13.9.11

3 3 3 :: 16 X 3 X 3 = 144.




முன்னுரை மூன்று..!!!

தொடர்பதிவிற்கு அழைத்த தமிழ் உதயம் ரமேஷுக்கு நன்றி.

முதலில் இதைத் தொடங்கியது யாராயிருக்கும்?

மூன்று, மூன்று, மூன்று என்பதால் எங்கள் ஆசிரியர்களில் மூன்று பேரை சீட்டு குலுக்கிப் போட்டு மூன்று பேரும் மூன்று மூன்று பதில்கள் சொல்லியிருக்கோம்!

இனி தொடர் பதிவு...

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
  
அ) மழைச்சாரல், மனதுக்குப் பிடித்த இசை, அமைதி.  
ஆ) சந்தோஷத்தில் தன்னிறைவு, சுற்றியிருக்கும் மக்கள், நாமும் நாம் சார்ந்திருக்கும் ஊர், நாடு உட்பட உலகம் ஒரு உயர் நிலையை அடைய வேண்டும்.
இ) கர்நாடக இசை. நல்ல சிறுகதை, புதுக் கவிதை அல்லாத நல்ல பழைய புரியக் கூடிய செய்யுள்


2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.   
அ) கோபம், மத, ஜாதி அரசியல், போலித்தனம்.
ஆ) மக்களிடையே வேறுபாடு, ஜாதி காரணமாக தகுதி இருந்தும் மறுக்கப்படும் வசதிகள், நம் விருப்பு வெறுப்புகளை அடுத்தவர் மீது திணித்தல்.
இ) அளவுக்கு மீறிய திரைப்பட அல்லது திரை இசை ஈடுபாடு
வாயில் ஈ மொய்க்க தெருவில் கிடக்கும் அழுக்கு நபர்.
மோட்டார் சைக்கிளில் பயங்கர வேகத்தில் தப்பான பக்கத்தில் முந்திச் செல்லும் இளைஞர்.


3) பயப்படும் மூன்று விஷயங்கள்.
  
அ) வளரும் மக்கள் தொகையும் அதனால் விளையும் விபரீதங்களும், போக்குவரத்தில் எங்கு பார்த்தாலும் நெரியும் ஜனக் கூட்டம், உயர்ந்து கொண்டே போகும் விலை வாசி.  
ஆ) அணுகுண்டின் கட்டுப் பாட்டுப் பொத்தான் மத வெறியர்கள் கையிலிருப்பது, விவசாய விளைநிலங்களும் , விவசாய ஆர்வமும் குறைந்துகொண்டே வருவது, எல்லாவற்றிற்கும் விஞ்ஞான வளர்ச்சியால் இயந்திரங்களின் துணையை நம்புவது.  
இ) காவல் துறையில் கட்டுப்பாடற்ற ஊழல், ஆசிரியர்களின் வியத்தகு தரத் தாழ்வு, இளைய தலைமுறையின் வரம்பு மீறிய 'கவர்ச்சி' ஆர்வம். 
                      
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.   
அ) நிலையற்ற உலகில் நிலைக்கும் என்று சேர்க்கும் பொருட்கள், நண்பர்கள் எப்போது, ஏன் எதிரிகளாகிறார்கள், அறிவு சார்ந்த விஷயங்கள்.   
ஆ) ஒரே வகையான மருந்துகளை மருத்துவர்கள் ஏன் குறிப்பிட்ட கம்பெனி வகைதான் வாங்க வேண்டும் என்கிறார்கள், ஜாதி சார்ந்த ஒதுக்கீடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குக் குறையத் தொடங்காமல் வளர்ந்து கொண்டேயிருக்கும், உலகில் ஆயுதங்களின் தேவையே இல்லாவிட்டால் யு.எஸ் எப்படிப் பிழைக்கும்.     
இ) தவறென்ன செய்தாலும் தான் துதிபாடும் நபரை கண்டிக்க முன்வராத மனப்பான்மை. 
எவ்வளவு லட்சக்கணக்கான வாகனங்கள் ஆனாலும் அவற்றுக்கு அளவின்றி கிடைக்கும் பெட்ரோல். 
இலவசங்களை அல்லது ஒதுக்கீடுகளை அறிந்தே எதிர்க்காமல் காலம் கழிக்கும் தலைமைகள். 


