சனி, 30 ஜனவரி, 2010

மிரட்டும் காதல்.


முன்குறிப்பு :
இது ஒரு மிரட்டும் காதல்.
திரைப் படத்திலும் நேரிலும் எத்தனையோ காதல் கதைகள் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.
கல்லூரிப் பருவத்துக் காதலும் பார்த்திருக்கிறோம். அலைகள் ஓய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள் போன்ற படங்களில் +2 பருவ காதலும் பார்த்திருக்கிறோம். இன்னமும் முன்னால் 'ஓ..மஞ்சு' படத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே காதல் வருவது போலவும் காட்டியதாய் நினைவு.
நிஜமாய் நடந்த சம்பவத்தைக் கதையாய் சிறிய மாற்றங்களுடன் செய்தது.
சிறுகதையான உண்மைச் சம்பவம்...

பள்ளியில் பெண்ணைக் கொண்டு விட்டவள், இனிய பாடல் ஒன்றை இசைக்கத் தொடங்கிய அலைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள். "ஆமாம், நினைவிருக்கு..பணம் கொண்டு வந்திருக்கிறேன்.." என்று கூறி கட் செய்தாள். அன்றுதான் ஃபீஸ் கட்டக் கடைசி நாள் என்பதால் பள்ளி அலுவலகம் சென்றாள். பணம் கட்ட வரிசையில் நின்ற போது அருகில் வந்தவளைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

"என்ன, ஜெகதீஷ் அம்மா...., .ஃபீஸ் கட்டவா..நானும் அதற்குத்தான் நிக்கறேன்.. வாங்க.."என்றாள்.

இவளுடைய பெண் எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஜெகதீஷ் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். துறு துறு என்று இருப்பான் ஜெகதீஷ்.

"இல்லை பவித்ரா அம்மா... பிரின்சிபாலை பார்க்க வெயிட் பண்றேன்..."

"என்ன விஷயம்...ஃபீஸ் கட்ட நாள் கேக்கவா..."

சில பேர் தவணை வாங்கிக் கொண்டு பின்னர் கட்டுவார்கள்.

"இல்லை பவித்ராம்மா...ஒரு சின்னப் பிரச்னை..."

"என்ன..."

சற்றே தயங்கினாள் ஜெகதீஷம்மா...

கேட்டிருக்கக் கூடாதோ... "பரவாயில்லை விடுங்க..."

"இல்லை..இல்லை..சொல்வதற்கென்ன...புதுவிதமா ஒரு பிரச்னை..பையன் 'வாம்மா... நீ வந்து விளக்கம் சொல்லு..' என்றான்...அதான்..." என்ற ஜெகதீஷம்மா வரிசையை விட்டு வெளியே வந்தாள்.

"சொல்லலாம்னா சொல்லுங்க.."

"சொல்றேன்.. போன வருஷம் ஜெகதீஷ் தன் (UKG) கிளாஸ்ல படிக்கற ஒரு பொண்ணைப் பார்த்து, "I Love You" ன்னு சொல்லிட்டான். எங்க பிடிச்சானோ அந்த வார்த்தைகளை!. என்ன அர்த்தம்னு கூடத் தெரியுமோ என்னமோ...சொல்லியிருக்கான்...அந்தப் பொண்ணு அழுதுகிட்டே டீச்சர் கிட்ட சொல்லி இருக்கு...டீச்சர் கண்டிச்சதோட இல்லாமல லஞ்ச் டயத்துல ப்ரின்சி கிட்ட்டயும் கேஷுவலா.விஷயத்தை சொல்லி இருக்காங்க..அப்புறம் அவங்களும் கூப்பிட்டு அவனை மெல்லக் கண்டிச்சுட்டு என்னையும் அவன் அப்பாவையும் கூப்பிட்டு ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு, எச்சரிச்சி அனுப்பிச்சிட்டாங்க...."

போன வருஷம்கறீங்க...இப்போ அதுக்கென்ன புதுசா வந்தது?" ஆச்சர்யத்துடன் கேட்டாள் பவித்ராம்மா.

