Amithabh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Amithabh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.12.09

டெண்டுக் கொட்டாயும் காந்தி படமும்...!

மாயாஜால் ஐநாக்ஸ் என்று புதுப் புது வசதிகளுடன் இப்போது சினிமாத் தியேட்டர்கள்...இப்போதெல்லாம் தியேட்டரில் படுக்கை வசதி கூட உண்டாம்...துக்ளக்கில் அபிராமி ராமநாதன் சொல்லி இருக்கிறார்.


ஆரம்பக் காலங்களில் சாதாரண சினிமாத் தியேட்டர்களுடன் டூரிங் டாக்கீஸ் உண்டு. அப்போதெல்லாம் அங்குதான் படம் நிறையப் பார்ப்பது வழக்கம் குறைந்த கட்டணங்கள்...அது மாதிரி ஒன்று தஞ்சாவூரில் ராஜேந்திரா என்று இருந்தது. ஞானம், யாகப்பா, ராஜா கலை அரங்கம் போன்ற திரை அரங்குகளில் டிக்கெட் விலை மூன்று ரூபாய், நான்கு ரூபாய் இருந்தால் இங்கு ஒரு ரூபாய்க்கு முதல் வகுப்பே கிடைக்கும். அதைவிட முப்பத்தைந்து பைசாவுக்கு தரை டிக்கெட். தரை என்பது மணல். முதல் வகுப்பை விட மணல் தரை டிக்கெட்தான் எங்களுக்கு விருப்பம்.


ஐந்தரை மணி சுமாருக்கு ஒலி பெருக்கியில் பாடல்கள் போடத் தொடங்குவார்கள். மெடிக்கல் காலேஜ் மெய்ன் ரோடில் தியேட்டர். உள்ளே குடியிருப்பு வரையும் ஹாஸ்டல் வரையும் பாடல்கள் கேட்கும். (மெடிக்கல் காலேஜ் ஆண்கள் ஹாஸ்டல் பெயர் பாரடைஸ்..! ) மக்கள் 'கொட்டாய்' ஞாபகம் வந்து உஷாராகி வேலைகளை வேகமாக முடிக்கத் தொடங்குவார்கள். "முருகா என்றழைக்கவா" பாடல் தொடங்கி விட்டது என்றால் டிக்கெட் தரத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம். மக்கள் ஓட்டமும் நடையுமாக 'கொட்டாய்'யை நெருங்குவார்கள். இடைவேளைகளில் ரங்கராட்டினம், சபதம் போன்ற புத்தம்புதிய படங்களிருந்து பாட்டுப் போடுவார்கள்..!


மணலில் லேசாகக் குழி பறித்து, ஓரமாக மேடாக்கி அதில் அமர்ந்து அல்லது சாய்ந்து மாட்டுக்கார வேலன், இரு துருவம் என்று பார்த்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. 'பெரிய' தியேட்டர்களுக்கும் டூரிங் கொட்டாயக்கும் வித்யாசம் காட்சி நேரம்தான். 'பெரிய' தியேட்டர்களில் மதியம் இரண்டு மணிக்கு மேட்னி காட்சி உண்டு. இங்கு வெளிச்சம் காரணமாக அது கிடையாது. மற்றபடி ஆறு மணிக்கு முதல் காட்சி, பத்து அல்லது பதினொரு மணிக்கு இரண்டாம் ஆட்டம் எல்லாம் பொது. சில 'பெரிய' தியேட்டர்களில் காலை பத்து மணிக் காட்சி உண்டு...அது பெரும்பாலும் ஆங்கிலப் படங்களாக இருக்கும். அதுவும் பெரும்பாலும் லாரல் ஹார்டி படங்களாக இருக்கும். இது கூட அப்போது புதிதாக ஆரம்பித்த அருள் தியேட்டர் காரர்கள் தொடங்கி வைத்ததாக ஞாபகம்...! உடனடி ரிலீஸ் படங்களை ராஜா கலை அரங்கம் கிருஷ்ணா போன்ற திரை அரங்குகளில் பார்த்து விட்டு வரும்போது வழிநெடுகும் டீக் கடைகளில் அந்த படப் பாடல் ரெகார்ட்களைப் போட்டு இன்புறுவார்கள்!


பிறகு மதுரை வந்தவுடன் கல்லூரி நாட்களில் வெவ்வேறு தியேட்டர்களில் படம் பார்த்தது உண்டு...சினிப்ரியா பின்னர் மினிப்ரியா, சுகப்பிரியா என்று கூட சேர்த்துக் கொண்டது. அமிதாப் படங்கள் அங்கும் தங்கம் தியேட்டரிலும் பார்த்ததுண்டு..ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் தங்கம். அது ஹவுஸ் புல் ஆகும்! 007 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, பார் யுவர் ஐஸ் ஒன்லி போன்ற படங்கள் அங்கு...



காந்தி படம் வந்த புதிது...சினிப்ரியாவில் திரையிட்டார்கள். தேசபக்தியுடன் படம் பார்க்கக் கிளம்பினோம். பயங்கரமான கூட்டம். (நம்புங்கள்...நிஜம்) திருப்பதி க்யூ போல வளைந்து வளைந்து நீளமான பாதையில் சென்று டிக்கெட் வாங்க வேண்டும். உண்மையில் படம் பார்க்கக் கூட்டமா, அல்லது வாங்கி ப்ளாக்கில் விற்கக் கூட்டமா, அல்லது மினியிலும், சுகத்திலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் பொழுது போக்க வந்தார்களோ...அடிதடி. தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை சமாளிக்க (அடி)ஆட்களை நிறுத்தி இருந்தார்கள். கட்டுக்கடங்காமல் போன கூட்டத்தை சமாளிக்க அந்த ஆட்கள் திடீரென கையில் வைத்திருந்த உருண்டையான சவுக்குக் கட்டையால் நின்றவர்கள் காலில் விளாசத் தொடங்கினார்களே பார்க்க வேண்டும்...ஓரமாக நின்றிருந்த என் காலிலும் ஒரு அடி விழ, சமாளிக்க முடியாமல் உட்கார்ந்து விட்டேன். அந்த அஹிம்சாவாதியின் படத்தை அப்புறம் அந்தத் தியேட்டரில் அல்ல, எந்தத் தியேட்டரிலும் பார்க்கவில்லை. பின்னர் டிவியில் பார்த்ததுதான்.


இப்போது பதினைந்து வருடங்களாக தியேட்டர் பக்கமே போவதில்லை...திருட்டு VCD வருவதற்கு முன்பே பழக்கம் நின்று போய் விட்டது! சத்தம் ஒத்துக் கொள்வதில்லை, படம் பார்ப்பதில் சுவாரஸ்யமும் இல்லை.