புதன், 7 மே, 2014

மொய் - சில சிந்தனைகள்


                                                           
சில வருடங்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் ஒரு அழைப்பிதழைக் காட்டினார். காது குத்தலோ, மஞ்சள் நீராட்டு விழாவோ... ஏதோ ஒன்று! அதுவா முக்கியம்? அழைப்பிதழின் கடைசியில் போடப்பட்டிருந்த வாசகத்தைக் காட்டினார்.
                                                     
                                            
"அலுவலகத்திலும், வீட்டுக்கு அருகிலும், உறவுகளுக்கும் நான் மூன்று தடவைகளுக்கும் மேலாகவே மொய் வைத்துள்ளேன். எனவே எல்லோரும் தவறாமல் வந்து மொய் வைக்கவும்!"

"என்ன ஸார் இது?" என்றேன் மிகுந்த ஆச்சர்யத்துடன். 

"இதெல்லாம் எங்க ஊர்ப் பக்கம் சகஜம் ஸார்" என்றார். தஞ்சாவூர்ப் பக்கத்துக்காரர் அவர்.

 

                                                                 
பாண்டியராஜன் ஒரு படத்தில், தெரியாத திருமணங்களுக்குக் கூடச் சென்று, ஒரு 40 பக்க நோட்டு வாங்கி, மொய் கலெக்ட் செய்து கம்பி நீட்டுவாரே... நினைவிருக்கிறதா...('நான் அவ்வளவா படங்களே பார்க்கறது இல்லை, அதுவும் தமிழ்ப் படங்கள்..."னு சொல்றவங்களுக்கு...."அதனால் பரவாயில்லீங்க...")

இன்னொரு சினிமாக் காட்சி...

                                                   
சின்னக் கௌண்டர் படத்தில் மொய் விருந்து காட்சி ஒன்று வரும். சுகன்யா கடனை அடைக்க ஊர் முழுவதும் நேரில் சென்று கூனிக் குறுகி ஊர் மக்களை மொய் விருந்துக்கு அழைப்பார். அங்கு வந்து சாப்பிடுபவர்கள் தன்னால் முடிந்த அளவு தொகையை சாப்பிட்ட இலைக்குக் கீழே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். சாப்பிட்டபின் இலையை எடுக்கும் சுகன்யா இலைக்குக் கீழே வைக்கப் பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டே வருவார்.

இந்தக் காட்சி சினிமாவுக்காக வைக்கப் பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... இன்றைய 'தி இந்து' செய்தித் தாளில் 'மொய் விருந்து' பற்றிப் படிக்கும் வரை! (இந்தச் செய்தியைப் படித்தால்தான் உங்களுக்கும் உங்கள் அனுபவங்கள் நினைவுக்கு வரும்)

எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் 11 ரூபாய்க்கு மொய் எழுதியது எல்லாம் நினைவில் இருக்கிறது. அப்போது 5 ரூபாய் மொய் கூட தந்திருக்கிறார்கள். அப்புறம் 51 ஆகி, 101 ஆகி, இப்போது மினிமம் 201 அல்லது 501 ரூபாய் மொய் வந்து விட்டது.
                                   
ஆமாம் அதென்ன, எல்லாவற்றுக்கும் கூட 1 ரூபாய் சேர்த்து? 11, 51, 101 என்று...? ரௌண்டாக 100, 200 என்று மட்டும் கொடுத்தால் என்ன?

                                                            

                                                                  
திருமணம் அல்லது விசேஷங்களை நடத்த எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று ஊரும் உறவும் அதைப் பகிர்ந்து கொள்வதற்காக மொய் வைக்கத் தொடங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். விசேஷத்துக்குப் போய் சும்மா சாப்பிட்டு விட்டு வரவேண்டாம் என்றும் நினைத்திருப்பார்கள்.

மொய் என்ற வார்த்தைக்கு விசெஷங்களுக்குத் தரப்படும் அன்பளிப்புப் பணம் என்று மட்டும் அர்த்தம் இல்லை. வண்டு போன்ற பூச்சிகள் ஒரு இடத்தில் குழுமுவதற்கும் மொய் என்றுதான் பெயராம். அகராதி சொல்கிறது! மேலும் நெருக்கம்; கூட்டம்; இறுகுகை; பெருமை; வலிமை; போர்; போர்க்களம்; பகை; யானை; வண்டு; தாய்; மொய்ப்பணம், மகமை; அழகு; அத்தி என்ற பொருள்களும் காணப்படுகின்றன. 

