Philosophy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Philosophy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.11.09

கேள்வி பிறந்தது இன்று...

மனையாளும் மக்களும் வாழ்வும்
தனமும் தன் வாயின் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே
வழிக்கேது துணை?
தினையா மகவெள் ளளவாகினுமுன்பு
செய்த தவந்
தனியாள் வென்றும் பரலோகஞ்
சித்திக்குஞ் சத்தியமே


அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே
விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மியிரு
கைத்தல மேல்வைத் தழுமைந்
தருஞ்சுடுகாடு காடுமட்டே
பற்றித் தொடருமிருவினைப்
பண்ணிய பாவமுமே ...


விட்டுவிடப் போகுதுயிர்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்...


மேலே உள்ள பட்டினத்தார் பாடலைப் படிக்கும் போது உங்களுக்கு கண்ணதாசனின் ஒரு பாடல் நினைவு வரும்.


பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்


பட்டினத்தாரின் இந்த வரிகளைப் படிக்கையில் MS குரலில் வரிகள் மனதில் ஓடும்.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை எனப் பெயரிட்டு, 'வாழ்கிறோம்' என்ற பெயரில் 'எதிர்காலத்துக்கு' என்று என்னென்னவோ சேர்க்கிறோம்.


கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வரங்களின் லிஸ்ட் போடும் மனிதன், நாம் கேட்காமலேயே அவன் நம் பெயரில் எழுதி வைத்துள்ள இந்தப் பரிசை மறுக்க என்ன வழி என்று ஆராய்ச்சி செய்து வருகிறான்...


நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.


குழந்தை முதல் முதுமை வரை அடுத்து என்ன என்று அறிந்த மனிதன் மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்வியை இன்னும் பதிலளிக்க முடியாமல் திணறுகிறான். தெரிந்ததாக நினைப்பது எல்லாம் ஆவி உலகம், சொர்க்கம், நரகம் கதைகள்தான். நாம் வாங்கிய A/C என்ன, ஒரு விசிறியைக் கூட நரகத்துக்குக் கொண்டு போக முடியாது. பின் எதற்கு சேர்க்கிறோம்? நம் வாரிசுகளுக்கா?


பாவ புண்ணியம் சேர்த்துக் கொண்டு அதற்கேற்ப சொர்க்கம், நரகம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் நமக்கு அடுத்த பிறவிகள், முந்தைய பிறவிகளில் நம்பிக்கை.


போன பிறவியில் எதிரி, இந்தப் பிறவியில் உங்கள் மகன் என்று எந்த பட்சியாவது, மகானாவது சொன்னால் நம்புகிறோம். அது போல நம் முந்தைய பிறவியின் தம்பி இந்தப் பிறவியில் நம் மனைவியாக, நம் நாய் அடுத்த பிறவியில் நம் உறவினராக...இப்படி மாறி வரும் உறவு உயிர்கள்......




  • வாரிசு என்பவர்கள் நம் வாரிசுகள்தானா?
  • இதில் யாருக்கு என்று சேர்த்து வைக்கிறோம்?
  • பல விஞ்ஞான முன்னேற்றங்கள் அடுத்தடுத்து நிகழும்போது இந்தக் கேள்வி மட்டும் விடை அறியாமல் ஆண்டாண்டு காலமாய் நிற்பது ஏன்?
  • மரணத்துக்குப் பிறகு என்ன என்று தெரிந்து விட்டால் மனிதன் என்ன செய்வான்?
  • மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?