5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
  
அ) கம்பியூட்டர் தவிர பாலமுரளியின் பத்ராசலர் கீர்த்தனைகள் சிடியும், கார்ட் ரீடரும், கை பேசியும்.
ஆ) கம்பியூட்டர், பேனா, பேப்பர்.
இ) காலியான தேநீர் கோப்பை.
படிக்க எண்ணி வைத்துள்ள புத்தகம்.
வானொலி பெட்டி.  

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.  
அ) சிரிக்க மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கும் நாகேஷ், காரணமின்றி வரும் மற்றவர்களின் கோபம், அரசியல் வசனங்கள்.   
ஆ) காணாதது எல்லாம் கடவுள், கடவுளுக்கு செய்யும் முகஸ்துதிகள், என் போன்ற மனிதர்கள் தன்னைத் திருத்திக் கொள்ளாமலேயே உலகத்தைத் திருத்த நினைப்பது.  
இ) பெரிய மனிதத் தன்மையில் நடந்து கொள்ளும் மழலைகள்.
ஓசியில் கிடைப்பதில் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டும் பெரிசுகள்.
வரம்பு மீறிய ஜரிகை பட்டு வெள்ளி சிம்மாசனம், தங்க கோப்பை என்று பளபளக்கும் ஆன்மீகத் தலைகள்.


7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:   
அ) காதில் இசை, கையில் கீ போர்ட், கண்ணில் கடிகாரம்.   
ஆ) இந்த ஏழாவது கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே பங்குச் சந்தை மீது ஒரு கண் வைத்து, 'வாசலில் மணி அடிப்பது யார்?'    
இ) ஊக வணிகம்.   
கணினி ஆணைகள் சரிசெய்தல்.  
இசை கேட்டல்.  


8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.   
அ) வைத்திருக்கும் அத்தனை புத்தகங்களையும் இரண்டு அல்லது மூன்று முறை படித்து விட வேண்டும்(!!), விரும்பும் புத்தகங்களையும், விரும்பும் இசையையும் ஒரு இடத்தில் தரம் பிரித்துச் சேர்த்து, நினைத்த நேரத்தில் நினைத்ததை படிக்க, கேட்க வேண்டும், மூன்றாவது காரியமாக என்ன பொய் சொல்லலாம் என்று கண்டு பிடித்து விட வேண்டும்.        
ஆ) எவ்வளவு அதிக நாட்கள் மூச்சு விட முடியுமோ அவ்வளவு அதிக நாட்கள் மூச்சு விட வேண்டும், பாக்கி இரண்டும் அவ்வப்போது அல்ப ஆசைகளாக மாறிக் கொண்டே இருக்கும்..(நம் வாழ்வு முடிவதற்குள் நம் சாலைகள் ஒரு முறையாவது குண்டு குழி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது போல...!)    
இ) நல்ல ஆள் போய் விட்டார் என்று பெயர் எடுப்பது.
வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்வதை வழக்கப் படுத்திக் கொள்தல்.
எடை குறைப்பது.


9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.   
அ) இந்த தொடர் பதிவை இன்னும் ஏழு கேள்விகளில் முடித்து விட முடியும், அடுத்தவர் மனம் புண்படாமல் பேச, பழக முடியும், முன் கேள்விக்கு சொன்ன பதிலில் முப்பத்தைந்து சதவிகிதமாவது முடிக்க முடியும்.   
ஆ) இந்தக் கேள்விக்கு மற்றவர்கள் சொல்லும் பதிலை வைத்து அதை டெவெலப் செய்ய முடியும்!    
இ) கடன் வாங்குவது.
நம்பும் வகையில் பொய் சொல்வது.
வேண்டாத இடத்தில் ஜோக் அடிப்பது.