மொய் பற்றி இணையத்தில் தேடியபோது கீதா மேடம் எழுதிய இந்தப் பதிவும்  கண்ணில் பட்டது!

சமீபத்தில் வோட்டுக்கு லஞ்சம் தர இந்த மொய்விருந்து முறையை அரசியல்வாதிகள் பின்பற்றியதாய்க் கூட ஒரு தகவல்.

எப்போது தொடங்கியிருக்கும் இந்த மொய்ப் பழக்கம்? சங்க காலத்திலேயே இருந்திருக்குமோ!


                                         
கவனமாக ஒரு கவர் எடுத்து, கவரில் 'வாழ்க வளமுடன்' இன்னபிற வாழ்த்து வார்த்தைகள் எழுதி, உள்ளே பணம் வைத்து ஒட்டியபின் கவரின் பின்புறம் உள்ளே எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்று சின்ன எழுத்தில் எழுதி விடுவது உண்டு. அதற்கு ஒரு சொந்த அனுபவம்தான் காரணம். 

எங்கள் வீட்டு விசேஷம் ஒன்றில்,  வந்த மொய்களைப் பிரித்து எண்ணுகையில் ஓரிருவர் வைத்த மொய் எவ்வளவு என்பதில் சந்தேகம் வந்து விட்டது. 'நோட்'டிலும் சரியாக குறிக்கப்படவில்லை.  அப்போது சிலர்  அவர்கள் தந்திருந்த கவர்களில் எவ்வளவு மொய் வைத்திருந்தார்கள் என்று எழுதி இருந்தது சௌகர்யமாக இருந்தது. அதன் உபயோகம் தெரிந்து கொண்டு, சங்கடத்தை கைவிட்டு அப்புறம் நானும் அதைப் பின்பற்றத் தொடங்கி விட்டேன்!

ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்!

ஊர்ப்பக்கங்களில் மொய் அறிவிப்பாளர் 'பூதலூர் முருகன் 101 ரூபாய் மொய்....கடேன்...குமாரசாமி மாமா 51 ரூபாய் மொய்....கடேன்..." என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருப்பார். 'கடேன்' என்று அவர் குறிப்பிடுவது 'கடன்'. ஆம். மொய்க்குக் கடன் வைப்பதும் உண்டு!

'மொய்'யை வட்டியில்லாக் கடன் போல என்கிறார்கள். இப்போது இன்றைய இந்தச் செய்தி கூட அப்படித்தான் சொல்கிறது! ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை! (நானும் தஞ்சாவூர்க்காரன்தான்) பத்திரிக்கை தந்து வரமுடியாத விஷேங்களுக்குக் கூட சில சமயம் நண்பர்களிடமாவது மொய்க் கவர் தந்து விடுவது உண்டு. என் நண்பர்கள் கூடஅதே போலத் தருவார்கள் -"எங்க வீட்டு விசேஷத்துக்கு 501 எழுதினாங்க... நான் 750 ரூபாய் வச்சிருக்கேன்" என்பார்கள். இந்தக் கஷ்டத்தைப் பார்த்தால் நம் வீட்டு விசேஷங்களுக்கு மொய்யைத் தவிர்த்து விடுவது நல்லது என்றே தோன்றுகிறது!


                                            
சில திருமணம், விசேஷங்களில் 101 ரூபாய் மொய் எழுதி, 5 அல்லது 6 பேர் நிகழ்ச்சியை அட்டெண்ட் செய்து விருந்து சாப்பிடுவது உடன்பாடான விஷயமா? கேள்வி வருகிறது!

என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :))))

38 கருத்துகள்:

 1. இந்த 'மொய்' பற்றி இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். மொய் என்பது திருமணத்தில் மட்டுமில்லை, இறப்பில், பின் அதைத்தொடர்ந்த பதினாறாம் நாள் காரியத்தில் கூட அங்கம் வகிக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. சுப/அசுப மொய் தவிர்த்து இம்மாதிரியான மொய்களை நானும் சின்னக் கவுண்டரில் பார்த்ததோடு சரி.. இந்து செய்தி ஆச்ச்சரியம் + அதிர்ச்சி...
  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடேனும் தான்


  # ஒருவழியாய் அனுபவ பதிவு எழுதிவிட்டீர்கள் போலும் :-)

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. //என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :))))//

  ஐயோ பாவம், அவரின் மனைவி அவர் வீட்டு பீரோ சாவியை அவரின் இடுப்பில் சொருகி இவருக்கு பைசா கொடுக்கவில்லையோ என்னவோ.

