புதன், 11 ஜூலை, 2012

இந்த மனுஷங்க சுத்த மோசம்பா....

             
இந்த மனுஷங்க சுத்த மோசம்பா.... என்ன ஜென்மங்களோ.... சொல்லவும் முடியலை... என்னாச்சு? ஏன் புலம்பறேன்னுதானே கேட்கறீங்க....? எனக்கு நாலு குழந்தைகள் பிறந்தபோது எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா... கஷ்டத்துக்கு அப்புறம் சந்தோஷம். அதை ஓடி ஓடி எதிர் வீட்டுக்காரர் கிட்ட சொல்ல நினச்சேன். அவருக்குத்தான் என்னை ரொம்பப் பிடிக்கும். கடவுள் வாயக் கொடுக்கலியே...

        
ஆனாலும் அவன் என்னைப் புரிஞ்சிகிட்டு வந்து பார்த்து அதிசயிச்சுப் போனான். ஒரு குழந்தை கிட்ட அசைவே இல்லையேன்னு கவலைப் பட்டான். எனக்குக் கவலை இல்லை. மற்ற மூணுக்குப்பால் குடிக்க அதுதான் எனக்கு வேணும். 
                     
அவனும் அவன் மனைவியும் குழந்தைகளும், இன்னும் பக்கத்து வீட்டுக் காரங்களும் எனக்கு ஓடி ஓடி பிள்ளை பெற்ற உடம்புன்னு 'பன்'னு, ரொட்டி கறி சோறுன்னு பார்த்துப் பார்த்துப் போட்டாங்க. அப்பப்போ மூணு குட்டியையும் எடுத்துக் கொஞ்சினாங்க. நாலாவது எங்கேன்னு அவங்களும் அவ்வளவாத் தேடலை. 
             
இந்தக் காக்கைகளையும் மற்ற நாய்களையும் நான் அந்த ஏரியாவிலேயே அண்ட விடுவதில்லை. காக்காய் முதல்லையே எனக்கு ஆகாது. துரத்து துரத்துன்னு துரத்துவேன். இபோ குட்டிகள் வேற இருக்கா... ரொம்பவே ஜாக்கிரதையா இருந்தேன். 
              
இதுவரை என் கூடவே இருந்த இன்னொரு வெள்ளை நாயையும் இந்த ஏரியாவிலிருந்தே  துரத்தி விட்டேன். அந்தத் தெருவில் விளையாடிய குழந்தைகள், பெரியவர்கள் அப்பப்போ வந்து என் குட்டிகளைப் பார்த்துக் கொஞ்சிட்டுப் போவாங்க. குழந்தைகள் குட்டிகளைத் தூக்கினால் பெரியவங்க 'ஜாக்கிரதை... ஜாக்கிரதை... தாய் கடிச்சிடப் போவுது'ம்பாங்க... நான் கடிக்கறதில்லைங்க...  நம்ம குட்டிங்க மாதிரிதானே அதுகளும்..
                 
ஆனா பாருங்க ஒரு நாள் என் மூணு குட்டி ரெண்டாயிடுச்சு. மூணாவது என்னாச்சுன்னு யாருக்கும் தெரியலை. சந்தேகமாப் பார்க்காதீங்க... நானும் இல்லை. அந்த ஸ்டேஜெல்லாம் தாண்டிடுச்சு இல்லே...
             
ரெண்டுல ஒண்ணு பொட்டை, ஒண்ணு கிடா... எல்லாம் இவங்க பேசிக்கறதுதான். அந்த கிடா குட்டி மேலத்தான் ரெண்டு மூணு பேருக்குக் கண்ணு. எதிர் வீட்டுக்காரன் பொண்டாட்டி அதுமேல உசுரையே வச்சிருந்தா.... தன் குழந்தையையே கொஞ்சுறா மாதிரிக் கொஞ்சுவா... 
                
அடுத்த ஒரு வாரத்துல கண்ணு திறந்த குட்டிங்க நடக்க ஆரம்பிச்சுது பாருங்க.... ஆண் குட்டியைக் காணோம்... கொண்டு போன ஒருத்தன் திரும்பிக் கொண்டு வரலை. எல்லோரும் தேடினாங்க... நான் எப்படி அவனை இவங்களுக்கு அடையாளம் காட்டுவேன்... அவனும் இவங்களோட சேர்ந்து அந்தக் குட்டியைத் தேடறான்... கோபம் வரலைங்க... அழுகைதான் வந்தது... அழுதேன். சில பேர் அனுதாபப் பட்டாங்க...  எதிர்வீட்டுக்காரங்க... அவங்களுக்கு என்னை மாதிரி ஜென்மங்களை  ரொம்பப் பிடிக்குமாம். மற்றவர்கள் நான் அழுதால் அவர்களுக்கும் அந்தத் தெருவுக்குமே ஆகாது என்று சொல்லி இவர்கள் பார்க்காத போது கல்லால் அடிப்பார்கள்.  என்ன செய்ய? என்னால் அழாமலும் இருக்க முடியவில்லையே.... 
                 