"அதை ஏன் கேட்கறீங்க..இந்த வருஷம் ஒண்ணாவதுல வேற ஸ்கூல்லயிருந்து புதுசா ஒரு பொண்ணு வந்து சேர்ந்துருக்கு... ஒரு வாரமா அது ஜெகதீஷ் கிட்ட வந்து 'நீ போன வருஷம் ஒரு பொண்ணு கிட்ட I love you சொல்லி டீச்சர், ப்ரின்சி கிட்ட திட்டு வாங்கினாயாமே...இப்போ என் ஹோம் வொர்க் முடிச்சிக் குடு..இல்லாட்டா நீ என் கிட்டயும் I love you னு சொன்னேன்னு சொல்லி complaint பண்ணிடுவேன்'ன்னு மிரட்டறாளாம் ...தினமும் ஏதாவது மிரட்டிகிட்டே இருக்காளாம்.."

"டீச்சர் கிட்ட சொல்ல வேண்டியதுதானே.."

"போன வருஷம் அபபடி நடந்ததால இப்போ இவன் சொன்னா நம்புவாங்களோன்னு பயம் இவனுக்கு...அவள் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி வந்து நீ சொல்லுன்னான்...அதான்..என்னென்ன தோணுது பாருங்க இதுகளுக்கு..." என்றாள் கவலையுடன் ஜெகதீஷம்மா.

"அடப் பாவமே...சரி பாருங்க...சொல்லுங்க...கலி காலம்..." என்றபடி நடந்தாள் பவித்ராம்மா.

UKG படிக்கும் சிறுவன் உடன் படிக்கும் பெண்ணிடம் I love you சொன்னது ஆச்சர்யமா...

ஒன்றாவது படிக்கும் பெண் இதைக் கேள்விப் பட்டு இவனை புத்திசாலித் தனமாக மிரட்டுவது ஆச்சர்யமா...

இவர்களை இப்படி செய்யத் தூண்டுவது டிவியா, அதை வரைமுறை இல்லாமல் போடும் பெற்றோர்களா, சேரும் நண்பர்களா...?

இது நடந்து இரண்டு மூன்று நாள் ஆகியிருக்கும். I love you என்ற சினிமாப் பாடல் ஒன்று கேட்கும்போது திடீரென இந்த சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய செல்லை எடுத்தாள். ஜெகதீஷ் அம்மாவைத் தொடர்பு கொண்டாள். குசல விசாரிப்புகளுக்குப் பின் அன்று பிறகு என்ன நடந்தது, அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்தார்களா என்று கேட்டாள்.

"ஆமாங்க...அந்தப் பெண்ணை உடனே கூப்பிட்டுக் கேட்டார்கள். அது ஆமாம்னு ஒத்துகிச்சுங்க...ஏன் பண்ணினேன்னு கேட்டா, இனி ஒரு தரம் உங்க பையன் வேற எந்தப் பொண்ணு கிட்டயும் இது மாதிரி இனிமேல் சொல்ல மாட்டான் இல்லே..அதனால்தான்..அப்படிங்குதுங்க..ப்ரின்சி எல்லாம் ஆச்சர்யப் பட்டு போய் அவளை வார்ன் செய்து அனுப்பினாங்க.."

"அட..ஆச்சர்யமா இருக்கே..இந்த வயசுல எப்படிங்க அந்தப் பொண்ணு இப்படிப் பேசுது..?"

செல்ஃபோனை கீழே வைத்து ரொம்ப நேரத்துக்குப் பிறகும் ஆச்சர்யம் மிச்சமிருந்தது...

22 கருத்துகள்:

 1. வயத்திலே கருவா இருக்கும்போதே இதெல்லாம் ஆரம்பிச்சிடுதோன்னு தோணுது!

  இதுக்குத்தான் தமிழ் சினிமா, டிவி சீரியல் பார்க்க வேணாங்கிறது! பிரகலாதன் கருவில் இருக்கும்போதே நாராயண நாமம் கேட்டு வளர்ந்து, அசுரத்தன்மையே இல்லாமல் இருந்தானாம்!

  டிவி மெகா சீரியல் பார்த்துப் பார்த்து, கருவில் இருக்கும்போதே எல்லாம் படையப்பா நீலாம்பரே ரேஞ்சுக்கு வளர ஆரம்பிச்சிடுது போல!

  பதிலளிநீக்கு
 2. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல.

  காற்றுக்கென்ன வேலி பாடலை ஞாபகம் வைத்து பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. ஒன்றாம் வகுப்புலயே இம்பூட்டு அறிவா அந்த பாப்பாவுக்கு.
  (இப்ப U.K.G - லையே ஆரம்பிச்சாச்சா...)

  பதிலளிநீக்கு
 4. தலைப்பை மிரர்ட்டும் காதல் என்பதற்குப் பதிலாக, மிரட்டியே காதல் என்று வைத்திருக்கலாம்!