  பதிலளிநீக்கு
 5. மொய்க்குப் பின்னால் இத்தனை பொய்யும் மெய்யுமா. அதிசயம். ஹிண்டு படிக்கிறேன். கடன் என்பதை விடக் கடமை சிலசமயம். மாமா சீர்,அத்தை சீர் என்று போய்க் கொண்டிருக்கும். நாம் கொடுக்க வேண்டியது போய்விடும் .நமக்கு வரவேண்டியது பத்தில் ஒன்றாக வரும்.. உங்க மொய்ப் பதிவுக்குப் பின்னூட்டங்கள் தான் மொய்>}}

  பதிலளிநீக்கு
 6. நான் மொயு வைப்பதுவுமில்லை, வாங்குவதுவுமில்லை.

  நான் சின்ன்ப் பையனாக இருந்தபோது(1040-50) ஒண்ணேகால் ரூபாய்தான் மொய். அதற்கு முன்பு கால் ரூபாய்தான் (ஒரு பணம் என்று அந்த கால் ரூபாய்க்குப் பெயர்) மொய் வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. எங்கள் பக்கம் திருமணம் முதலான
  நிகழ்ச்சிகளில் மொய் உண்டு
  மொய் நிகழ்ச்சி எனத் தனியாக இல்லை
  போகிற போக்கைப் பார்த்தால்
  வந்துவிடும் போலத்தான் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 8. எங்கள் பக்கம் திருமணம் முதலான
  நிகழ்ச்சிகளில் மொய் உண்டு
  மொய் நிகழ்ச்சி எனத் தனியாக இல்லை
  போகிற போக்கைப் பார்த்தால்
  வந்துவிடும் போலத்தான் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா.
  நன்றாக எழுதியுள்ளீர்கள் இறுதியில் சொல்லியது கவலையாக உள்ளது பீரோ வாங்கித்தருவதாக சொன்ன கதையில் எதிர்பார்ப்புத்தான் மிஞ்சியது...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. 100,200 என்ற எண்களின் கடைசியில் “0“ வருவதால் அது சுபமானது இல்லையாம். அதனால் அது வளரும் நோக்கில் “1“ சேர்த்து வைக்கிறார்களாம்.
  இது என் ஆசிரியர் சொன்ன தகவல்.

  மற்றபடி நீங்கள் எழுதிய நிறைய அனைத்தையும் கேள்விப் பட்டிருந்தாலும்... அந்த காலத்தில் ஒரு வீட்டில் விசேசம் நடக்கும் போது இல்லாமை, இயலாமை போன்ற காரணங்களுக்காக இந்த மொய் என்பது உதவியாக இருந்திருக்கும். அதுவே நாளாக நாளாக புது புது விதமாகத் தொடருகிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அப்புறம்.... உங்களுக்கு பீரோ வாங்கித் தராதவர்கள் வீட்டிற்கு போய் சில துணிமணிகளை அவர்களின் பீரோவில் வைத்துப் பாது காக்க சொல்லுங்கள்....

  பீரோ கண்டிப்பாக கிடைத்துவிடும்.

  பதிலளிநீக்கு
 12. //ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்!//

  ஹிஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் அடிக்கடி சொல்வது இது! நினைச்சு நினைச்சுச் சிரிச்சேன். :)

  பதிலளிநீக்கு
 13. அந்தக் காலத்தில் மொய்னு எல்லாம் இருந்ததில்லையாம். என் அப்பா சொல்லி இருக்கார். பெண் கல்யாணம் என்றால் பெண்ணுக்குத் தேவையான பாத்திரங்களை வாங்கித் தருவாங்களாம். இயலாதவர்கள் ஒண்ணே கால் ரூபாய் கொடுப்பாங்களாம்.பின்னமாகத் தான் கொடுப்பாங்க சுப காரியங்களுக்கு. வெற்றிலை பாக்கில் கூட கால் ரூபாய், முக்கால் ரூபாய் ஒண்ணே கால் ரூபாய்னு தான் வைப்பாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு கால் ரூபாய் வைச்சுக் கொடுத்து வாங்கிக் கொண்ட அனுபவம் உண்டு.

