வெள்ளி, 20 ஜூலை, 2012

காற்றினிலே வரும் கீதம் !

                     
பொதிகையில் ஒரு ஞாயிறு இரவு ஒன்பது 
மணிக்குமேல் எம்மெல்வி பற்றி வயலின் கன்னியாகுமரி பேசிக் கொண்டிருந்தார். அப்புறம் தெரிந்து கொண்டது என்னவென்றால்,  ஞாயிறு இரவுகளில், ஒன்பது மணி, ஐந்து நிமிடங்களுக்கு 'காற்றினிலே வரும் கீதம்' என்ற தலைப்பில் பிரபல இசைக் கலைஞர்கள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்று! (பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டும்தான் இந்த ஐந்து நிமிடக் கணக்குகள் நிகழ்ச்சி நிரல்களில் காணப்படும்! மற்ற சானல்களில் ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று நிரலில் சொல்லியிருந்தாலும், விளம்பரங்கள் முடிந்து, நிகழ்ச்சி ஆரம்பமாக பன்னிரண்டு நிமிடங்கள் ஆகும்!) இந்த நிகழ்ச்சி என்று ஆரம்பித்ததோ ... நாகார்ஜுன் அனுஷ்கா படம் ஒன்றை ஜெமினியிலும், 'டைம்ஸ் நவ்' வில் R D பர்மன் பற்றிப் பார்த்து, கேட்டுப் புல்லரித்துப் போனதற்கும் நடுவில் வைத்த போது தெரிந்தது. அதில் கேட்ட சில சுவாரஸ்ய விஷயங்கள்.  

           
-எம் எல் வி தான் பாடிய பாடல்களை-ரெகார்டை- போட்டுக் கேட்பதில்லை. மற்றவர்கள் பாடிய பாடல்களைத்தான் கேட்பார்.
              
-கச்சேரிக்குமுன் பிராக்டீஸ் செய்து பார்த்ததில்லை. கஷ்டமான பல்லவி என்றால் ஓரிருமுறை பாடிப் பார்த்துக் கொள்வார்.
               
-அபாரமான கல்பனாஸ்வரம். பாலமுரளிக்கும் இந்தத் திறமை உண்டு. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரிடத்திலிருந்து வருவதில்லை இந்தத் திறமை. தனக்குள்ளேயே இருக்க வேண்டும்.
             
-உடன் பாடியது யார் என்று பார்த்தால் சின்னப் பெண்ணாய் சுதா ரகுநாதன். எம்மெல்வி கல்பனாஸ்வரம் பாடும்போது அமைதியாகக் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தார்.
              
-ஸ்ரீலங்காவில் எண்பத்தி மூன்றாம் வருடம் ரேடியோ நிகழ்ச்சிக்குப் பாடப் போனபோது கலவரம் நடந்த போது சிறிய அறையில் முப்பது பேர்கள் சத்தம் போடாமல் அமர்ந்திருந்த நிலை பற்றியும், அரசாங்கத்தின் சார்பில் ஒரு அம்பாசடர் கார் வந்து அதில் எட்டு பேர் மட்டுமே போக முடியும் என்றபோது கூட இருந்தவர்களை முதலில் அனுப்பிய பெருந்தன்மையைச் சொன்னார்.
               
மணி கிருஷ்ணஸ்வாமி அமெரிக்க சான்ஸ் வந்தபோது தனக்கு வயலின் வாசிக்க கன்னியாகுமரியை அழைத்தபோது எம்மெல்வி கன்னியாகுமரியை அவருடன்  போகுமாறு  பணித்தாராம்.  'அக்கா, நான் போக மாட்டேன்... இங்கே உங்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் இருக்கு. உங்களுடன்தான் வாசிப்பேன்' என்றாராம் இவர். எம்மெல்வி தான் நிறைய கச்சேரிகள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறியதோடு அடுத்த ஒன்றரை மாதத்தில் சான்பிரான்சிஸ்கோவில் சங்கீத கிளாஸ் எடுக்க தான் வரப் போவதைச் சொல்லி, 'நான்தான் வந்துடுவேனே, ஒன்றரை மாதம்தானே, போ' என்றாராம். பெட்ரோல் விலை ஏறியது போன்ற காரணங்களினாலும் மணி கிருஷ்ணஸ்வாமி பண விவகாரங்களை முன்னரே சரியாகப் பேசிக் கொள்ளாததாலும் நஷ்டமேற்பட்டது என்றறிந்த எம்மெல்வி அந்த சான்பிரான்சிஸ்கோ சான்சை மணி  கிருஷ்ண ஸ்வாமிக்குக் கொடுத்த பெருந்தன்மையையும் கன்னியாகுமரி சொன்னார்.
                
இதற்கடுத்த இரண்டு வாரங்கள் டி கே பட்டம்மாள் பற்றிய நிகழ்ச்சி. விஜய் சிவா பேசினார். டி கே பட்டம்மாள் பற்றி நிறையப் பகிர்ந்து கொண்டார். ஒரு பாடலை பாடுவதற்குமுன் டி கே பட்டம்மாள் அதைப் பலமுறைப் பயிற்சி செய்வாராம். என்னதான் கச்சேரிகள் செய்தாலும் ஒரு குடும்பத் தலைவியாகத் தனது கடமைகளை அவர் நிறைவேற்றத் தவறியதே இல்லை என்றார். டி கே பி கச்சேரி போடும்போது சிறு பெண்ணாக நித்தியஸ்ரீயை அவருடன் பார்க்க முடிந்தது. இரண்டாவது வாரம், ஜூலை பதினைந்து அன்று, டி கே பி யுடன் மேடைகளில் பாடிய, அவருடைய மருமகள் திருமதி லலிதா சிவகுமார் (நித்யஸ்ரீ அவர்களின் அம்மா) நித்யஸ்ரீ மகாதேவன், காயத்ரி (நித்யஸ்ரீயின் அக்கா ) எல்லோரும், டி கே பி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஜூலை பதினாறு, டி கே பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். 
             
