Friday, November 27, 2009

கேள்வி பிறந்தது இன்று...

மனையாளும் மக்களும் வாழ்வும்
தனமும் தன் வாயின் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே
வழிக்கேது துணை?
தினையா மகவெள் ளளவாகினுமுன்பு
செய்த தவந்
தனியாள் வென்றும் பரலோகஞ்
சித்திக்குஞ் சத்தியமே


அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே
விழியம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மியிரு
கைத்தல மேல்வைத் தழுமைந்
தருஞ்சுடுகாடு காடுமட்டே
பற்றித் தொடருமிருவினைப்
பண்ணிய பாவமுமே ...


விட்டுவிடப் போகுதுயிர்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்...


மேலே உள்ள பட்டினத்தார் பாடலைப் படிக்கும் போது உங்களுக்கு கண்ணதாசனின் ஒரு பாடல் நினைவு வரும்.


பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்


பட்டினத்தாரின் இந்த வரிகளைப் படிக்கையில் MS குரலில் வரிகள் மனதில் ஓடும்.


பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை எனப் பெயரிட்டு, 'வாழ்கிறோம்' என்ற பெயரில் 'எதிர்காலத்துக்கு' என்று என்னென்னவோ சேர்க்கிறோம்.


கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வரங்களின் லிஸ்ட் போடும் மனிதன், நாம் கேட்காமலேயே அவன் நம் பெயரில் எழுதி வைத்துள்ள இந்தப் பரிசை மறுக்க என்ன வழி என்று ஆராய்ச்சி செய்து வருகிறான்...


நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.


குழந்தை முதல் முதுமை வரை அடுத்து என்ன என்று அறிந்த மனிதன் மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்வியை இன்னும் பதிலளிக்க முடியாமல் திணறுகிறான். தெரிந்ததாக நினைப்பது எல்லாம் ஆவி உலகம், சொர்க்கம், நரகம் கதைகள்தான். நாம் வாங்கிய A/C என்ன, ஒரு விசிறியைக் கூட நரகத்துக்குக் கொண்டு போக முடியாது. பின் எதற்கு சேர்க்கிறோம்? நம் வாரிசுகளுக்கா?


பாவ புண்ணியம் சேர்த்துக் கொண்டு அதற்கேற்ப சொர்க்கம், நரகம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் நமக்கு அடுத்த பிறவிகள், முந்தைய பிறவிகளில் நம்பிக்கை.


போன பிறவியில் எதிரி, இந்தப் பிறவியில் உங்கள் மகன் என்று எந்த பட்சியாவது, மகானாவது சொன்னால் நம்புகிறோம். அது போல நம் முந்தைய பிறவியின் தம்பி இந்தப் பிறவியில் நம் மனைவியாக, நம் நாய் அடுத்த பிறவியில் நம் உறவினராக...இப்படி மாறி வரும் உறவு உயிர்கள்......
  • வாரிசு என்பவர்கள் நம் வாரிசுகள்தானா?
  • இதில் யாருக்கு என்று சேர்த்து வைக்கிறோம்?
  • பல விஞ்ஞான முன்னேற்றங்கள் அடுத்தடுத்து நிகழும்போது இந்தக் கேள்வி மட்டும் விடை அறியாமல் ஆண்டாண்டு காலமாய் நிற்பது ஏன்?
  • மரணத்துக்குப் பிறகு என்ன என்று தெரிந்து விட்டால் மனிதன் என்ன செய்வான்?
  • மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?

37 comments:

சிம்பிளி சினிமா said...

பட்டினத்தார் பாடல் படித்தவுடன், எனக்கு ஞாபகம் வந்த பாடல்:
வீடுவரை உறவு,
வீதிவரை மனைவி,
காடுவரை பிள்ளை,
கடைசிவரை யாரோ?

Anonymous said...

// வாரிசு என்பவர்கள் நம் வாரிசுகள்தானா?
இதில் யாருக்கு என்று சேர்த்து வைக்கிறோம்?
பல விஞ்ஞான முன்னேற்றங்கள் அடுத்தடுத்து நிகழும்போது இந்தக் கேள்வி மட்டும் விடை அறியாமல் ஆண்டாண்டு காலமாய் நிற்பது ஏன்?
மரணத்துக்குப் பிறகு என்ன என்று தெரிந்து விட்டால் மனிதன் என்ன செய்வான்?
மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?//

என்ன ஆச்சு ஸ்ரீராம்?