  பதிலளிநீக்கு
 14. என் கல்யாணத்தில் மொத்த வரவே 250 ரூபாய்க்குள் தான். :)))))

  சுப காரியங்கள் இல்லாமல் அசுப காரியங்களுக்குத் தான் 100 ரூ, 200ரூ. என்று கொடுக்க வேண்டும். ஆனால் தஞ்சாவூர்ப் பக்கம் சுபம், அசுபம் இரண்டுக்குமே ஒரு ரூபாய் சேர்க்காமலே கொடுக்கிறாங்க(அல்லது எங்க புக்ககத்தில் மட்டுமோ?)

  பதிலளிநீக்கு
 15. இப்போல்லாம் விதவிதமான பரிசுப்பொருட்கள்! பல சமயங்களில் டூப்ளிகேட் ஆவதும் உண்டு எங்க வீட்டில் கிரஹப்ரவேசத்துக்குக் கிட்டத்தட்ட நாலு வால்கிளாக்கள் வந்தன. அதோடு ஆஃபீஸில் வேறே ஒண்ணு. எல்லா ரூமிலேயும் ஒண்ணொண்ணு மாட்டிட்டோம். பின்னே! நாம யாருக்கானும் வால் கிளாக் வாங்கிக் கொடுத்தால் இதைக் கொடுத்தோம்னு நினைச்சுப்பாங்க இல்ல! :))))

  வைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்தும். நாம கொடுத்தது நமக்கே திரும்பி வரும். அது போல!

  பதிலளிநீக்கு
 16. ஆனால் பலரும் ரவிக்கைத் துணினா யோசிக்கிறாங்க வாங்கிக்க! இத்தனைக்கும் ஒரு மீட்டர் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை ஆயிடும். :))) என்னைப்பொறுத்த வரை எனக்கு வரும் ரவிக்கைத் துணிகளில் 80 சென்டி மீட்டர் இருந்தால் தான் யாருக்கானும் கொடுப்பேன். ஒரு மீட்டர்னா நானே பயன்படுத்துவேன். :) அப்புறமா நம்மை மதிச்சுக் கொடுக்கிறவங்களுக்கு வேதனையா இருக்குமே! அதான்! :)))))

  பதிலளிநீக்கு
 17. பல சமயங்கள்ல நாம சரியாத்தான் கவர்ல பணம் வெச்சமான்னு எனக்கும் டவுட் வர்றதுண்டு. இப்பல்லாம் மொய்க் கவர்கள்ல எல்லாத்தையும் அச்சடிச்சே வந்துருது. நாம பேரையும் தொகையையும் மட்டும் எழுதினாப் போதும். ‘மொய் கடேன்’ எனக்குப் புது செய்தி. இதுலகூட கடன், அக்கவுண்ட் எல்லாம் வைப்பாங்களா என்ன? ஹா... ஹா... ஹா... அப்ப்றம்... அவர் அப்புறம் என்றுதானே பீரோ விஷயத்தில் சொன்னார். எப்போன்னு சொல்லலையே...? ஹி,, ஹி...

  பதிலளிநீக்கு
 18. //வைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்தும். //

  "கல்யாணங்களிலே முன்னெல்லாம் ரவிக்கைத் துணி கூட வைச்சுக் கொடுப்பாங்க"

  இந்த வரி அங்கே விட்டுப்போயிருக்கு. :)))) அதுக்கப்புறமாத் தான் "வைச்சுக் கொடுத்த ரவிக்கைத் துணி சுத்தும்." வந்திருக்கணும். :))))

  பதிலளிநீக்கு
 19. எனக்கு நினைவு தெரிந்த காலங்களில் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் 11 ரூபாய்க்கு மொய் எழுதியது எல்லாம் நினைவில் இருக்கிறது. அப்போது 5 ரூபாய் மொய் கூட தந்திருக்கிறார்கள். அப்புறம் 51 ஆகி, 101 ஆகி, இப்போது மினிமம் 201 அல்லது 501 ரூபாய் மொய் வந்து விட்டது. //

  உண்மை நீங்கள் சொல்வது. வடநாட்டில் அழகியமொய் கவர் விற்கிறார்கள், அந்த கவரில் ஒருரூபாய் வைத்து ஒட்டப்பட்டு இருக்கும், நாம் அதை வாங்கி 100, 500. 1000 என்று வைத்து விட்டால் போதும்.

