திங்கள், 29 ஆகஸ்ட், 2011

சென்னைப் பேருந்து, மகிழ்வுந்து, தானியங்கி!


             
தடம் புதிது, கட்டணம் பெரிது! 
தமிழக முதல்வர் சில புதிய பஸ்களையும் புதிய வழித்தடங்களையும் தொடங்கி வைத்தார் என்கிறது செய்தி.
           
முன்பெல்லாம் இந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்குச் செல்ல இவ்வளவுதான் கட்டணம் என்று நிச்சயம் இருக்கும். ஏனென்றால் ஒரே மாதிரி பஸ்கள்தான் இருந்தன. ஆனால் இப்போதோ ஆங்கில எழுத்துக்களை முன்னும் பின்னும் இணைத்து எந்த பஸ்ஸில் என்ன கட்டணம் என்று நடத்துனர் கேட்கும் வரை சஸ்பென்சாகவே இருக்கும்!  

சொந்த வாகனம்-சொக்கும் மோகனம்!     

சென்னையில் எங்காவது வெளியில் சென்று வர வேண்டுமானால் சொந்த வாகனம் இருந்தால் உத்தமம். அதிலுமே கூட சென்னையின் சாலை நெரிசல் வர வர வெறுப்படைய வைக்கிறது. இரண்டு பேர்களுக்கு மேல் இருந்தால் நாலு சக்கரம் சரி. இரண்டு பேர்கள் என்றால் இரு சக்கரம் பெஸ்ட். சாலை நெரிசலைக் கட்டுப்படுத்த மக்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொது வாகனங்களில் செல்வது நல்லது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஏதோ ஒரு செய்தியில் எரிபொருள் சிக்கனத்துக்காக மக்கள் வாரத்தில் ஒரு நாள் சொந்த வாகனங்களைத் தொடாமல் இருக்கப் பழக வேண்டும் என்று படித்த ஞாபகம் வருகிறது.             
                
ஆனால் அரசாங்க வாகனங்களை உபயோகப் படுத்தும் முறையிலா நிலைமை இருக்கிறது?     
                 
சில நாட்களுக்கு முன் குரோம்பேட்டை செல்ல ஏ.ஸி. பஸ் ஒன்றில் ஏறினேன். கூட்டமில்லாமல் இருக்கும் என்று நம்பித்தான் ஏறினேன். ஒரு கால் வைக்க மட்டுமே இடம் இருந்தது. பொதுவாகச் சென்னையில் காலை எட்டு மணி முதல் பத்தரை மணி வரையும் மாலை நாலு மணி முதல் ஏழு மணி வரையும் எந்த பஸ், டிரெயினையும்நம்பிப் போக முடியாது. பிதுங்கும் ஜனக்கூட்டம்! எல்லா வாகனங்களிலும் மூச்சுத் திணறும். எத்தனை பஸ் விட்டாலும் சமாளிக்க முடியாத இந்தக் கூட்டத்தைச் சமாளிக்க அரசாங்கம் என்னதான் செய்யுமோ...?    

ஷேர், ஷேர் 
இந்த நிலையில் சென்னையில் வலம் வரும் ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலான மக்களுக்கு வரப்ரசாதம்தான். என்னதான் கட்டணக் கொள்ளை அடிக்கட்டும், பஸ் ஸ்டாப்புகளில் இடைஞ்சலாய் நின்று மக்களை ஏற்றிக் கொள்ளட்டும், பஸ் கூட்டத்துக்கு இது பரவாயில்லை என்றே தோன்றும்.
                      
