புதன், 9 பிப்ரவரி, 2011

நாய் மனம் 2


(சென்ற பதிவின் தொடர்ச்சி)
 

மறுநாள் காலை அல்ல, அடுத்த இரண்டு மூன்று நாள் காலைகள் எதிர்பார்ப்போடுதான் விடிந்தன. ஆனால் ஏமாற்றம்தான்.
           
ப்ரௌனி வரவில்லை.
    
"வேண்டாம்னுதானே துரத்திட்டீங்க...நான் ஏன் வரணும்" மனதுக்குள் ப்ரௌனியின் உருவம் தோன்றி பேசியது போல இருந்தது.
                

நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.  
                    

"நேரத்துக்கு சாப்பாடு வைப்போம்...அதையே சரியாய்ச் சாப்பிடாது...இப்போ என்ன செய்யுதோ...யார் கொடுப்பாங்க அதுக்கு சோறு...!' சின்னவள் உணர்ச்சி வசப் பட்டாள்.
               
ஏதாவது பேப்பர் சத்தப் படுத்தினாலே குரல் கொடுக்கும் "எனக்கு எங்கே" என்பது போல...தீனி ஏதாவது சாப்பிடும்போது பாட்டி அதைச் சொல்லி மாய்ந்து போனாள்.
                           

ஆட்டோக்காரரை அப்புறம் பார்த்த போது அந்தப் பக்கம் சவாரி போனீங்களா கண்ணுல பட்டதா என்று கேட்ட போது 'சும்மா இருங்க சார்' என்று சொல்லிச் சென்றார்.
                       

திரும்பி வந்து விடும் என்று எண்ணிதான் கொண்டு விட்டோமோ என்று சந்தேகம் வந்தது. அவர்களும் கூட அந்தப் பக்கம் ஓரிரு முறை சென்று வந்த போது கண்ணில் படவில்லை.
               
"வீட்டுக்கு வரேன்னு வந்து ஏரியா மாறியிருக்கும்"
   

"வண்டியில் எங்காவது அடி பட்டிருக்குமோ"
                

வீட்டைச் சுற்றி தினமும் பார்வை அலைவதை தடுக்க முடியவில்லை.
                       

நடுவில் ஒருநாள் பெரியவன் கல்லூரியிலிருந்து வந்த போது அந்த ஏரியாவில் ப்ரௌனியைப் பார்த்ததாக பரபரப்புடன் சொன்னான்.
           

"அப்போ உயிரோடதான் இருக்கு..."
         

"அப்பாடா..."
               

அந்த வாரக் கடைசியில் புதிய எண்ணம் வந்தது. அது நம்மை விட்டுப் போய் இரண்டு மாதம் இருக்குமா? அதைச் சென்று பார்த்ததால் என்ன?            

என்ன அசட்டுத் தனம் என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை. 
      

"போகும்போதே பிரியாணி எல்லாம் வாங்கிப் போய் விடுவோம்..."
                

"மட்டன் பிரியாணின்னா அதுக்கு ரொம்ப இஷ்டம்.."
                       

"போய் குடுத்திட்டு சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் இருந்துட்டு நைஸா வந்துடலாம்..."    

"அதெப்படி? அது உன்னை விடவே விடாது...கூடவே வந்துடும்..."  
                   

"வராது...முதல்லயும் அப்படிதான் சொன்னாங்க...வரல்லையே..."    
                

"அப்போ அதுக்குத் தெரியாது...இப்போ அனுபவம்..விடவே விடாது"
                

"வராது..."  
              

"வந்தால்..."  
                 

"வராது...வந்தால்...வந்தால் என்ன செய்யலாம்...கூட்டிட்டு வந்துட வேண்டியதுதான்.."   
                    

'சட்'டென எல்லார் முகத்திலும் ஒரு புன்னகை வந்து அமர்ந்தது.   
                   

"முன்னாடி சொன்ன கஷ்டம் என்ன ஆச்சு?"    
                                    

"பார்த்துக்கலாம்.."  
                           

ஆசிஃபிலிருந்து மட்டன் பிரியாணியுடன் கிளம்பிப் போனார்கள். அந்த இடம் வந்தது. ப்ரௌனியைக் காணோம். பிரியாணியுடன் கேனத் தனமாக அமர்ந்திருந்தார்கள். வேறு சில நாய்கள் பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்து வந்து வாலாட்டின.     
                 

பைக்கிலும் காரிலும் சென்றவர்கள் லேசாகத் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்.          

"அன்னிக்கி நீ பார்த்தது ப்ரௌனிதானாடா?"    
           

"அட என்னப்பா...எனக்குத் தெரியாதா..."    
                       