10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:   
அ) அலைபேசியில் அறுவை விளம்பரங்கள், 'இந்த மாசமும் கரண்ட் பில் எகிறிடிச்சு..' அனாவசியப் பொய்கள்.     
ஆ) நான் சொன்ன ஏதாவது கெட்ட விஷயம் 'சார் நீங்க சொன்ன மாதிரியே நடந்து விட்டது..'. இந்தியா மண்ணைக் கவ்வியது, உங்கள் கம்பியூட்டர் பூட் ஆகாததற்குக் காரணம், உங்கள் பைல் எதையும் ரெகவர் செய்ய முடியாது.     
இ) மனைவி அல்லது கணவர் பற்றிய புகார்கள்.
அரசியல் தலைவர்களை நியாயப் படுத்தும் முயற்சிகள்.
தனது நோய் பற்றிய மிக்க விவரமான தகவல்கள்.


11. பிடிச்ச மூன்று உணவு வகை? 

அ) மாகாளிக் கிழங்கு, மோர் மிளகாய், மாவடு, வத்தக் குழம்புடன் தயிர் சாதம், பரோட்டா, ரவா தோசை.   
ஆ) தோசை, வெஜிடேபிள் சாலட், மோர் உப்பு சேர்த்து அரிசி, ரவைக் கஞ்சி.   
இ) பஜ்ஜி, மைதா தோசை, அவல் உப்புமா.


12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?    
அ) அன்று காலை கேட்கும் பாடல்களில் பிடித்தது, அவப்போது காதில் விழும் வார்த்தைகளிலிருந்து மனதில் உதிக்கும் பாடல்கள், பழைய பாடல்கள்.     
ஆ) மோகனம், மோகன கல்யாணி, ஹிந்தோளத்தில் ஏதாவது ஒரு பாடல்.   
இ) நாராயணன் திவ்ய நாமம் எனும் கர்நாடக பாடல்.
சிற்றஞ்சிறு காலே எனும் திருப்பாவை.
எம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் திருப்புகழ். 


13) பிடித்த மூன்று படங்கள்?    
அ) முதலில் பார்த்த படம், சில நேரங்களில் சில மனிதர்கள், நடுநடுவே ரசிக்கும் அவ்வப்போதைய ரசனைக்குத் தக்க படி ரசிக்கும் படங்கள்.    
ஆ) Sound of Music, அந்த நாள், மூன்றாவது வரக் காத்திருக்கிறேன்.   
இ) இரும்புத் திரை. மைக்கேல் மதன காம ராஜன், மலைக்கள்ளன்.

14. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?    
அ) மூச்சு, பேச்சு, உணவு.  
ஆ) மற்றவர்களுடன் எப்போதும் தொடர்பு, புத்தகங்கள், பிரச்னைகள்.   
இ) கம்ப்யூட்டர், மொபைல், மின் விசிறி. 



15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?   
அ) தயக்கமின்றி பேச, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள, ஒழுங்காக வேலை செய்ய.
ஆ) இசை, இயற்பியல், தலைமைப் பண்பு.
இ) சமஸ்க்ரிதம், சிக்கனம், வேதாந்த அறிவு.


16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?   
அ) மாதவன், சாய்ராம் கோபாலன், வல்லிசிம்ஹன்.
ஆ) எழுத விரும்புபவர்கள், இது வரை எழுதாதவர்கள் யார் வேண்டுமானாலும். 
இ) மீதியுள்ள இரண்டு ஆசிரியர்கள், தினமும் எங்கள் ப்ளாக் விரும்பிப் படிக்கும் எந்த வாசகராக இருந்தாலும் - வலைப் பதிவு அவருக்கு இல்லை என்றால், பதினாறு கேள்விகளுக்கும் பதில்கள் எழுதி, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்!
                              

10.9.11

பாரதினம்

செப்டம்பர் பதினொன்று. பாரதி நினைவு நாள்.

