நாகை திரை அரங்குகள்
சென்னையில் தற்பொழுது நூற்றுக்கணக்கான திரை அரங்குகள் இருக்கின்றன. பெயர் போன 10 அல்லது 15 அரங்குகளைத் தவிர பெரும்பாலான அரங்குகளுக்கு நான் போனதில்லை. ஆனால் நாகப்பட்டினத்தில் சிறு வயதில் சினிமா பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகம். நாகையில் மூன்றே அரங்குகள்தான் இருந்தன. அதில் ஒரு அரங்கில் அதிக பட்சமாக 10 அல்லது 12 படங்கள்தான் ஒரு வருடத்தில் திரையேறும். பெரும்பாலான படங்கள் மிகப் பழையவை. புதுப் படம் என்பது பெரிய ஊர்களில் 100,150 நட்கள் ஓடிய பின்பு எங்கள் ஊருக்கு மெதுவாக வரும். புது(!) படங்கள் பெருவாரியாக தீபாவளிஅல்லது பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆகும். மூன்று தியேட்டர்களிலும் மாற்றி மாற்றி படம் பார்ப்போம்
நாகையில் 1962 வரை இரண்டு தியேடர்தான் இருந்தது. ஸ்டார் டாக்கீஸ் மற்றும் ,பேபி டாக்கீஸ். பின் சிவகவி சுப்ரமணிய அய்யர் கட்டிய ஜயலக்ஷ்மி தியேட்டர் வந்தது. பேபி டாக்கீஸ் 1962 வாக்கில் திரு ADJ அவர்களால் வாங்கப்பட்டு, பாண்டியன் தியேட்டர் என்று நாமகரணம் செய்யப்பட்டது. இதைத் தவிர நாகூர் ராஜா, கீழ்வேளுர் டூரிங்க் டாக்கீஸ் போன்றவைகளும் எங்களூர் கணக்கில் சேர்த்துக் கொள்வோம்!
புதுப் படம் வருவதை மாட்டு வண்டியில் பேண்டு சகிதம் வீதி வீதியாக வந்து பிட் நோட்டிஸ்களை தருவதன் மூலம் அறிவிப்பார்கள். வண்டியின் பின் பக்கம் அமர்ந்து கொண்டு டகர டகர என்று ஒலி எழுப்பும் முகம் நன்றாக ஞாபகம் இருக்கிறது கதை சுருக்கம் சிறு புத்தகமாக கிடைக்கும். பெரிய சைஸ் கலர் பேப்பரில் கவர்ச்சியாக அச்சிட்டும் பறக்க விடுவார்கள். பெரிய பெரிய் போஸ்டர்களை தட்டியிலும் சுவர்களிலும் ஒட்டுவார்கள். படம் ஆரம்பிக்க சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாக பக்தி பாடல் ஒலி பரப்புடன் ஆரம்பித்து புதிய சினிமா பாட்டுடன் முடிப்பார்கள்.
ரயில் எஞ்சின் டிரைவர் வேலைக்கு சற்று மதிப்பு குறைந்த, ஆனால் எங்களைக் கவர்ந்த வேலை தியேட்டர் மேனேஜர் வேலைதான்! ஸ்டார் தியேட்டர் மேனேஜர் ராஜகோபாலைக் கண்டால் கொஞ்சம் பயம்தான். டிக்கட் வாங்க க்யூவில் நிற்பவர்களை மிரட்டியும், சமயத்தில் அடிக்கவும் செய்வார். அதைப்பார்த்து போலிஸ் ரேஞ்சுக்கு அவர்மேல் மரியாதை கலந்த பயம்.