கௌதமன் said...

மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?

தீவிரவாதிகள் டீ விற்கிறதுக்குப் போயிடுவாங்க!

meenakshi said...

//மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்? //
வாழ்வதில் சலிப்பு ஏற்பட்டு, அமைதி இழந்து, வன்முறைகளும் தீய செயல்களும் மேலோங்கும். வேண்டாமே இந்த விபரீதம்! மரணம்தான் ஒரு நிரந்தர விடுதலை, முற்றுபுள்ளி எல்லாவற்றுக்கும்.

IBGY said...

// நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.//

என்ன ஸ்ரீராம்? நீங்க கடன் கேட்டு யாராவது இல்லைன்னு சொல்லிட்டாங்களா?

சாய்ராம் கோபாலன் said...

"கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வரங்களின் லிஸ்ட் போடும் மனிதன்"

நான் அப்படி கேட்கவில்லை சாமி. என் பெண்டாட்டியின் ஊரான திருச்சியில் கூரை இல்லாத ஒரு கோவிலுக்கு என்னை லண்டனில் இருந்து நாங்கள் திரும்பி தமிழ்நாடு சென்றவுடன் கூட்டி சென்றாள். அந்த கோவிலில் எழுதி வைத்தால் நடக்கும் என்பது ஐதிகம் !

நான் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று என்றும் கேட்டதில்லை (என் மகன் ஐ.ஐ.டியில் படிக்க மட்டும் எப்போதாவது கேட்பேன் - சுயநலம் இல்லாத மனிதன் உண்டா !)

அந்த கோவிலில் எழுதி வைத்த பிறகு என் மனைவி என்னை கேட்டாள் - "என்ன எழுதி வைத்தீர்கள் என்று !"

நான் எழுதியதை சொன்னேன் :

- லஞ்சம் வாங்காத அரசியல்வாதி
- அத்தியாவசியமான தண்ணீருக்கு அல்லாடாத இயற்கையின் அருள் !
- படிப்பறிவுள்ள பண்பான மக்கள்

இது இருந்தால் போதும் என்று எழுதி வைத்தேன் !

- சாய்ராம் கோபாலன்

எங்கள் said...

மிகச் சரி 'சிம்ப்ளி சினிமா'...அதோடு கூட 'விட்டு விடும் ஆவி... சுட்டு விடும் நெருப்பு.......' வரிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

எங்கள் said...

அன்புள்ள அனானி,
யாரென்று தெரியாமலே பதில் சொல்லவில்லையா? அது ஏதோ படிக்கும்போது வந்த என்னவென்று தெரியாத கேள்வி..கொஞ்சம் இடத்தை அடைத்து ஒரு பதிவு போட முடிஞ்சுது இல்லை?!!

எங்கள் said...

மரணம் முற்றுப் புள்ளியா கமாவா என்று தெரியாத நிலை.. நான் என்பது நம் எண்ணங்கள்தான் என்றால் மரணம் அதற்கு முற்றுப் புள்ளியாக இருக்க வாய்ப்புக் கொஞ்சம் உண்டு...அதுவே சில சமயம் அடுத்த பிறவியிலும் முன் ஜென்ம ஞாபகமாக எண்ணங்கள் தொடர்வதும் உண்டு... அப்போ முடிவு முடிகிறதா தொடர்கிறதா மீனாக்ஷி?

எங்கள் said...

காசு இல்லை IBGY, எனக்குத் தோன்றிய கேள்விகளுக்கு பதில் வந்தால் போதும்...!

எங்கள் said...

லஞ்சம் வாங்காத அரசியல்வாதி ....நல்ல அரசியல்வாதி என்பதுபோல ஆக்சிமோரான்.

இயற்கை நமக்கு, மனிதகுலத்துக்கு தந்த கொடைகளை கெடுத்துக் கொண்டது நாமேதான்...

மூன்றாவது கேள்விக்கு உலகம் என்ற இந்த ப்ளாக்கின் எடிட்டரான கடவுள் ஓடி விடுவார் சாய்....!!

புலவன் புலிகேசி said...

/நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.//

சரியா சொன்னீங்க..

ஹேமா said...

மரணம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் எங்களை நோக்கி வந்துகொன்டிருக்கும் ஒரு விருந்தாளி.வரவேற்றே ஆகவேண்டும்.

meenakshi said...

