கள்.
அம்மா
செய்யும் குருமா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கத்தரிக்காய், உ.கி, கேரட்,
வெங்காயம், பூண்டு பீன்ஸ் எல்லாம் போட்டு செய்வார்கள். காய் நறுக்கித்
தருவது, தேங்காய் துருவித் தருவது நான்தான்.
குருமா இரண்டு வகையாகச் செய்வாள் அம்மா. பச்சை மிளகாய்க் காரம் மட்டும் போட்டு, மசாலா சேர்த்து வெண் குருமா, காரப்பொடி சேர்த்து சிவப்புக் குருமா. மாறுதலுக்காக மாற்றி மாற்றிச் செய்வாள். இரண்டுமே எனக்குப் பிடிக்கும்.
சப்பாத்திக்கு அப்பளம் இடுவதும் நான்தான். சகோதர சகோதரி சிறு அளவில் உதவி, இட்டு முடிப்பதற்குள் வேகமாக நான் நிறைய இட்டு விடுவேன்.
குருமா
செய்து முடித்ததும் ஒரு வினோதமான காரியம் நடக்கும். முன் அனுபவங்களே
காரணம்! அந்தக் குருமா ஐந்து சரி பாகமாய்ப் பிரிக்கப்படும். அவரவர்களுக்கு
ஒரு தனிப் பாத்திரத்தில் தரப்பட்டு விடும். தரப்பட்டுவிடும் என்ன, நான்தான்
பங்கு பிரிப்பேன். நியாயமாகத்தான் பிரிப்பேன்!
கொஞ்சம் தனியாகவே சாப்பிட்டு விடுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மீதியும் வைத்துக் கொள்வேன். அம்மா பங்கிலிருந்தும் எனக்குக் கிடைக்கும்!
மாங்காய் மசியல்னு சொல்லி ஆரம்பித்து விட்டு குருமா வரைக்கும் வந்தாச்சு!
நன்றி நன்றி நன்றி...... : படங்கள் இணையத்திலிருந்து...