திங்கள், 9 ஜூலை, 2012

எழுத்துப் புதிர் - எழுத்தாளர் புதிர் 02

                 
எழுத்துப் புதிர் போட்டுக் கொஞ்ச நாள் ஆச்சு இல்லை? இந்தப் புதிர் எப்படிஎன்றால் புதிர் போடுபவர்களுக்கு ஈஸி! (பார்த்துதானே அடிக்கிறோம்!) படிக்கும் நீங்கள்,  எழுதியிருக்கும் பாணியை வைத்தோ, கேரக்டர்களை வைத்தோ, சில பிரத்யேகமான வார்த்தைகளை வைத்தோ எழுத்தாளர்களை கண்டு பிடிக்கலாம். கண்டு பிடிக்கும் சந்தோஷத்துக்காக எளிதாகக் கொடுத்திருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்!   

          

ரெடி ஜூட்.....!  
            
1) இந்த இடத்தில் அவருக்கு பதில் சொல்வதற்குப் பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் எதிரே தொங்கிய பச்சைக்கிளிகள் பறக்கும் திரையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்தத் திரை சற்றே விலகி நிஜமாகவே ஒரு கிளிக்குஞ்சு தெரிந்தது. விலகி மறைந்த திரையில் இருக்கும் பச்சைக்கிளி ஓர் இளம் பெண்ணாகி ஆனந்தம் பூத்துக் கொண்டிருக்கும் தன் அழகிய கண்களால் இங்கே அறைக்குள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருப்பது புரிந்தது. வெள்ளைச் சலவைக்கல் தரையில் ரோஜா நிறம் பளீரென்று தெரியும்படி முன் நகர்த்தி ஊன்றிக் கொண்டிருந்த தன் சிவப்புப் பாதங்களை அந்தப் பச்சைக்கிளியின் கண்கள் இமையாமல் பார்ப்பது கண்டு கூச்சத்தோடு பின்னுக்கு நகர்த்தி வேஷ்டியின் விளிம்பில் அந்தப் பாதங்கள் மறையும்படி செய்துகொண்டான் சத்தியமூர்த்தி. திரை விழுந்தது. பறக்க முடியாத ஓவியக் கிளிகள் மறுபடித் தெரிந்தன. உண்மைக் கிளி திரைக்குப் பின் மறைந்தது. அப்பால் பூபதி அவர்களின் பேச்சு மீண்டும் அவனோடு தொடர்ந்தது.  
      
2) மேளச்சத்தம். தவுலடி. குழந்தைகளின் பிடிவாத அழுகை. இத்தனையையும் மீறிப் பேச்சிரைச்சல். பட்டுப் புடைவைகளின் கொசகொச நடை. சந்தனத் தெறிப்பு. மல்லிகைப் பூக்களின் வாடல் நெடி. தாலி கட்டி, பானகம், வெற்றிலைப் பாக்குக் கொடுத்தவுடன், பிட்லை போல, ரசவங்கி, வாழைக்காய்க் கறி, என்று பகுள சமையலுக்கே ஆன தனி மணத்துடன் சாப்பாடு. இந்தக் கோலாகலத்தில் மனசைக் கொஞ்ச நேரம் குதிரைப் புரட்டல் புரட்ட வேண்டும் என்றுதான் இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கிறேன். கல்கத்தா, நாகபுரி பட்டணம், டெல்லி என்று 'ஃபைல்'களைக் கட்டி அழுது கொண்டு நிர்வாகக் குப்பை வண்டியை இழுக்கிற சோனிக் குதிரைக்கு, இப்படி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வருகிற ஒரு கல்யாணம்தான் புரட்டு மணல்.  புரள ஓடோடி வந்தேன்.  
     
3) சின்னக் குரலில் நிறுத்தி நிறுத்தி, தீவிரமாகப் பேசும் நாணாவை, த்யாகு நிமிர்ந்து பார்த்தான்.   
  

எத்தனை விவேகத்தோடு பேசுகிறான் இந்த நாணா! 