//அடுத்த பிறவியிலும் முன் ஜென்ம ஞாபகமாக எண்ணங்கள் தொடர்வதும் உண்டு //
இதை நீங்கள் நம்புகிறீர்களா? போன ஜென்மத்தில் விட்டகுறை தொட்டகுறையாக இருக்கலாம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சுக்காகதான். அப்படி யாரவது போன ஜென்மத்து எண்ணங்கள் தனக்கு நினைவில் இருக்கிறது என்று சொன்னால், அது உண்மையா என்று எப்படி கண்டுபிடிப்பது? என்ன காரணம் என்றே புரியாமல் நமக்கு ஒருவர் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்படும் போது, ஒரு வேளை போன ஜென்மத்து பந்தம் தொடருகிறதோ என்ற எண்ணம் தோன்றும், உண்மைதான். ஆனால் அதுதான் அவர்கள் மேல் நமக்கு அவ்வளவு பிரியம் ஏற்பட காரணமா என்று எப்படி அறிந்து கொள்வது? அந்த நபரை தற்போது நமக்கு பிகவும் பிடித்திருப்பதால் கூட அளவு கடந்த பிரியம் அவர்கள் மேல் இருக்கலாம் அல்லவா? போன ஜென்மம் என்று ஒன்று இருந்ததா, மறு ஜென்மம் என்று ஒன்று இருக்கிறதா என்று சரியாக தெரியாதபோது, மரணம் என்பது ஒரு முற்றுப்புள்ளிதான், எல்லாவற்றுக்கும்.

//நான் என்பது நம் எண்ணங்கள்தான்//
மிகவும் அர்த்தமுள்ள, அருமையான வரி.

சாய்ராம் கோபாலன் said...

எங்கள் said...

"இயற்கை நமக்கு, மனிதகுலத்துக்கு தந்த கொடைகளை கெடுத்துக் கொண்டது நாமேதான்..."

என்ன அப்படி சொல்லிட்டீங்க ? அது என்ன ஆறு அறிவு என்றும், மனிதக்குலம் என்று மற்ற எல்லா ஜீவராசிகளையும் ஓ.... ஆகிவிட்டது ! (ஓரம் சார், தப்பாக படிக்கவேண்டாம் !)

எங்கள் said...

வாரக் கடைசியிலும் தவறாமல் வந்ததற்கு நன்றி புலவன் புலிகேசி...

எங்கள் said...

//"மரணம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் எங்களை நோக்கி வந்துகொன்டிருக்கும் ஒரு விருந்தாளி.வரவேற்றே ஆகவேண்டும்."//

அதைத் தடுக்க முடியுமா என்றுதானே ஹேமா மனிதன் ஆராய்ந்து வருகிறான்..

வீட்டுக்கு உறவுகள் வந்ததில் பிசி என்றீர்களே...உறவுகள் ஊர் சென்றாகி விட்டனரா?

எங்கள் said...

யோசிக்க வேண்டிய கேள்விதான் மீனாக்ஷி..

ஆனால் சொர்க்கம் நரகம் என்பது இருக்கிறதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. முன் பிறவி, அடுத்த பிறவி என்ற ஒன்று இருப்பதற்கும் சான்று இல்லைதான் ஏழு ஜென்மங்களோ எழுபது ஜென்மங்களோ கணக்கிட முடியாது...ஆனால் சில சம்பவங்கள் படித்துள்ளோம். மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தை புரியாத மொழியில் அவ்வப்போது பேசி என்னவென்று விசாரித்தபோது வேறு ஊரில் விபத்தில் காலமான ஒருவனின் நினைவுகளை மட்டுமல்ல வயிற்றிலோ இடுப்பிலோ பட்ட எந்தக் காயத்தால் அவன் இறந்தானோ அந்த வடு கூட குழந்தைக்கு இருந்தது போன்ற இன்னும் பல சம்பவங்கள் படித்திருக்கிறோம்.
நரகத்துக்கோ சொர்கத்துக்கோ போய் வந்த அனுபவங்கள் படித்ததில்லை. எனவே அப்படிச் சொல்லத் தோன்றியது...

எங்கள் said...

சாய் சார்,
எதையோ எடிட் பண்ணப் போய் பதிலையே பாதிலாக, அதாவது பாதிதான் தந்தாற்போல உள்ளது..."மனிதக் குலம்...மற்ற ஜீவராசிகள் ஓரம்....."