பாரதியை நினைவு கூரும் சில பாடல்கள். ஒரு அவசரப் பதிவு!

டி கே பட்டம்மாள் குரலில் ஒரு இனிய பாரதி பாடல்.





கே ஜே யேசுதாஸ் ஏழாவது மனிதன் படத்தில் பாடும் ஒரு இனிய பாரதி பாடல்.




சின்னஞ்சிறு கிளியே ...பரவசப் படுத்தும் பாடல். பெரும்பாலும் எம் எல் வி குரலில் கேட்டிருக்கும் இந்தப் பாடலை மகாராஜபுரம் குரலிலும் பெண் குரல் ஒன்றிலும், அடுத்தடுத்து....



கப்பலோட்டிய தமிழன்.கப்பலோட்டிய தமிழன் படத்தில் ப்.பி. ஸ்ரீநிவாஸ் சுசீலா குரலில் இன்னுமொரு இனிய பாரதி பாடல்.


இன்னும் இணைக்க விருப்பம்...


8.9.11

ஜே கே -19 உணர்வுகள்.

                              
"....ஒரு சிறு அவமதிப்பும் நம்மை சினம் கொள்ளச் செய்து விடுகிறது. யாராவது நம்மைப் புகழ்ந்தால் கர்வம் தலைக்கேறி விடுகிறது. எதிராளி பாராட்டப்படும்போது இனம் தெரியாத பொறாமை கொண்டு விடுகிறோம்.
      
சில உணர்வுகள் இனிமையானவை. அவற்றை விரும்புகிறோம். 

சில உணர்வுகள் விரும்பத் தகாதவை. அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்கிறோம். எனினும் எது எளிதானது எது கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படியே தெரிந்து கொண்டாலும் அவற்றின் தாக்கத்தை எளிதில் உதற முடிவதில்லை.

காரணம் பழக்கம்தான். அது எல்லாவற்றிலும் ஒரு கிரமத்தை உண்டு பண்ணி விடுகிறது. நேற்று மாதிரி இன்றும், இன்று மாதிரி நாளையும் என்று ஒரே மாதிரி பார்வையை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது.

நீங்கள் உண்மையில் எப்படி இருப்பீர்களோ அபபடி இருங்கள்.

எதையும் உள்ளபடிப் பாருங்கள்.
      
ஒரு குறிப்பிட்ட கணத்தில் அலுத்துப் போனதாகவோ, பொறாமை வசப்பட்டதாகவோ, கற்பனை செய்து கொள்ளுங்கள். வலி தரக்கூடிய உணர்வுகள் இவை. நீங்கள் இவற்றை விரும்ப மாட்டீர்கள். எனவே, தவிர்க்க முயல்வீர்கள். இது, நாம் எப்படி இருக்கிறோம் என்பதற்கும், எப்படி இருக்க விரும்புகிறோம் என்பதற்கும் இடையில் ஒரு பேதத்தை, சச்சரவை ஏற்படுத்துகிறது. பொறாமைக்கும், பொறாமை அற்ற நிலைக்கும், சலிப்பிற்கும் உத்வேகத்துக்கும் இடையிலான பேதம்!
      
இதன் விளைவாக நாம் பொறாமையிலே உழல்வதால் நம் மீதே நமக்கு வெறுப்பு வந்து விடுகிறது. இதே பொறாமையை ஒரு சாத்வீகத்துடனும், சம புத்தியோடும் கவனித்தால் காரணங்கள் புலப்படும். பிறகு அபிப்ராய பேதம் இருக்காது.

பொறாமை என்றில்லை. கோபம், வெறுப்பு, சலிப்பு, பயன் போன்ற எல்லாவற்றிற்கும் வேறு வடிவம் கொடுத்துப் பாருங்கள். அது ஆக்கத் திறன் கொண்டதாகி விடும்.
     
முழுமையான உணர்நிலை மட்டுமே எப்போதும் பயனளிக்கக் கூடியது.
                

6.9.11

மீண்டும் வாழ்வேன்.