  மிரட்டிய பதிவு!

  பதிலளிநீக்கு
 5. வாங்க கிருஷ் சார்,
  சாதாரணமாகவே பெண் குழந்தைகள் ஆண் பையன்களை விட மன வளர்ச்சியிலும் முன்னே இருப்பார்கள் என்பது தெரிந்ததுதான்..ஆனாலும் இந்தச் சிறு பெண் சொன்னது ஆச்சர்யம்தான்..
  மிரட்டியே காதல் என்று சொல்ல முடியாதே...காதலிக்க சொல்லவில்லையே..அதை மறக்க வைக்க தானே சொல்கிறாள்...மன்னிக்கவும்..மிரட்டுகிறாள்..!

  வாங்க தமிழ் உதயம்,
  கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர் தான்.... என்ன பண்ண?

  வருக சைவகொத்துபரோட்டா,
  பொண்ணுங்களுக்கு எப்பவுமே அறிவு ஜாஸ்திதான்...ஒவ்வொரு வருட பள்ளி இறுதி முடிவுகளும் சொல்லுமே அதை...

  பதிலளிநீக்கு
 6. அழகா இருக்கிற அந்தப் புள்ள கண்ல தாரைக் காய்ச்சி ஊத்தின மாதிரி ..... எதுக்கு இந்த கொல வெறி?

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 7. பையன்களுக்கு கவனம் விளையாட்டு அது இது என்று பல முனைகளிலும் சிதறி விடுவது ஒன்று தான் பள்ளி இறுதி முடிவுகளில் பெண்களே எப்போதுமே முன்னணியில் இருப்பதற்கான ஒரே காரணம்!

  இதைப் பெண்களின் அறிவுக் கூர்மை, மனவளர்ச்சி என்று சொல்ல முடியாது.

  பெண் எப்போதுமே சந்தேகப் பிராணி! ஒருவனை நம்பலாமா கூடாதா என்று தீர்மானிக்கவே நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறாள். ஒரு ஆண் உணர்வுகளின் பின் செல்ல முனைகிற தருணம்,எப்போதுமே அவசர அவசரமாகவே ஏற்படுகிறது! பெண்ணுடைய லாஜிக் தன்னுடைய பாதுகாப்பு ஒன்றின் மீதே அதிகமாக இருக்கிறது.

  மெகா சீரியல்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு விசும்பிக் கொண்டிருப்பதும், அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதும் தாய்க் குலமா இல்லை தந்தைக் குலமா என்று கேட்டுப் பாருங்கள்! அப்போது, உங்களுடைய பெண்ணின் மனவளர்ச்சி, அறிவுக் கூர்மை இவற்றைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாகப் போய்விடக் கூடும்!

  இதற்கு என்ன சொல்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 8. ஹி ஹி - அது ஒன்னுமில்லீங்கோ ஜவஹர் - காலையிலே கறுப்புக் கண்ணாடி இல்லே - அப்புறமா அந்தப் பொண்ணு செல்லுல கூப்பிட்டு, அங்கிள் - யு ஹவ் ரிட்டன் சம்திங் இன் தமிள் பய் தி சைடு அஃப் மை பிக்சர் - வாட் இஸ் இட் என்று கேட்டாள் - அதனால, அவள் படத்தை அடையாளம் காண முடியாமல் மாற்றி விட்டோம். ஆனா கதையில் வருகின்ற சின்னப் பெண் வேறே - இந்தப் பெண் வேறே - என்பதை மட்டும் இங்கே கூறிக்கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 9. கிருஷ் சார் - பெண்ணினத்தின் ஏக பிரதிநிதி ஒருவர் எங்கள் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். அவர் - உங்க கருத்தைப் படித்துவிட்டு, கோபமாக இருக்கிறார். எப்போ புயல் கரையைக் கடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. (வலுவிழந்து - வட மேற்கு அல்லது வட தெற்கு திசையில் நகர்ந்து செல்லவும் - ஒரு வாய்ப்பு உள்ளது.)

  பதிலளிநீக்கு
 10. புயல் சின்னத்தை உடனே மதுரைக்கு அனுப்பி வைக்கவும்! இங்கே அ'நாவுக்கு பிறந்தாநாள் என்று எல்லா முனைகளிலும் இருந்து அடிக்கப் படும் ஜால்ரா சத்தத்திற்கு முன்னால், புயல் கரையை கடக்கிறதா, இல்லை வலுவிழந்து விடுகிறதா என்பதைப் பார்த்து விடலாம்!