இருக்கற ஒரு குட்டியை நானும் சரி, எதிர் வீட்டுக்காரங்களும் சரி ரொம்ப ஜாக்கிரதையாப் பார்த்துகிட்டோம். அவங்களைக் கண்டாலே எனக்கு வால் தானா ஆட ஆரம்பிச்சுடும். என்னையும் என் குட்டியையும் கண்ணும் கருத்துமாப் பாத்துக்கறாங்களே...
                        
அப்புறம் எதிர் வீட்டம்மா ஒரு யோசனை சொல்லுச்சு. அவங்களுக்குப் பின்னால வீட்டுல இருந்தவங்களுக்கும் எங்கள் மேல் உயிர். குறிப்பா அவங்க வீட்டு வாண்டு அவனுக்கு வாங்கித் தரும் ரொட்டிஎல்லாம் எனக்குத்தான் போடுவான். அவன் குரல் கேட்டாலே அவன் வீட்டுப் பக்கம் போயிடுவேன். அவங்க வீட்டுல இந்த பாக்கி இருக்கற குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொல்வது என்று முடிவானது. சுற்றி இருக்கறவங்க எல்லார் வீட்டிலும் பெர்மிஷன் வாங்கினாங்க....
                   
என்ன கேட்கறீங்க... என் கிட்டயா... நல்லா கேட்டீங்க... என்னை யாரு கேக்கறா... இல்லை என்னாலதான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க...'நம்ம பேசறதை எல்லாம் அப்படியே புரிஞ்சுக்குது'ன்னு என்னைப் பத்திச் சொல்லிப் புல்லரிச்சுப் போயிடுவாங்க... எனக்குப் புரியுதுதான், ஆனால் என்னை உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே...
                    
அன்னிக்கே என் குட்டியை அவங்க வீட்டுக்கு எடுத்துப் போனாங்க. டீனா ன்னு பெயர் வச்சாங்க... என்ன பேரோ... ஆளாளுக்கு 'டீனா...டீனா'ன்னா இது என்ன பண்ணும்... பாவம்... எங்களுக்கெல்லாம் 'ச்...ச்....ச்,,,' னாலே போதும் ஓடி வந்துடுவோம். ஆனா பாருங்க, அப்படியும் அப்புறம் அப்புறம் 'டீனா'ன்னா என் குட்டி அவங்களைத் திரும்பிப் பார்க்கவும் அவங்களுக்கெல்லாம் ஒரே குஷி. 
                
நல்லாதாங்க போச்சு எல்லாம். நானும் கூட அவங்க வீட்டு வாசலுக்கே குடி போயிட்டேன்னு வச்சுக்குங்க. குளிப்பாட்டுவாங்க... துடைப்பாங்க... பௌடர் கூடப் போட்டு விடுவாங்க.... அவங்க வீட்டு வாண்டுகள் ரெண்டும் ட்ரெஸ் கூடப் போட்டு விட்டாங்க... தினமும் அங்கேயே பழியாக் கிடப்பேன். சந்தோஷமாத்தான் இருந்தது. 
                 
ஆனா யாரைக் குறை சொல்ல... மனுஷங்களையா என் குட்டியையா... ராத்திரி நேரம் எல்லாம் அது பாட்டுக்கு அழ, வந்தது வினை. அவங்க பக்கத்து வீட்டுக் காரங்க எல்லாம் 'ராத்திரி எல்லாம் தூங்கமுடியலை. கொண்டு விட்டுடு' ன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாங்க. இவங்களுக்கா மனசே ஆகலை என்றும் தெரிகிறது. அவங்களுக்குள்ளேயே பேசிகிட்டாங்க.... திடீர்னு பார்க்கறேன் குட்டியைக் காணோம். சுத்திச் சுத்தி வந்து தேடறேன். அந்த வாண்டை ஏக்கமாகப் பார்க்கிறேன். 
                        
'உள்ளேயிருந்து குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து காட்டேன்...' 
                     
"அட... எப்படித் தலையை சாய்த்து அழகாப் பார்க்குது பாரேன்..." குட்டி இருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்காரி! 
                
"இல்லை ஆண்ட்டி.... குட்டியைத் தேடுது....பாவம்! அதை நம்ம வெளியில் கொடுத்துட்டோம்னு அதுக்குத் தெரியவில்லை" என்றான். அடப்பாவி! என் குட்டியைத் தூக்கி யார் கிட்டயோ கொடுத்துட்டாங்க....
                    
