அலுவலகத்தில், முன்பொரு காலத்தில்,குப்பை கொட்டிக் கொண்டிருந்த நாட்களில், 'பாஸ் தொல்லை இல்லாமல் எப்போதடா இருப்போம்?' என்று இரண்டு மூன்று முறைகள் (ஹி ஹி ஒரு நாளில்தான் இரண்டு மூன்று முறைகள்! சாரி பாஸ்களே!). நினைத்ததுண்டு. அலுவலக வாழ்க்கையில், ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு டஜன்++ பாஸ்கள் (ஒரு நேரத்தில் ஒருவர்தான் - ஆனால் முப்பத்து நான்கு ஆண்டு கால அலுவலக வாழ்க்கை!) ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்! ஆனால் என்ன? எல்லோரும் (இரண்டொருவரைத் தவிர ) டெர்ரர்தான்!
இப்போ பாஸ் பிரச்னைகள் ஏதும் இல்லை. ஆனாலும் பாழும் மனம், வலைப் பதிவராகியபின், எனக்கு ஒரு பாஸ் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, யோசித்துப் பார்க்கையில் ......
(ஒரு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் - கடிகார ஓட்டத்திற்கு எதிர் திசையில் சுழல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுதான் ப்ளாஷ் பேக் யுக்தி !!!)
காலையில் எழுந்து, கடன்கள் முடித்து, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு, இரயிலைப் பிடித்து, பஸ் பிடித்து, இருக்கையில் அமர்ந்தால்....
எதிரே பாஸ். எப்பவுமே இவர் எப்படி நான் லேட் ஆக வரும் நாட்களில் முன்பாகவும், நான் சரியான நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக வரும் நாட்களில் ரொம்ப லேட் ஆகவும் வருவாரோ! அவர் கணக்கில் நான் எப்பவுமே 'லேட் கமர்'!
பாஸ்: " நேத்திக்கு என்ன பதிவு போட்டீங்க?"
நான்: " சார்? எந்திரன் பற்றி..."
பாஸ் : " எவ்வளவு பேஜ் வியூஸ் வந்தது?"
நான்: " ஆயிரத்திற்கு மேலே வந்திருக்கு சார்! அதைத்தான் இப்போ வந்தவுடன் பார்த்துக் கொண்டு இருக்கேன்..."
பாஸ்: " வெரி குட் - அந்தப் பதிவு நான் கொடுத்த ஐடியா தானே?"
நான்: " அது.... வந்து... நானே சொந்தமாக யோசித்து ...."
பாஸ்: "ஆமாம் ஆமாம் - நான்தானே நேற்று உன்னை சொந்தமாக யோசித்து எழுதச் சொன்னேன்!"
நான்: "நீங்க கடந்த ஒரு வருடமாக தினமும் அதையேதானே சொல்லிக்கிட்டு இருக்கீங்க .. அதனால ...."
பாஸ்: "நான் ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருந்தாலும், நேற்றுதான் அதை செயல் படுத்தி இருக்கின்றீர்கள்! - அதுதான் இவ்வளவு பிரபலம் ஆகியிருக்கின்றது!"
நான்: (பல்லைக் கடித்தபடி) "சரி அப்படியே இருக்கட்டும். இன்றைக்கு நான் போடவேண்டிய பதிவு பற்றி நான் கொஞ்சம் சிந்திக்கலாமா ..."
பாஸ்: "இன்றைக்குப் போடுகின்ற பதிவு இரண்டாயிரத்திற்கு மேலே பேஜ் வியூ வரணும். ஆமாம் சொல்லிட்டேன்."
நான்: "அது எப்படி சார்? நேற்றைக்கு நமக்கு டாக் ஆஃப் தி டவுன், எந்திரன் கிடைத்தான். இன்றைக்கு என்ன கிடைக்கும்? "
பாஸ்: "அதெல்லாம் உன்னுடைய வேலை. என்னைக் கேட்காதே"
நான்: (கடுப்புடன்) "சரி சார்!"
பாஸ்: " நான் காலேஜ்ல படித்த காலத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் தினந்தோறும் லட்சக் கணக்கில் பேஜ் வியூஸ் வந்தது. தெரியுமா? "
நான்: "அட! அப்படியா சார்!" (மனதுக்குள் - யோவ் நீ காலேஜ் படிச்ச காலத்துல கூகிள், ப்ளாகர், பேஜ் வியூ, ஸ்டாடிஸ்டிக்ஸ் எல்லாம் காதுல கேட்டிருந்தா கூட, ஏதோ கோதாவரி சம்பா அரிசி ரகம் என்று நினைத்திருப்பாய். என்னா ரீலு விடுறான் பாருய்யா!)
பாஸ்: "ஆமாம். சென்ற மாதம் நான் கொடுத்த ஐடியா டெவெலப் பண்ணி ஒரு பதிவு போட்டியே, அதுக்கு எவ்வளவு பேஜ் வியூஸ் வந்தது?"
நான்: "அஞ்சு சார்."
பாஸ் : " ஆஹா ! ஐந்தாயிரமா! பார்த்தியா - என்னுடைய ஐடியா எவ்வளவு நல்ல ஐடியா என்று? .."
நான்: "இல்லை சார் - வெறும் அஞ்சு ... ஃபைவ் ... பான்ச்... ஐது ..."
பாஸ்: (வெறுப்புடன்) " ஆமாம் என்னுடைய ஐடியாவை நானே எழுதி இருக்கலாம். அதை விட்டு உன்னை எழுதச் சொன்னேன் அதனாலத்தான் அஞ்சு பேஜ் வியூ மட்டும் கிடைத்தது."
நான்: "நீங்க எழுதி இருந்தா நான்கு பேஜ் வியூதான் வந்திருக்கும்!"
பாஸ்: (கோபமாக) "எப்படி?"
நான்: "நான் அந்தக் கண்றாவியைப் படித்து, பதிவிட்டு தொலைத்திருக்க வேண்டி இருந்திருக்காதே!"
பாஸ் வேகமாக என்னை நோக்கி வர, நான் கிரேட் எஸ்கேப்!
***********
நல்ல வேளை! பதிவுலகில், எனக்கு ஒரு பாஸ் இல்லை. நானே பாஸ், நானே ஊழியன். ஆனால் என்ன? உங்களைப் போன்ற ரசிகர்கள் அதிகம் இருப்பதுதான் சந்தோஷமான விஷயம்!