இயற்கையை மீறுவது மற்ற உயிரினங்கள் இல்லையே...மனிதன்தானே...

meenakshi said...

//ஆனால் சில சம்பவங்கள் படித்துள்ளோம். மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தை ...............
நரகத்துக்கோ சொர்கத்துக்கோ போய் வந்த அனுபவங்கள் படித்ததில்லை. எனவே அப்படிச் சொல்லத் தோன்றியது...//
வாஸ்தவம்தான். இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது, நம் அறிவுபூர்வமான சிந்தனைகளையும் மீறி, சில நேரங்களில் நாம் சிலவற்றை நம்ப வேண்டியதாகி விடுகிறது.

அப்பாதுரை said...

பிறப்பைப் பற்றி எள்ளளவு அறியவே
பல்லாயிரம் ஆண்டுகளானதே?
பிறப்பைப் பற்றி முழுதும் அறிவோமா?
இறப்பைப் பற்றிய அறியாமையை
எண்ணிக் கலங்குவதற்கு?

பிறப்பு
யதேச்சையான விபத்து.
இறப்பும்.

பட்டினத்தார் சொன்னது
இதைத்தான்: பிறந்தன இறக்கும்.
கண்ணதாசன் சொன்னதும்
இதைத்தான்: சூனியத்தின் நிலைப்பு.

இதை மறந்து
எழுதி வைப்பதும், எண்ணி வைப்பதும்
ஏமாறத்தான்.

அல்பத்துக்கு பவிசு வந்தால்
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்.
மரணத்தை வெல்ல வேண்டும்
என்பது மகத்தான ஆணவம்.
மனிதராய் வாழ வேண்டும்
என்பதை முதலில் அறிய வேண்டும்.

காலப்புத்தகத்துக்கும்
கடைசிப்பக்கம் உண்டு.
நாம் படிப்பதால்
காலப்புத்தகத்துக்கு கௌரவமா?

எங்கள் said...

அப்பா சார்,

பிறப்பு....யதேச்சையான விபத்து?
இறப்புமா?....பிறக்கின்றபோதே முடிவு செய்யப் பட்ட விஷயமல்லவா அது? அது எந்த நாள், எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது எப்படி ஆணவமாகும்? அல்பத்துக்கு வரும் பவிசாகும்? காலப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை படிக்க முடிகிறதா? இதில் கௌரவப் பிரச்னை...என்ன அது? புரியவில்லை.

ஆதி மனிதன் said...

மேலே உள்ள பட்டினத்தாரின் வரிகளை எதற்காக நீங்கள் இங்கு பதிவிட்டீர்களோ... அது எனக்கு தெரியாது ... ஆனால் அதில் உள்ள அனைத்தும் உண்மை. இதை சாதாரணமாக பட்டினத்தாரின் பாடலாக படிப்பவர்களை விட அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் மகத்துவம் மென் மேலும் விளங்கும்.

என்தந்தையின் எதிர்பாராத அகால மரணம். நான் அருகிலேயே இருந்தும், எல்லா பொருள் வசதியும், உதவியும் இருந்தும், கண்மூடி கண் திறப்பதற்குள் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார் - எந்த உயிர் மீட்கும் முயற்சிக்கும் இடம் தராமலேயே. இத்தனைக்கும் அவர் வாழ்ந்த இடத்திலோ, அவர் கூடவே இருந்த/வாழ்ந்த அவரின் துணைவியார் (என் தாயார்) அருகில் இல்லாமலேயே. ஆனால் என் தாய் ஒரு Genious. அத்தனை சோகத்திலேயும் எனக்கு அவர் பட்டினத்தாரின் பாடல் ஒன்றை கூறித்தான் சமாதனப் படுத்தினார். அது முழுமையாக எனக்கு தற்சமயம் நினைவுக்கு வர மறுக்கிறது. அனால் அதன் சாராம்சம் இது தான்.

"இரவிலோ பகலிலோ, எந்த மணி நேரத்திலோ, எந்த இடத்திலோ மரணம் சம்பவிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது"

முடிந்தால் அந்த (original) வரிகளை இங்கே எனக்காக பிரசரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

meenakshi said...

