எழுத்தாளர் தான் படைக்கும்
படைப்புகளில் இருப்பார் என்று சொல்வார்கள். சுஜாதாவின் பாத்திரங்களான
கணேஷ் - வசந்த் பாத்திரங்களில் கணேஷ் சுஜாதாவின் முதிர்ச்சி பெற்ற பழமை
சார்ந்த பதிப்பு. வசந்து புதுமை கலந்த, குறும்பு மனத்தின் பிரதிபலிப்பு.
ஆக, இரண்டும் சுஜாதாதான்! (இது ஒரு பெரிய கண்டு பிடிப்பா என்று யாரும் திட்ட வேண்டாம்!)
சுஜாதா பற்றி ஒரு
பெருவியப்பு என்ன என்றால், அவர் படித்திருப்பது பொறியியல். ஆனால் கணேஷ்
வசந்த் கதைகளில் நுணுக்கமாக, ஏராளமாக சட்ட சம்பந்தமான விவரங்கள் தருவார்.
எங்கிருந்து பிடிப்பாரோ? உதாரணமாக அப்பீலுக்கும், ரிவிஷனுக்கும் என்ன
வித்தியாசம், ரெஃபரன்ஸ் வழக்குகள் போன்ற விவரங்கள்.
பெரிய
வார்த்தைகளைப் போட்டு பயமுறுத்துவார், விளையாடுவார். உதாரணமாக ரெஸ்
ஜூடிகாட்டா, Raskolnikov Syndrome. சில சமயம் கதையின் முடிச்சு கதையின்
ஆரம்பத்திலேயே அல்லது நடுவில் ஒரு வரியாக மட்டும் வரும் இது போன்ற
வார்த்தைகளில் இருக்கும்!
முதலிலேயே சில விநோதக்
குறிப்புகளில் குற்றவாளியை அடையாளம் காட்டி விடுவார் என்பது அவர் கதைகளை
வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும் ஒரு
சாமன்யனின் இடத்தில் நம்ப முடியாத அறிவு ஜீவித் தனமான புத்தகங்கள், அல்லது
அந்த கேரக்டருக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைச் சொல்வார். சொல்லி
வேகமாகக் கடந்து விடுவார். உதாரணமாக அந்த கேரக்டர் தன் இயல்பு, பணிக்குச்
சம்பந்தமில்லாமல் Biology of Death புத்தகம் வைத்திருப்பார். தன்னுடைய
உரையாடலில் நீட்ஷே கோட் செய்வார்!
குற்றவாளியே
லாயர் கணேஷைத் தேடி வந்து ஸ்ட்ராங் அலிபை வைத்துக் கொள்வது போல இரண்டு
மூன்று கதைகள் எழுதி இருக்கிறார். புகார்... புகார்...புகார்.., அம்மன்
பதக்கம், மீண்டும் ஒரு குற்றம்...
மேலும் ஒரு குற்றம் என்ற
தலைப்பிலொரு கதையில் இதையே அவர் யோசித்து கதையை மாற்றி யோசித்து திருப்பம்
தந்திருப்பார். மேற்கே ஒரு குற்றம், மீண்டும் ஒரு குற்றம், மேலும் ஒரு
குற்றம் என்று குழப்பும் தலைப்புகளில் மூன்று கதைகள்!
சில
கதைகளைப் படிக்கும்போது 'இதை எந்த காலகட்டத்தில் எழுதியிருப்பார்?' என்று
யோசனை வந்தால் ஏதாவது ஒரு வரியில் காலம் சொல்லும் வரி இருக்கும். "வாஜ்பாய்
அரசு நிலைக்குமா?"
ஒரு கதையில் கணேஷ் கையாளும் ஒரு
முறையை - தொலைபேசி எண் அறியும் முறை - வசந்த் இன்னொரு கதையில் புதுசு போல
உபயோகித்து கணேஷுக்கு புது ஐடியா போலச் சொல்வது! சுஜாதாவே மறந்து
விட்டாரோ, அல்லது வாசகர்கள் நினைவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தாரோ! (அம்மன் பதக்கம் - ஐந்தாவது அத்தியாயம்)
ஜான்
லென்னன் பற்றி சுஜாதா எழுத்து மூலம்தான் அறிந்தேன். அதே போல சில புதுக்
கவிதைகள். உதாரணமாக 'காதலிக்கலாமா, கற்பழிக்கலாமா என்று முடிவு
செய்வதற்குள் லிஃப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து விடுதல், 'மனக்கதவம்
தட்டி மாணிக்கம் பரப்பும் என்றும் இளையவள்' என்னும் சிற்பியின் கவிதை...
வசந்த் கோட் செய்வதாகப் படித்த பாரதியாரின் கவிதை வரி ஒன்றும் அப்படியே இன்னும் மனதில் நிற்கிறது! 'மெல்லிய மேகத்திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே.. நின்றன் மேனியழகு மிகைபடக் காணுது வெண்ணிலாவே..."