முருங்கைக் கீரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருங்கைக் கீரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.3.15

'திங்க'க்கிழமை : முருங்கைக் கீரை



                                                                                 
                                                            Image result for drumstick images
மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒன்று பத்து ரூபாய்.  நம்ம வீட்டுத் தோட்டத்துல இருக்கற மரமா,  காய்க்கற வழியாகவும் தெரியல! என்ன செய்யலாம்?


காய்தானே இல்லை?  இலையைப் பறித்துவிட வேண்டியதுதான்!  முருங்கை இலையில் வைட்டமின் A, இரும்புச்சத்து எல்லாம் இருக்கு என்று யாரோ சொன்னாங்களே..


எது இருந்தா என்ன,  இல்லாட்டா என்ன.. முருங்கை இலையைப் போட்டுச் செய்யும் எதுவும் எனக்குப் பிடிக்கும்!  விடலாமோ?  பறித்து விட்டோம்.


கடையில் கீரை கிடைத்தால் வாங்கி வா என்றால் பாஸின் பதில் எப்போதுமே "கிடைக்கலீங்க" தான் என்பதற்கு ஒரு காரணம் உண்டு!  "யார் ஆய்வது?"



முதலில் இப்படி இருக்கும் மு. கீரையை இப்படி பிரித்துக் கொள்ளவேண்டும்.



அப்புறம் இப்படி...


அப்புறம் நான் இன்னமும் கூட தனித்தனி இலையாகப் பிரித்துக் கொள்வேன்.

முருங்கை இலையில் சமையல் வகை என்னென்னவோ பண்ணலாம்.  நான் இப்போ என்ன பண்ணினேன் என்பதைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.  நாளை செய்து தருகிறேன் என்று சொன்ன பாஸை எதிர்த்து நின்றேன்.  "எனக்கு இப்பவே வேணும்..... எனக்கென்ன செய்து கொள்ளத் தெரியாதா?"


"என்ன செய்யப் போறீங்க"


"என்னவோ ஒன்று... பாரு!"


வெறும் துவட்டலோ, தேங்காய்த் துருவல் போட்ட துவட்டலோ செய்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.  அப்புறம் யோசித்து, இரண்டு வெங்காயம், ஒரு தக்காளி நறுக்கிக் கொண்டு, அதை வதக்குமுன் இரண்டு பல் பூண்டை நசுக்கிப் போட்டேன்.  பிறகு ஆய்ந்த இலைகளை (நீரில் நன்றாக சுத்தம் செய்து கொண்டுதான்) வாணலியிலிட்டு, தேவையான உப்புப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைத்தேன்.



கொஞ்ச நேரத்திலேயே அது வெந்து விட, காரப்பொடி போடலாமா, சாம்பார்ப்பொடி போடலாமா என்று யோசித்து, சாம்பார்ப்பொடியே போடலாம் என்று முடிவெடுத்து, போட்டு, திருப்பி விட்டு இறக்கி மூடினேன்.


தேங்காய்த் துருவல் அப்படியேவோ,  இல்லை லேசாக அரைத்து விட்டோ சேர்க்கலாமா என்று நினைத்து, பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.   செய்திருக்கலாம்.



சாதாரணமாக பாஸிடம் நான் சொல்வது என்னவென்றால் எந்தக் கீரை செய்யும்போதும்  "சாப்பாட்டுக்கு முன்னரே என் பங்கு ( !!! ) கீரையை 'கப்'பில் போட்டுக் கொடுத்துடு" என்று சொல்வது வழக்கம்.  சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவை கெட்டு விடும் என்று தோன்றும் எனக்கு!


எனவே இதையும் அப்படிக் கொஞ்சம் சாப்பிட்டேன்.  (வெங்காயம், அதிலும் பூண்டு போட்டால் என் பாஸ் அதன் கிட்டேயே வரமாட்டார்!) அப்புறம் பாக்கி இருந்ததை சாப்பாட்டுடன் சேர்த்துத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டேன்.


இன்னும் நிறைய முருங்கைக் கீரை பாக்கி இருந்தது.  அதை மறுநாள் பாஸ் பொரிச்ச குழம்பாக வைக்க, முதல்நாள் நான் செய்திருந்ததை விட, இது சுவையாக இருக்க, எல்லோருமே உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று சாப்பிட்டு விட்டோம்!