திங்கள், 6 பிப்ரவரி, 2017

"திங்க"க்கிழமை 170206 :: பெருமாள் கோவில் சர்க்கரைப் பொங்கல்! நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை-பெங்களூர் ரோடில் சென்றபோது, முருகன் இட்லிக் கடையில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன். எனக்குப் பிடித்திருந்தது. (முருகன் இட்லிக்கடையில் பொங்கலா என்று நானும் பார்த்தேன்.  கருஞ்சிவப்பில் இருந்தது.  நான் சாப்பிட்டது நங்கநல்லூர் முருகன் இட்லிக்கு கடையில்.  எனக்கு வெறுத்து விட்டது.  முறுகச் செய்திருந்தார்கள்! - ஸ்ரீராம்) அதில் நல்ல நெய்தான் விட்டிருந்தார்களா என்பது தெரியாது.. ஆனால் சர்க்கரைப் பொங்கலின் குவாலிட்டி அதில் தெரிந்தது. அதிலிருந்து, சர்க்கரைப் பொங்கல் பண்ணிச் சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அதுக்கும் வேளை இந்தப் பொங்கலின்போதுதான் வந்தது. சென்னைல, பசங்களுக்கு சர்க்கரைப் பொங்கல்னாலே பிடித்தமில்லை. நெய், வெல்லம்லாம் எங்களுக்குச் சரிப்படாது என்றார்களாம். அவங்களுக்கு என்ன தெரியும்… எங்கள் இளமைக் காலத்தில், மார்கழி மாதத்தின்போது தினமும் கோவிலுக்குச் சென்று பொங்கல் பிரசாதம் வாங்கி, கோவிலிலேயே சாப்பிட்ட இனிமையான அனுபவம். அதுவும் ‘கூடாரை’’ என்ற பாடல் பாடும் மார்கழி 27வது நாள், சர்க்கரைப் பொங்கலுக்காகவே நாங்கள் கோவிலுக்குச் செல்வோம். (தஞ்சையில் என் இளமைக்காலத்தில் அச்சு வெல்லம் போட்டுச் செய்து சாப்பிட்ட  இனிமையாய் எனக்குள்!  என்ன இருந்தாலும் அம்மா கைப்பக்குவம் பாருங்கள் - ஸ்ரீராம்)


கோவில்களில் பிரசாதமாகக் கொடுக்கும் சர்க்கரைப் பொங்கலின் சுருசி அதில் போடப்படும் பொருட்களினாலோ அல்லது செய்முறையாலோ வருவதல்ல. ஆனாலும் நல்ல சர்க்கரைப் பொங்கல் செய்யும் முறையை எழுதுகிறேன். சமீபத்தில்தான் பொங்கல் பண்டிகை முடிந்து, இரண்டு நாட்கள் இப்போதைக்கு சர்க்கரைப் பொங்கல் என்றாலே ஆசை வராத அளவு, சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டிருப்பீர்கள். பாளம் பாளமாக சாதக் கட்டிபோல் செய்யும் சர்க்கரைப் பொங்கலோ அல்லது பச்சைக் கற்பூர வாசனை இல்லாத சர்க்கரைப் பொங்கலோ எனக்குப் பிடிப்பதில்லை. பொதுவா, பால் சேர்த்துச் செய்யும் சர்க்கரைப் பொங்கலும், வெல்லப் பாயசங்களும் எனக்கு விருப்பமில்லை. நமக்குப் பிடித்த முறையில் செய்துபார்ப்போம் என்று எண்ணி முயற்சித்ததுதான் இன்று சொல்லப்போகும் கோவில் சர்க்கரைப் பொங்கல் செய்முறை.

நல்ல மண்டை வெல்லம், அதுவும் வெள்ளையாக இல்லாத வெல்லம் முக்கியம். பாஸ்மதி, உயர்ந்த நெல்லூர்ப் பச்சரிசி போன்றவை இதற்குச் சரிப்படாது. நான் இங்கு கிடைக்கும் தோசைப் பச்சரிசியை உபயோகப்படுத்தினேன். புதுப் பச்சரிசி இதற்குத் தோதுப்படும்.


முதல்ல 1 கப் அரிசி, ¼ கப் அல்லது அதற்குக் கொஞ்சம் அதிகமாக பாசிப்பருப்பு எடுத்துக்கோங்க. நல்லா அலம்பினபின், 2 ½ கப் தண்ணீர் சேர்த்து 5-6 விசில் வரும்வரை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.நெய்யில், 10-12 முந்திரிப்பருப்புகளை சிவக்க வறுக்கவும். அதுலேயே உலர் திராட்சைப் பழங்களைப் போட்டு (கிஸ்மிஸ்) வறுத்துக்கோங்க. பழம் கொஞ்சம் உப்பி வரும். இதை ஒரு தட்டில் போட்டுக்கோங்க.
 