மேலும் சாதாரண ஆட்டோக்கள் கேட்கும் தொகையைப் பார்க்கும்போது ஷேர் ஆட்டோவையே மக்கள் தேர்வு செய்கிறார்கள்.       
என்ன ஷேர்? 
முதலில் சாதாரண வகை ஆட்டோவை பெரிதாக்கியதைப் போல வந்த ஷேர் ஆட்டோக்கள். இதை 'ஆபே ஆட்டோக்கள்' என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். இதில் ஒரு சிரமம் என்னவென்றால் பின்னால் திணிக்கப் படுபவர்கள் முதல் பின் வரிசை இருக்கையிலும், அடுத்த வரிசை அவர்கள் காலடியிலும் ( ! ) அமர வைக்கப் பட்டு இடிக்க இடிக்க வந்து இறங்க சிரமப்படுவது. டிரைவரின் இரு பக்கத்திலும் கூடப் பயணிகள் அமரவைக்கப் படுவார்கள். அதிக பட்சக் கட்டணம் பத்து ரூபாய். நாலு பேர் உட்காரக் கூடிய ஆட்டோவில் பத்து பேர் உட்கார வைக்கப் படுவார்கள். இடைவழிகளில் இறங்குபவர்கள், ஏறுபவர்களால் ஓட்டுனருக்கு லாபம். விரும்பும் இடத்தில் நிறுத்தி இறங்கிக் கொள்வது பஸ்ஸில் இல்லாத வசதி!                      
                                   
டப்பா ஷேர்!
அடுத்து வந்தவை டப்பா மாடலில் இருக்கும் இந்த வகை ஷேர் ஆட்டோக்கள். "இதுதாங்க உண்மையான ஷேர் ஆட்டோ" என்றார் ஆட்டோ நண்பர் ஒருவர்.

மாஜிக் ஷேர்
இந்த மாடலில் உட்காருவது சற்றே வசதியாகவும், மரியாதையாகவும் இருந்ததால் மக்கள் இதை முதல் பட்சமாக மதிக்கத் தொடங்கிய நேரத்தில் வந்தது புதிய வகை டாட்டா மேஜிக்.

 

முதலில் க்ரீம் வெண்மை நிறத்தில் மட்டுமே வந்த டாட்டா மேஜிக் இப்போது புதிய வண்ணங்களில் சென்னையை வலம் வருகின்றன. அமர வசதி, பார்க்கவும் கவுரமாகவும் கூட இருக்கிறது! இதில் உள்ள கஷ்டம் உள்ளே ஏற படிகள் உயரத்தில் உள்ளதுதான்.

சாதாரணமாகவே ஷேர் ஆட்டோக்கள் வருமானத்தை அள்ளித் தருகின்றன. எப்போதாவது வரும் சவாரி என்பதை விட்டு தொடர்ந்து ஒரு ட்ரிப்புக்கு போக நூற்றைம்பது , வர நூற்றைம்பது என்று வசூல் பார்க்கிறார்கள். சாதாரண ஆட்டோ ஒரு வழிக்குத்தான் கட்டணம் வாங்க முடியும். அதுவும் இந்த தூரங்களுக்கு நூற்றிருபது முதல் நூற்றைம்பது வரை வாங்குவார்கள். திரும்ப புறப்பட்ட இடத்துக்கு வந்தாலும் சரி, அப்புறம் அடுத்த கஸ்டமர் என்று மறுபடி சவாரி அமைந்தால் உண்டு. இல்லையென்றால் காத்திருப்புதான். இது அப்படியில்லையே... பீக் அவர்ஸ் என்று சொல்லப் படும் நேரங்களில் மட்டுமல்லாமல் ஓரளவு எல்லா நேரங்களிலும் இவர்கள் வண்டி நிறைந்து விடுவது வழக்கம்.

ஆர் டி ஓ செக்கிங் இருக்கும்போது மட்டும் இவர்களுக்குள் ஒற்றுமை வந்து விடும். எதிரில் வரும் சக ஓட்டுனர் எல்லோரையும் எச்சரித்து விடுவார்கள்! அளவுக்கு அதிகமாக ஆட்களை வைத்து ஓட்டினாலும், லைசென்ஸ், எஃப் ஸி போன்ற பிரச்னைகள் இருந்தாலும் அபராதம் விதிக்கப் படும்.    

அந்த ஏரியா போக்குவரத்துப் போலீசுக்கு தினமும் (அல்லது மாதத்துக்கு நூறு அல்லது இருநூறு ரூபாயாம்) மாமூல், மற்றும் அவ்வப்போது கேஸ்கள்.
                    