அவர்கள் கண்கள் நாலாபுறமும் பார்த்தபடி இருந்தன. நேரம் செல்லச் செல்ல அலுப்பு வந்தது. முட்டாள்கள் போல உணர்ந்தனர். யோசனையில்லாமல் உணர்ச்சி வசப் பட்டு வந்து விட்டோம் என்று தோன்றியது.    

"அப்பா...அங்க பாரு.."      

சற்று தூரத்தில் ப்ரௌனி...ஆம்...ப்ரௌனியேதான்...மெல்ல வந்து கொண்டிருந்தது. எதையோ தேடிய அதன் அழகிய கண்கள் மோப்பம் பிடித்தபடி இவர்களைப் பார்க்க,      

   

உடம்பை வளைத்து, குனிந்து நிமிர்ந்து ஓடி வர ஆரம்பித்தது.  
                                   

முதலில் அவன் மேல் பாய்ந்தது. பயப்படும் அளவு காலை வளைத்து, சுற்றி சுற்றி வந்து மேலே உராய்ந்தது. அதன் குரல் சுற்றி உள்ள நாய்களைக் கலவரப் படுத்தியது. அவை இவர்களை கவனமாகப் பார்த்து விட்டு சற்று தளளி நின்றன.     
              

மனைவியை, பையன்களை என்று ஆனந்த அழுகையுடன் சுற்றி சுற்றி வந்து மேலே பாய்ந்து நக்கி அன்பை வெளிப் படுத்தியது ப்ரௌனி.  
                   

பிரியாணியைப் பிரித்து வைத்தார்கள். உடனே சாப்பிடவில்லை. அதை முகர்ந்து பார்த்து விட்டு மறுபடி இவர்களிடம் வந்தது. திரும்ப பிரியாணியை ஒரு பார்வை.   
            

"போய்ச் சாப்பிடு.."     
                    

போய்ச் சாப்பிட்டது.    
             
காத்திருந்தனர். சாப்பிட்டது. பக்கத்தில் வந்து புலிக் குட்டி போல உட்கார்ந்து மற்ற நாய்களைப் பார்த்தது.அதன் நெற்றியைத் தடவியபடி தூக்கி ஆட்டோவினுள் விட்டான்.

வழக்கம் போலவே முரண்டு பிடித்தது.   
                 
"பயன்தாங்குள்ளி...வழக்கம் போலவே பயப்படுது...லூசு..வீட்டுக்குப் போறோம்.."என்றாள் மனைவி.   
                       

புதிதாய் வந்த இரு நாய்கள் குரல் கொடுத்தன. ப்ரௌனி அவைகளைப் பார்த்து வாலாட்டியது. அவைகளிடம் ஓடி ஏதோ சொல்வது போல அருகே நின்று விட்டு மறுபடி இவர்கள் அருகே வந்தது.          
               

"என்னடி..சொல்லிக்கிட்டு வந்துட்டியா.." மனைவி கிண்டலாகக் கேட்டாள்.          
                        

வாலாட்டிய ப்ரௌனி, திரும்ப அந்த நாய்களிடம் சென்றது.  
                   

அவை மெல்ல திரும்பி நடக்கத் தொடங்கின.      
                
            
இவர்கள் விக்கித்து நின்றார்கள்.   
          
"ப்ரௌனி...ப்ரௌனி..."  
    

திரும்பிப் பார்த்த ப்ரௌனி லேசாக வாலாட்டியது. சற்றே தயங்கி நின்று விட்டு மறுபடி திரும்பி அதன் தோழர்களுடன் செல்லத் தொடங்கியது...அவற்றின் நடை மெல்லோட்டமாக மாறியது...!   
   

தூரத்தே சென்று மறைந்தது.  
                  

(முற்றும்!)

     
             

21 கருத்துகள்:

  1. நா எதிர்பாக்காத முடிவு..
    உலகத்திலேயே சூப்பரான ரெண்டு விஷயம்.. பாசம்.. நேசம்.. அவ்வ்வ்வவ்

    பதிலளிநீக்கு
  2. முதல்லயே வளக்காம இருந்திருக்கணும்:-(

    பதிலளிநீக்கு
  3. போன பதிவில் வித்தியாசமான தொடர்கதைன்னு எதேச்சையாத்தான் சொன்னேன். நிஜமாவே வித்தியாசமாருக்கு!!

    கொஞ்ச நா மின்னே ஆப்பிரிக்காவில (அமெரிக்கா?) ஒருத்தர் சிங்கம் வளத்துட்டு, கொண்டுபோய் ஆப்பிரிக்கக் காட்டுல விட்டதுக்கப்புறம், ஒரு வர்ஷம் கழிஞ்சு தேடிப்போனப்பறம் வந்து கட்டிப் பிடிச்சுதாமே, (மெயில்ல வந்துது) அது ஞாபகம் வந்துது!!