கடாயில், 1 ¾ கப் வெல்லம், அது சிறிது மூழ்கும்படியாக தண்ணீர் சேர்த்து நல்லா பாகு காய்ச்சிக்கோங்க. (வெல்லம் சுத்தமாயிருக்கணும். இல்லைனா, வெல்லம் கரைந்த உடனே, வடிகட்டிவிட்டு, அதைப் பாகு பதத்துக்கு காய்ச்சவும்). இதுல ஏலப்பொடி சேர்த்துக்கவும். இப்போ வேகவைத்த சாதம்+பயத்தம்பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவேண்டியதுதான். கிளறும்போது, 4 பெரிய ஸ்பூன் நெய் சேர்த்துக்கோங்க.  நல்லாக் கிளறியதும், நெகிழ் பதத்துக்கு வந்தவுடன் பச்சைக் கற்பூரம் சிறிது பொடித்துப்போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.சர்க்கரைப் பொங்கலைக் கையில் வாங்கி சாப்பிடும்போது நெய் கையிலிருந்து முழங்கை வரை வழியணும் என்பது நெய்க்கான அளவுகோல். அப்படிப் பண்ணிச் சாப்பிட்டால் உடம்புக்குச் சரிப்படாது என்று நான் கொஞ்சம் குறைவாக நெய் சேர்த்தேன். பச்சைக் கற்பூரம் சர்க்கரைப் பொங்கலுக்கு ரொம்பவும் வாசனை சேர்க்கும்.  


(இனிப்புப் பொங்கலுக்கு காரமாய் கூட்டு தொட்டுக்க கொண்டு காண்ட்றாஸ்ட்டாய் உள்ளே தள்ளுவேனாக்கும்! - ஸ்ரீராம்)

பின்குறிப்பு:
பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்தவுடன், அடுப்பை அணைத்துவிடவும். நிறையச் சேர்த்தாலோ, அல்லது அடுப்பில் ரொம்ப நேரம் வைத்திருந்தாலோ, கசந்துவிடும்.

பரிமாறும் சமயத்தில், சர்க்கரைப் பொங்கலைச் சிறிது சூடுபடுத்தியபின் பரிமாறினால், நன்றாக இருக்கும். சூடு இல்லாத சர்க்கரைப் பொங்கல் சுகமாயிருக்காது.  (இறுகியும் போயிருக்கும்!)

சர்க்கரைப் பொங்கலை Richஆகப் பண்ணுகிறேன் என்று, பாதாம், குங்குமப்பூ, வெனிலா எசன்ஸ்னு சிலர் சேர்ப்பார்கள். சிலர், வெல்லத்தைக் குறைத்து கோவாவைச் (ஆவின்) சேர்ப்பார்கள். அதெல்லாம் பாரம்பரியச் சமையல் முறையில் வராது என்பது என் கருத்து.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

43 கருத்துகள்:

 1. இன்றைய காலைப் பொழுதின் முதல் பதிவே சர்க்கரைப் பொங்கலில் தொடங்கியிருக்கிறது
  படிக்கப் படிக்க உடனே ருசிக்க ஆவல் மேலிடுகிறது நண்பரே
  நன்றி
  தம 1

  பதிலளிநீக்கு
 2. கோவையில் ஒரு தனியார் கோவிலில் கூடாரைவல்லி அன்று கோவிலுக்கு வரும் அன்பர்களை உட்காரவைத்து உள்ளங்கையில் பொங்கலை கொடுத்து பின் நெய் விடுவார்களாம் கையிலிருந்து முழங்கை வரை வழிய . இதை கேள்விப் பட்டு அன்று கோவிலுக்கு போனோம் ஆனால் முடிந்து விட்டது, எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.
  உங்கள் செய்முறை விளக்கமும், படமும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. தொட்டுக்க காரமாய் கூட்டு...! இதுவல்லவோ டேஸ்ட்...!

  பதிலளிநீக்கு
 4. சில வைஷ்ணவர்களின் வீடுகளில் செய்யும் + திருமணங்களில் போடும், அக்கார அடிசலும், புளியோதரையும் தனி டேஸ்ட் ஆக இருப்பது உண்டு.

  மார்கழி 27-ம் நாள் 300 அண்டாக்களில், ஆண்டாள் தனது பாசுரத்தில் சொல்வதுபோல, சாப்பிடுவோரின் முழங்கை வரை நெய் ஒழுகுமாறு, அக்கார அடிசல் செய்து, பெருமாள் கோயில்களில் நைவேத்யம் செய்து அனைவருக்கும் விநியோகித்து வருவதாக, நான் செய்திகள் மூலம் மட்டுமே கேள்விப்பட்டதுண்டு.

