சில
வருடங்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் ஒரு அழைப்பிதழைக் காட்டினார். காது
குத்தலோ, மஞ்சள் நீராட்டு விழாவோ... ஏதோ ஒன்று! அதுவா முக்கியம்?
அழைப்பிதழின் கடைசியில் போடப்பட்டிருந்த வாசகத்தைக் காட்டினார்.
"அலுவலகத்திலும்,
வீட்டுக்கு அருகிலும், உறவுகளுக்கும் நான் மூன்று தடவைகளுக்கும் மேலாகவே
மொய் வைத்துள்ளேன். எனவே எல்லோரும் தவறாமல் வந்து மொய் வைக்கவும்!"
பாண்டியராஜன்
ஒரு படத்தில், தெரியாத திருமணங்களுக்குக் கூடச் சென்று, ஒரு 40 பக்க
நோட்டு வாங்கி, மொய் கலெக்ட் செய்து கம்பி நீட்டுவாரே...
நினைவிருக்கிறதா...('நான் அவ்வளவா படங்களே பார்க்கறது இல்லை, அதுவும்
தமிழ்ப் படங்கள்..."னு சொல்றவங்களுக்கு...."அதனால் பரவாயில்லீங்க...")
இன்னொரு சினிமாக் காட்சி...
சின்னக்
கௌண்டர் படத்தில் மொய் விருந்து காட்சி ஒன்று வரும். சுகன்யா கடனை அடைக்க
ஊர் முழுவதும் நேரில் சென்று கூனிக் குறுகி ஊர் மக்களை மொய் விருந்துக்கு
அழைப்பார். அங்கு வந்து சாப்பிடுபவர்கள் தன்னால் முடிந்த அளவு தொகையை
சாப்பிட்ட இலைக்குக் கீழே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். சாப்பிட்டபின் இலையை எடுக்கும் சுகன்யா இலைக்குக் கீழே வைக்கப் பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டே வருவார்.
திருமணம்
அல்லது விசேஷங்களை நடத்த எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று ஊரும்
உறவும் அதைப் பகிர்ந்து கொள்வதற்காக மொய் வைக்கத் தொடங்கி இருப்பார்கள்
என்று நினைக்கிறேன். விசேஷத்துக்குப் போய் சும்மா சாப்பிட்டு விட்டு
வரவேண்டாம் என்றும் நினைத்திருப்பார்கள்.
சமீபத்தில் வோட்டுக்கு லஞ்சம் தர இந்த மொய்விருந்து முறையை அரசியல்வாதிகள் பின்பற்றியதாய்க் கூட ஒரு தகவல்.
எப்போது தொடங்கியிருக்கும் இந்த மொய்ப் பழக்கம்? சங்க காலத்திலேயே இருந்திருக்குமோ!
கவனமாக
ஒரு கவர் எடுத்து, கவரில் 'வாழ்க வளமுடன்' இன்னபிற வாழ்த்து வார்த்தைகள்
எழுதி, உள்ளே பணம் வைத்து ஒட்டியபின் கவரின் பின்புறம் உள்ளே எவ்வளவு பணம்
வைத்திருக்கிறோம் என்று சின்ன எழுத்தில் எழுதி விடுவது உண்டு. அதற்கு ஒரு
சொந்த அனுபவம்தான் காரணம்.
எங்கள் வீட்டு
விசேஷம் ஒன்றில், வந்த மொய்களைப் பிரித்து எண்ணுகையில் ஓரிருவர் வைத்த
மொய் எவ்வளவு என்பதில் சந்தேகம் வந்து விட்டது. 'நோட்'டிலும் சரியாக
குறிக்கப்படவில்லை. அப்போது சிலர் அவர்கள் தந்திருந்த கவர்களில் எவ்வளவு
மொய் வைத்திருந்தார்கள் என்று எழுதி இருந்தது சௌகர்யமாக இருந்தது. அதன்
உபயோகம் தெரிந்து கொண்டு, சங்கடத்தை கைவிட்டு அப்புறம் நானும் அதைப் பின்பற்றத் தொடங்கி விட்டேன்!
ஒரு
சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி,
கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம்
கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்!
ஊர்ப்பக்கங்களில்
மொய் அறிவிப்பாளர் 'பூதலூர் முருகன் 101 ரூபாய் மொய்....கடேன்...குமாரசாமி
மாமா 51 ரூபாய் மொய்....கடேன்..." என்று மைக்கில் அறிவித்துக்
கொண்டிருப்பார். 'கடேன்' என்று அவர் குறிப்பிடுவது 'கடன்'. ஆம். மொய்க்குக்
கடன் வைப்பதும் உண்டு!
'மொய்'யை வட்டியில்லாக் கடன் போல என்கிறார்கள். இப்போது இன்றைய இந்தச் செய்தி கூட அப்படித்தான் சொல்கிறது! ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை! (நானும் தஞ்சாவூர்க்காரன்தான்) பத்திரிக்கை தந்து வரமுடியாத விஷேங்களுக்குக் கூட சில சமயம் நண்பர்களிடமாவது மொய்க் கவர் தந்து விடுவது உண்டு. என்
நண்பர்கள் கூடஅதே போலத் தருவார்கள் -"எங்க வீட்டு விசேஷத்துக்கு 501
எழுதினாங்க... நான் 750 ரூபாய் வச்சிருக்கேன்" என்பார்கள். இந்தக்
கஷ்டத்தைப் பார்த்தால் நம் வீட்டு விசேஷங்களுக்கு மொய்யைத் தவிர்த்து
விடுவது நல்லது என்றே தோன்றுகிறது!
சில திருமணம்,
விசேஷங்களில் 101 ரூபாய் மொய் எழுதி, 5 அல்லது 6 பேர் நிகழ்ச்சியை
அட்டெண்ட் செய்து விருந்து சாப்பிடுவது உடன்பாடான விஷயமா? கேள்வி வருகிறது!
என்
திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித்
தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித்
தரவில்லை! :))))