காலையில் பால் வாங்கிக் கொண்டு வரும் போது வீட்டுக்கு
சற்று தூரத்திலிருக்கும் கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை
இருக்கிறதா என்று பார்க்கும் போதே எங்கள் வீட்டு வாசலில் ஏதோ கூட்டம்
இருப்பதைப் பார்த்து வியந்தேன்.
மார்கழி மாத பஜனைக்குக்கூப்பிட வந்தவர்கள் போல!

'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.
'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.
ஆணும்
பெண்ணுமாக விதவிதமான உடைகளைப் பார்த்ததும் 'வாலண்டின் டே' போல நம்
நாட்டுக்கு 'ஹாலோவீனு'ம் வந்து விட்டதோ என்றால் அதற்கும் நாட்கள் போக
வேண்டும்.
'அட, சனிக்கிழமை புரட்டாசி மாதத்துக்குக் கூட இன்னும் இரண்டு மாதம் போகணுமே'
என்றெல்லாம் எண்ணிக்கொண்டே வீடுவரை வந்து விட்ட பின்தான் கவனித்தேன்...
எல்லோர் கையிலும் ஒரு செல் ஃபோன்.
செல்ஃபோன் என்று சாதாரணமாகச் சொல்லக்கூடாது. எல்லாமே விதவிதமான ஸ்மார்ட்
ஃபோன். பல வண்ணஙகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சில வண்ணமயமான சட்டைகளிலும்
ஒளிந்திருந்தன.
உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
போகிமான் வேட்டைக்குக் கிளம்பிய கும்பல் நம் வீட்டுப் பிள்ளைகளையும்
கோபிமார் தம் சிநேகிதிகளை அழைக்க வந்த மாதிரி வந்திருந்ததுடன் ஒவ்வொருவரும்
போகிமானின் பாரம்பரியம் பற்றி வேறு விவாதம் செய்யும் அளவிற்குத் தெரிந்து
வைத்திருந்தனர். சுமார் 700 பேர்களாம்.
பாண்டவர்கள் ஐந்து பெயர்கள், நவக்கிரகஙகளின் 9 பெயர் எல்லாம் தெரியாத எங்கள்
வீட்டுப் பசங்கள் சுமார் 500/600 பெயர்களைக் கவனம் சிதறாமல் சொல்லிய
அழகைப் பார்க்கும் போது குறள்மான், நாலடிமான் இப்படியெல்லாம் ஸ்மார்ட்
விளையாட்டுப் புரோக்ராம்கள் எழுதுவதை விட்டு நம் கல்வியாளர்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று ஜவடேகரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க
வேண்டும்.