//இறப்புமா?....பிறக்கின்றபோதே முடிவு செய்யப் பட்ட விஷயமல்லவா அது? அது எந்த நாள், எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது எப்படி ஆணவமாகும்?//

இறப்பை அறிந்து கொள்ள முயற்சி செய்வது ஆணவம் இல்லை. இறப்பை வெல்ல நினைப்பதுதான் ஆணவம். நாம் இறப்பது எந்த நாள், எப்படி என்பதை அறிந்து கொண்டுவிட்டால், வாழும் நாட்கள் நரகமாகி விடாதா? மரணம் எப்பொழுது சம்பவிக்கும் என்று தெரியாமல் இருந்தால்தான், நாளைய காலமாவது நமதாகும் என்ற நம்பிக்கையில் நிகழ் காலத்தை சற்று நிம்மதியுடன் கடக்க முடியும்.

அப்பாதுரை said...

மீனாட்சி மட்டும் தான் ஒழுங்கா படிப்பாங்க போல (ஸ்கூல் காலேஜ்லயும் இப்படித் தான் படிச்சீங்களா?)

மரணத்தை எதற்காக வெல்ல வேண்டும்?
மரணம் என்ன நோயா, வறுமையா, தீமையா, கோபமா, குற்றமா, களவா, அறியாமையா?

பிறப்பு கூட விபத்தில்லை எனலாம்; மரணம் நிச்சயம் விபத்து தான். எதேச்சை தான். தற்செயல் தான். தற்கொலை செய்ய முயன்று முயன்று தோற்றவர்களும் உண்டு; அழிவே இல்லை என்று நினைத்தவர்கள் அடுத்த நாளே மறைந்ததும் உண்டு.

அப்பாதுரை said...

மரண நாளை அறிந்து கொண்டுவிட்டால் இருக்கும் நாள் நரகமா meenakshi? யாருங்க சொன்னது? ரஜினிகாந்தா? (இப்பத்தான் ஒழுங்கா படிச்சீங்கன்னு சொன்னேன், வாபஸ் வாபஸ் வாபஸ்)

மரண நாளை அறிந்து கொண்டால் இருக்கும் நாள் கொண்டாட்டம். செய்ய வேண்டியைதைச் செய்யவும், விருப்பம் போல் வாழவும் கிடைக்கும் உன்னத வாய்ப்பு.

பத்து வருடங்களில் இறக்கப் போகிறோம் என்று வையுங்கள் - என்னென்ன செய்வீர்கள் இன்றிலிருந்து? நரகமா, சொர்க்கமா (அப்படி இருந்தால்) நீங்களே தீர்மானியுங்கள். (2012ல் எல்லாருமே பூட்ட கேசுன்றாங்க - பத்து வருசம் கூடத் தேறாது போலிருக்கே ?)

கருவுற்றதும் இன்றிலிருந்து இத்தனை நாள் பொறுத்துப் பிறக்கும் எனச் சொல்ல முடிகிறது (பெரும்பாலும் கணிப்பின் படி நடக்கிறது - இடையில் கருவைத் தவறவிடுவது விபத்து எனலாமா?) அதே போல் இத்தனை நாள் பொறுத்து இறப்பு என்று கணிக்க முடிந்தால் எத்தனை நன்மை! நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

மரண நேர அறிவின் முதல் பயன்: உலகத்தில் போர் ஒழியும் என்று நான் நம்புகிறேன். அங்கே தொடங்கினால் பிறகு படிப்படியாக முன்னேற்றம் தான். மரண நேரம் தெரிந்தால் இன்னொரு அறியாமையும் ஒழியும் - கடவுள் நம்பிக்கை. நான் சொல்லவில்லை, எம்டிஆர் சொன்னது.

Anonymous said...

நம் புராண இதிகாசங்களில் திரும்பத் திரும்ப வரும் ஒரு விஷயத்தை நாம் மறந்து விடுகிற மாதிரி தெரிகிறது.
எனக்கு மரணம் இந்த வழியில் அல்லது வேறு வழியில் சம்பவிக்கக் கூடாது என்று வரம் வாங்கி வந்தவர்கள் கூட அவர்கள் சொல்ல மறந்து விட்ட ஒரு ஷரத்தில் அடி பட்டுப் போவது காண்கிறோம். எனக்கு இந்த நாள் இந்த வகையில் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்த உடனே அது வரை "ஞாலத்தை வென்றிடுவேன்" என்று பாடிக் கொண்டு எல்லோரும் கிளம்ப, எல்லாம் வல்ல இறைவன் "நான் மரணம் சம்பவிக்காது" என்று மட்டும் தான் வரம் கொடுத்தேனே தவிர, நீங்கள் இரண்டு கால்களையும் உபயோகித்து நடக்க முடியும் என்று
உத்தரவாதம் எதுவும் கொடுக்கவில்லையே' என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

எங்கள் said...

