செவ்வாய், 1 டிசம்பர், 2009

டெண்டுக் கொட்டாயும் காந்தி படமும்...!

மாயாஜால் ஐநாக்ஸ் என்று புதுப் புது வசதிகளுடன் இப்போது சினிமாத் தியேட்டர்கள்...இப்போதெல்லாம் தியேட்டரில் படுக்கை வசதி கூட உண்டாம்...துக்ளக்கில் அபிராமி ராமநாதன் சொல்லி இருக்கிறார்.


ஆரம்பக் காலங்களில் சாதாரண சினிமாத் தியேட்டர்களுடன் டூரிங் டாக்கீஸ் உண்டு. அப்போதெல்லாம் அங்குதான் படம் நிறையப் பார்ப்பது வழக்கம் குறைந்த கட்டணங்கள்...அது மாதிரி ஒன்று தஞ்சாவூரில் ராஜேந்திரா என்று இருந்தது. ஞானம், யாகப்பா, ராஜா கலை அரங்கம் போன்ற திரை அரங்குகளில் டிக்கெட் விலை மூன்று ரூபாய், நான்கு ரூபாய் இருந்தால் இங்கு ஒரு ரூபாய்க்கு முதல் வகுப்பே கிடைக்கும். அதைவிட முப்பத்தைந்து பைசாவுக்கு தரை டிக்கெட். தரை என்பது மணல். முதல் வகுப்பை விட மணல் தரை டிக்கெட்தான் எங்களுக்கு விருப்பம்.


ஐந்தரை மணி சுமாருக்கு ஒலி பெருக்கியில் பாடல்கள் போடத் தொடங்குவார்கள். மெடிக்கல் காலேஜ் மெய்ன் ரோடில் தியேட்டர். உள்ளே குடியிருப்பு வரையும் ஹாஸ்டல் வரையும் பாடல்கள் கேட்கும். (மெடிக்கல் காலேஜ் ஆண்கள் ஹாஸ்டல் பெயர் பாரடைஸ்..! ) மக்கள் 'கொட்டாய்' ஞாபகம் வந்து உஷாராகி வேலைகளை வேகமாக முடிக்கத் தொடங்குவார்கள். "முருகா என்றழைக்கவா" பாடல் தொடங்கி விட்டது என்றால் டிக்கெட் தரத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம். மக்கள் ஓட்டமும் நடையுமாக 'கொட்டாய்'யை நெருங்குவார்கள். இடைவேளைகளில் ரங்கராட்டினம், சபதம் போன்ற புத்தம்புதிய படங்களிருந்து பாட்டுப் போடுவார்கள்..!


மணலில் லேசாகக் குழி பறித்து, ஓரமாக மேடாக்கி அதில் அமர்ந்து அல்லது சாய்ந்து மாட்டுக்கார வேலன், இரு துருவம் என்று பார்த்த படங்கள் நினைவுக்கு வருகின்றன. 'பெரிய' தியேட்டர்களுக்கும் டூரிங் கொட்டாயக்கும் வித்யாசம் காட்சி நேரம்தான். 'பெரிய' தியேட்டர்களில் மதியம் இரண்டு மணிக்கு மேட்னி காட்சி உண்டு. இங்கு வெளிச்சம் காரணமாக அது கிடையாது. மற்றபடி ஆறு மணிக்கு முதல் காட்சி, பத்து அல்லது பதினொரு மணிக்கு இரண்டாம் ஆட்டம் எல்லாம் பொது. சில 'பெரிய' தியேட்டர்களில் காலை பத்து மணிக் காட்சி உண்டு...அது பெரும்பாலும் ஆங்கிலப் படங்களாக இருக்கும். அதுவும் பெரும்பாலும் லாரல் ஹார்டி படங்களாக இருக்கும். இது கூட அப்போது புதிதாக ஆரம்பித்த அருள் தியேட்டர் காரர்கள் தொடங்கி வைத்ததாக ஞாபகம்...! உடனடி ரிலீஸ் படங்களை ராஜா கலை அரங்கம் கிருஷ்ணா போன்ற திரை அரங்குகளில் பார்த்து விட்டு வரும்போது வழிநெடுகும் டீக் கடைகளில் அந்த படப் பாடல் ரெகார்ட்களைப் போட்டு இன்புறுவார்கள்!