  இதுவரை அதுபோன்றதோர் திவ்யமான பிரஸாதத்தை வாங்கிச் சாப்பிடும் பாக்யம் ஏனோ எனக்குக் கிடைக்கவில்லை. :(

  அதனால் என் நாக்கு போலவே, என் வலது முழங்கையும், எங்கள் ஊர் காவிரி நதிபோல .... காய்ந்து வறண்டு போய் உள்ளது. :)

  சர்க்கரைப்பொங்கல் என்ற பெயரில் ஏதோ சுமாராக இங்கு எழுதி, படங்கள் காட்டிப் பகிர்ந்துகொண்டுள்ள பதிவுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. இனிய பொங்கல்.....இது பற்றி இன்னும் எழுத வேண்டும்....கரண்ட் இல்லை.ஸோ மொபைலில் அடிக்க கஷ்ட்டம் ஹிஹிஹி அப்புறம் வரேன்...இப்ப ஆஜர்...வைத்தாயிற்று

  கீதா

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான பொங்கல்...
  நமக்கு பொங்கல் அவ்வளவாக பிடிக்காது.... எங்க விஷால் பொங்கல் பிரியர்... அவருக்காகவே வீட்டில் அடிக்கடி பொங்கல் செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி எங்கள் பிளாக் ஶ்ரீராம், வெளியிட்டமைக்கு. பிறகு வந்து எல்லோருக்கும் பதிலிடுகிறேன்.

  கோபு சார்... நான் ஊரில் இல்லை. இருந்தபோது உங்கள் பின்னூட்டத்தைப் படித்திருந்தால் வீறுகொண்டு எழுந்து, திருச்சிக்கு வந்து செய்துதந்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் எதிர்பார்க்கும் குவாலிட்டி வந்திருக்குமா என்று தெரியவில்லை. (ஒருவேளை இனிப்பு சாப்பிடக்கூடாது என்ற மேலிடத்துக் கட்டளையால் சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்ற மனநிலை வந்துவிட்டதா?) - 100 தடா அக்கார அடிசில்தான். ஒருவேளை திருச்சியில் மூன்று கோவில்களில் இந்தத்தடவை செய்தார்களா? ஒரு பத்திரிகை தானே பகிர்ந்துகொண்டீர்கள்? உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. மிக்க நன்றி கரந்தை சார். கரந்தை வந்தால் கிடைக்கும் என்று சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
 9. நன்றி கோமதி அரசு மேடம். நீங்கள் எழுதியதைப் படிக்கும்போதே கோவில் பிரசாதம் நினைவுக்கு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 10. நற்றி திண்டுக்கல் தனபாலன். காரக்கூட்டு தொட்டுக்கொண்டதில்லை

  நன்றி கீதா ரங்கன். உங்களுக்கு ஆஜர் போட்டாயிற்று

  பதிலளிநீக்கு
 11. நன்றி பரிவை குமார். வேற வழியே இல்லை. பசங்களுக்குப் பிடித்ததுதான் மேலிடம் அடிக்கடி செய்வார்கள். நாம மாத்திக்கலைனா, வெறும் குழம்பு சாதம், மோர் சாதம்தான் நமக்கு என்று ஆகிவிடும்

  பதிலளிநீக்கு
 12. ஶ்ரீராம் உங்கள் பின்னூட்டத்துக்கும் நன்றி. அம்மா கையால் சாப்பிட்ட எதையும் மறக்க இயலுமா அல்லது திருமணத்துக்குப்பின் அடிக்கடி சொல்லத்தான் ஏலுமா? காரக்கூட்டு தொட்டுக்கொண்டால் நிறைய சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டுவிடுவோம்.

  பதிலளிநீக்கு
 13. ஆஹா !! பார்க்கவே அருமையா இருக்கே !!..எங்க வீட்ல என் கணவருக்கு மட்டுமே இந்த ஸ்வீட்ஸ் இனிப்பு பொங்கல் எல்லாம் பிரியம் ..நான் எப்பவுமே வெண்பொங்கல் ரசிகை .. கட்டாயம் வார இறுதிக்கு இதை செய்து பார்க்கிறேன்

  அதறகாக சாப்பிட மாட்டேனென்றில்லை ..ஒரு குட்டி கிண்ணம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவேன் ..பார்க்க பார்க்க எனக்கு பொங்கல் சாப்பிட ஆவலாயிருக்கு
  எந்த காலத்துல நாங்க இவ்ளோ அருமையா செஞ்சிருக்கோம் :) அதிராக்குக்கூட சர்க்கரை பொங்கல் செய்யத்தெரியாது (இதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் வராது )

  பதிலளிநீக்கு
 14. நெல்லைத் தமிழன் நீங்க இங்க கொடுத்திருப்பது சர்க்கரைப் பொங்கல் இல்லையா கூடாரைக்குச் செய்யும் பொங்கல் அக்காரை அடிசில் நீங்களும் செய்திருப்பீர்கள்! உங்களுக்குத் தெரியாததா என்ன...இருந்தாலும் சைக்கிள் காப்ல இப்படி விடணும்ல ஹிஹிஹி...