"இதென்ன இங்கே படுத்திருக்கிறான் இவன்..."

வழியில் படுத்திருந்த அண்ணனைக் கண்டதும் மனம் பதறியது.

எதிரிகள் பார்த்து விட்டால்... இவ்வளவு அஜாக்கிரதை நமக்கு உதவாதே...

அருகில் சென்று எழுப்பினேன். உயிரில்லாததை உடனே உணர்ந்தேன், இதயம் நின்று துடித்தது. அப்போதுதான் சாப்பிட்டிருந்த கேக் கசந்தது. "ஐயோ...என்ன இது...யார் வேலை இது..அருகில் யாரோ இருக்கிறார்களோ.." உரக்க எழுந்த குரலை மனதிற்குள்ளேயே அடக்கினேன். ஆபத்து!

'சட்'டென ஓரமாகப் பதுங்கினேன்.

கொஞ்ச தூரத்தில் ஒருக்களித்துப் படுத்திருப்பது போலக் கண்ணில் பட்ட உருவங்கள் இதயத் துடிப்பை அதிகப் படுத்தின. பார்க்கப் போகும் காட்சி என்னவென்று அறிவுக்குத் தெரிந்து விட்ட நிலையில் மனம் 'இருக்கக் கூடாது' என்று விநாயகரை வேண்டிக் கொண்டது.

சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே நெருங்கினேன். கண்ணில் நீர் முட்டியது. 'கை விட்டு விட்டாயே விநாயகா'

சத்தப்படுத்தக் கூடாது என்று அடக்கினாலும் குரல் கீச்சிட்டது.

அருகருகே ஒருக்களித்துப் படுத்தபடி உயிர் துறந்திருந்த சகோதரர்களைக் கண்டதும் ஒரு நொடி உலகே வெறுத்துப் போனது.

கொஞ்ச தூரத்தில் அடுத்த சகோதரன், கொஞ்சம் தளளி சகோதரி...

'என்ன நடந்தது...என்ன நடக்கிறது இங்கே...' நெஞ்சில் எழுந்த கேவல் அடுத்த சில நிமிடங்களிலேயே வெஞ்சினமானது.

என் மூத்த சகோதரனும் கால்களை நீட்டியிருந்தான். கால்கள் துவண்டன. குடும்பத்தில் இன்னும் யார்தான் பாக்கி...நா வரண்டதற்குக் காரணம் துக்கம் மட்டும் காரணமில்லை என்று அடுத்த சில நொடிகளில் தெரிந்தது.

'மயக்கம்... நா வறட்சி...காற்று... நல்ல காற்று வேண்டும்... என்ன செய்கிறது எனக்கு...ஐயோ...என் சகோதரர்களுக்கு நேர்ந்த கதி எனக்குமா...என்ன காரணம்...என்ன சாப்பிட்டேன் கடைசியில்....கேக்...ஆ...அந்த கேக்கில் என்னமோ...'

இப்போது அடுத்த பயம் வந்தது. என் அம்மா எது கிடைத்தாலும் என் கடைசிச் சகோதரனுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய்த் தரும் பழக்கம்...ஐயோ...அந்தக் குழந்தை...அதற்கு நல்லது கெட்டது எதுவுமே தெரியாதே...எனக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்ததா என்ன...எங்கள் விதி...ஐயோ..அம்மா....குழந்தைக்கு எதையும் தருமுன் அவர்களை ஜாக்கிரதைச் செய்து காப்பாற்ற வேண்டும்..

துவண்ட கால்களை நேராக்கி ஓட வீடு நோக்கி ஓட முற்பட்டேன். தண்ணீர் தேடும் ஆசையைத் துறந்து ஓடினேன். காற்றைத் தேடும் உயிர் இச்சையை மதிக்காமல் ஓடினேன்.

ஓடினேன் என்று நினைத்தேன். ஊர்ந்தேன். ஆனால்...