ஸ்டார் தியேட்டர் மிகப் பழையது. ஒரே ப்ரொஜெக்டர்தான். அதனால் 6 இடைவேளை உண்டு. சிறு வயதில் தரை டிக்கட்தான். ஒரே பீடி நாற்றத்துடன் படம் பார்க்கவேண்டும். குறுக்கும் நெடுக்குமாக் இஷ்டப்படி உட்காரலாம். முன்னால் இருப்பவர் மறைத்தால் கேட்க பயம். அதனால் இங்கும் அங்குமாக நகர்ந்து பார்க்க வேண்டும்! படம் ஆரம்பிக்குமுன் வார்-ரீல் எனப்படும் நியூஸ் கட்டாயம். அந்தக் குரலும் ம்யூஸிக்கும் நினைத்தாலே மனதில் கரகரவென்று பிராண்டும். இன்டெர்வெல் விடும் போதெல்லாம் வெளியில் செல்வோம். திறந்தவெளி கக்கூஸ்தான். ஆனால் அப்போது இந்த அளவுக்கு வியாதிகள் பெருகவில்லை
பாண்டியன் தியேட்டர் இரண்டு ப்ரொஜெக்டருடன் சற்றே நவீனமாக இருந்தது. 3 இடைவேளைகள். அந்த தியேட்டர் முட்டை வடிவ போண்டா நண்பர்கள் மத்தியில் ப்ராபல்யம். வீட்டினருடன் பாண்டியன் தியேட்டர் போவதென்றால், குதிரை வண்டியில் செல்வோம். குறுக்கே ஒரு ரயில்வே கேட்டும் வரும். எபபவோ க்ராஸ் செய்யும் ட்ரயின் அல்லது கூட்ஸ் ஷண்டிங், காக்க வைத்து சினிமா பர்ர்க்கும் டென்ஷனை உயர்த்தும் .ஸ்கூலில் இருந்து கட் அடித்து செல்லும் போது CSI ஸ்கூல் குறுக்கு வழியில், ரயில் ட்ராக்குகளை தாண்டி, ரோலிங்க் மில் ஓரமாக ஓடி தாண்டி குதித்து செல்வோம். படத்தை மிஸ் பண்ணலாமா?
பள்ளியில் வெள்ளிக்கிழமை மேட்னி ஷோவில் ஹிந்தி அல்லது ஆங்கில படம் மாடினீ ஷோவாக வரும். 10வது படிக்கும்போது மஹாலிங்கம் சார் க்ளாஸை கட்டடித்து விட்டுப் போவதில் மிகுந்த த்ரில். படம் அவ்வளவாக புரியாது. ஆனாலும் பாட்டு நன்றாக இருந்தது/இல்லை/.ஃபைட்டிங் சுமார் என்ற ரீதியில் பொதுவாக கமண்ட் அடித்து வைப்போம். சோமு ஒரே ஒரு படத்தை பார்த்துவிட்டு 4 விதமான கதைகள் தயார் பண்ணிவிடுவான். அந்த கால கட்டத்தில் சினிமாவும் தியேட்டர்களும் மிக முக்கியமான விஷயங்கள்.அதனுடன் ச்ம்பந்தப்பட்ட்டவர்களும் முக்கியஸ்தர்களாகக் கருதப்பட்டனர். .
with love and affection,
rangan
ரங்கன்ஜி, அப்பாடா பாண்டியன் டாக்கீஸ் போண்டா சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது. இப்போதான் திருப்தியா இருக்கு!
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
பாண்டியன் டாக்கீஸ் போண்டா தரிசனத்துக்காக மட்டுமே ஒரு முறை படம் பார்க்கச் சென்றேன். காவல்காரன் படம் என்று நினைவு. போண்டாவும், படமும் நன்றாக இருந்தன. நாகை லெவல் க்ராஸ்ஸிங்கில் மணி அடித்துக் கொண்டே என்ஜின் முன் மெதுவாக சென்ற சிப்பந்தியை பார்த்ததும் ஒரு தனி அனுபவம்.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் காலத்தில் மதுரை தங்கம் தியேட்டருக்கு அடுத்து தமிழ் நாட்டிலேயே இரண்டாவது பெரிய தியேட்டர் பாண்டியன் தான்!
பதிலளிநீக்குநான் இருந்த போது பாண்டியன் டாக்கீஸில் கடைசியாக “தெய்வமகன்”,ஸ்டாரில் “சூரக்கோட்டை சிங்கக்குட்டி” மற்றும் விஜயலக்ஷ்மியில் “மூன்று முடிச்சு” பார்த்த ஞாபகம்.
பதிலளிநீக்குஅப்பா ரயில்வேயில் வேலை என்பதால் அந்த சுவர் வழியாக தாண்டி பாண்டியன் போவது கஷ்டம்.
ADJ வின் மகள் என்னுடன் படித்தவர் CSI தொடக்கநிலையில் பள்ளியில்.
பதிலளிநீக்கு// வடுவூர் குமார் said...
பதிலளிநீக்குநான் இருந்த போது பாண்டியன் டாக்கீஸில் கடைசியாக “தெய்வமகன்”,ஸ்டாரில் “சூரக்கோட்டை சிங்கக்குட்டி” மற்றும் விஜயலக்ஷ்மியில் “மூன்று முடிச்சு” பார்த்த ஞாபகம்.//
குமார், - நீங்க பார்த்தது தெய்வமகன் - இரண்டாம் ரிலீசா?
முதல் ரிலீஸ் நான் நாகை ஸ்டாரில் பார்த்தேன்.