  உங்களுக்கு இது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் பாசுரத்தில் திருமொழி என்று நினைவு..."சென்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் பன்னிரெண்டு திருவோணம் அட்டேன்" "பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார" என்று கூடாரை வெல்லும் சீரிலும், நாச்சியார் திருமொழியில் மாலிருஞ்சோலை நம்பிக்கு, "நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்" என்று வரும் இல்லையோ....இன்னொரு வகை அரவணை...அக்காரை அடிசலுக்கும், சர்க்கரைப் பொங்கலுக்கும் இடைப்பட்ட ஒன்று...அரிசி உதிர வடித்து, வெல்லத்தைப் பாகுகாய்ச்சி, மற்றதெல்லாம் சர்க்கரைப் பொங்கல் போலத்தான்..ஆனால் தளர இருக்கும்..கொஞ்சமே பாலும் சேர்ப்பதுண்டு கிளறும் போது. இது அரங்கனுக்கு இரவு படைப்பதுண்டு, கேரளாவில் அரவணை பாயாசம் என்று சொல்லுவது தான் எப்போதுமே.ஆனால் அதில் பச்சைக்கற்பூரம் கிடையாது...நான் சொல்லுவது சரிதானா என்று தெரியவில்லை...நான் அறிந்தது இவ்வளவே.

  ரஞ்சனி அக்காவைக் காணவில்லை. அவர்கள் வந்தால் இதற்கு மிக அழகாக மேற்கோள் காட்டிப் பொருளும் சொல்லிவிடுவார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 15. @Angel ///அதிராக்குக்கூட சர்க்கரை பொங்கல் செய்யத்தெரியாது (இதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் வராது )///

  எங்களுக்கு இப்போ ஸ்பிறிங் ஹொலிடே ஆரம்பம்.. அதை என்சோய் பண்ணலாமே என, ஆராவது டிசுரேப்புப் பண்ணிடக்கூடாதே எண்டு, தலையைக்கூட குல்ட்டால இழுத்து மூடிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேனா...

  மூக்குக்குள் ஏதோ புகைப்போனதா ஒரு அன்னீஈஈஈஈசியான பீலிங்கூ:)).. பத்துத்தரம் ஆச்சூஊம்ம் வந்து .. இது யாருடைய புகையோ என ஓடிவந்து திறந்தால்... இந்த பிஸ்ஸுதேன்ன்.. அஞ்சுட ஏரியாவில ஹொலிடே இல்ல, அதனால புகை விட்டு,,,,, ஒரு தூங்கிய மிருகத்தை.. ஐ மீன் என்னுள்ளே தூங்கிக்கொண்டிருந்த எனச் சொல்ல வந்தேன்ன் ..:) தட்டி எழுப்பினதால.. இனி நடக்கப்போகும் என் தொல்லைகளை நீங்க மிகவும் ஏழ்மையுடன்:) சொறி தாழ்மையுடன்:) பொறுத்துக்கொள்ளோனும்.. எனக் கூறித் தொடர்கிறேன்ன்:)

  பதிலளிநீக்கு
 16. /// கோவில் சர்க்கரைப் பொங்கல்! ///
  எனக்கு இங்கயே ஒரு டவுட்டூ.. அ:) அதாவது நீங்க சக்கரை என sugarஐத் தானே சொல்லுவீங்க.. இதனை வெல்லம் எனத்தானே சொல்லுவீங்க? ஆனா இங்கு சக்கரைப் பொங்கல் என்று போட்டிட்டீங்க... ஊருக்கு ஊர் பாஷையும் வேறுபடுதோ?..

  நாங்க சுகர் ஐ.. சீனி என்றுதான் சொல்லுவோம், அப்போ அது என்ன என எல்லோரும் கேட்பார்கள்.

  சக்கரை சேருங்கோ என்பார்கள்.. நாங்கள் இதைத்தான் நினைப்போம்.. இல்ல சுகர் ஐ சொன்னோம் என்பினம்... எனக்கு எல்லாமே குழப்பமா இருக்கே முருகா... சரி அது போகட்டும்.