பிறகு மதுரை வந்தவுடன் கல்லூரி நாட்களில் வெவ்வேறு தியேட்டர்களில் படம் பார்த்தது உண்டு...சினிப்ரியா பின்னர் மினிப்ரியா, சுகப்பிரியா என்று கூட சேர்த்துக் கொண்டது. அமிதாப் படங்கள் அங்கும் தங்கம் தியேட்டரிலும் பார்த்ததுண்டு..ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் தங்கம். அது ஹவுஸ் புல் ஆகும்! 007 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, பார் யுவர் ஐஸ் ஒன்லி போன்ற படங்கள் அங்கு...காந்தி படம் வந்த புதிது...சினிப்ரியாவில் திரையிட்டார்கள். தேசபக்தியுடன் படம் பார்க்கக் கிளம்பினோம். பயங்கரமான கூட்டம். (நம்புங்கள்...நிஜம்) திருப்பதி க்யூ போல வளைந்து வளைந்து நீளமான பாதையில் சென்று டிக்கெட் வாங்க வேண்டும். உண்மையில் படம் பார்க்கக் கூட்டமா, அல்லது வாங்கி ப்ளாக்கில் விற்கக் கூட்டமா, அல்லது மினியிலும், சுகத்திலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் பொழுது போக்க வந்தார்களோ...அடிதடி. தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை சமாளிக்க (அடி)ஆட்களை நிறுத்தி இருந்தார்கள். கட்டுக்கடங்காமல் போன கூட்டத்தை சமாளிக்க அந்த ஆட்கள் திடீரென கையில் வைத்திருந்த உருண்டையான சவுக்குக் கட்டையால் நின்றவர்கள் காலில் விளாசத் தொடங்கினார்களே பார்க்க வேண்டும்...ஓரமாக நின்றிருந்த என் காலிலும் ஒரு அடி விழ, சமாளிக்க முடியாமல் உட்கார்ந்து விட்டேன். அந்த அஹிம்சாவாதியின் படத்தை அப்புறம் அந்தத் தியேட்டரில் அல்ல, எந்தத் தியேட்டரிலும் பார்க்கவில்லை. பின்னர் டிவியில் பார்த்ததுதான்.


இப்போது பதினைந்து வருடங்களாக தியேட்டர் பக்கமே போவதில்லை...திருட்டு VCD வருவதற்கு முன்பே பழக்கம் நின்று போய் விட்டது! சத்தம் ஒத்துக் கொள்வதில்லை, படம் பார்ப்பதில் சுவாரஸ்யமும் இல்லை.

27 கருத்துகள்:

 1. பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தும் நல்ல இடுகை. பாட்டை வைத்து கௌன்ட்டர் திறந்ததை கண்டுபிடிக்கிற யுக்தி ரசனையாக இருக்கிறது! படம் பார்ப்பதில் சுவாரஸ்யம் யாருக்கும் குறையவில்லை. ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு டிக்கெட்டுக்காக க்யூவில் நிற்க மனம் ஒப்பவில்லை என்பதுதான் நிஜம்...

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. படம் பார்ப்பதில் சுவாரஸ்யமும் இல்லை./////////
  ஆமாங்க....இப்பொலம் படம் வந்தா டிரைலர் போட்டே வெறுக்க அடிச்சுடராங்க...

  பதிலளிநீக்கு
 3. நாகை பாண்டியனில் கூட அந்த டெக்னிக் உண்டே ஜவஹர், டிக்கெட் வரிசை என்று சொல்வதை விட அந்த சத்தம், (நம் கையில் ரிமோட் இல்லையே...!) சுற்றுப்புற வாசனை மற்றும் இன்னபிற தொந்தரவுகள்....அலர்ஜி ஆகிவிட்டது...

  பதிலளிநீக்கு
 4. ட்ரைலர் இருக்கட்டும் கிருத்திகா, முன்பு வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக் குறைவு. இப்போது மிக அதிகம். அப்போது டிவி DVD போன்ற மற்ற கவனக் கலைப்புகள் இல்லை...இப்போது...

  பதிலளிநீக்கு
 5. ஜேம்ஸ் பான்ட் படமெல்லாம் தங்கம் தியேட்டரில் போட்டதில்லை.அது, பரமேஸ்வரி தியேட்டர், முக்கால்வாசி ஆங்கிலப் படங்கள், கால்வாசி ஹிந்திப்படங்கள்-தமிழ்ப்படங்கள் என்ற விகிதத்தில்.

  டெண்டுக் கொட்டாயில் படுத்துக் கொண்டே படம் பார்த்த சுகம் ஐநாக்ஸில் வருமா? பிடுங்கின காசை நினைத்துப் பார்த்தால், படம் தான் ருசிக்குமா, இல்லை தூக்கம் தான் வருமா?