    பதிலளிநீக்கு
  4. ப்ரௌனி மனதில் என்ன நினைத்திருக்கும்? உங்களிடம் அன்பை மட்டும்தான் எதிர்பார்த்தேன் என்றா? பாருங்கள் நான் உங்களை மறக்கவேயில்லை என்றா? உன் சுற்றத்தோடு நீ இரு என் சுற்றத்துடன் நான் இருக்கேன்; எங்காவது பார்த்தால் ஹாய் சொல்லிக் கொள்வோம் அவ்வளவுதான் என்றா!!
    எப்படியோ இன்னும் கொஞ்ச நாள் எந்த நாயைப் பார்த்தாலும் ப்ரௌனி நினைவு வரும். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. எதிர்பார்க்கவேயில்லை.

    ”நீங்க கூட்டிக்கொண்டு போவீங்க.
    திரும்பவும் எப்பாச்சும் கொண்டு வந்து விட்டிருவீங்க”ன்னு நன்றியை மட்டும் சொல்லிட்டு போயிடிச்சோ !

    பதிலளிநீக்கு
  6. பிரியாணிக்கு எவ்வளவு செலவாச்சுன்னு பிரௌனிக்கு எப்படித் தெரியும்? நல்ல பிரியாணி தானா?

    சுவையான பிரியாணி.. ஐ மீன் கதை.

    பதிலளிநீக்கு
  7. முடித்த விதம் மிக மிக அருமை. நாய்க்கும் மனம் இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. கடைசியில் எதிர்பாராத் திருப்பம்

    பதிலளிநீக்கு
  9. இந்த முடிவைத் தான் எதிர்பார்த்தேன்.

    நான் எதிர்ப்பார்த்த மாதிரியே முடிவு அமைந்ததில் திருப்தி. சொல்லப் போனால் இந்தக் கதையின் சிறப்பை இப்படியான இந்த முடிவு தான் தூக்கிச் சுமக்கிறது.

    சில மாதங்களுக்கு முன்னால் படித்த பிரபலம் ஒருவரின் இதே மாதிரியான இன்னொரு கதைக்குக் கூட இவ்வளவு சிறப்பான முடிவு வாய்க்கவில்லை.

    ப்ரெளனியை பெண் நாயாகக் காட்டியதினால் மட்டுமில்லை, ஆண் நாயாக இருந்திருந்தால் கூட அப்படித்தான்.

    வீட்டு வளர்ப்பு நாயாக இருந்தது, அந்த வீட்டு ஆட்களையே பார்த்துப் பழகியது தன்னையே ஒத்த கும்பலைப் பார்த்ததும் புதுப் பழக்க மோகம் அந்தப் பக்கம் அதிகமாகி விட்டது; அவ்வளவு தான். இது தான் நியாயமானது மட்டுமல்ல,அதற்கு ஆரோக்கியமானது கூட. அதற்கும் இந்த சில நாட்களில் அமையாவிட்டாலும், வரப்போகிற நாட்களில் இன்னும் என்னன்ன சொந்தம் அவர்கள் வட்டத்தில் ஏற்படப்போகிறதோ, தெரியவில்லை!
    எப்படியாயினும் 'விட்டு விடுதலை'யாகிய அந்த ஜீவனை வாழ்த்தத்தான் வேண்டும்!

    தலைப்புசரியில்லை.பெண்பிள்ளையும் சரி, ஆண்பிள்ளை ஆனாலும் சரி, வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கென்று திருமணம் முடிந்த பின் அவர்களுக்கான வாழ்க்கை அவர்களுக்காகிறது. அப்புறம் அதிக நாட்டம் அந்தப் பக்கம் தான்.

    மனிதர்களின் மனமே இப்படியிருக்கையில் நாய்க்கு மட்டும்
    வேறொன்றாய் இருக்கக் கூடுமோ?'' அதனால் தான் தலைப்பு சரியில்லை என்றேன்.

    பதிலளிநீக்கு
  10. இப்போதான் இர‌ண்டையும் ப‌டிச்சேன்.. எதிர்பார்க்காத‌ முடிவு..

    பதிலளிநீக்கு
  11. மனதை தொட்ட கதை ஸ்ரீராம்ண்ணா, இது நிஜமா இல்லை கதையான்னு தெரியல. வாசிக்க நல்லா இருந்தாலும் நெகிழவும் வைக்குது !!