உண்மையில் இந்த டாட்டா மேஜிக் வண்டிகள் பாரம் ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப் பட்டவை. முதலில் எந்த புண்ணியவானோ அதில் கூடு கட்டி ஷேர் ஆட்டோவாக்க, பயந்து பயந்து ஆரம்பித்தவர்கள், இன்று சகஜமாகி விட்டார்கள். 
                     
"கொள்ளையடிக்கிறாங்க சார்" :
"அட, போதும்பா... ஆள் சேர்ந்த வரை போதும் ஸ்டார்ட் பண்ணுப்பா"
"அநியாயம் பண்றாங்க..."  
                  
இத்தனை வசனங்களையும் மீறி ஷேர் ஆட்டோக்கள் இல்லையென்றால் சென்னை மக்கள் திணறித்தான் போவார்கள். செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் பஸ் வருமானத்தை பாதிக்கிறது என்று சொல்லி இதைத் தடை செய்யக் கேட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட தூரத்திற்கு மூன்று பேர் ஆட்டோவில் செல்ல நூற்றைம்பது ரூபாய் தர வேண்டுமென்ற நிலையில் ஓரளவு அதே சௌகர்யங்களோடு முப்பது ரூபாயில் போக முடிவது வசதிதான்.
                            
அரசாங்கம் பஸ் வசதி தேவைப் பட்ட அளவு செய்து தரப் போவதும் இல்லை, செய்து தந்தாலும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. மெட்ரோ ரயில் தயாராகும்போது டிராஃபிக் இன்னும் மும்மடங்கு ஆகி பழைய நிலையிலேதான் இருக்கப் போகிறது. மக்கள் என்னதான் செய்வார்கள்...
                                 
வாழ்க ஷேர் ஆட்டோக்கள்.
                            

23 கருத்துகள்:

 1. ஷேர் ஆட்டோ செய்தியை நன்றாக ஷேர் செய்தீர்கள்..

  பதிலளிநீக்கு
 2. //இத்தனை வசனங்களையும் மீறி ஷேர் ஆட்டோக்கள் இல்லையென்றால் சென்னை மக்கள் திணறித்தான் போவார்கள்.//

  ஆம் எங்க வீட்டிலிருந்து கோயம்பேடு பேருந்து நிறுத்தம் போக, வர மிக செளகரியமாகதான் இருக்கு.

  சென்னை போக்குவரத்து விவரம் பற்றிய அழாகான பதிவு.

  பதிலளிநீக்கு
 3. //வாழ்க ஷேர் ஆட்டோக்கள்.//

  இவற்றை ஷேர் கார் என்று அழைக்கவே பழக்கப்பட்டிருக்கிறோம்.
  சிட்டிக்குள் குறைந்த தூரத்திற்கு பஸ் பயணம் பழக்கப் பட்டோருக்கு பல விஷயங்களில் இவை செளகரியமாகவே இருக்கின்றன.

  நம் மக்களும் விவரம் தெரிந்தவர்கள்.
  வண்டிக்குள் இருக்கையில் உட்கார முடியாத அளவுக்கு நெரிசல் இருந்தால், அதில் ஏறுவதில்லை.
  இந்த விழிப்புணர்வால், இந்த மாதிரி வண்டிகளில் எந்நேரமும் கூட்டம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.

  சில ரூட்டுகளில் ஐந்து வினாடிகளுக்கு-- சில சமயம் வரிசையாக ஒன்று மாற்றி ஒன்று-- என்று வருவதால்
  இப்பொழுதெல்லாம் பயணிகளின் விருப்பதற்கேற்ப தேர்ந்தெடுத்து இவற்றில் பயணிப்பது என்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 4. மெட்ரோ ரயில் தயாராகும்போது டிராஃபிக் இன்னும் மும்மடங்கு ஆகி பழைய நிலையிலேதான் இருக்கப் போகிறது. மக்கள் என்னதான் செய்வார்கள்...


  ..... Practical ஆகவும் மக்கள் நலன் கருதியும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை...... வேதனையான நிலைதான்.!