  நாங்கள் ஊரில் பொங்கல் என்பதை வினைச்சொல்லாகப் பாவிப்போம்... இதனை “புக்கை” என்போம். அதாவது புக்கை பொங்குவது என்போம்(புக்கை பெயர்ச்சொல்).. ஆனா புக்கை என்பது தமிழ்ச்சொல்லோ இல்ல வேறு மொழியின் மருவலோ தெரியவில்லை. எனிவே..

  இன்று மிக விஷேசமான நாளாம், ஊரில் நிறைய கலியாணங்கள் நடக்குது.... நான் தலைப்பைப் பார்த்து இங்கு எங்கள் புளொக் ஓனருக்குத்தான் திருமணநாளோ என நினைச்சுட்டேன்ன்:))..

  நல்ல நாளில் நல்லதொரு ரெசிப்பி.

  பதிலளிநீக்கு
 17. தலைப்பில் மட்டும்தான் சக்கரை இருக்கு:) கீழே வெல்லம் எனத்தான் ஊஸ் பண்ணியிருக்கிறார்.. நெ.த.


  /// நல்லாக் கிளறியதும், நெகிழ் பதத்துக்கு வந்தவுடன் பச்சைக் கற்பூரம் சிறிது பொடித்துப்போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.////
  சத்தியமா இதைப் படிச்சதும், அடுப்புக்குள் கற்பூரத்தைப் போடச்சொல்கிறார் எனத்தான் நினைச்சேன்.. இது புக்கைக்குள்ளேயா?

  பொங்கலில் அன்று படைச்சு கற்பூரம் கொழுத்தி சுவாமி கும்பிட்டபின் அப்புக்கையைச் சாப்பிடும்போது சிலசமயம், கற்பூர வாசம் அதில் ஒட்டியிருக்கும், ஆனா அவ்வாசத்தோடு சாப்பிடப் பிடிக்காது, ஆனா நீங்க இப்படி சொல்லிட்டீங்க... புதுமுறையாக இருக்கு.. இதனால்தான் கோயில் பொங்கலுக்கு சுவை அதிகமோ?:)..

  பதிலளிநீக்கு
 18. //நான் தலைப்பைப் பார்த்து இங்கு எங்கள் புளொக் ஓனருக்குத்தான் திருமணநாளோ என நினைச்சுட்டேன்ன்:))..//

  ஹா ஆஹா :) நல்லவேளை திருமணம்னு நினைக்கல பூனை :)

  பதிலளிநீக்கு
 19. ///(இனிப்புப் பொங்கலுக்கு காரமாய் கூட்டு தொட்டுக்க கொண்டு காண்ட்றாஸ்ட்டாய் உள்ளே தள்ளுவேனாக்கும்! - ஸ்ரீராம்)///

  அதே..அதே.. எங்கள் வீட்டிலும், சக்கரைப் பொங்கல் எனில்.. நிட்சயம் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், இஞ்சிச் சம்பலும் செய்வோம் நல்ல காரசாரமாக...

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. ///Angelin said...
  //நான் தலைப்பைப் பார்த்து இங்கு எங்கள் புளொக் ஓனருக்குத்தான் திருமணநாளோ என நினைச்சுட்டேன்ன்:))..//

  ஹா ஆஹா :) நல்லவேளை திருமணம்னு நினைக்கல பூனை :)///

  ஹா ஹா ஹா அப்படி நினைப்பேனோ?:) என் கிட்னியைப் பலமா ஊஸ் பண்ணிய இடத்தில... இப்போதானே தேன்மூன்:) க்கு டார்லிங்ஜி போய் வந்தவராம்.. அப்போ திருமணம் முடிஞ்சுதெண்டது கன்போம்ம்:)) எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊஊஊ:))...

  நான் சிவனே என என் வாயை அடக்க நினைக்கிறேன்ன்ன்:)) இந்த பிஸ் க்குப் பொறுக்குதில்லை:)).. இன்னும் ஏதாவது சொல்லிடப்போறேன் வைரவா என்னைக் காப்பாத்த்துங்ங்ஞ்ஞ்க்:)).

  பதிலளிநீக்கு
 22. என்னதான் சர்க்கரைப் பொங்கள் செய்தாலும் என்மனைவி செய்வதுபோல் வருமா

  பதிலளிநீக்கு
 23. ///சர்க்கரைப் பொங்கலை Richஆகப் பண்ணுகிறேன் என்று, பாதாம், குங்குமப்பூ, வெனிலா எசன்ஸ்னு சிலர் சேர்ப்பார்கள். ///

  ஹா ஹா ஹா இதுதான் டாப்பூஊஊஊ:), இது உண்மையேதான்.. என் கையும் சொல்லுக் கேட்காது, கையில் கிடைப்பதெல்லாம் போட்டிடுவேன்:))..