  பதிலளிநீக்கு
 6. ஆங்கிலப் படங்கள் பரமேஸ்வரியில் மட்டும் அல்ல, ரீகலிலும் (பின்னர் தங்க ரீகல்!) போடுவார்கள். ஆனால் நான் சொன்ன இரண்டு ரோஜர் மூர் படங்கள், அமிதாபின் 'மர்த்'.. தங்கம் திரை அரங்கத்தில்தான் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 7. பெங்களூரில் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு மிக அருகில் ஒரு டெண்ட் தியேட்டர் உண்டு (லிங்கராஜபுரம் லோகேஷ் !). அதில் நிறைய தமிழ்படம் வரும். பகல் காட்சி பிட்டுப்போட்டு மலையாளம் அல்லது ஆங்கில படம் !

  நானும், அப்பாதுரையும் மற்றும் என் தம்பிகள் என்று எல்லோரும் சேர்ந்து நிறைய படம் போவோம் - ராத்திரி ஷோ தான் சாமி !.

  அவர் எந்த படமும் விடாமல் பார்க்கலாம் என்பார், ஆனால் அவர் பாதி படம் மேல் பார்த்தது அரிது என்பேன் !

  "டேய் படம் போதும் போகலாம் வா என்பார்". எனக்கு தெரிந்து எந்தப்படமும் முழுசாக பார்த்தாரா தெரியவில்லை !

  பதிலளிநீக்கு
 8. நல்ல நினைவலைகள்.
  எட்டாத காலங்கள்.

  பதிலளிநீக்கு
 9. MGR அவர்கள் தங்கியிருந்த ராமாபுரம் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் தொலைபேசி தொடர்பகத்துக்கு எதிரே ஒரு டெண்டுக் கொட்டாய் இன்னும் இயங்கி வருகிறது. நாகை பாண்டியனில் போடப்படும் பாட்டுகளை வைத்து தியேட்டர் நிரம்பி விட்டது இல்லை என்று இனம் காணலாம் - அறுபதுகளில் நாகையில் இருந்திருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 10. //"நானும், அப்பாதுரையும் மற்றும் என் தம்பிகள் என்று எல்லோரும் சேர்ந்து நிறைய படம் போவோம் - ராத்திரி ஷோ தான் சாமி"//

  பின்ன இவ்வளவு பெரும் சேர்ந்து அந்தப் பகல் ஷோவுக்கு போக முடியுமா சாய்? துரை ஏன் பாதிப் படம்தான் பார்ப்பார்?

  பதிலளிநீக்கு
 11. //"நல்ல நினைவலைகள்.
  எட்டாத காலங்கள்"//

  கொட்டாவி விடாமல் படிக்க முடிந்ததா ஹேமா!

  பதிலளிநீக்கு
 12. "பின்ன இவ்வளவு பெரும் சேர்ந்து அந்தப் பகல் ஷோவுக்கு போக முடியுமா சாய்?"

  சார், அவ்வளவு சிக்கிரம் என்னை பற்றி எடைப்போட்டு விடாதீர்கள் - விட்டா பிட்டு படமே எடுத்திருப்பேன் !

  பதிலளிநீக்கு
 13. // விட்டா பிட்டு படமே எடுத்திருப்பேன் !//

  சாய் - யாரு விட்டா?

  பதிலளிநீக்கு
 14. உண்மைய சொல்லுங்க அடி வாங்குனதுக்காக படம் பாக்கறத விட்டீங்களா? இல்ல புடிக்கலையா?

  பதிலளிநீக்கு
 15. புலவன் புலிகேசி,

  அதனால இல்லைங்க..அதுக்கப்புறம் கூடப் பார்த்துக் கொண்டுதானே இருந்தேன்...அப்புறம் போர் அடிச்சிப் போச்சு....உங்க ப்ளாக் எல்லாம் நேத்து ஓபன் ஆகவே இல்லை..மால்வேர் என்று பயமுறுத்தியது தெரியுமோ...?

  பதிலளிநீக்கு
 16. it reminds and took me back to the kottai i went in pattiveeranpatti near madurai whree i saw maattukkara velan.eating manapparai murukku ,drinking colour oh what a combination and watching movie all the time. my vote is for that kind of kottan than to the muliplexess which drain your purse in no time.

  பதிலளிநீக்கு
 17. அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
  http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

  பதிலளிநீக்கு
 18. எங்கள் said...

  //சாய் - யாரு விட்டா?//

  மனச்சாட்சி தான் ! Hee Hee.

  முள்ளும் மலரும் படத்தில் சொன்னமாதிரி "கேட்டப்பய" ரஜினி மாதிரி மனச்சாட்சிக்கு பயந்தவன் நான் !!!