    பதிலளிநீக்கு
  12. எந்த நாதியுமே இல்லாத போது உதவி செய்யறவங்கதான் உண்மையான உறவுன்னு ப்ரௌனிக்கு அதோட அனுபவத்தில புரிஞ்சிருக்கு. அதே நேரம் மனிதர்களை விட நாய்களுக்கு என்றைக்குமே நன்றி அதிகம் என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டது. நல்ல கதை, நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு
  13. நாகை வை. ராமஸ்வாமி12 பிப்ரவரி, 2011 அன்று AM 7:20

    நாய் மனம் மனிதனுக்கு இருந்திருந்தால் நன்றி கெட்டவர்களே இருக்க மாட்டார்கள். ப்ரௌனியை வெளியே கொண்டுவிட்டதும் அதன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? அன்பர்கள் படித்து மகிழ சென்னைஆன்லைனில் நான் எழுதிய கதையை இந்த தளத்தில் காணலாம்
    http://chennaionline.com/tamil/literature/shortstories/newsitem.aspx?NEWSID=1c315e07-a9e4-480c-bd1d-748554f12504&CATEGORYNAME=story

    பதிலளிநீக்கு
  14. உண்மையிலியே வேறுவிதமான கதை,முடிவு. எதிர்பார்க்கவில்லை.
    தன் கூட்டத்திற்கு அது நன்றியோடு இருக்கிறது.
    அதுதான் யதார்த்தமும் கூட.

    பதிலளிநீக்கு
  15. சரியான முடிவு ப்ரெளனியைப் பொறுத்தவரையில். நல்ல பாடமும் கற்பித்துவிட்டது. என்றாலும் சோகம் சோகம் தான்; நல்லவேளையா வளர்த்ததைப் பிரிந்ததில்லை. வேண்டாம்னு ஆரம்பத்திலேயே திடமாக இருந்துவிட்டோம். மோதி தான் கடைசி. அதுக்கு முன்னே ப்ளாக்கி, ப்ரெளனி, பெயரே இல்லாமல் கறுப்பு எனக் கூப்பிட்டே ஒன்று. எல்லாமே வளர்த்து எங்க வீட்டிலேயே இறந்தவை. இவற்றில் கறுப்பு மட்டுமே வண்டியில் அடிபட்டுச் செத்துப் போனது. அப்போ நான் ஊரில் இல்லை. மதுரை போயிருந்தேன். என் பெண்ணுக்குக் குழந்தையாய் இருக்கையில் என் கணவர் வாங்கிக் கொடுத்த உயிருள்ள பொம்மை கறுப்பு. அவளை விட்ட்டு அந்தண்டை இந்தண்டை நகராது. என்னைத் தவிர, நான் இல்லை என்றால் என் கணவர் இரண்டு பேர் தான் அவளுக்குத் துணி மாற்ற முடியும். ஒரு நாள் குழந்தை அழ,என் அண்ணா துணி மாற்றப் போக,, கூடவே இருந்து அண்ணாவைத் தெரிந்து வைத்திருந்தும் கறுப்பு அண்ணாவைக் கடிக்கப் பாய்ந்துவிட்டது. குழந்தையோடு மதுரைக்கு அப்பா கிரஹப்ரவேசம் பண்ணினார்னு போய்ட்டு வரதுக்குள்ளே வண்டியில் அடிபட்டுப் போய்விட்டது. பின்னர் கொஞ்சநாட்கள் செல்லப் பிராணிகள் வளர்ப்பே இல்லை. அப்புறமா மறுபடி. :(((((

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பகுதியும் வாசித்தேன் ..முன்பும் வாசித்தேன் அப்ப மனசுக்கு கஷ்டமாயிருந்தது அதான் பின்னூட்டம் இடாம சென்று விட்டேன் .
    எங்க தெரிந்தவர் ஒருவர் ஒரு ராஜபாளையம் நாயை வாங்கி ஒரு வயது வரை வளர்த்தார் ..திடீரென அல்சேஷன் ஆசையில் இந்த ராஜபாளையம் வேண்டாமென்று சென்ட்ரல் ஸ்டேஷன் அருகிலிருக்கும் இடம் ...கொண்டு போக எத்தனிக்கையில் அதை கண்டு எங்கப்பா அந்த நாயை வேறு ஒருவரிடம் வளர்க்க கொடுத்தார் .அந்த நன்றியில் இந்த நாய் மாதம் ஒரு முறை திருவொற்றியூரில் இருந்து ஜவஹர் நகர் வரை எங்களை வந்து பார்க்கும் வரும்போது ஒரு நாள் இரவு எங்க வராண்டாவில் தங்கியும் செல்லும் ..
    ஆனா எங்க பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் அந்த முன்னாள் உரிமையாளர் தரும் கஞ்சி கூட குடிக்காது .
    நாலு கால் ஜீவன்களுக்கும் மனமுண்டு ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!