பத்ரகாளி பாட்டு நினைவில் இருக்கிறதா..."தஞ்சாவூர்க் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி.... தலை மேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி..."
அது மாதிரி,
"தஞ்சாவூர்க் குடைமிளகாயைப் படி போட்டு வாங்கி...." என்று பாடாத குறையாய் தஞ்சாவூர்க் குடைமிளகாய், ஒரு கடையில் கிலோ எழுபது ரூபாய் என்றும் இன்னொரு கடையில் படி இருபத்தைந்து ரூபாய் என்றும் மாம்பலத்திலிருந்து வாங்கி வந்து,
நன்றாக தண்ணீர் விட்டு அலசி, காம்பை அளவாக வெட்டி, ஒரு சின்னக் கீறல் போட்டு,
கல்லுப்பு வாங்கி அளவு பார்த்து, மிளகாய் / உப்பு என்று மாறி மாறி ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து,
மிளகாய் முழுகும் அளவு தயிர் வேண்டுமென்பதால் பால் வாங்கி தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி, உறைகுத்தி வைத்து,
பனிரெண்டு மணி நேரம் தாண்டிய பின் அல்லது அடுத்த நாள் அவ்வப்போது குலுக்கிக் குலுக்கி மூடிவைத்த மிளகாயை எடுத்து (தேவைப் பட்டால்) புளி மிளகாய்ப் போட கொஞ்சம் தனியே எடுத்து வைத்து,
ஒரு பாகத்தில் உறைந்த தயிரை முக்காலோ அல்லது முழுதுமோ முழுகுமளவு ஊற்றி வைத்து விட்டு,
அப்புறம் இன்னொரு பாத்திரத்தில் புளி மிளகாய்ப் போட எடுத்து வைத்திருக்கும் மிளகாயில் மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி சற்று தூவி, அப்புறம் மிளக்காயக்குப் போட தேவைக்குத் தக்கபடி புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து (தோசை மாவு பதத்தில் கரைப்பது முக்கியம்!) அதை மிளகாயில் ஊற்றி மூடி வைத்து விட்டு,
அவ்வப்போது குலுக்கி விட்டுக் கொண்டு, அன்று இரவே சாப்பிடும்போது மிளகாய்ப் பாத்திரத்தைத் திறந்து, வரும் வாசனையை வைத்து மோர் சாதம் ரெண்டு வாய் அதிகமாக உள்ளே தளளி...
அடுத்த நாள் முதல் மோர் சாதத்துக்கு, ஊறிக் கொண்டு வரும் மிளகாய்த் தொட்டுக் கொண்டு சாப்பிடும் சுவை இருக்கிறதே... அதை எழுத்திலும், படத்திலும் கொண்டு வர முடியாது!
அடுத்தடுத்த நாள் முதல், மிளகாயை தாம்பாளத்தில் வைத்து வெய்யிலில் வைக்க ஆரம்பித்து விட வேண்டும். இல்லா விட்டால் புழு வர ஆரம்பித்து விடும். காயும் ஒவ்வொரு பதத்திலும் ஒவ்வொரு ருசி.... ஸ்.... ஸ்.... ஆ....
நன்றாகக் காய்ந்து மொட மொட என்று ஆனபின் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து விட்டால் தேவைப் படும்போதெல்லாம் எண்ணெயில் வறுத்து மோர் சாதத்துக்கோ, உப்புமாவுக்கோ, மோர்க்கூழுக்கோ தாளிதம் செய்யும்போது அதில் இந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொண்டு அவற்றைச் செய்து சாப்பிடலாம். அரிசி மாவு மோர் உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ் போன்றவற்றில் இவற்றைப் போட செம டேஸ்ட்தான் போங்க...
ஜனவரி இறுதி முதல் மார்ச் வரைதான் இதற்கு சீசன்.... கிட்டத் தட்ட இதே நேரம் மாவடு சீசனும் தொடங்கி விடுகிறது....
என்ன... நீங்களும் மிளகாய் வாங்கக் கிளம்பிட்டீங்களா...!