  பதிலளிநீக்கு
 5. சென்னையின் பல்வேறு வகையான பயண வசதிகளைப் படங்களோடு பகிர்ந்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 6. மாஜீக் வாகனம் புதிதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. மாஜீக் வாகனம் பற்றி இன்று தான் முதன் முதலில் அறிந்து கொண்டேன் நண்பா.

  பதிலளிநீக்கு
 8. ஷேர் ஆட்டோ வசதியாகத் தான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 9. 'நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைக் காண இந்தியா போய்ப் பார்' என்று என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். ஷேர் ஆட்டோ போலவே பாண்டிச்சேரியில் எத்தனையோ வருடங்களுக்கு முன் மினிபஸ் என்ற பெயரில் கூரை போட்ட டெம்போக்கள் ஓடிக்கொண்டிருந்ததாக நினைவு.

  பதிலளிநீக்கு
 10. மேல்வலது படம் பயங்கரமாக இருக்கிறது. தொற்றுப்பயணம் என்பதற்கு புது உதாரணம்.

  பதிலளிநீக்கு
 11. அரசால் எவ்வளவு தான் சமாளிக்க முடியும். ஷேர் ஆட்டோ காலத்தின் கட்டாயம், தேவை.

  பதிலளிநீக்கு
 12. //" அப்பாதுரை said...
  மேல்வலது படம் பயங்கரமாக இருக்கிறது. தொற்றுப்பயணம் என்பதற்கு புது உதாரணம்."//


  ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் இப்போதுதான் இந்திய வருங்காலத் தூண்களின் வீரசாகச அபத்தம் பார்த்து இன்னும் மனம் நொந்தேன். வட இந்திய இளைஞர்கள் ஓடும் மின் வண்டியில் செய்யும் 'சாகசங்களை' (?) முடிந்தால் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 13. வகை வகையான வாகனங்கள் பத்தி தெரிஞ்சுகிட்டேன்... எல்லாத்துலயும் நீங்க travel பண்ணி இருக்கீங்களோ...;)

  பதிலளிநீக்கு
 14. திருமணத்திற்கு முன்பு வேலைக்கு சென்றபோது நான் கூட பலமுறை படிகளில் நின்று பயணம் செய்திருக்கிறேன். பதிவில் படங்களை பார்க்கும்போது அந்த நாட்கள் எல்லாம்தான் நினைவுக்கு வருகிறது.
  சென்னையில் உள்ள மக்கள் தொகைக்கு இன்னும் போக்கு வரத்து வசதிகள் எத்தனை அதிகப் படுத்தினாலும் போதாதுதான். என்ன வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் துளி கூட அசராமல் மக்கள் போவதும் வருவதும் சென்னைக்கே ஒரு தனி அழகுதான். மிகவும் ரசிப்பேன். நானும் அப்படித்தான்.
  இந்த முறை நான் சென்னை வந்திருந்த போது நான் போக வேண்டிய எல்லா இடங்களுக்கும் பேருந்திலும், ஷேர் ஆட்டோவிலும் தான் சென்றேன். பேருந்து வசதிகள் மிகவும் அருமையாக இருப்பதை என்னை வியந்து போனேன். போக வேண்டிய இடத்துக்கு நேரடி பேருந்து இல்லை என்றால், இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாறி சென்றாலும் அதிக பட்சம் பத்து அல்லது பதினைந்து ரூபாய்தான். அதே ஆட்டோவில் சென்றால் நூற்றைம்பது அல்லது இரநூறு ருபாய். பழைய மாம்பலத்தில் இருந்து லஸ் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் பத்தே ரூபாய். பயணமும் எளிதாக இருந்தது. செல்ல வேண்டிய இடத்துக்கான பேருந்து எண்களை சரியாக மட்டும் தெரிந்து கொண்டால் போதும். சுலபமாய், செலவில்லாமல் போக வேண்டிய இடத்திற்கு நேரத்திற்கு போய்விடலாம்.

  பதிலளிநீக்கு
 15. பஸ்ஸில் தொங்கின அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்ததில்லை.
  என் பயணங்கள் 11 மணி அளவில் ஆரம்பித்து 3 மணிக்கு முடிந்துவிடும்.