              

என் மனசு புண்படாமல் இருக்க எத்தனை அழகாய் நிலைமையை விளக்குகிறான்!   
             
தன் குடும்பத்துக்குத் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து நழுவுவது முட்டாள்தனம் என்பதை எத்தனைப் பக்குவமாய் எடுத்துச் சொல்கிறான்!  
                  
இந்த நிதானமும் விவேகமும் எனக்கு ஏன் இல்லை?   
.............................................. 
              
அதை விட்டுவிட்டு ஆயுசுபர்யந்தம் நாணா என்கூடவே இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது குழந்தைத் தனமான ஆசை அல்லவா?     
              
4) அன்றைய காலைப் பொழுது மிக அழகாக, மிகச் சுறுசுறுப்பாக அந்த வீட்டில் விடிகிறது...   
   

வெய்யில் புறப்படாத இளம் காலை.... வாசலில் சாணம் தெளிக்கும் சத்தம்; டிப்போவில் 'பால் கேன்'கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகும் 'ஜங்கார' சத்தம்;  நாலு வீடு தளளி, விளக்குக் கம்பத்தில் கட்டப் பட்டிருக்கும் எருமை மாடு அடித் தொண்டையில் ஆலாபனை செய்யும் சத்தம்; வேப்பமரக் கிளைகளில் காகங்கள் உட்கார்ந்து தலையைச் சாய்த்தபடி'கர்ர்ர்ர்'ரிக்கும் சத்தம்; வேகமாகப் பறந்து வந்து தரையில் மோதும் விமானம் போல - பேப்பர்க்காரச் சிறுவன் வீசியெறியும் தினசரியின் 'விஷ்' என்கிற சத்தம்; கொல்லைப்புறக் கிணற்றின் ராட்டின ஸ்ருதியின் சத்தம்; அந்த ஸ்ருதியுடன் சேராமல் சண்டைப் போட்டுக்கொண்டு வீட்டின் தலைவி சாலாட்சி பாடும் தேவாரப் பாட்டின் சத்தம்....   

                  

அழகப்பனுக்கு எல்லாமே அழகாகத் தோன்றுகிறது. ஒரு சில நாட்கள் இப்படி மனசுக்கு இனிமையாக விடியும். அவனுக்கு மாத்திரமில்லை; அந்தக் குடும்பத்திலுள்ள அனைவருக்குமே அந்த நாட்கள் ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.  
     
5) அனந்த் திகைத்துப் போனான். அம்மாவின் பதிலைக் கேட்டு, உடம்பில் ஒரு சிலிர்ப்பேற்பட்டது. அம்மாவின் மனசு இத்தனை விசாலமானதா? அத்தனை சிரிப்புக்கும் ஹாஸ்யத்துக்கும் பின்னால் ஒரு சிந்தனை மனசு, புரிந்து கொல்லும் கருணை மனசு இருக்கிறதா? அவன் மனதில் ஒரு பிரவாகம் கிளம்பி நெஞ்சை நிறைத்தது. ஓ, எப்படிப் பட்ட அம்மா நீ என்று நெகிழ்ந்தது.  

               

அம்மா பேசாமல் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய வார்த்தைகளுக்கு நம்மேல் இருக்கும் நம்பிக்கை காரணமா, இல்லை, லாவண்யா அம்மாவையும் சொக்க வைத்து விட்டாளா என்று புரியவில்லை. அம்மாவின் பக்கபலம் நமக்குக் கிடைத்து விட்டால் ஏதும் கவலை இல்லை என்கிற சமாதானம் ஏற்பட்டது.   

              

'லாவண்யாவைப் பற்றி என்ன நினைக்கிறே' என்று அப்பட்டமாக அம்மாவைக் கேட்கக் கூச்சமாக இருந்தது. அம்மா வாயை மூடிக் கொண்டு வந்தாள்.  
                  
"என்னம்மா யோசனை?" என்றான் அவன் மெல்ல. 
               
மங்களம் அவனைத் திரும்பிப் பார்த்து லேசாகச் சிரித்தாள். 
          