  நெருங்கிய உறவினர்களாக இருந்தால் அவர்களுக்கு எது தேவை என்று கேட்டு நம் பட்ஜெட்க்கு ஏற்ற மாதிரி வாங்கி கொடுத்துவிடுவோம்.

  உங்களுக்கு இன்னும் பீரோ வரவில்லை என்று கேட்கும் போது
  மறந்து விட்டு இருப்பார்கள் என்று தெரிகிறது.

  நல்லது கொட்டது எல்லாவற்றிற்கும் மொய் பணம் உண்டு. மொய் வேண்டாம் என்று பத்திரிக்கையில் போட்டாலும் விடுவதில்லை கொடுப்பது தொடர்கிறது.
  பதிவு நன்றாக இருக்கிறது. கீதா அவர்கள் பதிவை படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. //என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :))))//
  அது நான்தான். பட்டியல் எழுதிக் கொண்டிருந்தவர், நான் அவர் அருகில் சென்றதும், பெயர் என்ன, எங்கேயிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். நான், 'என் பெயர் கௌதமன் நான் B Row என்றேன். அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டு, கௌதமன் - பீரோ என்று எழுதிக் கொண்டுவிட்டார்!

  பதிலளிநீக்கு
 21. நல்ல அலசல்! பீரோ.. வசூலாகாத மொய் பெரிதாக இருக்கிறதே:)!

  @ kg gouthaman,

  எப்படியோ கணக்கில் சேர்ந்து விட்டது:). இப்போது வாங்கிக் கொடுத்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 22. /ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்!//

  அது மொய் கவர் இல்லை..!
  பொய் கவர்...!!

  பதிலளிநீக்கு
 23. கெளதமன் சார், பீரோ வாங்கிக் கொடுக்கிறது ரொம்ப சிம்பிள். ஶ்ரீராம் கொடுத்திருக்கிற சுட்டியிலே போய் என்னோட பதிவைப் படிச்சுப் பாருங்க.

  பீரோ வாங்கிக் கொடுத்தாச்சு, பீரோ வாங்கிக் கொடுத்தாச்சு அப்படினு பத்துத் தரம் எழுதி ஶ்ரீராம் கிட்டே காட்டிடுங்க. அப்புறமும் அவர் பீரோ பத்திக் கேட்பாருனு நினைக்கறீங்க?

  நாம கொடுக்க வேண்டிய மொய்யை எல்லாம் இப்படித் தான் எழுதிக் கழிச்சிருக்கோமாக்கும்! க்கும்!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 24. பீரோ.... கடேன்! :)

  தில்லியில் இந்த மாதிரி மொய் தருவதற்கென்றே ஒரு ரூபாய் நாணயம் வைத்த Envelop கிடைக்கிறது. உள்ளே 100, 200, 500, 1000 என வைத்தால் போதும்! இதை Shagun Lifaafaa என்று சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 25. // என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :)))) //

  He might have told 'ZERO'

  பதிலளிநீக்கு

 26. @மனோ சாமிநாதன்

  ஆமாம், அசுப மொய்களை மறந்து விட்டேன்!

  @DD,

  அபுரி!

  @சீனு,

  //ஒருவழியாய் அனுபவ பதிவு எழுதி விட்டீர்கள் போல//
  அபுரி

  @சாய்ராம் கோபாலன்

  ஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோம்?

  @வல்லிசிம்ஹன்

  அட, சீரை மறந்து விட்டேன்! மொய்ப் பின்னூட்டங்கள்! நல்ல பிரயோகம் வல்லிம்மா...

  @பழனி. கந்தசாமி சார்.

  மொய் வாங்காமல் இருக்கலாம். கொடுக்காமல் இருப்பது கஷ்டம்தான்.

  @ரமணி ஸார்,

  நியூஸ் சுட்டி படித்தீர்கள்தானே...

  @ரூபன்,

  நன்றி.

  @ அருணா செல்வம்,

  1 ரூபாய் என்று வருவதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணமும் நன்று. பீரோவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஐடியாவும் நன்று!