  பதிலளிநீக்கு
 11. கிருஷ் சார் - அந்தப் புயலுக்குப் பிடித்த தலைவர் 'அ' தான். நான்கெழுத்து அ இல்லை - மூன்றெழுத்து அ

  பதிலளிநீக்கு
 12. /இடுகை மிரட்டுகிறது...!/

  சிங்கக்குட்டிக்குக் கூட மிரட்சியா....!?

  தேவுடா! (தேவகௌடா இல்லை)

  :-))

  பதிலளிநீக்கு
 13. அசத்தல் யம்மாடி வாயுள்ள பிள்ளை பொழைச்சுகிடும்னு சொல்றது சரிதான் போல... சைல்ட் ப்லாக் மெயிலர்ஸ்

  பதிலளிநீக்கு
 14. ம்ம்ம்...உலகம் முந்தின மாதிரி இல்லையாம்.வேகமா சுழலுதாம் !

  பதிலளிநீக்கு
 15. குஷி படத்துல பிறந்தவுடனே கையைப் பிடிச்சுக்கிறாங்கன்னா நம்புறீங்க
  உண்மையிலே நடந்தா ஆச்சர்யப்படுறீங்களே மக்களே

  பதிலளிநீக்கு
 16. தியா,
  நன்றி...தாள் வணக்கத்துக்குப் பின் ஒன்றும் பதிவில்லையே..ஏன்?

  சிங்கக்குட்டி,
  நன்றி.. புதிய அனுபவங்களை ஆரம்பியுங்கள்...

  உண்மைதான் வசந்த்,


  ஆமாம் ஹேமா,
  ..
  தேனம்மை மேடம்,
  நன்றி... படத்தில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்...

  பதிலளிநீக்கு
 17. கையைப் பிடிச்சுக்கிறதை நம்பறது கஷ்டமோ, தப்போ இல்லை! எந்தக் குழந்தையிடம் வேண்டுமானாலும் கையைக் கொடுத்து சோதித்துக் கொள்ளலாம்!

  பிஞ்சிலேயே நீலாம்பரி வேலை பண்ணறதையுமா?

  நாடு தாங்காது!

  பதிலளிநீக்கு
 18. உண்மைச் சம்பவமா? அப்படியென்றால் அந்த டீச்சர்களைப் பிடித்து உதைக்க வேண்டும். what rot?! அந்த வயதில் 'i love you' என்ற 'expression'க்கு என்ன பொருள் என்று சொல்லிக் கொடுக்காமல் கண்டிக்கிறார்களா? அது போதாதென்று இன்னொரு ஒண்ணாங்கிளாஸ் பெண் அதை குற்றம் போல் black mail செய்து moral justification வேறே கொடுக்கிறாளா? we are such hypocrites and we pride ourselves on that. very sad. ஒரு வேளை i hate you என்று சொல்லியிருந்தால் பரவாயில்லையோ? அந்த வயதில் 'i hate you' என்று சொன்னால் தான் ஆபத்து. no wonder our cultural purist cfekurs are uptight and irate about valentines day.

  பதிலளிநீக்கு
 19. எதையோ தேடப் போய் இது கிடைச்சது! :) படிச்சேன், சுவாரசியம். இந்த மாதிரி ஒரு நிகழ்வு எங்க வீட்டிலேயும் குழந்தையின் தாத்தா சொல்லிக் கொடுத்து குழந்தை பள்ளியில் போய்ச் சொல்லி! நடந்திருக்கு. ஆனால் ஆசிரியர்கள் குழந்தையைக் கண்டிக்கவில்லை. மாறாக ஐ லவ் யூவுக்குப் பொருள் தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க. சொன்னதோடு குழந்தையின் தாயிடம் இப்போ இது விளையாட்டாக இருந்தாலும் தாத்தாவிடம் சொல்லுங்கள். நீங்களும் யாரை வேண்டுமானாலும் லவ் பண்ணலாம், லவ் என்றால் என்ன என்று உண்மையான பொருளைச் சொல்லிக் கொடுத்து வளருங்கள் என்று சொன்னார்கள். ஆகவே அந்தப் பையர் ஐ லவ் யூ சொன்னது தப்பே இல்லை. புரிதலில் தான் கோளாறு.

  அப்பாதுரையை ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. கீதா மேடம்.... பழைய பதிவுகளில் ஒரு சுற்றுப் பயணமே நடத்தி விட்டீர்களே...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!