"எல்லாம் நம்ப முடியாத கதையை இருக்கு." 
           
அவன் எது என்று கேட்காமல் இருந்தான். 
           
"அந்தப் பொண் இங்கே வந்ததும் பழசெல்லாம் மறந்ததும்....."
             
உன் மனசை ஆக்ரமித்துக் கொண்டது என்று அம்மா சொல்லவில்லை. ஆனால் நினைத்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றிற்று.
        
"கதைங்கறதெல்லாம் நிஜத்தோட நிழல்தானே? அப்போ நிஜம்கறது இன்னும் சுவாரஸ்யமா இருக்காதா?"
          
அம்மா பதிலொன்றும் சொல்லவில்லை.    ஏதோ தீவிரமான சிந்தனையில் இருப்பது தெரிந்தது. அவன் பேசியதே அவள் காதில் விழுந்திருக்காது என்று தோன்றிற்று.   
          
க்ளூ: 
    
 

 


   
இவர்களிலிருந்து இருக்கலாம்.....! பி வி ஆர், சிவசங்கரி, ஜெகசிற்பியன், அனுராதா ரமணன், விக்ரமன், வாஸந்தி, பாலகுமாரன், நா பார்த்தசாரதி, சுஜாதா, தி ஜானகிராமன், ஜ ரா சு.  
                     

27 கருத்துகள்:

 1. 5. சிவசங்கரி?

  காத்திருக்கிறேன் சரியான பதில்களுக்கு:).

  பதிலளிநீக்கு
 2. தனிமரம் ---- தி ஜா ரா --- எது?

  பதிலளிநீக்கு
 3. தி.ஜ.ர - தி.ஜ.ரங்கநாதன்- மஞ்சரி ஆசிரியராக இருந்தவர். இவராக நினைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்று தி. ஜானகிராமனை - தி.ஜா. என்றே அழைப்பது வழக்கமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. 1) சத்தியமூர்த்தி என்றிருப்பதால்
  1)சத்தியமூர்த்தி என்பதால் நா. பார்த்தசாரதி

  2) மேளச்சத்தம், தவுலடி.. தஞ்சை பாஷை.. ஆக, தி.ஜானகிராமன்

  3) த்யாகு .. சிவசங்கரி

  4)வாசலில் சாணம் தெளிக்கும் சப்தம் .. வாஸந்தி

  5) லாவண்யா.. சுஜாதா?

  பதிலளிநீக்கு
 5. 4) ஜ.ரா.சு.

  5) பாலகுமாரன்

  - என்று இரண்டு திருத்தங்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஹேமா அவர்கள் சொல்வது போல் இரண்டாவது சுஜாதா அவர்களின் எழுத்துகள் போல் தான் உள்ளது. மற்றவற்றை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

  தலைவன் இருக்கிறான்

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html

  பதிலளிநீக்கு
 7. 1பொன்விலங்கு- நா.பார்த்தசாரதி

  2.பி.வி.ஆர்

  3. சிவசங்கரி

  4.தி.ஜானகிராமன்

  5. அனுராதா ரமணன்

  பதிலளிநீக்கு
 8. ங்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கொஞ்சம் வித்தியாசமாய்க் கோவிச்சுருக்கேன். எனக்கு ஏன் அப்டேட்டே ஆகறதில்லைனு புரியலை. கூகிள் சதியா> மாயாவின், பிங்கியின், மாயா அம்மாவின், அல்லது எ.சா.வின், கே.வி.ஆரின் யாரோட சதி இது?

  பதிலளிநீக்கு
 9. விடைகளைத் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கிறேன். சீக்கிரம் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 10. 1. நா.பார்த்தசாரதி, 2. தி.ஜானகிராமன், 3. சிவசங்கரி, 4.அனுராதாரமணன், 5.பாலகுமாரன்.

  எத்தனை சரியான விடை இருக்கிறதோ.. அதற்குத் தகுந்தாற் போல் பரிசு கொடுங்கள் மன்னா... ஸாரி, அண்ணா....

