pulse coming down லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pulse coming down லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.10.10

சுகர், பி பி எல்லாம் எப்படி இருக்கு?


திங்கட்கிழமை. காலை ஏழரை தொடங்கி ஒன்பது மணிவரை இராகு காலம். ஆனால், நமது நண்பர் பராங்குசம் அலுவலகத்தில், காலை எட்டு மணி முதல், மாலை மூன்றரை மணி வரை இராகு காலம்தான். 
   
ஒவ்வொரு ஃபோன் அழைப்பு வரும் பொழுதும் அவருக்கு பதற்றம் ஏற்படும். 
சில நாட்களில், 'இது என்னடா பிழைப்பு? விட்டு எங்கேயாவது ஓடிவிடலாமா' என்று கூடத் தோன்றும். டாக்டரைப் போய்ப் பர்ர்க்கவேண்... ' என்று நினைப்பு வந்தவுடனேயே திடீரென்று பராங்குசத்திற்கு, டாக்டர் ரகுராமன் ஞாபகம் வந்தது. 

உதவியாளர் உலகநாதனை அழைத்தார். "லோகு .. டாக்டருக்கு லேட்டஸ்ட் நிலை பற்றி வெள்ளிக்கிழமை விவரம் கூறிவிட்டீர்களா?"

"இல்லை சார். வெள்ளிக்கிழமை மாலை டாக்டர் வீட்டு நம்பருக்கு, ஃபோன் பண்ணினேன். ஆஸ்பத்திரியில் இருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி நம்பருக்கு ஃபோன் பண்ணினால், டாக்டர் ஒரு ஆப்பரேஷன் செய்துகொண்டு இருப்பதால், பிறகு ஃபோன் செய்ய சொன்னார்கள். நான் அப்புறம் மறந்தே போய்விட்டேன்." 

"அதற்கு முந்திய வாரம் வெள்ளிக்கிழமை?"

"அப்போ டாக்டர் கான்ஃபரன்ஸ் போயிருந்தார் சார்." 

"என்ன காரியம் செய்தீர்கள் லோகு. வாரா வாரம் - அவருக்கு ரிபோர்ட் கொடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதின் பேரில் நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவருக்கு சுருக்கமாக எல்லாம் சொல்லி, அவர் கேட்கின்ற கேள்விகள் எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்லுவேன். அதற்குப் பிறகு, அவர் என்ன செய்யச் சொல்லுகிறாரோ அதை அப்படியே செய்து வருவேன். இரண்டு வாரங்களாக அவர் அட்வைஸ் இல்லாமலேயே நான் ஏதோ செய்து கொண்டு இருக்கின்றேன். இப்போ என்ன செய்வது?"

காலை மணி பத்து ஆகிவிட்டது. அலுவலகம் ஏக பிசி. ஃபோன் கால்களும், கம்பியூட்டர் தட்டல்களும் ஒரே பரபரப்பு. 

ஒரு அழைப்பை எடுத்த உலகநாதன் சொன்னார். "சார்! டாக்டர் ஆன் லைன். உங்க தொலைபேசியில் எடுத்துக்கொள்ளுங்கள்."
    
பராங்குசம், "அப்பாடி இப்பத்தான் உயிர் வந்தது" என்று சொல்லிக்கொண்டே ஃபோனை எடுத்தார்.

"குட் மார்னிங் டாக்டர்."

"என்ன பராங்குசம்? நான் கொஞ்சம் பிசி என்றவுடன், என் அட்வைசே வேண்டாம் என்று விட்டு விட்டீர்களா?"

"இல்லை டாக்டர். உங்க அட்வைஸ் இல்லாவிட்டால் நான் ஒன்றும் பண்ண முடியாதே!"

"அது தெரிந்தால் சரிதான். சரி சுகர் எப்படி இருக்கு?"

"டாக்டர். சுகர் ஏறிக்கிட்டுத்தான் இருக்கு."
    
"ஆமாம் என்னுடைய கம்பவுண்டர் கூட போன வாரம் சொன்னார். அவருக்கும் சுகர் இருக்கு.சரி, பி பி (B.P) எப்படி?"
     
"டாக்டர் அதுவும் ஏறிக்கிட்டுத்தான் இருக்கு."

"ஐயோ! அப்படியா? பல்ஸ் என்ன நிலைமை?"

"டாக்டர் - அது இப்போ இறங்கிடுச்சு."

"அய்யயோ - என்னங்க இப்பிடிப் போயிடுச்சு?" 

"டாக்டர், இப்போ நான் என்ன பண்ணலாம்? அதை சொல்லுங்க." 

"என்ன பராங்குசம் உங்களுக்குத் தெரியாதா? வழக்கமான இன்ஸ்டிரக்ஷன்ஸ்தான் ... சுகரும் பி பி யும் இன்னும் எவ்வளவு உயருதுன்னு பாருங்க. இவ்வளவுதான் லிமிட், இதுக்கு மேலே போகாது என்று தெரியும்போது .......  " 

"தெரியும்போது?"  
  
"விற்றுவிடுங்கள். எனக்கு கமொடிடி டிரேடிங் இன்னும் பிடிபடவில்லை. அதனால பல்சஸ் நீங்களே பார்த்து, லாபம் வரும் சமயத்தில் விற்றுவிடுங்கள்."  
     
"சரி டாக்டர்."  

(ஹி ஹி - பராங்குசம் பங்கு வர்த்தகர். டாக்டர் ரகுராமன் உள்பட பலர் அவருடைய கிளையண்ட்ஸ். சுகர் என்றால் சுகர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள். பி பி என்றால், பாரத் பெட்ரோலியம் (கார்ப்பரேஷன்). பல்ஸ் என்றால் பருப்பு மார்க்கெட்.)