சிறு வயதில் படம் பெயர் சொல்லி விளையாடுவது உண்டு.. ஒருவர் பாடி, விட்ட அடியின் ஏதாவது ஒரு எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அடுத்தவர் பாட வேண்டும் என்று விளையாடுவது உண்டு. பாடல்களில் ஓரிரு வரிகள் சொல்லி முதலடி என்ன என்று சொல்லி விளையாடுவது உண்டு.
இப்போதும் நாம் எங்காவது சென்று கொண்டிருப்போம். எங்கிருந்தாவது ஏதாவது பாடலின் ஓரிரு வரிகள் காதில் விழும். தெரிந்த பாடல் என்று மனதில் அடிக்கும். அருகிலிருப்பவர்கள் பேச்சு, வேலை என்று கவனம் சிதறினாலும் அந்தப் பாடல் என்ன என்று தெரிந்து கொள்ளாத வரை பல்லிடுக்கில் மாட்டிய உணவுத் துகளின் அவஸ்தை இருக்கும்... மெல்ல பாடிப் பார்ப்போம்... யாரையாவது கேட்டு பார்ப்போம்...
மதுரைப் பக்கங்களில் பாட்டுப் பாடுகிறான் என்று சொல்வதற்கு பதில் பாட்டு படிக்கிறான் என்பார்கள். சிலர் 'பாடுவதைக்' கேட்கும் போது வேண்டுமென்றேதான் அப்படிச் சொல்கிறார்களோ என்றும் தோன்றும். என்னிடம் என் நண்பர்கள் ஏதாவது ஒரு பாட்டைச் சொல்லி 'பாட்டு படியேன்...' என்னும் போது அந்தப் பாடலை கவிஞர் பாணியில் 'படித்து' விடுவேன்... (பாடினாலும் அப்படிதான் இருக்கும் என்பது வேறு விஷயம்)
ஆனால் அபபடி வசனமாக பாடலைச் சொல்வது கூட என் நண்பர்கள் சிலருக்கு வராது. முதல் வரியைச் சொல்லி விட்டு அடுத்த வரிக்கு சற்றே திரும்பி நின்று அடுத்தடுத்த வரிகளை மனதினுள் பாடிப் பார்த்துக் கொண்டு சொல்வார்கள்.
நீண்ட கட்டுரையாக எழுதுவதை சுருக்கி சில வரிகளில் கவிதையாக்குகிறார்கள் கவிஞர்கள். திறமைசாலிகள். நமக்குக் கவிதை வராது. சுருக்கி எழுதியதை நீட்டினால்.... கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாமே என்று தோன்றியது.
சில திரைப் பாடல்கள்... கவிதைக்குப் பொருள் கூறுவது போல வேறு வார்த்தைகளில் சாதா வரிகளாக... பாடலின் இடையில் வரும் வரிகள்... இதிலிருந்து அந்தப் பாடல்களை ஊகிக்க முடிகிறதா என்று பாருங்கள்... 'பூ...! இவ்வளவுதானா...' என்கிறீர்களா..? சும்மா தமாசு...!
2) நன்றாக வாழும்போது பார்க்க வரும் உறவு ஜனம் யாவும் சாப்பிடக் கூட வழியில்லாத போது வருமா...உலகில் பணத்தை மிஞ்சி ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு என்ன உறவுகள் வேண்டியிருக்கிறது... துன்பப் படும் இதயத்துக்கு யார் ஆறுதல் தருகிறார்களோ அவர்கள் தான் சகோதரர்கள்...
3) இளமை போகும்..முதுமை வரும். மாலையிட்டு தாலி கட்டிய அழகிய மனைவியுடன் அன்புடன் பிரியாமல் மடியில் படுத்து சரசம் செய்ய வயது ஒரு தடையல்ல...
4) எந்த ஒன்று என்னை ஈர்த்தது...மூக்கின் நுனியில் உள்ள மர்மமா... கள்ளமில்லா போகன்வில்லா புன்னகையா... நீ நடந்ததால் மதிப்பு கூடிப் போன பாதைகளும் உனக்காக ஐஸ் பாதை போட்ட இயற்கையும்... ப்ளீஸ்...என் வீடு வரை வருவாயா...என் வீடு உனக்குக் கட்டாயம் பிடித்துப் போகும்... என்னையும்தான்...
5) உனது மடியில் கண்கள் சொக்க நான் தூங்குவதற்கு என்ன பேறு பெற்றேனோ...என்ன என்று கூறுவேன்...? இந்தப் பிறவி மட்டுமல்ல ஏழேழு பிறவியிலும் தொடரும் சொந்தம்... வாழும் காலம் யாவும் உன் இதயமே எனது அடைக்கலம்.
6) என் உள்ளம் எப்படித் தெரியுமா....எப்படி உலகத்துக்கு எல்லை இல்லையோ அது போலத்தான்... புதிய உலகில் எல்லோருக்கும் நல்ல பொழுதாகவே விடியும்.... ஒரு வகையில் எல்லோருக்கும் உதவும் காற்றும் என் பாடலும் ஒன்றுதான்.
7) பகல் வேளையில் விளக்குடன் சென்ற மேதை மனிதனைக் காணோம் தேடுகிறேன் என்று விளக்கம் சொன்னாராம். யார் மனிதன் என்றால் பிறப்பால் வளர்ப்பால் அல்ல குணத்தால் மனத்தால் வாழ்பவன் மனிதன் என்று சொன்னாராம்.
என்ன.. எல்லாம் ஈசிதானே...பின்னூட்டத்தில் விடைகள் வந்து குவிந்து விடும். மீனாக்ஷி வாரம் ஒரு சினிமாப் பதிவு விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்காக என்று கூட வைத்துக் கொள்ளலாம். மீனாட்சிக்கு எல்லாம் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.