cine hit songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cine hit songs லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.2.10

பாடல் என்பது எது வரை..


சினிமாக்களில் பாடல் என்பது ஒரு கட்டாயம். இந்தியப் படங்களுக்கு பாடல் காட்சிகள் இன்றியமையாதவை. ஒரு காலத்தில் பாடல் காட்சிகளின் தொகுப்பே படங்களாகவும் இருந்தது. கண் சிமிட்டி முடிப்பதற்குள் அடுத்த பாடல் தொடங்கி விடும். பின்னர் படிப் படியாக அந்த வழக்கம் குறைந்து அளவாக பாடல்கள் வைக்கத் தொடங்கினார்கள். பாடலே இல்லாமல் கூட படங்கள் முயற்சித்ததுண்டு,...அந்த நாள். ஆனால் அது தொடராமல் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நின்று விட்டது!

தமிழாகட்டும், தெலுங்காகட்டும், மலையாள, ஹிந்தியாகட்டும்...மொழி முக்கியமின்றி அனைத்து மொழிகளிலும் பாடல்களை ரசிக்கும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு..இசை...அதில் வரும் ஆனந்தம்...நம் ரத்தத்தில் கலந்தது. தமிழ்ப் பாடல்கள் பற்றி எல்லோருமே எழுதி உள்ளோம். மற்ற மொழிகளிலும் ஆங்காங்கு பாடல்கள் ரசிப்போம். தெலுங்கில் சங்கராபரணம், (சுவாதி முத்தியம், சாகர சங்கமம் போன்றவை தமிழிலும் ஒரே ட்யூன் தான்) மரோ சரித்ரா போன்ற படப் பாடல்கள் பிரபலமாகி மகிழ்வித்துள்ளன. சங்கராபரணம் வந்தபோது யாரோ ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் தருவாயில் இந்தப் படப் பாடல்களை உயிர் பிரியும் தருணத்தில் கேட்க விரும்பியதாக செய்தித் தாளில் படித்த ஞாபகம்.

ஆனால் ஹிந்திப் பாடல்கள் இந்த அளவு குறைந்த ப்ராபல்யமாக இல்லாமல் வெகுஜன அபிப்ராயத்தைப் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும். இந்த அளவு பாடல் கேட்கும் வசதிகள் இல்லாத அந்த நாளில் ஆல் இந்தியா ரேடியோதான் கதி. பெரும்பாலும் தமிழ்ப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த நாட்களில், ஒரு மாற்றமாக மட்டுமின்றி, வேறு வழி இல்லாமலும் கேட்க ஆரம்பித்த நாட்கள். காலை உங்கள் விருப்பம், மதியம் இரண்டு மணிக்கு ஏதோ பெயரில் தமிழ்ப் பாடல்கள் இரவு உங்கள் விருப்பம். இவற்றுக்கு நடுவே சிலோன் ரேடியோவும் K S ராஜாவும் ஆதரவளித்தாலும், மதிய நேரங்களில் ஒரு மணிக்கு மன் சாஹே கீத் (மனம் விரும்பும் பாடல்கள்) கேட்க ஆரம்பித்து, ஒரு சில பிரபலப் பாடல்கள் எப்போதடா காதில் விழும் என்று காத்திருக்கும் வேளையில் தவிர்க்க முடியாமல் இடையே வரும் பாடல்கள் கேட்கத் தொடங்கி, அதை திரும்ப வேறொரு நாளில் கேட்கும்போது அன்று கேட்ட பாடல் என்ற அறிமுகத்துடன் ரசிக்கத் தொடங்கி...பிறகு தேடித் தேடி காலை ரங்காவளி, மதியம் மன் சாஹே கீத் தவிர மனோ ரஞ்சன், இரவு ஜெய்மாலா, சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ் என்று நீண்டதுண்டு.

ஆனந்த்பக்ஷி, மஜ்ரூ சுல்தான் பூரி, இண்டீவர், ஆர் டி பர்மன், எஸ் டி பர்மன், லக்ஷ்மிகாந்த் பியாரிலால், கிஷோர் குமார், முஹம்மத் ரஃபி, மன்னாடே போன்ற பெயர்கள் அறிமுகமாயின. இவற்றில் எது படம் பெயர், எது பாடலாசிரியர், எது பாடுபவர் பெயர் என்று புரிய இன்னும் சில நாட்கள் ஆயின. பிறகு இந்த, இந்தப் பெயர்கள் காம்பினேஷன் வந்தால் இந்தப் பாடல்களைக் கேட்டு பார்க்கலாம் என்று 'அறிவு' வளரத் தொடங்கியது...!

நாம் கேட்கும் பாடல் பிரபலமானது பாடலாசிரியர் காரணமாகவா, இசை அமைப்பாளர் காரணமாகவா, பாடகர் காரணமாகவா நடிக நடிகையர் காரணமாகவா அல்லது எல்லாமே காரணமாகவா என்று யோசித்தால் - இதில் ஒன்று அல்லது பல காரணங்களால் பாடல் ஹிட்டாக அமைந்துவிடும்; நம் மனதில் அமர்ந்துவிடும்.

பட்டுக் கோட்டையார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, என்று வரிகளை ரசிக்க வைக்கும் பாடல்கள் உண்டு. பாடலின் ட்யூன் என்னென்று சொல்ல முடியாத இன்ப, துன்ப பரவச நிலைகளை மனதில் தோன்ற வைப்பதுண்டு...சமீபத்தில் திரு M S விஸ்வநாதன், ஒரு பேட்டியில் (உண்மையில் அவர் இந்தத் தகவலை பலமுறை, பல இடங்களில் சொல்லியுள்ளார்) யார் அந்த நிலவு பாடல் எழுதப் பட்ட, இசை அமைக்கப் பட்ட, பாடப் பட்ட விதம் குறித்துச் சொல்லி, கடைசியில் அந்தப் பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடித்து பெயர் தட்டிக் கொண்டு போனார் என்று சொல்லி இருந்தார். மனதை மயக்கும் ட்யூனோடு பாடல் வரிகளும், பாடுபவர் குரலும் மனதை கொள்ளை கொள்ளும்.

இவை நிச்சயமாக இந்தக் காலக் குத்துப் பாடல்களுக்குப் பொருந்தாது...

அந்த வகையில் மனத்தைக் கவர்ந்த சில பாடல்கள் பற்றி அவ்வப்போது எழுத ஆசை.