திங்கள், 18 ஏப்ரல், 2011

தேர்தல் காட்சிகள்...

                           
இதுவரை இல்லாத அளவு வாக்குப் பதிவு. ரெகார்ட்! ஒரு செய்தி 77% என்கிறது. ஒரு செய்தி 80% என்கிறது. எப்படி இருந்தாலும் சாதனை அளவுதான். சில இடைத் தேர்தல்களில் இந்த அளவு வாக்குப் பதிவு நடந்தது உண்டு...அது 'வேறு'!  

இந்த முறை உண்மையான ஹீரோ, மிக மிக பாராட்டப் பட வேண்டியவர்கள் தேர்தல் கமிஷன்.
    
தமிழ் நாட்டில் தேர்தல் என்றால் புழுதி பறக்கும். ஒவ்வொரு வீட்டுச் சுவரும் மரியாதையான மிரட்டலுடன் நாசம் செய்யப் படும். வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் ஓசை வெள்ளம் இருக்கும். இவை எதுவும் இல்லாமல் அமைதியான தேர்தல் நடத்தியது நிச்சயம் சாதனை. பண மழையைக் கட்டுப் படுத்தியது மிகப் பெரிய சாதனை. இதை மீறி பண மழை பெய்தது வேறு விஷயம். பின்னே... தேர்தல் கமிஷன் நேற்று வந்தது. நம்மூர் அரசியல் நாகரீகம் பழம் தின்று கொட்டை போட்டு, பல்லாண்டுகள் பழமையானதாச்சே......தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறதா என்று அதிசயித்துப் போயிருப்பார்கள் வெளி மாவட்டங்கள், வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருப்பவர்கள்... ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்று பாகுபாடில்லாமல் கண்டிப்பு காட்டியது கமிஷன். பிரவீன் குமாருக்கு ஒரு ஜே... ஆங்கிலச் சேனல்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருந்ததை தமிழ்நாட்டு சேனல்கள் கண்டு கொள்ளவுமில்லை, கவலைப்படவுமில்லை! குஷ்பூ அர்நாபிடம் பதில் சொல்ல முடியாமல் மழுப்பியது சுவாரஸ்யம்!    
        
தேர்தல் கமிஷனே புகைப்படத்துடன் கொடுத்த பூத் ஸ்லிப் மிகப் பெரிய மாற்றம், சாதனை. வாக்களிக்க அதுவே போதும் என்றதும் வீட்டுக் குப்பையில் தொலைத்த அடையாள அட்டைகளை தேட முடியாதவர்கள் முன்பு வீட்டில் முடங்கியது போல இல்லாமல் இப்போது வீறு கொண்டு கிளம்பி விட்டார்கள். தேர்தல் செலவு கணக்கு கேட்போம், அதிகமானால் பதவி பறிப்பு வரை போகும் என்றெல்லாம் அறிவிக்கப் பட்டதும் வேட்பாளர்கள் ஓரளவு அடக்கி வாசித்தார்கள். அப்படியும் தரப் பட்ட பணம், பிரியாணிகளை ஆங்கிலச் சேனல்கள் காட்டின.
     
கள்ள ஓட்டு அறவே இல்லை..நன்றி பூத் ஸ்லிப், கடையடைப்பு, கல்யாண மண்டபங்கள் அடைப்பு. கலவரமும் இல்லை. இது மிகப் பெரிய சாதனை. வாக்குச் சாவடியை கைப்பற்றினர் என்று செய்தி வரும்போதே 'பகீரெ'ன்றிருக்கும். அது இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். டாஸ்மாக் கடைகள் திங்கள் மாலை முதலே அடைக்கச் சொன்னது நல்ல மூவ்.
     
தேர்தல் அன்று பந்த் நடப்பது போல எல்லாக் கடைகளையும் மூட வைத்ததும் நல்ல நடவடிக்கையே. நூறு மீட்டற்றுக்குள், இருநூறு மீட்டருக்குள் என்றெல்லாம் சொல்லப் பட்டாலும் பெரும்பாலும் கடைகள் ஆறுமணி வரை மூடப் பட்டிருந்தன.
           
49 O இந்த முறை அதிகம் விழுந்திருக்கிறது என்கிறது செய்தி. இவை இன்னும் அதிமாகலாம். அரசாங்கம் அசிங்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் மாட்டார்கள். 49 O வுக்கு பட்டன் இருக்கும் என்று நான் கூட எதிர்பார்த்தேன்! ஆனால் வழக்கம் போல நோட்டில் எழுதி
கையெழுத்திட வேண்டுமாம். 49 O போடுபவர்களுக்கு கையில் மை வைக்க மாட்டார்களாம். நியாயம்தான். ஆனால் சேலம் பகுதியில் அமைச்சரின் மகள் எனக்கு அலெர்ஜியாகும் மை வைக்க விட மாட்டேன் என்றாராம். சரி என்று அதிகாரிகள் விட்டு விட்டார்களாம். அமைச்சரின் மகளாயிற்றே...!
              