  சௌகரியமாகவே போய்வந்திருக்கிறேன்.
  இத்தனை வாகனங்கள் விவரங்கள்.

  மிகவும் நன்றி. பெற்றோல் விலை ஏறிய காலத்தில் ஷேர் ஆட்டோக்கள்
  ஒரு வரம் தான்.

  பதிலளிநீக்கு
 16. என்ன சார், 'நடை பயணத்'தை நிறுத்திவிட்டு வாகன சவாரி தொடங்கிவிட்டீர்களா? நடை நல்லது ('கறை நல்லது' போல் வாசிக்கவும்). அந்த நினைவுகள் இன்னும் ஸ்வாரஸ்யம்.

  //செல்ல வேண்டிய இடத்துக்கான பேருந்து எண்களை சரியாக மட்டும் தெரிந்து கொண்டால் போதும். சுலபமாய், செலவில்லாமல் போக வேண்டிய இடத்திற்கு நேரத்திற்கு போய்விடலாம்.//
  மீனாக்ஷி மேடம், செலவில்லாமல்(!!!) போகும் ட்ரிக்கைச் சொல்லிக் கொடுங்கள்.

  பதிலளிநீக்கு
 17. குரோம்பேட்டைக் குறும்பன்30 ஆகஸ்ட், 2011 அன்று பிற்பகல் 12:51

  செலவில்லாமல் பயணம் செய்வது ரொம்ப சுலபமுங்க! ஆங்கிலத்தில் அதை 'வித்தவுட்டு' என்பார்கள். தமிழில் சீட்டு இல்லா பயணம் என்று சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 18. கீதா, நூறு ருபாய் கொடுத்து ஆட்டோல போகமா ரெண்டு ரூபாய் குடுத்து பஸ்ல போகும் போது அது செலவாகவே மனசுக்கு தோணல. மத்தபடி இந்த செலவு கூட இல்லாம போறதுக்கான ட்ரிக் எப்படி வொர்க் அவுட் ஆறதுன்னு நான் ஒரு தடவ ட்ரை பண்ணிட்டு உங்களுக்கும் சொல்லி தரேன். ஆனா, இதுக்காக எல்லாம் நீங்க என்னை மேடம்னு சொல்றதெல்லாம் ஹிஹிஹி ..... கொஞ்சம் ஜாஸ்திதான்!

  பதிலளிநீக்கு
 19. போனமாசம்தான் மெட்ராஸ் போய்
  வந்தேன் அப்போ இந்த தகவல் எல்லாம் தெரிந்திருக்கலே. கால் டாக்சி புக்
  பண்ணிதான் ஊர் பூரா சுத்தினோம்
  ஆமாஅ மிதவைப்பேரூந்துன்னா என்னா?.

  பதிலளிநீக்கு
 20. லக்ஷ்மி மேடம் - Air suspension - அமைந்துள்ள பேருந்துகளை மிதவைப் பேருந்து என்று கூறுகிறார்கள். சாலையில் அமைந்துள்ள ஏற்ற இறக்கங்களால் வருகின்ற பயண அதிர்வுகளை, வண்டியின் சக்கரங்கள் / அச்சு / முன் / பின் அச்சுகளில் இருந்து, காற்று அடைக்கப் பட்டுள்ள அடைப்பான்கள் (bellows)அமைப்பு எடுத்துக் கொள்ளும். வண்டியில் பயணிகள் அமர்ந்துள்ள இருக்கைகளுக்கோ அல்லது பேருந்தின் தரைப் பகுதிக்கோ அதிர்வுகள் வராமல் சுகமான பயணம் செய்ய மிதவைப் பேருந்துகள் வடிவமைக்கப் படுகின்றன.

  பதிலளிநீக்கு
 21. நடைப்பயணம், வாகனப் பயணம். அடுத்து ரயில், விமானம், கப்பல் பயணங்களை எதிர்பார்க்கலாமா? :-))))))

  //"சென்னைப் பேருந்து, மகிழ்வுந்து, தானியங்கி!"//
  பதிவிலே ’தானியங்கி’ குறித்த செய்தி எது?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!