ஏங்க... நீங்க சொல்லுங்க... இவங்க யாருங்க என்னோட குட்டியைத் தூக்கி யார் கிட்டயோ கொடுக்க...அங்க கஷ்டமா இருக்குன்னா திரும்பி என்கிட்டே விடறதுதானேங்க  நியாயம்... இவங்க குழந்தையை நாங்க எடுத்து வேற தெருவில் கொடுக்க முடியுமா சொல்லுங்க...இப்போ ஆளுக்கு ஆள், "பாவம் குட்டியைத் தேடுது.. பாவம் பாவம்" கறாங்க.... என்னோட குட்டி ராத்திரி கத்தினது தொந்தரவா இருக்குன்னு சொன்னவங்களும் சேர்ந்தே 'பாவம் பாவம்'னு சொல்றாங்களே.... எப்படிங்க அது? மனசாட்சியே இல்லையா இவங்களுக்கு? 
               
"எப்படி காலைத் தூக்கி தூக்கி வச்சு விளையாடும் தெரியுமா" 
                
ஆத்து ஆத்துதான் போறாங்க. அந்த வாண்டுகள் கண்களிலும் கண்ணீர் தெரியுது. என்ன சொல்லி என்ன... குட்டியைத் தூக்கி மனசாட்சியே இல்லாம யார் கிட்டயோ தந்துட்டு என்ன வசனம் வேண்டிக் கிடக்கு?
               
மனசுதான் இப்படிப் போராடுது.... இதோ பாருங்க இவங்க என்னைப் பத்திப் பேசறாங்கன்னு எனக்குத் தெரியுது... நான் என்ன நினைக்கிறேன்னு இவங்களுக்குச் சொல்ல முடியலை. கோபம் மனசுல. ஆனால் அவங்க பேசப்பேச என்னோட வால் தன்னால ஆடிகிட்டு இருக்கு... ஏங்க அது?

                        

17 கருத்துகள்:

  1. எழுத்தாளர் யார் புதிர்களுக்கு பதில் சொல்லாம எப்படிங்க அடுத்த பதிவு போடலாம்? ப்ளாக் உலக சட்டப்படி இது தப்பு !

    பதிலளிநீக்கு
  2. எங்கள் ப்ளாக்11 ஜூலை, 2012 அன்று 10:30 AM

    பொறுமை, பொறுமை. மற்றவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம்!

    பதிலளிநீக்கு
  3. ஆடுகிற வாலில் இருந்தே உம் மனசை புரிஞ்சுகிட்டுதான் எழுதியிருக்கிறார் எதிர்த்த வீட்டுக் காரர். குட்டியை உங்கிட்ட திரும்பக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் நல்லெண்ணத்தோட அவங்க தூக்கிக் கொடுத்த இடத்தில் பத்திரமா வாழும்ங்கிறத நினைச்சு மனசை தேத்திக்கோ.

    பதிலளிநீக்கு
  4. //
    என்ன கேட்கறீங்க... என் கிட்டயா... நல்லா கேட்டீங்க... என்னை யாரு கேக்கறா// ரொம்ப ரொம்ப ரொம்பவே அருமையா எழுதி இருக்கீங்க. ஒரு நாயின் உணர்வுகள அப்படியே வார்த்தை ஆகிருகீங்க. நாய் பூனை கூட பழகினவங்களுக்கு இந்தக் கதை ரொம்ப பிடிக்கும்... எனக்கு ரொம்ப ரோம்ப ரொம்ப பிடிசிருக்குய்

    //"எப்படி காலைத் தூக்கி தூக்கி வச்சு விளையாடும் தெரியுமா" // நான் வளர்த்த பூனைக் குடியின் நியாபம் வருகிறது. அவற்றைப் பிரியும் சோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை சார்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு கவிதை படித்த உணர்வு ..அருமை

    பதிலளிநீக்கு
  6. கணினி சரியாயிடுச்சா? சொல்லவே இல்லையே? சரி போகட்டும்.இதை இன்னமும் படிக்கலை. படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  7. மோகன்குமாருக்குக் கன்னாபின்னாவென என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. //என்ன கேட்கறீங்க... என் கிட்டயா... நல்லா கேட்டீங்க... என்னை யாரு கேக்கறா... இல்லை என்னாலதான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க...'நம்ம பேசறதை எல்லாம் அப்படியே புரிஞ்சுக்குது'ன்னு என்னைப் பத்திச் சொல்லிப் புல்லரிச்சுப் போயிடுவாங்க... எனக்குப் புரியுதுதான், ஆனால் என்னை உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே...//