  @கீதா சாம்பசிவம்,

  சஞ்சீவியின் சந்தேகங்கள்' நினைவிருக்கிறதா? தகவல்களுக்கு நன்றி. உங்கள் கல்யாணத்தில் மொத்த வரவு 250 ரூபாய்தான் என்றாலும் அப்போ அதன் மதிப்பு? ரவிக்கைத் துணி வச்சுக் கொடுக்கலாம். மொய்யாகத் தர மாட்டார்கள் இல்லையா! :)))))

  @பாலகணேஷ்

  நீங்களே சொல்லிக் குடுத்துடுவீங்க போலேருக்கே...:))))))

  @கோமதி அரசு

  வடநாட்டில் என்ன, இங்கும் அதுமாதிரிக் கவர்கள் உண்டு. மற்ற கவர்கள் 50 பைசா, 1 ரூபாய் என்றால் இது மட்டும் 5 ரூபாய்!

  அன்புள்ள kg கௌதமன்... நீங்கள்தான் என் கல்யாணத்துக்கே வரல்லியே! அப்போ அது நீங்க இல்லே! :))))))))))))))

  @ராமலக்ஷ்மி

  அப்போ பீரோ பெரிய விஷயம்!

  @RR மேடம்..

  ஹா ஹா ஹா... ரசிக்கும்படி சட்டென்று சொல்லியிருக்கிறீர்கள்!

  @கீதா மேடம்
  க்ர்ர்ர்ர்ர்ர் (சரிதானே?)

  @வெங்கட் நாகராஜ்

  அதுபோலக் கவர் இங்கும் கிடைக்கிறது.

  @மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்

  :))))))))))))))))))

  பதிலளிநீக்கு
 27. @ஶ்ரீராம், வட மாநிலங்களில் கிடைக்கும் கவரோட விலையை ஒரு ரூபாய்னு தப்பாப் புரிஞ்சுண்டு இருக்கீங்க போல! பலரும் இந்த ஒரு ரூபாய் விஷயத்தில் மறந்துடறதாலே கவருக்குள்ளே ஒரு ரூபாய் வைச்சே இருக்கும். அதைத் தான் சொல்றார் வெங்கட், கோமதி அரசுவும் அதைத் தான் சொல்றாங்க. கிஃப்ட் கவர் இங்கேயும், எங்கேயும் கிடைக்கும் தான்.

  பதிலளிநீக்கு
 28. அல்லது இங்கேயும் ஒரு ரூபாய்க் காசை உள்ளே வைச்ச கவர் கிடைக்குதா?????????????????????

  பதிலளிநீக்கு
 29. மொய் வைப்பது பற்றி மிக அருமையான ஆய்வு!பலதகவல்கள் அறிந்தேன்!

  பதிலளிநீக்கு
 30. //@சாய்ராம் கோபாலன்

  ஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோம்?//

  ஸ்ரீராம், எனக்கு நடந்த நிகழ்வுகளுக்கு தற்கொலை செய்து கொண்டு இருக்கவேண்டும். சிறியவனுக்காக வாழ வேண்டுமே...

  பதிலளிநீக்கு
 31. கீதா மேடம்... அவர்கள் சொல்வது புரிந்தது. அதே கவர் இங்கேயும் கிடைக்கிறது வெகு காலமாய் என்றுதான் சொல்ல வந்தேன்! நானே வாங்கி பணம் வைத்துத் தந்திருக்கிறேன்! :))))

  நன்றி புலவர் ஐயா...

  சாய்ராம்... ????

  பதிலளிநீக்கு
 32. கடன். என்று சொன்ன தொகைஐ வசூல் செய்பவர்கள் வாராவாரம் கூலி பட்டுவாடா வின் போது வசூல் செய்து உரிய வரிடம் கொடுத்து அதற்க்கு ம். 10% கமிஷன் பெறுவதை ஊட்டி இல் பார்த்திருக்கிறேன். மேலும் கந்தர்வக்கோட்டை இல் ஒரு திருமணத்தில் நான் கொடுத்த 200₹ (அது கூட அலுவலகம் வசூல்) திருப்பிக்கொடுத்துவிட்டு₹10,000/-க்கு குறைந்து மொய் பெறப்டும்வதில்லை என்றும் தெரிவித்தார் கள் .

  பதிலளிநீக்கு
 33. ஹெஹெஹெ ஶ்ரீராம், அ.வ.சி. தமிழ்நாட்டிலும் இப்படிக் கவர் கிடைப்பது எனக்குப் புதிய செய்தி! தகவலுக்கு நன்னி ஹை!

  பதிலளிநீக்கு
 34. // என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை! :))))
  //
  நீங்கள் இவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதிய இந்தப் பதிவின் விதை - பீரோவில்தான் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!