ஆறு
மாதங்களுக்கு முன்பு சென்னை-பெங்களூர் ரோடில் சென்றபோது, முருகன் இட்லிக்
கடையில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன். எனக்குப் பிடித்திருந்தது. (முருகன்
இட்லிக்கடையில் பொங்கலா என்று நானும் பார்த்தேன். கருஞ்சிவப்பில்
இருந்தது. நான் சாப்பிட்டது நங்கநல்லூர் முருகன் இட்லிக்கு கடையில்.
எனக்கு வெறுத்து விட்டது. முறுகச் செய்திருந்தார்கள்! - ஸ்ரீராம்) அதில்
நல்ல நெய்தான் விட்டிருந்தார்களா
என்பது தெரியாது.. ஆனால் சர்க்கரைப் பொங்கலின் குவாலிட்டி அதில்
தெரிந்தது. அதிலிருந்து, சர்க்கரைப் பொங்கல் பண்ணிச் சாப்பிடவேண்டும் என்று
நினைத்துக்கொண்டே இருந்தேன். அதுக்கும் வேளை இந்தப் பொங்கலின்போதுதான்
வந்தது. சென்னைல, பசங்களுக்கு சர்க்கரைப் பொங்கல்னாலே பிடித்தமில்லை.
நெய், வெல்லம்லாம் எங்களுக்குச் சரிப்படாது என்றார்களாம். அவங்களுக்கு
என்ன தெரியும்… எங்கள் இளமைக் காலத்தில், மார்கழி மாதத்தின்போது தினமும்
கோவிலுக்குச் சென்று பொங்கல் பிரசாதம் வாங்கி, கோவிலிலேயே சாப்பிட்ட
இனிமையான அனுபவம். அதுவும் ‘கூடாரை’’ என்ற பாடல் பாடும்
மார்கழி 27வது நாள், சர்க்கரைப் பொங்கலுக்காகவே நாங்கள் கோவிலுக்குச்
செல்வோம். (தஞ்சையில்
என் இளமைக்காலத்தில் அச்சு வெல்லம் போட்டுச் செய்து சாப்பிட்ட இனிமையாய்
எனக்குள்! என்ன இருந்தாலும் அம்மா கைப்பக்குவம் பாருங்கள் - ஸ்ரீராம்)
கோவில்களில்
பிரசாதமாகக் கொடுக்கும் சர்க்கரைப் பொங்கலின் சுருசி அதில் போடப்படும்
பொருட்களினாலோ அல்லது செய்முறையாலோ வருவதல்ல. ஆனாலும் நல்ல சர்க்கரைப்
பொங்கல் செய்யும் முறையை
எழுதுகிறேன். சமீபத்தில்தான் பொங்கல் பண்டிகை முடிந்து, இரண்டு நாட்கள்
இப்போதைக்கு சர்க்கரைப் பொங்கல் என்றாலே ஆசை வராத அளவு, சர்க்கரைப் பொங்கல்
சாப்பிட்டிருப்பீர்கள். பாளம் பாளமாக சாதக் கட்டிபோல் செய்யும் சர்க்கரைப்
பொங்கலோ அல்லது பச்சைக் கற்பூர வாசனை இல்லாத
சர்க்கரைப் பொங்கலோ எனக்குப் பிடிப்பதில்லை. பொதுவா, பால் சேர்த்துச்
செய்யும் சர்க்கரைப் பொங்கலும், வெல்லப் பாயசங்களும் எனக்கு விருப்பமில்லை.
நமக்குப் பிடித்த முறையில் செய்துபார்ப்போம் என்று எண்ணி முயற்சித்ததுதான்
இன்று சொல்லப்போகும் கோவில் சர்க்கரைப் பொங்கல்
செய்முறை.
நல்ல
மண்டை வெல்லம், அதுவும் வெள்ளையாக இல்லாத வெல்லம் முக்கியம். பாஸ்மதி,
உயர்ந்த நெல்லூர்ப் பச்சரிசி போன்றவை இதற்குச் சரிப்படாது. நான் இங்கு
கிடைக்கும் தோசைப் பச்சரிசியை உபயோகப்படுத்தினேன்.
புதுப் பச்சரிசி இதற்குத் தோதுப்படும்.
முதல்ல
1 கப் அரிசி, ¼ கப் அல்லது அதற்குக் கொஞ்சம் அதிகமாக பாசிப்பருப்பு
எடுத்துக்கோங்க. நல்லா அலம்பினபின், 2 ½ கப் தண்ணீர் சேர்த்து 5-6 விசில்
வரும்வரை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
நெய்யில்,
10-12 முந்திரிப்பருப்புகளை சிவக்க வறுக்கவும். அதுலேயே உலர் திராட்சைப்
பழங்களைப் போட்டு (கிஸ்மிஸ்) வறுத்துக்கோங்க. பழம் கொஞ்சம் உப்பி வரும்.
இதை ஒரு தட்டில் போட்டுக்கோங்க.
கடாயில்,
1 ¾ கப் வெல்லம், அது சிறிது மூழ்கும்படியாக தண்ணீர் சேர்த்து நல்லா பாகு
காய்ச்சிக்கோங்க. (வெல்லம் சுத்தமாயிருக்கணும். இல்லைனா, வெல்லம் கரைந்த
உடனே, வடிகட்டிவிட்டு,
அதைப் பாகு பதத்துக்கு காய்ச்சவும்). இதுல ஏலப்பொடி சேர்த்துக்கவும்.
இப்போ வேகவைத்த சாதம்+பயத்தம்பருப்புக் கலவையைச் சேர்த்துக்
கிளறவேண்டியதுதான். கிளறும்போது, 4 பெரிய ஸ்பூன் நெய் சேர்த்துக்கோங்க.
நல்லாக் கிளறியதும், நெகிழ் பதத்துக்கு வந்தவுடன் பச்சைக் கற்பூரம்
சிறிது பொடித்துப்போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
(இனிப்புப் பொங்கலுக்கு காரமாய் கூட்டு தொட்டுக்க கொண்டு காண்ட்றாஸ்ட்டாய் உள்ளே தள்ளுவேனாக்கும்! - ஸ்ரீராம்)
பின்குறிப்பு:
பச்சைக்
கற்பூரம் பொடித்துச் சேர்த்தவுடன், அடுப்பை அணைத்துவிடவும். நிறையச்
சேர்த்தாலோ, அல்லது அடுப்பில் ரொம்ப நேரம் வைத்திருந்தாலோ, கசந்துவிடும்.
பரிமாறும்
சமயத்தில், சர்க்கரைப் பொங்கலைச் சிறிது சூடுபடுத்தியபின் பரிமாறினால்,
நன்றாக இருக்கும். சூடு இல்லாத சர்க்கரைப் பொங்கல் சுகமாயிருக்காது. (இறுகியும் போயிருக்கும்!)
சர்க்கரைப்
பொங்கலை Richஆகப் பண்ணுகிறேன் என்று, பாதாம், குங்குமப்பூ, வெனிலா
எசன்ஸ்னு சிலர் சேர்ப்பார்கள். சிலர், வெல்லத்தைக் குறைத்து கோவாவைச்
(ஆவின்) சேர்ப்பார்கள். அதெல்லாம்
பாரம்பரியச் சமையல் முறையில் வராது என்பது என் கருத்து.
அன்புடன்,