  என் தோசை ரெசிப்பி பற்றி... வாணாம் நான் எதுவும் இங்கின பேசமாட்டேன் சாமீஈஈ.. இண்டைக்கு நல்லநாள் ஆனா எனக்கு நல்லமில்லையாம்:)) வாயை அடக்கு என முச்சந்தி சாத்திரியார் சொல்லிட்டார்ர்:))..

  பதிலளிநீக்கு
 24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 25. To நெல்லைத்தமிழன்

  //100 தடா அக்கார அடிசில்தான். ஒருவேளை திருச்சியில் மூன்று கோவில்களில் இந்தத்தடவை செய்தார்களா? //

  இல்லை. ஒரே கோயிலில் மட்டுமே 300 அண்டாக்கள். சுமார் 3000 பேர்களிடம் தலா ரூ. 300 வசூல் செய்து அமர்க்களமாகச் செய்தனர்.

  எனக்கும் அழைப்பிதழ் வந்தது. என்னால்தான் போய்க் கலந்து கொள்ள முடியவில்லை. :(

  அந்த அழைப்பிதழைத்தேடித் தங்களுக்கும் மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

  நடைபெற்ற இடம்: எங்கள் திருச்சி BHEL Township இல் உள்ள 'C' Sector பெருமாள் கோயிலில்தான்.

  பதிலளிநீக்கு
 26. ///Angelin said...
  @athiraaaaaav
  ஹையோ தெய்வமே !! அதிரா அது வாசனைக்கு போடுற கற்பூரம் கொளுத்தறதில்லை ..
  எதையாச்சும் ஆர்வக்கோளாறில் செஞ்சுறாதிங்க .எனக்கு நீங்க அவசியம் வேற யார்கையும் இவ்ளோ ஈஸியா உருட்டிவியிட முடியாது எனக்கு///

  என்ன இது புயுக்கதையாக்கிடக்கூஊஊ.. சமியல் கற்பூரம் எனவும் விக்குதோ?.. சே..சே.. என்னை விடுங்கோ.. கையை விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்.. முடியல்ல முருகா:))..

  பதிலளிநீக்கு
 27. //அன்புடன்,

  நெல்லைத்தமிழன்.//
  சுவாமிக்குப் படைக்காமல் சாப்பிட மாட்டீங்கபோல, நல்ல பழக்கம். சிம்பிள் பொங்கல் ஆனாலும் நல்ல குட்டிக் குட்டி ரிப்ஸ் தந்தமைக்கு நன்றிகள்..

  ஊசிக்குறிப்பு:
  சூரன்போரின்போது... சூரன் ஒரு பக்கம் தலையை ஆட்டுவார்... முருகன் ஒரு பக்கம் நடப்பார்ர்... இடையே குட்டியா ஒருவர்.. நாரதர்போல ஓடித்திரிவாரே[பெயர் ஏதோ சொல்லுவினம் நினைவு வருகுதில்லை இப்போ]... அதுபோலவே இங்கின நீல எழுத்துக்கள் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்திட்டுது எனக்கு... ஆனாலும் சிரிக்காமல் நல்ல பிள்ளையாக இருக்கிறேன்ன்ன்:)).

  பதிலளிநீக்கு
 28. ////G.M Balasubramaniam said...
  என்னதான் சர்க்கரைப் பொங்கள் செய்தாலும் என்மனைவி செய்வதுபோல் வருமா///

  அச்சச்சோஓ ஹையோ மெதுவாப் பேசுங்கோ கேட்டிடப்போகுது:)) கேட்டால் புளொக் பண்ணிடப்போறாரே:)) ... எங்கட புளொக் ஓனர்:)).. நானே நடுங்கிக்கொண்டிருக்கிறேன்ன்ன் இண்டைக்கோ நாளைக்கோ எப்போ என்னை புளொக் பண்ணப் போறாரோ என:)).. ஏனெண்டால் என் நாக்கு சும்மா இருக்காதாமே:))

  பதிலளிநீக்கு
 29. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 30. சர்க்கரைப் பொங்கல் அருமைதான் !பின்னூட்டத்தில் இருவரின் அறுவைதான் ருசியை மறக்கடித்து விட்டது :)