    எங்க மோதி நினைவு வந்துடுச்சு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடி வந்து படிச்சேன். எங்க மோதிக்குக் கண் திறக்கும் முன்னரே எங்களிடம் வந்து விட்டான். ஆகவே அம்மாவைப் பார்த்தே இருக்க மாட்டான். அப்போ அதைப் பத்தி நினைக்கலை. இப்போ நினைச்சால்! :(

      நீக்கு
  9. //இப்போ ஆளுக்கு ஆள், "பாவம் குட்டியைத் தேடுது.. பாவம் பாவம்" கறாங்க.... என்னோட குட்டி ராத்திரி கத்தினது தொந்தரவா இருக்குன்னு சொன்னவங்களும் சேர்ந்தே 'பாவம் பாவம்'னு சொல்றாங்களே.... எப்படிங்க அது? மனசாட்சியே இல்லையா இவங்களுக்கு? //

    நாய்க்குட்டிகளை இழந்த தாய் நாய் பேசுவது போன்ற அழகிய பதிவு.

    குட்டியின் படங்களும் ஜோர் ஜோர்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கேக்காம குட்டியை எடுத்து கொடுத்தது தப்புதான்(
    (நீங்களும் என்னைபோல நாலு கால் விரும்பியா )
    தா(நா)யின் மனக்குமறல் .....

    பதிலளிநீக்கு
  11. Naaippaaasaththil urugitten! Ada, nesamaththaan, enakkum padiththa thozhi!

    பதிலளிநீக்கு


  12. அண்ணா உங்களுக்கு நேரம் இருக்கும்போது இதை படிங்க

    http://kaagidhapookal.blogspot.co.uk/2013/01/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் பதிவு பார்த்து அழுதுவிட்டேன்...என் உணர்வுகளைக் கட்டுப் படுத்த கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு. ரொம்பவே நெகிழ்த்திய பதிவு அது உங்கள் எழுத்தின் வலிமை!

    பாவம் அந்த அம்மா செல்லம் இல்லையா....குட்டிகள் ரொம்ப அழகா இருக்கு அதுவும் அந்த நின்னுட்டுருக்கற பப்பி ரொம்ப க்யூட்....அதன் கலரைப் பார்த்தா உங்க ப்ரௌனி அழகி போலத் தெரியுதே!!

    பொதுவா சொல்லப்படுவது தாய் செல்லத்திடம் இருந்து அதன் செல்லங்களை பிரிக்க 3 மாதமாவது ஆகனும் என்று. ஏனென்றால் தாய்ப்பால் ஒன்று....அப்புறம் 4 மாதத்திற்குப் பின் எப்படியும் அதுங்களே பிரிய ஆரம்பிச்சிடும்...இது என் ஏரியான்னு அம்மா விடமே குட்டிகள் குறிப்பா ஆண் குட்டிகள் உறுமத் தொடங்கும்...அம்மாவும் உறுமத் தொடங்குவாள். 6 மாதத்திலிருந்து கேட்கவே வேண்டாம்....தெருவுக்குத் தெரு எந்தக் கூட்டம் ஏத்துக்க்குதோ அங்க போய் செட்டில் ஆகிடும்...தன் ஏரியாவைப் பிரித்துக் கொள்ளும்...சண்டை எல்லாம் வரும்...

    ஸோ மகன் சொல்லுவான் எப்படியும் பிரியப் போகுது இருக்கும் காலம் வரை அம்மாவுடனே இருக்கட்டுமே...அம்மா செல்லம் நினைப்பது ஆஹா அதன் உணர்வுகளை அப்படியே சொல்லிட்டீங்க. நமக்குப் பேச முடியுது ஆனா அதுகளுக்குப் பேச முடிவதில்லை உணர்வுகளைச் சொல்லத் தெரியவில்லை என்பதால் மனிதர் நாம் எப்படி டாமினேட் செய்யறோம் இல்ல? என்னவோ நமக்குத்தான் இந்த உலகமே சொந்தம் என்பது போல்.....உங்க தலைப்பு அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்ஸாப்பில் சொல்லி அதிகம் சொல்லிட்டீங்க...

      //ஸ்ரீராம் பதிவு பார்த்து அழுதுவிட்டேன்...//

      அந்த அளவுக்கா இருந்தது?!! ஏஞ்சலுக்கு சரிஜோடி நீங்க!

      //ஸோ மகன் சொல்லுவான் எப்படியும் பிரியப் போகுது இருக்கும் காலம் வரை அம்மாவுடனே இருக்கட்டுமே...//

      உண்மைதான். ஆனால் மனிதனுக்குப் பொறுமை இருப்பதில்லை. நினைத்ததை உடனே அடைந்துவிடவேண்டும்! சுயநலம்.

      நன்றி கீதா... என் வேண்டுகோளை ஏற்று இங்கு பதிவிலும் பதில் கொடுத்ததற்கு.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!