நான் இரசித்த ஆங்கில ஜோக்கை - தமிழ்ப்'படுத்த' என்னுடைய சிறு முயற்சி இது. இதைப் படித்தபின் உங்கள் முகங்களில் முறுவல் தோன்றினால், எனக்கு முப்பது மார்க். புன்னகை வந்து பத்து செகண்ட் நிலைத்தால் - பாஸ் மார்க். வாய்விட்டுச் சிரிச்சா - எனக்கு டிஸ்டிங்ஷன். சிரிப்பே வரலைன்னு நீங்க சொன்னா உங்களுக்கு சைஃபர் மார்க்.
இப்போ ஜோக்குக்குப் போலாமா ? (சினேகா தமிழ்)
அது ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தேழு.
பிகினிங்குல வண்ண மலர் பூத்துக் குலுங்கும் ஒரு சோலை. அதுக்குப் பின்னாடி ஒரு வீடு. அது யாரும் குடி இல்லாத ஒரு நவீன வீடு. யாரு கட்டினாங்க? , எப்போ?, எதுக்கு?, எப்பூடி? - எல்லாம் உங்களைப் போலவே எனக்கும் தெரியாது. அந்த வீட்டு வாசலிலே ஒரு வீட்டுத் தரகர். ஆவலோடு யார் வரவை எதிர்பார்த்திருக்கிறார்?
அட - அங்கே வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க - கவுன் போட்ட பெண்மணி ஒருவர் (அதான் சொன்னேனே - ஆங்கில ஜோக்குன்னு - அதனால புடவை கட்டி அவ்வை ஷண்முகி - அப்பிடீன்னெல்லாம் பெயர் மாற்றம் செஞ்சா சரியா வராது.) வயது முப்பது இருக்கலாம். வந்தாங்க - வீட்டைப் பார்த்தாங்க - கடிகாரத்தைப் பார்த்தாங்க, கிளம்பிட்டாங்க. தரகரிடம், ஏதோ பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் அம்மாக்காரி சொல்றாப்புல "ஊருக்குப் போயி லெட்டர் போடறேன்" என்று சொல்லி கெளம்பிட்டாங்க.
ஊருக்குப் போயி லெட்டர் எழுத ஆரம்பிச்ச அப்புறம்தான் அம்மணிக்கு 'ஒண்ணு' ஞாபகம் வந்தது. ஆஹா - என்னடா இது - அந்த வூட்டுல, 'ஒண்ணா ரெண்டா தொடு, ஒன்றை மட்டும் விடு' என்று 'காலைக் கடன்கள்' முடிக்கும் கழிவறை வசதி பற்றி பார்க்காமல், கேட்காமல் வந்துவிட்டோமே, அதைப் பற்றி முழு விவரம் தரகருக்கும், வீட்டு சொந்தக்காரருக்கும் எழுதி கேட்க வேண்டும் என்று நினைத்தார். இப்படி எழுதினார் :
"ஐயா - தாங்கள் காட்டிய வீடு சுமாராக உள்ளது. நான் அந்த வீட்டில் இரண்டு மூன்று வருடங்கள் வாடகைக்கு குடி இருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு இருக்கும் சில சிறிய ஐயங்களை இந்தக் கடிதத்தில் கேட்டுள்ளேன் - தயவு கூர்ந்து பதில் எழுதவும் உங்கள் பதில் பார்த்தபின் முன் பணம் அனுப்புகின்றேன்."
.... கையொப்பம்....
பி கு : அங்கு உள்ள WC குறித்து விவரமாக எழுதவும்.
(எவ்வளவோ வார்த்தைகள் யோசனை செய்து, (கக் .. கழிப் ....ம்ஹூம் வேண்டாம்) அது எல்லாம் டீசன்ட் ஆக இல்லை என்று நினைத்து, தான் எப்பவோ வீட்டு பிளான் ஒன்றில் பார்த்த டபிள்யு . சி என்ற சுருக்க எழுத்துக்களை எழுதினார்.)
