அடுத்த கட்டம் என்ற வார்த்தை எல்லாத் துறைகளிலும் பயன்படுகிற வார்த்தை. மனித வாழ்க்கை முதல் நாளிலிருந்து ஒவ்வொரு கட்டமாய் முன்னேறிக் கொண்டு வந்திருக்கிறது. ஆடை உடுத்தா நிலையிலிருந்து இலை ஆடை உடுத்தத் துவங்கி, நெருப்பின் பயன் அறிந்து...அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் கொண்டே இருப்பது வாழ்க்கை.
கமல் தனது படங்கள் மூலம் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகக் கூறுவார்கள்..பாலச்சந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர் போன்றவர்கள் அபபடி ஒரு அடுத்த கட்டத்தை திரையுலகில் உருவாக்கியவர்கள். இசையில் பழைய முறைகளை மாற்றி அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது A R ரெஹ்மான் புதுமைகள் செய்வது இப்போதைய அடுத்த கட்டம்.
எழுத்துலகில் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் முதல் நெடுங்கதை, பொதுவாக கதையுலகில் திகம்பர சாமியார் முதல் துப்பறியும் கதை என்று தொடங்கி பின்னர் கல்கி முதல் தமிழ்வாணன் சுஜாதா என்று அடுத்தடுத்த மாற்றங்கள் வந்த வண்ணமிருந்தன.
சுழற்றி சுழற்றி டயல் செய்யும் பழைய தொலைபேசி படிப் படியாக முன்னேறி செல்ஃபோன் வரை வந்து அதுவும் 3G என விரிவடையும் நேரம்...
இப்படி எல்லா துறைகளும் முன்னேற்றப் பாதையில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும்போது அரசியலில் மட்டும் தலைகீழ். சுதந்திரம் அடைந்தபிறகு எவ்வளவோ அடுத்தகட்டங்கள் அரசியலிலும் உண்டு சில நல்லவையாய், பல அல்லவையாய்...மேடை நாகரீகம், பேச்சு நாகரீகம், எழுத்து நாகரீகம் எல்லாம் கடைப் பிடிக்கப் படும் வழக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன....மேடைப் பேச்சுக்கள் உண்மை பேசுதல் என்ற நிலையிலிருந்து மாறத் தொடங்கி நாகரீகமாகப் பேசுவதும் குறையத் தொடங்கியது.
இவ்வளவு பீடிகையும் போட்டது இந்த கடைசி பாராவுக்குதான்...! பேச்சு நாகரீகம் குறைந்தாலும் கூட அம்மாதிரி மேடையில் பேசுபவர்கள் கட்சியின் இரண்டாம் கட்டம் கூட அல்ல மூன்றாம் அல்லது நான்காம் கட்டப் பேச்சாளர்கள்தான் அம்மாதிரிப் பேசப் பணிக்கப் படுவார்கள். பெரிய தலைவர்கள் தரம் கேட்டு பேச, குறைந்தபட்சம் பொதுவிலாவது பேசத் தயங்குவார்கள்...ஆனால் நமது நாட்டு முக்கியத் தலைவர் ஒருவர், அவர் முன்னாள் பிரதமர் வேறு, கர்நாடக மாநில ஆளும் முதல்வரை தரம் கெட்ட வார்த்தைகளால் தயங்காமல் திட்டி இருக்கிறார். கேமிரா முன்னால் பேசுகிறோம், மக்கள் பார்ப்பார்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் சிறிதுமில்லை. (இவர்தான் இப்படிப் பேசுகிறார் என்று பார்த்தால் முதல்வர் 'இன்னொருமுறை அவர் அப்படிப் பேசினால் நானும் திருப்பித் திட்ட தயங்க மாட்டேன்..' என்கிறார்!)
அரசியலில் அடுத்த கட்டம் என்பது தொடங்கப் பட்டுள்ளது...முன்னேற்றப் பாதையில் அல்ல. புதிர்க் கதை குரு ஏன் நழுவ மாட்டார்...?