காலம் கடந்திருந்தது. அந்தக் குழந்தை...இளஞ்சிவப்பு கால்களுடன் அந்தக் குழந்தை...ஐயோ...நீயுமா....அருகிலேயே அம்மா...கடவுளே...அம்மா...நீ கூட ஏமாந்து போனாயா....

எத்தனையோ பொறிகளில் மாட்டாமல் இருக்கச் சொல்லிக் கொடுத்தாயே...

என் முடிவும் அருகில் வந்து விட்டதை உணர்ந்தேன்.

விடக் கூடாது. இவர்களை விடக் கூடாது. வருவேன். மீண்டும் வருவேன். இவர்களைப் பழி வாங்க மீண்டும் வாழ்வேன். என் கண் நிரந்தரமாக மூடு முன் எங்கள் குடும்பத்தையே காலி செய்த அந்த கேக் கண்ணில் பட்டது.


மீண்டும் வாழ்வேன்.....மீ...ண்....டும்.....வா.......ழ்.....
                   

1.9.11

நினைக்கத் தெரிந்த மனமே ....

                                                         
பேங்கில் நின்று கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த ஒருவர் தன் கைப்பை ஜிப்பை 'சர்ர்' எனத் திறந்தார். அடுத்த நொடி என் நாசியில் போண்டா, வடை மணம், சட்னி மணம் என்று கலவையாய் உணர்ந்தது. அது அவர் பையிலிருந்து அல்ல, என் நினைவடுக்குகளிலிருந்து பற்பல வருடங்களுக்கு முன்னால் நுகர்ந்த வாசனையை இப்போதும் மனம் உணர்ந்த உணர்வு அது. 
 

என் சிறு வயதில் அப்பா ஆபீசிலிருந்து வரும் போது பஜ்ஜி போண்டா சட்னியுடன் வாங்கி வருவார். பை திறந்தவுடனேயே வாசம் வந்து விடும். பிறகு தட்டில் வைத்து அம்மாவால் பரிமாறப் படும் அந்த போண்டாவின் சுவை கூட நாக்கில் ஒரு கணம் வந்து போகும்.   
               
எப்படி?

எங்கே, எப்போது பேக் ஜிப் திறக்கும் ஓசை கேட்டாலும் இந்த நிகழ்வு சகஜம். அதுவரை நினைவிலேயே இல்லாத அந்த சமாச்சாரம் எப்படி இந்த ஓசைக்கு நினைவுக்கு வருகிறது என்பது குறையாத ஆச்சர்யம்.                     

கடைகளில் விற்கும் தாமரை இலைகளைப் பார்த்தாலும் சரி, இல்லை அதை நினைத்துக் கொண்டாலும் நாக்கில் உருளை மசாலாவின் ருசி நினைவில் இனிக்கிறது. மூலையில் எங்கோ அடியின் ஆழத்தில் புதைந்திருக்கும் நினைவு நரம்பை மீட்டி ருசியை இப்போதும் நாக்கில் உணர வைப்பது எது? மசாலா, 'புஸ்' பூரியில் பொதிந்து மொடமொடப்பும், நனைந்த பூரியுமாக அகக் கண்ணில் தெரிவது பத்து வயதுக்குட் பட்ட ஞாபகம். அப்போதெல்லாம் ஹோட்டல்களில் பூரி மசால் காய்ந்த மந்தாரை இலையில்தான் கட்டி தருவார்கள். அந்த இலை வாசனையோடு இணைந்த பூரி மசால் வாசனையும் ருசியும் இப்போதும் உணர முடிகிறது!    

அதே போல இன்னொரு விஷயமும் ஆச்சர்யம். பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போது எதிர் வரிசையில் அல்லது தாண்டிப் போகும் பஸ்ஸை கண்கள் பார்த்திருக்கும். மனதில் பதியவில்லை என்று தோன்றும். ஆனால் மனதில் திடீரென 'ஒரு காதல் தேவதை' என்று பாடல் வரிகள் ஓடும். கொஞ்ச நேரம் கழித்துதான் இது மனதில் உறைக்கும். ஏன் என்று யோசித்துப் பார்த்தால் எதிரில் மாமல்லபுரம் பஸ் சென்றது நினைவுக்கு வரும்.

