பத்திரிகைகளில் இருபது வருடங்களாக வருகின்ற ஜோக்குகளை ஆராய்ந்து, டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு வந்திருக்கின்ற நமது ஆசிரியர்களில் ஒருவர் அவருடைய கண்டுபிடிப்புகளை, இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
வேறு மொழிகள் பலவற்றையும் விட தமிழ் பத்திரிகைகள் சுவாரசியம் அதிகம் என்று தோன்றுகிறது. அதிலும் ஜோக் விஷயத்தில் நம் இதழ்கள் முன்னணி நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம். எனினும் சில அடிப்படை கொள்கைகள் சற்று அதைரியப் பட வைக்கின்றன.
டாக்டர் என்று எடுத்துக் கொண்டால் அவர் கூசாமல் அறுவை சிகிச்சை என்ற பெயரில் கொல்பவர். அது அவரிடம் பணி புரியும் நர்ஸ்களுக்கும் தெரியும். போலி டாக்டர் ஜோக் இல்லாத பத்திரிகைகள் மிகவும் அபூர்வம்.
எல்லா மருமகள்களும் தம் மாமியாரை வெறிநாய் கடித்தால் அதை வரவேற்பவர்கள் என்பது மட்டும அல்ல, அதற்காக வெறிநாய்களை வாடகைக்கு எடுக்கவும் தயங்காதவர்கள்!
எல்லா கணவன்மாரும் வீட்டு வேலையை ரகசியமாக செய்பவர்கள். வேலைக்காரியுடன் சரசம் செய்பவர்கள். ஆபீசில் தூங்குபவர்கள்.
வேலைக்காரிகள் அக்கம்பக்கத்து வம்புகளில் நாட்டம் கொண்டவர்கள். பிச்சைக்காரர்கள் யாவரும் கோடீஸ்வரர்கள்.
எழுத்தாளர்களின் கதைகள் திரும்ப வந்தே பழைய பேப்பர் வணிகம் சிறக்கிறது.
எல்லா கட்சி தலைவர்களும் குடிகாரர்கள். தம் கட்சி மகளிர் அணி செயலாளரிடம் தகாத முறையில் நடக்கத் துடிப்பவர்கள். முழு முட்டாள்கள். அரிச்சுவடி கூடப் படிக்காதவர்கள்.
எல்லா நடிகர்களும் பொறுக்கிகள்; நடிகைகள் அழகை இழந்த கிழவிகள். வசதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய / இழக்கத் தயாராக இருப்பவர்கள்.
புறமுதுகிட்டு ஓடும் மன்னர்கள், போர் என்றாலே பயப்படும் தொடைநடுங்கி மன்னர்கள் ....
புறமுதுகிட்டு ஓடும் மன்னர்கள், போர் என்றாலே பயப்படும் தொடைநடுங்கி மன்னர்கள் ....
இவை யாவற்றையும் பார்க்கும் போது ஏன் எல்லாம் எதிர்மறையாகவே இருக்கின்றன என்ற சோர்வு ஏற்படுகிறது. பாசிடிவ் நகைச்சுவை என்பது அவ்வளவு சிரமமானதா? நாம் ரசித்த எதிர்மறை அற்ற நகைச்சுவைகளை நினைவுக்குக் கொண்டுவர முயல்வோமா?
வாசகர்கள், தாங்கள் படித்த, நல்ல நகைச்சுவை துணுக்குகளைப் பகிரலாம்.