சனி, 5 செப்டம்பர், 2009

மணப் பொருத்தம் - மன வருத்தம்

குடும்ப நலக் கோர்ட்டுகள் நிறைய ஏற்படுத்தப் படப் போகின்றனவாம். ஏன்? குடும்ப நல வழக்குகள் பெருகி விட்டதால்..ஏகப் பட்ட மண முறிவு வழக்குகள் வந்த வண்ணம்,உள்ளனவாம்.
பெற்றோர் ஏற்பாடு செய்யும் என்று இல்லை...காதல் திருமணங்களும் கூட தோல்வியில் முடியக் காரணம் என்ன? பிரபலமான (காதல்) திருமணங்கள் விரைவில் முறிந்து விடுவதைப் பார்க்கிறோம்.பிரபலமானவர்கள் என்பதால் அது உடனே தெரிந்து விடுகின்றது.பொதுமக்களில் எவ்வளவு தோல்விகள்? ஏன் இந்த நிலை?
பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் மனப் பொருத்தம் பார்க்காமல் பணப் பொருத்தம் அதிகமாகப் பார்க்கிறார்களா? அப்படி என்றால் மனதால் இணையும் காதல் திருமணங்கள் தோற்பதேன்? எதைப் பார்த்து இணைய முடிவெடுக்கிறார்கள், பிறகு எதைக் கண்டு சீக்கிரமே பிரிய முடிவெடுக்கிறார்கள்?
சொந்த பலவீனங்களை மறைத்து விட்டு பொழுது போக்காக காதலிக்கிறார்களா? திருமணத்துக்குப் பின் அந்த பலவீனங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றதா? ஏன் இவர்களால் விட்டுக் கொடுத்துப் போக முடிவதில்லை? இது சம்பந்தப் பட்ட இருவர் பிரச்னை என்பதைத் தவிர சமயங்களில் மாமியார், நாத்தனார் கூடப் பிரச்னை ஆவது உண்டு.
ஆனால் கூட்டுக் குடும்பம் என்பது இந்தக் காலத்தில் மறைந்து வருகிற கலாச்சாரமாகி வருகிறது.இந்த மாதிரி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால் தோல்விகள் பெருமளவு குறையலாம்.
இருவரும் வேலை பார்க்கும் இடங்களில் ஆதிக்க உணர்வும், உன் சம்பளம், என் சம்பளம் comparison பிரச்னையும், வீட்டுல நான் மட்டும் வேலை செய்யணுமா போன்ற பிரச்னைகள் புகைச்சலைக் கிளப்புகின்றன.
மற்றவரது பெற்றோரை தன் சொந்தக் கோபங்களுக்கு அவமதித்து துணையை சீண்டிப் பார்ப்பது,
கணவன் மேல் மனைவி, மனைவி மேல் கணவன் என்று எழும் அனாவசிய சந்தேகங்கள் போன்றவை பிரச்னை ஆகலாம்.
மேல் நாடுகளில் குறட்டை விடுவதால் கூட மண முறிவு ஏற்பட்டிருக்கிறது!
அலுவலகங்களில் எத்தனையோ சிக்கலான பிரச்னைகளை அலசி விடை காணும் மக்களால் வீட்டில் சொந்தங்களுடன் ஏற்படும் பிரச்னைகளை சமன் செய்து ஒற்றுமையாக வாழ முடியாமல் போவதேன்?
சகித்துக் கொண்டு வாழ்வதை விட தனியாகப் போவதே மேல் (Female லும்தான்!) என்று பொறுமை இன்றி ஓட வைப்பது நாகரீக வாழ்வு தந்த பொருளாதார பலமா?
குழந்தைகள் வந்த பிறகு பிரிய நேர்ந்தால் குழந்தைகளுக்கு வரும் பாதிப்பு தனிக் கதை.
பரஸ்பரப் புரிதல் இல்லாமல் போவதற்கு அவசர யுகத்தின் பரபரப்பு காரணமா? எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவு எடுக்க வைக்கும் Fast food கலாசாரம் காரணமா?
வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்துக்கு என்று தினமும் சற்று நேரம் ஒதுக்குவது, TV Serial களை மறந்து தினமும் சற்று நேரமாவது மனம் விட்டுப் பேசுவது சேர்ந்து சாப்பிடுவது என்றெல்லாம் இருந்தால் இந்தப் பிரச்னை கொஞ்சமாவது குறையுமோ?

3 கருத்துகள்:

 1. எங்களுக்கு மணமாகி, முப்பத்திரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மணமுறிவு வரை எந்தப் பிரச்னையும் போகாமல் இருப்பதற்கு, எனக்குத் தோன்றும் காரணங்கள் :
  1) சொந்தத்திற்குள் கல்யாணம் செய்துகொண்டது.
  2) குழந்தைகள் வந்தாச்சு.
  3) நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் - எங்களுக்குள் தான் - மூன்றாம் மனிதர்கள் - (குழந்தைகள், எங்கள் பெற்றோர் உட்பட - எல்லோரும் மூன்றாம் மனிதர்கள்தாம்) யாரையும் எங்கள் பிரச்னைகளில் தலையிட விடமாட்டோம்.

  பதிலளிநீக்கு
 2. பெரும்பாலான காதல் திருமணங்கள் - மணமுறிவில் முடிய காரணம் என்ன? எனக்குத் தோன்றுகிற ஒரு கருத்தைச் சொல்கிறேன். காதல் காதல் என்று கடலை போடும் காலங்களில் - ஒவ்வொருவரும் மற்றவருக்கு - தன்னுடைய மிகச் சிறந்த (போலியான?) முகத்தைதான் காட்டுவார்கள்; தன்னை ஒரு கதா நாயகன் / நாயகியாகக் காட்டிக் கொள்வார்கள். அந்த முகங்கள் போலியானவை என்பது வாழ்க்கையில் பிறகு தெரிய வரும்பொழுது (moment of truth) - மணமுறிவின் ஆரம்ப அத்தியாயம் எழுதப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 3. கண்ணே, விண்ணில் சுடரும் மீன்களை கண்டால் துள்ளாது என் உள்ளம், ஏனெனில் உன் முத்துப் பற்களுக்கு இணையகுமோ அவை? என்பது போல் கல்யாணத்துக்கு முன் தூக்கி வைக்கிற ஆண் பின்பு அந்தப் பெண் முத்துப் பல் காட்டிச் சிரித்தால்கண்டு கொள்வதே இல்லை. இரண்டு extreme levels இல மனிதர் இருப்பதால் இந்த மாற்றம், ஏமாற்றம். வாழ்வின் எல்லா கணங்களிலும் நிதானம் சாத்தியமில்லை. ஆனாலும் பெரும்பாலான நேரத்தில் நிதானம் கடைப் பிடிக்கப் படாமல் அந்த நிதானமே நமது இயல்பாக இருக்குமானால் நடப்பதே வேறாக இருக்குமோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!