வீட்டுத் தரகருக்கு சுருக்க எழுத்துக்கள் என்றாலே அலர்ஜி. எங்கேயாவது 'பி.கி.தொ.ஆ' என்று ஏதாவது பார்த்துவிட்டாரானால் அது என்ன, என்ன என்று குழம்பி, தூங்காமல் முழிச்சுகிட்டு இருப்பாரு. அவரு அங்கே பக்கத்துல இருந்த பாதிரியாரு கிட்டப் போயி, சாமி, ' டபிள்யூ சி' அப்படீன்னா என்ன? என்று கேட்டாரு. பாதிரியாருக்கு சர்ச் போன்ற சமாச்சாரங்கள்தான் எப்பவுமே மனசுல இருந்துகிட்டே இருக்கும். அதனால - சற்றும் தயங்காமல் கூறினார், "தரகரே, டபிள்யூ சி அப்பிடீன்னா - வே சைடு சாப்பல்" (Wayside Chapel) அதாவது 'தெருவோர தேவாலயம்' என்றார்.
அது போதாதா நம்ம தரகருக்கு? சாதாரண வீடுகளைப் பற்றியே புரட்டிப் போடுபவர், கோயில் பற்றி எவ்வளவு சிறப்புரை ஆற்றுவார்!
அவர் எழுதுகிறார் :
'அம்மணி ,
நீங்க கேட்டிருந்த டபிள்யூ சி - வீட்டிலிருந்து ஐந்து மைல்கள் தூரத்தில் உள்ளது. சுற்றிலும் பாக்கு மரங்களும் தேக்கு மரங்களும் நிறைந்த மனோரம்யமான, ஏகாந்தமான சூழலில், அது அமைந்துள்ளது. அங்கே ஒரே நேரத்தில், சுமார் இருநூறு பேர்கள் உட்கார்ந்து சுகமாக இருக்கலாம். நீங்க அடிக்கடி அங்கே போகும் வழக்கம் இருப்பவர் என்று நினைக்கிறேன். என் மனைவி எப்பவாவதுதான் போவாள். உங்க மாதிரி வழக்கமாக போறவங்களுக்கு, அது உண்மையிலேயே ஒரு சொர்க்கம்.
அக்கம் பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள், பல சமயங்களில் சாப்பாடு கட்டி எடுத்துக்கொண்டு இங்கே வந்து ரொம்ப நேரம் இருந்து போவாங்க. ரொம்ப அவசரமா இருக்கறவங்க காரில் வந்து போவாங்க. பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் இங்கே கூட்டம் அதிகம் இருப்பதால் - பலர் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே இருந்துவிட்டுப் போகவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும். இங்கே இப்போ புதுசா ஒரு கிண்டா மணி வாங்கி கட்டி வெச்சிருக்கோம். உங்களை மாதிரி பெரிய மனிதர்கள் உள்ளே நுழையும்பொழுது அந்த மணியை அசைத்து, அதிரும் ஒலி எழுப்புவோம். உள்ளே ஒலிக்கின்ற சத்தங்கள் அவை எவ்வளவு மெல்லிய சத்தமாக இருந்தாலும் - அது எல்லோருடைய காதுகளிலும் கேட்கும்படி அமைத்துள்ளோம்.
நீங்க இந்த வீட்டுக்கு குடியேறும் நாளைக் கூறினீர்கள் என்றால், உங்களுக்காக இங்கே எல்லோர் பார்வையும் உங்கள் மீது படும் வகையில் ஒரு நல்ல நடுவாந்தர இருக்கையை முன்பதிவு செய்து வைத்துவிடுகிறேன். நீங்க எப்போ வந்தாலும் யாரையும் கேட்காமல் ஒரு ராணியைபோல அந்த இருக்கையில் சுகமாக அமர்ந்து இருக்கலாம்.
எப்போ வரீங்கன்னு உடனே தெரியப் படுத்தவும்.
அன்புடன்,
'எங்கியோ போயிட்டீங்க எட்வின் '