  பதிலளிநீக்கு
 11. அடாடா... பரிசு தர்றேன்ன நீங்க சொல்லாமயே நானா நினைசசுட்டேனா... ஸாரிங்க...

  பதிலளிநீக்கு
 12. 1. நா.பார்த்தசாரதி - சத்திய வெள்ளம், 2. தி.ஜானகிராமன் - பெயர் தெரியலை, 3. சிவசங்கரி - ஒரு மனிதனின் கதை, 4. அனுராதா ரமணன் - சாதாரண மனிதர்கள். 5. வாஸந்தி - அம்னீஷீயாவில் நினைவு மறந்து போன பெண் டாக்டரை காதலிக்கும் கதை. பெயர்தான் நினைவுக்கு வர மாட்டேங்குது...

  பதிலளிநீக்கு
 13. பாலகணேஷ் சொல்வது போல
  4- அனுராதா ரமணன்.

  3 யார் என்பது தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 14. பால கணேஷ் said...
  1. நா.பார்த்தசாரதி - சத்திய வெள்ளம், 2. தி.ஜானகிராமன் - பெயர் தெரியலை, 3. சிவசங்கரி - ஒரு மனிதனின் கதை, 4. அனுராதா ரமணன் - சாதாரண மனிதர்கள். 5. வாஸந்தி - அம்னீஷீயாவில் நினைவு மறந்து போன பெண் டாக்டரை காதலிக்கும் கதை.

  பால கணேஷ் சபாஷ்! உங்களுக்கு நூற்றுக்கு நூறு.

  பதிலளிநீக்கு
 15. //எழுதியிருக்கும் பாணியை வைத்தோ, கேரக்டர்களை வைத்தோ, சில பிரத்யேகமான வார்த்தைகளை வைத்தோ எழுத்தாளர்களை கண்டு பிடிக்கலாம்.//

  ஒன்றிலிருந்து மூன்று வரை சரி.
  4 மற்றும் 5-க்கு மேலே குறிப்பிட்டிருக்கும் எதை வைத்து எழுதியவரைக் கண்டு பிடிக்கலாம் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள்?..
  அதையும் சொல்லிவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 16. நிச்சயமா முதல் கேள்வியோட பதில் சத்தியவெள்ளம் என்பது தவறானது. பொன்விலங்கு நாவலில் தான் கதாநாயகன் சத்தியமூர்த்தி நேரடித் தேர்விற்குக் கல்லூரித் தாளாளரிடம் அவர் வீட்டிற்குச் சென்ற போது அவர் மகளை இப்படியான சூழ்நிலையில் பார்த்ததாக நா.பா. விவரித்திருப்பார். பொன்விலங்கு ஒவ்வொரு பக்கமும் கண் முன்னே விரியும் அளவுக்கு விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். மல்லிகைப் பந்தலில் நடக்கும் நிகழ்வு இது. அதில் தான் கதாநாயகன் பெயர் சத்தியமூர்த்தி. கதாநாயகி மோகினி என்னும் நாட்டியப் பெண். கடைசியில் தற்கொலை பண்ணிக்கொள்வாள்.

  பதிலளிநீக்கு
 17. //"குறிஞ்சிமலரு"க்கு அடுத்து அவர் எழுதிய "பொன்விலங்கு" நாவல், அவர் புகழை மேலும் ஒருபடி உயர்த்தியது. நாவலின் நாயகன் சத்தியமூர்த்தி, சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அவலங்கள், அநியாயங்கள் அவற்றால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள இலட்சிய இளைஞன். வாலிபர்களுக்கு ஓர் ஆதர்ச கதாநாயகனாக தரிசனம் கொடுத்து, அப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்கிற அவாவை பல இளைஞர்கள் மத்தியில் விதைத்த பாத்திரப் படைப்பு. //

  மேற்கண்ட விமரிசனம் சந்தவசந்தம் குழுமத்தில் மூன்றாண்டுகள் முன்னர் வெளியானது.