  - Sairam Gopolan

  பதிலளிநீக்கு
 19. பழைய திரைப்படங்களைப் போலவே, பழைய கால தியேட்டர்களை நினைத்தாலும் ஒரு இனிய பரவசம்தான்.....நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 20. அந்த காலத்தில் தரையிலோ பெஞ்சிலோ உட்கார்ந்து படம் பார்த்தாலும் அதை விரும்பி பார்க்குமளவுக்கு படங்கள் இருந்தன. இப்போ என்னடானா மல்டி பிளக்ஸ் அது இதுன்னு வசதியா இருந்தா கூட உள்ள போனால் தூக்கம் தான் வருது.

  தஞ்சையில் சோழன் திரை அரங்கத்தை விட்டு விட்டீர்கள். ஆங்கில படங்கள் மட்டுமில்லாமல் நல்ல நல்ல இந்தி படங்களும் அவ் அப்போது திரை இட்டு கலக்குவார்கள்.

  80 களின் பாதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு A/C தியேட்டர்கள் முளைக்க துவங்கின. ரயிலடி அருகில் இருந்த சூப்பர் டீ ஸ்டாலில் 25 பைசாவுக்கு ஒரு டீ சாப்பிட்டு விட்டு அப்படியே ரஜினி, மோகனின் புதிய திரை பட பாடல்களை HMV ரெக்கார்டுகளில் கேட்டு மகிழ்ந்த காலங்கள் மறக்க முடியாதவை.

  65 பைசா டிக்கெட்டுக்கான கவுண்டரில் ஒரு ஐம்பது பேரின் கைகள் கவுண்டரின் இரும்பு கதவை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்க உள்ளிருந்து திறக்க வரும் தியேட்டர் ஊழியர் அதை சிரமப்பட்டு திறந்தபின் கூடத்தில் மாட்டி மிதி படாமல் தப்பிப்பதற்காக ஓடுவார் பாருங்கள் ஒரு ஓட்டம். அப்பப்பா...

  காந்தி படம் ராணி பாரடைசில் பார்த்ததாக நினைவு.

  பழசையெல்லாம் கிளப்பி விட்டுட்டீங்களே ஐயா, கிளப்பி விட்டுட்டீங்களே ...

  பதிலளிநீக்கு
 21. ஆதி, தஞ்சாவூரா?
  ராணி பாரடைசில் நான் நிழல்கள், முரட்டுக் காளை பார்த்திருக்கிறேன். சோழன் திரை அரங்கம்....எங்கு இருக்கும் அது? திருவள்ளுவர் தெரியும்...சென்ட்ரல் லைப்ரரி எதிரில்...

  பதிலளிநீக்கு
 22. மன்னார்குடியில் கூட ஒரு திரை அரங்கம் பார்த்திருக்கேன் பெ.சொ.வி....!

  பதிலளிநீக்கு
 23. இடைவேளை பட்சணங்களை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் ரங்கமணி1951

  பதிலளிநீக்கு
 24. இடை வேளையில் விற்கும் தேங்காய் ரொட்டி- சப்தம் வந்து அடுத்திருப்பவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நமுத்துப் போகிற மாதிரி செய்வார்களா அல்லது நம் கைக்கு வரும் போது அப்படி ஆகி விடுமா?

  பதிலளிநீக்கு
 25. அனானி, ஏ சி தியேட்டரில் தேங்காய் ரொட்டி வாங்கி சாப்பிடக் கூடாது - டென்ட் கொட்டாய் தான் - நமுத்துப் போகாத தேங்காய் ரொட்டிகளுக்கு உத்தரவாதம்!

  பதிலளிநீக்கு
 26. அன்பின் எங்கள்

  அடடா அடடா கொசுவத்தி சுத்த வச்சீட்டிங்களெ - தஞ்சைத்தரணியில் சுற்றித் திரிந்த பால்ய காலத்தினை நினவு படுத்தி விட்டீர்களே ! யாகப்பா நினைவில் இருக்கிறது - டூரிங் தியேட்டர்கள் நினைவில் இருக்கின்றன ( 1950-63 )

  பின் மதுரை வந்தது (63 - 72) - கல்பனா - சிந்தாமணி - தங்கம் - ரீகல் - பரமேஸ்வர் - அலங்கார் - விஜயலக்ஷ்மி - இன்னும் பலப்பல

  தங்கத்தில் 85 பைசாவுக்கு பாலகனியில் அமர்ந்தால் - மதுரையை ஆண்ட ம்ன்னர் பரம்பரை என்ற நினைப்பு

  ம்ம்ம்ம் அசைபோட்டு ஆனந்தித்து ரசித்தேன்

  நல்ல இடுகை நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 27. நன்றி cheena (சீனா) சார்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!