வழக்கமான காட்சிகள் செய்தித் தாள்களில்...ஊனமுற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வருவது, மிக மிக முதிய வாக்காளர்கள் வாக்களிக்க வருவது...தலைவர்கள் வாக்களிப்பது.... இந்த முறை சீனியர் சிட்டிசன்கள் ஊனமுற்றவர்கள் வாக்களிக்க தனி வரிசை என்று சொன்னது ஒரு பாராட்டப் பட வேண்டிய விஷயம். (ஒரு வேளை முன்னமேயே இது சட்ட பூர்வமாக இருந்திருந்தாலும் நடைமுறைப் படுத்தினார்களே...) ஒரு 103 வயது மூதாட்டி எம் ஜி ஆர் இருந்திருந்தால் அவருக்குதான் ராசா என் வோட்டு என்றாராம். இன்னொரு மூதாட்டி கண் தெரியவில்லை உதவி செய்யுங்கள் என்று கேட்டும் கூட தேர்தல் அலுவலர்கள் உதவி செய்யவில்லையாம்.
                
வைகோ கலிங்கப் பட்டியில் வாக்களித்தாராம். சுவாரஸ்யமான கேள்வி..யாருக்கு வாக்களித்திருப்பார்? 49 O?!!
             
தங்கபாலுவின் மனைவி பெயர் பட்டியலில் விடுபட்டிருந்ததால் வாக்களிக்க முடியவில்லையாம். தேர்தல் கமிஷனை குறை கூறி இருந்தார். இவர் மயிலை தொகுதியில் வேட்பாளராக வேறு மனு தாக்கல் செய்து, மனுவில் கையெழுத்திடாததால் (!!) மனு நிராகரிக்கப் பட்டவர்! இன்டர்நெட்டிலேயே கூட உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அறிவித்த போது இவர் என்ன செய்தாரோ...! சாதாரண பொது ஜனத்துக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட இவருக்கு இருந்திருக்காதா... ஆச்சர்யம்தான்!
            
அதிகபட்ச வாக்குப் பதிவு இருந்தால் தி மு க தான் ஜெயிக்கும் என்று பழைய வரலாறு காட்டியது சன். ஆனால் ஆளும் கட்சி என்பது தோற்பது வரலாறு என்றது எதிர் தொலை! தெரிய ஒரு மாதம் ஆகும். நீண்ட இடைவெளிதான்.
               
ஆளும் தி முக எங்களுக்கு தூக்கமில்லா இரவுகளைத் தந்தது என்றார் குரேஷி CNN IBN னில். அடுத்த தேர்தலிலாவது இலவச அரிப்புகள், மன்னிக்கவும் அறிவிப்புகள், பண விநியோகம் ஆகியவற்றுக்கு ஒரு முடிவு கட்டப் படும் என்று நம்ப முடியுமா?
              
ரஜினியின் குரலில் பெப் ஒன்றும் இல்லை. கட்டாயப் படுத்தி ரெண்டு கேள்வி கேட்டுக்கறேன் என்றிருப்பார்கள் போலும்.
             
கள்ள வோட்டு, கலவரங்கள் பற்றிப் பேசிய போது ஒரு நண்பர் வாக்களிக்கும்போது ஏற்படும் அந்த 'பீப்' ஒலி பற்றிப் பேசினார். எல்லா சின்னத்துக்கும் ஒரே மாதிரி 'ஒரே ஸ்வர' சத்தமா, 'வெவ்வேறு ஸ்வரங்களா' என்று ஆராய்ந்திருக்க வேண்டுமென்றார். இன்னொரு ஆசிரியர் கீழ் கண்டவாறு கூறினார்.     
               
எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சில தொகுதிகளில் மட்டும் ஏன் வாக்குவாதங்களும் வாக்குப் பதிவு எந்திரங்கள் உடைத்தலும் நடக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூர் பிரமுகர்களின் சக்தி நிரூபணம் முதல், கணக்கில் வராத கள்ளப் பணம் வரை பல்வேறு காரணங்கள் அலசப் பட்டாலும், நண்பர் ஒருவர் சொன்ன காரணம் எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்தது. நீங்களும் இந்த வழியிலேயே யோசனை செய்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்:
        
உங்கள் தகுதியை ஆராய்ந்து விட்டு, தேர்தல் அதிகாரி பதிவு எந்திரத்தைத் தயார் நிலையில் வைக்கிறார். நீங்களும் உங்கள் வேட்பாளர் பெயரை விட அவர் சின்னத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஓட்டுப் போடவும் செய்கிறீர்கள் உடனே ஒரு பஸ்ஸர் நீளமாக ஒலிக்கிறது. அந்த ஒலியில் ஒரு செய்தியை ஒளித்து, வெளியில் உட்கார்ந்திருப்பவர் துல்லியமாக இவர் இந்தக் கட்சி/ வேட்பாளருக்குத்தான் ஓட்டளித்தார் என்று புரியாத பாஷையில் கூவிக் கூவி சொல்ல முடியும்.     
             
