தடம் புதிது, கட்டணம் பெரிது!
முன்பெல்லாம் இந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்குச் செல்ல இவ்வளவுதான் கட்டணம் என்று நிச்சயம் இருக்கும். ஏனென்றால் ஒரே மாதிரி பஸ்கள்தான் இருந்தன. ஆனால் இப்போதோ ஆங்கில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைத்து எந்த பஸ்ஸில் என்ன கட்டணம் என்று நடத்துனர் கேட்கும் வரை சஸ்பென்சாகவே இருக்கும்!
ஆனால் அரசாங்க வாகனங்களை உபயோகப் படுத்தும் முறையிலா நிலைமை இருக்கிறது?
சில நாட்களுக்கு முன் குரோம்பேட்டை செல்ல ஏ.ஸி. பஸ் ஒன்றில் ஏறினேன். கூட்டமில்லாமல் இருக்கும் என்று நம்பித்தான் ஏறினேன். ஒரு கால் வைக்க மட்டுமே இடம் இருந்தது. பொதுவாகச் சென்னையில் காலை எட்டு மணி முதல் பத்தரை மணி வரையும் மாலை நாலு மணி முதல் ஏழு மணி வரையும் எந்த பஸ், டிரெயினையும்நம்பிப் போக முடியாது. பிதுங்கும் ஜனக்கூட்டம்! எல்லா வாகனங்களிலும் மூச்சுத் திணறும். எத்தனை பஸ் விட்டாலும் சமாளிக்க முடியாத இந்தக் கூட்டத்தைச் சமாளிக்க அரசாங்கம் என்னதான் செய்யுமோ...?
ஷேர், ஷேர்
இந்த நிலையில் சென்னையில் வலம் வரும் ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலான மக்களுக்கு வரப்ரசாதம்தான். என்னதான் கட்டணக் கொள்ளை அடிக்கட்டும், பஸ் ஸ்டாப்புகளில் இடைஞ்சலாய் நின்று மக்களை ஏற்றிக் கொள்ளட்டும், பஸ் கூட்டத்துக்கு இது பரவாயில்லை என்றே தோன்றும்.
மேலும் சாதாரண ஆட்டோக்கள் கேட்கும் தொகையைப் பார்க்கும்போது ஷேர் ஆட்டோவையே மக்கள் தேர்வு செய்கிறார்கள்.
என்ன ஷேர்?
முதலில் சாதாரண வகை ஆட்டோவை பெரிதாக்கியதைப் போல வந்த ஷேர் ஆட்டோக்கள். இதை 'ஆபே ஆட்டோக்கள்' என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். இதில் ஒரு சிரமம் என்னவென்றால் பின்னால் திணிக்கப் படுபவர்கள் முதல் பின் வரிசை இருக்கையிலும், அடுத்த வரிசை அவர்கள் காலடியிலும் ( ! ) அமர வைக்கப் பட்டு இடிக்க இடிக்க வந்து இறங்க சிரமப்படுவது. டிரைவரின் இரு பக்கத்திலும் கூடப் பயணிகள் அமரவைக்கப் படுவார்கள். அதிக பட்சக் கட்டணம் பத்து ரூபாய். நாலு பேர் உட்காரக் கூடிய ஆட்டோவில் பத்து பேர் உட்கார வைக்கப் படுவார்கள். இடைவழிகளில் இறங்குபவர்கள், ஏறுபவர்களால் ஓட்டுனருக்கு லாபம். விரும்பும் இடத்தில் நிறுத்தி இறங்கிக் கொள்வது பஸ்ஸில் இல்லாத வசதி!
டப்பா ஷேர்!
அடுத்து வந்தவை டப்பா மாடலில் இருக்கும் இந்த வகை ஷேர் ஆட்டோக்கள். "இதுதாங்க உண்மையான ஷேர் ஆட்டோ" என்றார் ஆட்டோ நண்பர் ஒருவர்.
மாஜிக் ஷேர்
இந்த மாடலில் உட்காருவது சற்றே வசதியாகவும், மரியாதையாகவும் இருந்ததால் மக்கள் இதை முதல் பட்சமாக மதிக்கத் தொடங்கிய நேரத்தில் வந்தது புதிய வகை டாட்டா மேஜிக்.

முதலில் க்ரீம் வெண்மை நிறத்தில் மட்டுமே வந்த டாட்டா மேஜிக் இப்போது புதிய வண்ணங்களில் சென்னையை வலம் வருகின்றன. அமர வசதி, பார்க்கவும் கவுரமாகவும் கூட இருக்கிறது! இதில் உள்ள கஷ்டம் உள்ளே ஏற படிகள் உயரத்தில் உள்ளதுதான்.
ஆர் டி ஓ செக்கிங் இருக்கும்போது மட்டும் இவர்களுக்குள் ஒற்றுமை வந்து விடும். எதிரில் வரும் சக ஓட்டுனர் எல்லோரையும் எச்சரித்து விடுவார்கள்! அளவுக்கு அதிகமாக ஆட்களை வைத்து ஓட்டினாலும், லைசென்ஸ், எஃப் ஸி போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அபராதம் விதிக்கப் படும்.
அந்த ஏரியா போக்குவரத்துப் போலீசுக்கு தினமும் (அல்லது மாதத்துக்கு நூறு அல்லது இருநூறு ரூபாயாம்) மாமூல், மற்றும் அவ்வப்போது கேஸ்கள்.
"கொள்ளையடிக்கிறாங்க சார்" :
"அட, போதும்பா... ஆள் சேர்ந்த வரை போதும் ஸ்டார்ட் பண்ணுப்பா"
"அநியாயம் பண்றாங்க..."
இத்தனை வசனங்களையும் மீறி ஷேர் ஆட்டோக்கள் இல்லையென்றால் சென்னை மக்கள் திணறித்தான் போவார்கள். செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் பஸ் வருமானத்தை பாதிக்கிறது என்று சொல்லி இதைத் தடை செய்யக் கேட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட தூரத்திற்கு மூன்று பேர் ஆட்டோவில் செல்ல நூற்றைம்பது ரூபாய் தர வேண்டுமென்ற நிலையில் ஓரளவு அதே சௌகர்யங்களோடு முப்பது ரூபாயில் போக முடிவது வசதிதான்.
அரசாங்கம் பஸ் வசதி தேவைப் பட்ட அளவு செய்து தரப் போவதும் இல்லை, செய்து தந்தாலும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. மெட்ரோ ரயில் தயாராகும்போது டிராஃபிக் இன்னும் மும்மடங்கு ஆகி பழைய நிலையிலேதான் இருக்கப் போகிறது. மக்கள் என்னதான் செய்வார்கள்...
வாழ்க ஷேர் ஆட்டோக்கள்.




