முன்குறிப்பு :
இது ஒரு மிரட்டும் காதல்.
திரைப் படத்திலும் நேரிலும் எத்தனையோ காதல் கதைகள் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
கல்லூரிப் பருவத்துக் காதலும் பார்த்திருக்கிறோம். அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள் போன்ற படங்களில் +2 பருவ காதலும் பார்த்திருக்கிறோம். இன்னமும் முன்னால் 'ஓ..மஞ்சு' படத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே காதல் வருவது போலவும் காட்டியதாய் நினைவு.
நிஜமாய் நடந்த சம்பவத்தைக் கதையாய் சிறிய மாற்றங்களுடன் செய்தது.
சிறுகதையான உண்மைச் சம்பவம்...
பள்ளியில் பெண்ணைக் கொண்டு விட்டவள், இனிய பாடல் ஒன்றை இசைக்கத் தொடங்கிய அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள். "ஆமாம், நினைவிருக்கு..பணம் கொண்டு வந்திருக்கிறேன்.." என்று கூறி கட் செய்தாள். அன்றுதான் ஃபீஸ் கட்டக் கடைசி நாள் என்பதால் பள்ளி அலுவலகம் சென்றாள். பணம் கட்ட வரிசையில் நின்ற போது அருகில் வந்தவளைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.
"என்ன, ஜெகதீஷ் அம்மா...., .ஃபீஸ் கட்டவா..நானும் அதற்குத்தான் நிக்கறேன்.. வாங்க.."என்றாள்.
இவளுடைய பெண் எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஜெகதீஷ் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். துறு துறு என்று இருப்பான் ஜெகதீஷ்.
"இல்லை பவித்ரா அம்மா... பிரின்சிபாலை பார்க்க வெயிட் பண்றேன்..."
"என்ன விஷயம்...ஃபீஸ் கட்ட நாள் கேக்கவா..."
சில பேர் தவணை வாங்கிக் கொண்டு பின்னர் கட்டுவார்கள்.
"இல்லை பவித்ராம்மா...ஒரு சின்னப் பிரச்னை..."
"என்ன..."
சற்றே தயங்கினாள் ஜெகதீஷம்மா...
கேட்டிருக்கக் கூடாதோ... "பரவாயில்லை விடுங்க..."
"இல்லை..இல்லை..சொல்வதற்கென்ன.. .புதுவிதமா ஒரு பிரச்னை..பையன் 'வாம்மா... நீ வந்து விளக்கம் சொல்லு..' என்றான்...அதான்..." என்ற ஜெகதீஷம்மா வரிசையை விட்டு வெளியே வந்தாள்.
"சொல்லலாம்னா சொல்லுங்க.."
"சொல்றேன்.. போன வருஷம் ஜெகதீஷ் தன் (UKG) கிளாஸ்ல படிக்கற ஒரு பொண்ணைப் பார்த்து, "I Love You" ன்னு சொல்லிட்டான். எங்க பிடிச்சானோ அந்த வார்த்தைகளை!. என்ன அர்த்தம்னு கூடத் தெரியுமோ என்னமோ...சொல்லியிருக்கான்... அந்தப் பொண்ணு அழுதுகிட்டே டீச்சர் கிட்ட சொல்லி இருக்கு...டீச்சர் கண்டிச்சதோட இல்லாமல லஞ்ச் டயத்துல ப்ரின்சி கிட்ட்டயும் கேஷுவலா.விஷயத்தை சொல்லி இருக்காங்க..அப்புறம் அவங்களும் கூப்பிட்டு அவனை மெல்லக் கண்டிச்சுட்டு என்னையும் அவன் அப்பாவையும் கூப்பிட்டு ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு, எச்சரிச்சி அனுப்பிச்சிட்டாங்க...."
போன வருஷம்கறீங்க...இப்போ அதுக்கென்ன புதுசா வந்தது?" ஆச்சர்யத்துடன் கேட்டாள் பவித்ராம்மா.
"அதை ஏன் கேட்கறீங்க..இந்த வருஷம் ஒண்ணாவதுல வேற ஸ்கூல்லயிருந்து புதுசா ஒரு பொண்ணு வந்து சேர்ந்துருக்கு... ஒரு வாரமா அது ஜெகதீஷ் கிட்ட வந்து 'நீ போன வருஷம் ஒரு பொண்ணு கிட்ட I love you சொல்லி டீச்சர், ப்ரின்சி கிட்ட திட்டு வாங்கினாயாமே...இப்போ என் ஹோம் வொர்க் முடிச்சிக் குடு..இல்லாட்டா நீ என் கிட்டயும் I love you னு சொன்னேன்னு சொல்லி complaint பண்ணிடுவேன்'ன்னு மிரட்டறாளாம் ...தினமும் ஏதாவது மிரட்டிகிட்டே இருக்காளாம்.."
"டீச்சர் கிட்ட சொல்ல வேண்டியதுதானே.."
"போன வருஷம் அபபடி நடந்ததால இப்போ இவன் சொன்னா நம்புவாங்களோன்னு பயம் இவனுக்கு...அவள் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி வந்து நீ சொல்லுன்னான்...அதான்..என்னென்ன தோணுது பாருங்க இதுகளுக்கு..." என்றாள் கவலையுடன் ஜெகதீஷம்மா.
"அடப் பாவமே...சரி பாருங்க...சொல்லுங்க...கலி காலம்..." என்றபடி நடந்தாள் பவித்ராம்மா.
UKG படிக்கும் சிறுவன் உடன் படிக்கும் பெண்ணிடம் I love you சொன்னது ஆச்சர்யமா...
ஒன்றாவது படிக்கும் பெண் இதைக் கேள்விப் பட்டு இவனை புத்திசாலித் தனமாக மிரட்டுவது ஆச்சர்யமா...
இவர்களை இப்படி செய்யத் தூண்டுவது டிவியா, அதை வரைமுறை இல்லாமல் போடும் பெற்றோர்களா, சேரும் நண்பர்களா...?
இது நடந்து இரண்டு மூன்று நாள் ஆகியிருக்கும். I love you என்ற சினிமாப் பாடல் ஒன்று கேட்கும்போது திடீரென இந்த சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்தது.
தன்னுடைய செல்லை எடுத்தாள். ஜெகதீஷ் அம்மாவைத் தொடர்பு கொண்டாள். குசல விசாரிப்புகளுக்குப் பின் அன்று பிறகு என்ன நடந்தது, அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தார்களா என்று கேட்டாள்.
"ஆமாங்க...அந்தப் பெண்ணை உடனே கூப்பிட்டுக் கேட்டார்கள். அது ஆமாம்னு ஒத்துகிச்சுங்க...ஏன் பண்ணினேன்னு கேட்டா, இனி ஒரு தரம் உங்க பையன் வேற எந்தப் பொண்ணு கிட்டயும் இது மாதிரி இனிமேல் சொல்ல மாட்டான் இல்லே..அதனால்தான்..அப்படிங்கு துங்க..ப்ரின்சி எல்லாம் ஆச்சர்யப் பட்டு போய் அவளை வார்ன் செய்து அனுப்பினாங்க.."
"அட..ஆச்சர்யமா இருக்கே..இந்த வயசுல எப்படிங்க அந்தப் பொண்ணு இப்படிப் பேசுது..?"
செல்ஃபோனை கீழே வைத்து ரொம்ப நேரத்துக்குப் பிறகும் ஆச்சர்யம் மிச்சமிருந்தது...