                             
இவைகளின் மொழி அறிந்த விக்ரமாதித்தன் போன்று சரியான கருவியுடன் உட்கார்ந்திருப்பவர் கணக்கிட்டுக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் அவர் வந்து மறு வாக்குப் பதிவு நடக்கும்படி ஏடாகூடமாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்.
                 
இது சத்தியமாக நண்பர்களின் கற்பனையில் உதித்த விஷயமானாலும் நம்மை விட கற்பனையும் அறிவுத் திறனும் மிக்க சுஜாதா போன்றவர்கள் இந்த எந்திரங்களை வடிவமைக்கும் பொழுது இதெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பார்கள்?    
                         

11 கருத்துகள்:

  1. இன்னும் தேர்தல் அலை ஓயவில்லையா?

    பதிலளிநீக்கு
  2. //உடனே ஒரு பஸ்ஸர் நீளமாக ஒலிக்கிறது. அந்த ஒலியில் ஒரு செய்தியை ஒளித்து, வெளியில் உட்கார்ந்திருப்பவர் துல்லியமாக இவர் இந்தக் கட்சி/ வேட்பாளருக்குத்தான் ஓட்டளித்தார் என்று புரியாத பாஷையில் கூவிக் கூவி சொல்ல முடியும். //

    இதனை நம்ப முடியவில்லை.

    வாக்குப் பதிவு ஆரம்பிக்கும் முன்னர்.. ஏஜெண்டுகள் பல பட்டன்களை பட்டங்களை அமுக்கி வாக்கு சேர்கிறதா.. என்று சோதனை செய்யலாம்.. அதன் பின்னரே.. அனைத்து சோதனை வாக்குகளும் அழிக்கப் பட்டு.. ஜீரோ காண்பித்த பின்னரே அதற்கு பதிவு அதிகாரி சீல் வைப்பார். அதன் பின்னரே உண்மையான வாக்குப் பதிவு ஆரம்பிக்கும்.

    அந்தச் சோதனையின் பொது ஏஜெண்டுகள் வெவ்வேறு பட்டன்களை அழுத்திப் பார்த்து.. 'பீப்' சத்தத்தில் மாறுதல் இருப்பின் ஆட்சேபம் தெரிவிக்கல்லாம்.
    'பீப்'சத்தம், வாக்கு கணக்கில் எதுத்துக் கொள்ளப் பட்டதா இல்லையா என்பதற்கு மட்டுமே.
    எனவே.. இதனை நம்ப என்னால் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. தேர்தல் கமிஷன் கமிஷன் வாங்காம வேலை செய்திருக்குன்னு சொல்றீங்க !

    பதிலளிநீக்கு
  4. இந்த முறை வாக்களித்த போது, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. தேர்தல் ஆணையத்தின் கடுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. //
    கள்ள வோட்டு, கலவரங்கள் பற்றிப் பேசிய போது ஒரு நண்பர் வாக்களிக்கும்போது ஏற்படும் அந்த 'பீப்' ஒலி பற்றிப் பேசினார். எல்லா சின்னத்துக்கும் ஒரே மாதிரி 'ஒரே ஸ்வர' சத்தமா, 'வெவ்வேறு ஸ்வரங்களா' என்று ஆராய்ந்திருக்க வேண்டுமென்றார்//

    நல்ல்ல்லா யோசிக்கறார்!

    பதிலளிநீக்கு
  7. தேர்தல் காட்சிகள் சூப்பர்! ;-)

    பதிலளிநீக்கு
  8. தேர்தல் கமிஷனைக் கண்டிப்பாகப் பாராட்டனும்..

    பதிலளிநீக்கு
  9. பல இடங்களில் இப்படியான தேர்தல் செய்திகள் வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாற்றங்கள் என் நாட்டிலும் சாத்தியமே என்று உணரும்போது “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” என முணுமுணுக்கிறேன்.

    (கொஞ்சம் ஓவராத் தெரியுதோ?) ;-))))

    பதிலளிநீக்கு
  10. //இன்னும் தேர்தல் அலை ஓயவில்லையா?//

    என்னங்க நீங்க சராசரி அரசியல் வாதி போல, இந்தப் பரீக்ஷை முடிந்தது, ரிசல்ட் வந்துடுச்சுன்னா அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கவலை இல்லை என்பது போல் இன்னுமா என்கிறீர்களே? நல்ல முறையில் நடந்து முடிந்த தேர்தல் எந்த மாதிரி மாற்றங்களையும் கொண்டு வருகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாமே !

    பதிலளிநீக்கு
  11. //இந்த முறை உண்மையான ஹீரோ, மிக மிக பாராட்டப் பட வேண்டியவர்கள் தேர்தல் கமிஷன்.//

    உண்மைதான். பலரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது இப்பதிவு.

    //நண்பர்களின் கற்பனையில் உதித்த விஷய//ங்கள் புதுசு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!