  பதிலளிநீக்கு
 31. கஷ்டம், இதுக்குப் பேரு சர்க்கரைப் பொங்கலா? வெல்லச் சாதம்னு இதுக்கு எங்க வீட்டிலே பெயர். :))))) சர்க்கரைப் பொங்கல்னா வெண்கலப்பானையில் பாலும் நெய்யும் சேர்த்து விட்டு முதலில் பாசிப்பருப்பை வறுத்துச் சேர்த்துக் கரைய விட்டுட்டுப் பின்னர் அது குழைந்ததும் நல்ல பழைய பச்சரிசியை வறுத்துச் சேர்த்துப் பாலிலேயே கரைய விடணும். ஒரு ஆழாக்கு அரிசின்னா அதிலே பாதி பாசிப்பருப்பு. ஒரு லிட்டர் பால் கணக்குச் சரியா வரும். புதுப் பச்சரிசின்னா ஆரம்பத்திலே குழைந்தாற்போல் காணப்பட்டாலும் ஆறினதும் நெத்து நெத்தாகத் தெரியும். சர்க்கரைப் பொங்கல்னா அது அரிசியோ, பருப்போ தெரியாமல் உருத்தெரியாமல் குழைந்து இருக்கணும். பால் சேர்த்து இப்படிப் பண்ணும் பொங்கல் மூன்று நாட்கள் ஆனாலும் கெடாது! கீழே இறக்கியதும் நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷை சேர்த்துப் பிடித்தால் இளம் தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறிப் போட்டு ஏலக்காய்த் தூள், ஜாதிக்காய், பச்சைக்கற்பூரம் போன்றவற்றைச் சேர்க்கணும். பச்சைக்கற்பூரத்தைப் பரிமாறுகையில் கூடச் சேர்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 32. வெல்லப்பாகு வைத்துச் சமைத்த சாதத்தைச் சேர்ப்பது சர்க்கரைப் பொங்கல் கணக்கிலேயே வராது! :)

  பதிலளிநீக்கு
 33. எனக்கு இங்கயே ஒரு டவுட்டூ.. அ:) அதாவது நீங்க சக்கரை என sugarஐத் தானே சொல்லுவீங்க.. இதனை வெல்லம் எனத்தானே சொல்லுவீங்க? ஆனா இங்கு சக்கரைப் பொங்கல் என்று போட்டிட்டீங்க... ஊருக்கு ஊர் பாஷையும் வேறுபடுதோ?..// டு ஆதிரா!!! தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் குறிப்பாக வட பகுதிகள்கா சர்க்கரை என்று சொல்லுகிறார்கள். எங்கள் ஊர் பக்கம் அதாவது திருநெல்வேலிப்பக்கம் எல்லாம் வெல்லம் அல்லது சர்க்கரை என்றுதான் சொல்லுவது வழக்கம். சுகரை சீனி என்று சொல்லுவது வழக்கம். அல்லது கேரளத்திலும் சர்க்கரை என்றால் வெல்லம். சீனியை பஞ்சசாரை..என்பார்கள். இலங்கைத் தமிழிலும் சீனி சரிதானே அதிரா...உங்கள்ட நாட்டில் சீனிச் சம்பல் செய்வதுண்டே...பாணுக்குத்தொட்டுக் கொண்டு....இல்லையா அதிரா சரிதானே நான் சொல்லுவது?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். சர்க்கரை என்பது வெல்லத்தைத்தான் குறிக்கும். நாங்கள் ஜீனி என்ற பதத்தைத்தான் வெள்ளையாக்கப்பட்ட பொடி கல்கண்டுச் சர்க்கரையைக் குறிக்க உபயோகப்படுத்துவோம். வெல்லப் பொங்கல் என்று சொல்வது எங்கள் வழக்கம் அல்ல. கல்கண்டிலும் பொங்கல் செய்வோம் (அபூர்வமாக). ஆனால் ஜீனி உபயோகப்படுத்துவதில்லை.

  எனக்கு பால் சேர்த்த பாயசமோ, பொங்கலோ பிடிக்காது. இது, எனக்கு உள்ள அதீத இனிப்பு உண்ணும் ஆசையினால் இருக்கலாம். அதனால்தான் எனக்கு மட்டும் என் அம்மா, பால் சேர்க்காமல் பாயசத்தைத் தனியாக எடுத்துவைப்பார்கள் (வெல்லம் போட்ட பாயசத்தை. ஜீனி போட்டுச் செய்யும் சேமியா, ஜவ்வரிசி போன்ற பாயசங்களில் பால் போடலைனா சகிக்காது).

  அரவணைப் பாயசம் என் விருப்பமல்ல. நான் ஐயப்பன் தேவசம்போர்டு தரும் அரவணைப் பாயசத்தைத்தான் சாப்பிட்டுள்ளேன். சாதமாக இல்லாமல் விரை விரையாக அரிசியாக இருக்கும், வெல்லப்பாகில் போட்டமாதிரி இருக்கும். எனக்குப் பிடிப்பதில்லை. அரங்கனின் அரவணைப் பாயசம் பருக, அவன் அருள் எனக்கு இன்னும் கிட்டவில்லை. அங்கேயே இருக்கும் கீதா சாம்பசிவம் போன்றவர்களும் (கோவைடுடெல்லி வீட்டுப் பெரியவர்களும், ஆரண்யனிவாஸ்களும் இன்னும் பலரும்) அரங்கனின் பிரசாதத்தை வாங்கும் வித்தையைச் சொல்லியதில்லை.