  பதிலளிநீக்கு
 18. முதல் கதை பொன் விலங்குதான். நா.பாதான்.
  இரண்டாவது தி ஜானகிராமனின் சிறுகதை. தலைப்பு 'தற்செயல்'
  மூன்றாவது சிவசங்கரியின் 'ஒரு மனிதனின் கதை'
  நான்காவது அனுராதா ரமணனின் 'சாதாரண மனிதர்கள்'
  ஐந்தாவது வாஸந்தியின் 'ஜனனம்'

  சரியாகச் விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள். கீதா மேடம் சொல்லியிருப்பது சரி. ஜீவி சார் சொல்லியிருப்பதும்தான்.

  கணேஷ் நிஜமாகவே ஆச்சர்யப் படுத்தி விட்டார். நா பா கதைத் தலைப்புத் தவறாகச் சொல்லியிருந்தார். வாஸந்தியின் கதையை படித்திருக்கிறார். ஜீவி சார் கேட்பது போல முதல் மூன்றினை எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அடுத்த இரண்டு படித்திருந்தால்தான் தெரியும்.
  சத்தியமூர்த்தி பெயரும் பாதங்கள் பற்றிய வர்ணனையும் பொன் விலங்கைக் காட்டிக் கொடுக்கும்.
  த்யாகு என்ற பெயரும் 'ஆயுசு பர்யந்தம்' போன்ற சொற்றொடர்களும் சிவசங்கரியைக் காட்டிக் கொடுக்கும். அவர் அடிக்கடி உபயோகிக்கும் இன்னொரு வார்த்தை 'என்கிற தினுசில்' !
  தஞ்சாவூர் பற்றிய வர்ணனைகளும், கல்யாணக் கட்ட்சிகளும் தி. ஜானகிராமனை மனதில் கொண்டு வரும். மூன்று கேள்விகள் எளிதாகக் கேட்டால் இரண்டாவது சற்றுக் கடினமாக இருக்க வேண்டாமா!!! படித்த போது நீங்களும் கொஞ்சம் அப்போது படித்தவைகளை நினைவில் கொண்டு வந்து இன்புற்றிருக்க மாட்டீர்களாஎன்ன!

  சரியாக யூகித்த அனைவருக்கும் ஆச்சர்யம் கலந்த பாராட்டுகள். ஏனென்றால், எனக்குக் கேட்கத்தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
 19. அடாடா... பொன்விலங்கையும். சத்திய வெள்ளத்தையும் படிச்சதுல ஹீரோ பேர் சத்தியமூர்த்திங்கறதால குழம்பி பல்ப் வாங்கிட்டனா...? சரியாகக் கண்டுபிடித்து என் தலைல குட்டின கீதா மேடத்துக்கு ஒரு சல்யூட்!

  தி.ஜா.வோட சிறுகதைகள் அதிகம் படிச்சதில்ல. அதனால தலைப்பு தெரியல. மத்ததெல்லாம் நாவல்தானே... வாஸந்தி கதை மனசுலயே இருந்தது. தலைப்பு... இப்ப ஞாபகப்படுத்திட்டீங்க. நன்றி நண்பர்களே...

  கேக்க மட்டும் தெரிஞ்ச நண்பரே... அடிக்கடி இப்படிக் கேளுங்க... கலந்துக்கிட்டது ரொம்பவே ரெஃப்ரஷிங்கா இருந்துச்சு.

  பதிலளிநீக்கு
 20. 'சாதாரண மனிதர்கள்' படித்ததில்லை. இருந்தாலும் ஆனந்த விகடனில் வெளிவந்த அந்தத் தொடருக்கு மாருதி சித்திரங்கள் போலிருக்கு. நினைவில் இருக்கிறது.

  வாஸந்தியின் ஜனனமும் படித்ததில்லை. 'கல்கி'யில் வந்திருந்தால் படித்திருப்பேன். அதில் இல்லை போலிருக்கு. வேறொரு காரணத்திற்காக அந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கூடியிருக்கிறது.

  நல்ல நினைவாற்றல். நிறைய உற்சாகம்! வாழ்த்துக்கள், பால கணேஷ்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!