ஆதி சார்,
எந்த ஒரு பாடலோ சம்பவமோ நாம் அனுபவித்ததுடன் அல்லது நம் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒத்துப் போகும்போதுதான் படிக்கும் பொருள் நம்மை பாதிக்கிறது. நீங்கள் சொல்லி உள்ள சம்பவம் எப்போது என்று தெரியா விட்டாலும் அதன் தாக்கம் எங்களுக்கு புரிகிறது. எங்கள் அனுதாபங்கள். நீங்கள் கேட்டுள்ள வரிகளை பிரசுரிக்க முயற்சி செய்கிறோம்.

எங்கள் said...

ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதே அதன் விளைவுகளை அறிந்து தடுக்கத்தானே...அதை ஆணவம் என்று சொன்னால் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் வந்திருக்காதே மீனாக்ஷி..

எங்கள் said...

அப்பா சார்,
மரண நேரம் தெரிந்தால் கடவுள் மதிப்பிழந்து போவார் என்பது உண்மைதானோ என்னமோ?

meenakshi said...

நாம இந்த நாள் நிச்சயமா சாகப்போறோம்னு தெரிஞ்சு போச்சுன்னா, அந்த நேரத்தில் இருந்தே, அது பத்து வருஷம் கழிச்சுதான்னாலும் , மனசு அதை பத்தி நினைக்கறத தடுக்க முடியாது. அப்பாதுரை, நீங்க எழுதி இருக்கா மாதிரி மரண நாளை அறிந்து கொண்டால், இருக்கும் நாளை கொண்டாடலாம். ஆனா அதை நிம்மதியா என்னால கொண்டாட முடியாது. அடுத்த நொடில நான் சாகப்போறதா இருந்தாலும், அது தெரியாம இருந்தாதான், இந்த நொடிய நிம்மதியா என்னால கழிக்க முடியும். சாகப்போறது நிச்சயம்தான் அப்படின்னாலும் அது எப்போன்னு தெரியாம இருக்கறதுதான் நிம்மதின்னு நான் நம்பறேன்.

Mali said...

ஞானிகள் பலர் தம் மரண நாள் பற்றி அறிந்திருந்ததால்
தம்மால் முடிந்த நன்மையை உலகிற்கு செய்துவிட்டு
மறைந்தார்கள். ஆனால் சாதாரண மானிடனுக்கு அவன்
மரணம் பற்றி தெரியாமல் இருப்பதே நல்லது. ஆனால்
அதிலும் exceptional cases இருக்கலாம்.

Anonymous said...

நமக்கு எப்படியோ - ஆனால் - தேர்தல் வேட்பாளர்களின் மரண நாள் - நமக்கு முன்னாடியே தெரிஞ்சா -- அஞ்சு வருஷத்துக்குள்ள போற அல்பாயுசுக்கு - ஓட்டுப் போடாம - தொகுதியில இடைத் தேர்தல் வராமப் பாத்துக்கலாம்!

meenakshi said...

ரொம்ப சரியா சொன்னீங்க 'அனானி'. தேர்தல் செலவாவது அரசாங்கத்துக்கு நிறைய மிச்சமாகும்.

எங்கள் said...

இதை முதன்முதலாக யோசிப்பதால் இப்படித் தோன்றலாம் மீனாக்ஷி...காலப் போக்கில் இது நடைமுறையில் சாத்தியப் பட்டு, பழகி, எல்லோருக்கும் கடைகளில் விற்கும் மருந்து,உணவுப் பொருள் போல Date Of Manufacturing, Date Of Expiry தெரிந்து, அது வழக்கமாகி விட்டால் சாதாரணமாகிவிடும்...!

எங்கள் said...

சாதாரண மானிடன் தன் மரண நாள் அறிந்து, நல்ல காரியங்கள் பல செய்து, அதன் காரணமாக மேலும் மேலும் ஞானம் பெறத் தொடங்கி விட்டால் ஞானிகள் எண்ணிக்கை அதிகமாகி விடும்
இல்லை மாலி சார்?

எங்கள் said...

அன்பு அனானி,

நல்ல யோசனை...ஆனால் பேர் சொல்லாம யோசனை சொல்கிறீர்களே...ஆட்டோ வந்து விடும்னு பயமா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!