  பாசுரங்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி. வெறும்ன, திருமொழி என்று சொல்வதில்லை. நாச்சியார் திருமொழி என்பதுதான் வழக்கம்.

  பாயசங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதணும். ரொம்ப நாள் தள்ளிப்போகிறது. இதுல ஒரே ஒரு பிரச்சனை, ஒரு இடுகையில் இரண்டு பாயசமாவது coverஆகணும். பண்ணினா நான் இரண்டையும் சாப்பிடுமளவு இனிப்புல ஆசை இருக்கணும். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை.

  பதிலளிநீக்கு
 35. நன்றி ஏஞ்சலின். இது நிச்சயம் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள்.

  நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 36. நன்றி அதிரா. 'சக்கரை' என்று பலர் ஜீனியைச் சொல்லுவார்கள். (சக்கரை இனிக்கிற சக்கரை.. அதில் எறும்புக்கு என்ன அக்கறை பாடல் நினைவுக்கு வருகிறதா). நாங்கள் வெல்லப் பொங்கல் என்று சொல்வதில்லை. சக்கரைப் பொங்கல் என்றுதான் சொல்வோம். (ஜீனிப் பொங்கல்னு ஒண்ணு கிடையாதில்லையா)

  'புக்கை' என்பது ஈழத்தமிழர்களிடையே பொங்கலுக்கு ஈடாக வருகின்ற பேச்சுத்தமிழ். எழுத்திலோ அல்லது உரையிலோ 'பொங்கல்' என்றுதான் சொல்லுவார்கள். 'அம்மன் கோவில் புக்கை' என்று பேச்சுத் தமிழிலும், எழுதும்போது 'அம்மன் கோயில் பொங்கல்' என்றும் வரும்.

  பதிலளிநீக்கு
 37. நன்றி ஜி.எம்.பி ஐயா. உங்கள் மனதில், "என் அம்மா செய்வதுபோல் வருமா" என்று தோன்றினாலும், எழுதும்போது, 'என் மனைவி' என்று எழுதியுள்ளதால், பிழைக்கத் தெரிந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.

  பதிலளிநீக்கு
 38. மீள் வருகைக்கு நன்றி கோபு சார்.

  ஒரே கோவிலில் 300 தடா அடிசில் செய்தும் உங்களை அது அடையவில்லையே.

  "அதனால் என் நாக்கு போலவே, என் வலது முழங்கையும், எங்கள் ஊர் காவிரி நதிபோல .... காய்ந்து வறண்டு
  போய் உள்ளது." - அன்றைக்கு நீங்கள் கோவிலுக்குச் சென்றிருந்தால், 'ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கும் அண்ணனுக்குப் பொண் பார்த்த மாதிரியும் இருக்கும்' என்பதுபோல் (பழமொழி தப்போ?), பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு, பொங்கலையும் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தபின் சுகர் டெஸ்டும் செய்திருக்கலாம். தவறவிட்டுவிட்டீர்களே. ஆலையில்லா ஊருக்கு இலுப்பச் சக்கரைபோல, அரங்கனைத் தரிசித்தபின், ரங்கனாதன் கோவிலில் விற்கும், உள்ளதிலேயே மிகவும் சுமாரான சக்கரைப் பொங்கலையாவது சாப்பிட்டுருக்கலாமே..

  பதிலளிநீக்கு
 39. 'நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... கொஞ்சம் பால் விடாததுனால, சக்கரைப் பொங்கலை, 'வெல்ல சாதம்'னு சொல்லிட்டீங்களே.. உங்கள் செய்முறை சரிதான். இருந்தாலும், ஸ்ரீரங்கம் வருவதற்கு முன்னால் உங்கள்கிட்ட சொல்லிட்டுவரேன். சாப்பிட்டுப் பார்த்து அப்புறம் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு அரிசி ரொம்பக் குழைந்து பேஸ்ட் போல் இருந்தால் சக்கரைப் பொங்கல் பிடிக்காது.

  ஒவ்வொருத்தர் ருசியை அறிந்துகொள்வது, அப்புறம் அதற்கேற்றபடி சமையல் செய்யும் முறையை மாற்றிக்கொள்வது என்பது மனைவியின் வழக்கம்தானே... என் வீட்டில் அப்படி நிறைய மாற்றிக்கொண்டுள்ளாள் என் ஹஸ்பண்ட்.

  பதிலளிநீக்கு
 40. ///Thulasidharan V Thillaiakathu said.../// விளக்கத்துக்கு நன்றி கீதா... பாண்:) ஹா ஹா கரீட்டாச் சொன்னீங்க...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!