என்ன தொடர்பு?

                 
'ஒரு காதல் தேவதை' பாடலில் இரண்டாவது சரணத்தில் 'மாமல்லன் தன்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக...காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக...' என்று வரிகள் வரும். அந்த வரிகள் நினைவுக்கு வந்தாலும் பரவாயில்லை. ஏன் பாடலின் ஆரம்ப வரிகள் சட்டென மனதில் ஓடுகிறது என்பதும் புரியாத புதிர்.
         
உடல்நிலை சரியில்லாது வாந்தி எடுத்துக் கொண்டிருந்த ஓர் நாளில், திரும்பத் திரும்ப, பள்ளிப் பருவத்தில் பள்ளி லீவ் விட்டு, திறந்து சாப்பிடாமல் விட்டுப் போய், கெட்டுப் போன சாப்பாட்டை, ரெண்டு நாள் கழித்துத் திறந்து 'உவ்வே'வியது நினைவுக்கு வந்து கொண்டேயிருந்து, படுத்தியது. அந்த நினைவு எங்கிருந்து, எப்படி, ஏன் வெளியில் வந்தது?

ரோடில் போகும்போது யாரோ பேசிக் கொண்டு போகும் ஏதோ ஒரு வார்த்தை திடீரென ஏதோ பழைய நினைவை, அனுபவத்தை நினைவு 'படுத்தி' விடும்! சில சமயம் அது சரியாக நினைவுக்கு வராமல் பல்லிடுக்கில் மாட்டிய உணவுத் துகளாய் உறுத்தி, நினைவுக்கு சம்பந்தப் பட்ட விஷயம் வரும் வரை ஏதோ செய்து விடும். அதுபோல சில முகங்கள், சில கண்கள், சில குரல்கள் மனதில் மோதி எதையோ எங்கோ தேடுவதை உணர்ந்திருக்கிறீர்களா...
         
மறதி வரமா சாபமா?

மறதி என்பது சவுகர்யம்தான். ஆனால் மறக்க விரும்புவதை மறக்க முடிவதில்லை. மறந்து விட்டதாய் நினைக்கும் சில விஷயங்கள் ஆழ்மனக் கடலிலிருந்து மிதந்து மேலே மேலே ஏதோ ஒரு சுண்டுதலில் வரும் அற்புதம் பல சமயம் ஆச்சர்யத்தைத் தரும்.

சில இனிமையான கணங்களை மறுபடி வாழ்ந்து பார்க்க முடிந்தால்...

அல்லது அந்த அனுபவத்தை மூன்றாவது மனிதன் போல மறுபடி காட்சியாகப் பார்த்தால்...

இப்போதைய சோகங்கள் கூடலாம்...

சில கணங்களாவது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

அபபடி ஒரு காட்சி வரும் பாடல் ஒன்று கீழே....மனைவி ஷர்மிளா தாகூரை இழந்த வயதான சஞ்சீவ் குமார் தன் இளவயது அனுபவங்கள் உள்ள இடத்துக்கு வரும்போது அங்கு தானும் தன் மனைவியும் இளமையில் சந்தோஷமாக ஆடிப் பாடியதை நினைப்பது,

இளவயது சஞ்சீவும், ஷர்மிளாவும் இவர் கண்ணெதிரேயே ஆடிப் பாடி இவரைத் தாண்டிக் கொண்டு செல்வது போல காட்சி அமைப்பு... தற்கால சஞ்சீவின் முகத்தில் இருக்கும் சோகம்...இழந்ததைப் பார்க்கும் பரவச அனுபவம்... இந்தப் பாடலும் காட்சியும் எனக்குப் பிடிக்கும்.

(இதைத் தமிழில், 'வசந்தத்தில் ஓர் நாள்' என்று கெடுத்திருந்தார்கள்....ஸாரி, எடுத்திருந்தார்கள்.)