எல்லாவற்றையும் விட ஆச்சரியமான விஷயம், பேட்டி கண்டவர், யு எம் கண்ணன்! அந்தக் காலத்தில் எதிரொலி நிகழ்ச்சிகளில்  கருந்தாடி குறுந்தாடியுடன் காணப்பட்ட யு எம் கண்ணன், தாடி, முடி எல்லாவற்றுக்கும் டினோபால் போட்டது போல மின்னலடிக்கும் வெண்மை முடியுடன்!! 
               
அடுத்த வாரம் (வரும் ஞாயிறு) எம் எஸ் பற்றி என்று தெரிகிறது. பார்க்க வேண்டும்.  
                  

13 கருத்துகள்:

 1. எனக்கு இசை அறிவு மிகக் குறைவு, ஆனால் கர்நாடக இசையில் நித்திய ஸ்ரீ மகாதேவன் பாடல்கள் மிகப் பிடிக்கும்... இக்காலத்தில் பொதிகை டிவி பார்க்கும் உங்களை உலக அதிசியமாகக் கருத வேண்டும். ஆனால் பல நிகழ்சிகள் பார்பரின்றி கடந்து செல்வதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது

  பதிலளிநீக்கு
 2. அடடெ... இப்படியொரு நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாமல் போயிட்டேனே.. வர்ற வாரம் அவசியம் பார்த்துடறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. 9 மணிக்கு மேல் நீயா..? நானா? பார்க்காமல் இதை பார்க்க ஆரம்பித்து விட்டேன். பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 4. நம்ம வீட்டு கேபிள் டிவியில் பொதிகை சரியாவே தெரிவதில்லை :((

  தலைவி படத்துக்கு நன்றி :))

  பதிலளிநீக்கு
 5. //இக்காலத்தில் பொதிகை டிவி பார்க்கும் உங்களை உலக அதிசியமாகக் கருத வேண்டும். ஆனால் பல நிகழ்சிகள் பார்பரின்றி கடந்து செல்வதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது//

  எங்களுக்கு தேசபக்தி அதிகம். :))) எக்காலத்திலும் பொதிகை தான் அதிகம் பார்ப்போம். பல நல்ல நிகழ்ச்சிகள் வருகிறது. நேத்திக்குப் பாருங்க, எப்போவோ ஜன்மாந்தரத்திலே வலம்புரி ஜான் உயிரோட இருந்தப்போ நடந்த ஶ்ரீரங்கம் கம்பன் கழகப் பட்டி மன்றப் பேச்சுக்களை ஒளிபரப்பினாங்க மத்தியானமா. சூப்பர் நிகழ்ச்சினு சொல்லவும் வேணுமா!

  அதே போல் நல்ல கச்சேரிகளோ, நல்ல நாட்டிய நாடகமோ பார்க்கணும்னால் பொதிகையை விட்டால் எஸ்விபிசி சானல் தான். போன வாரத்துக்கு முந்திய வாரம் ஒரு நாட்டிய நாடகம் ராமாயணத்திலே போட்டாங்க. அதிலே அநுமனா ஆடிய பொண்ணு குதிச்ச குதியிலேயும் தாவின தாவல்லேயும் அசந்துட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. எங்கள் ப்ளாக்20 ஜூலை, 2012 அன்று 5:19 PM

  //மோகன் குமார் said...
  நம்ம வீட்டு கேபிள் டிவியில் பொதிகை சரியாவே தெரிவதில்லை :((

  தலைவி படத்துக்கு நன்றி :))//
  தலைவி? ஓஹோ அவரா? அ உ அ ர ம (அகில உலக ---- ரசிகர் மன்றத்) தலைவர், எங்கள் - - - அவர்களிடம் அனுமதிச் சீட்டு பெற்றீர்களா? இல்லையேல் தலைவி என்று சொல்ல அனுமதி கிடையாது !! :))))

  பதிலளிநீக்கு
 7. பொதிகை டிவியில் பல நல்ல நிகழ்சிகள் வரும். எங்க  அம்மா வீட்டிற்குப் போனால் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.இந்த நிகழ்ச்சியை u tube ல் பார்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. இந்த நிகழ்ச்சி பார்த்ததில்லை. எம் எல் வி பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

  /யு எம் கண்ணன்/

  அட ஆமாம், எதிரொலியில் வருவார்.

  பதிலளிநீக்கு
 9. எம்.எல்.வசந்தகுமாரி பற்றி எழுதியதைப் ப‌டித்ததும் அவருடைய ' அழகா' பாடல் நினைவுக்கு வந்தது. சுத்த தன்யாசியில் குரல் அப்படி அருமையாக இழையும் சுகமான ஆலாபனையுடன்!

  புதிய நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
 10. பொதிகையில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.எமெல்வி நிகழ்ச்சியின் போது ஊரில் இல்லை. அருமையாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 11. பொதிகை எல்லாம் பாக்கறதே இல்ல.நல்ல நிகழ்ச்சிகளை பார்த்து பகிர்ந்துகிட்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. இந்த வாரம் பார்க்க முயற்சிக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 13. //யு எம் கண்ணன்//
  இவரின் படமும் போட்டிருக்கலாமே? ஆரம்ப காலங்களில் இவர் எதிரொலியில் வரும் கடிதங்களுக்குப் பதிலளிக்கும்விதம் சுவாரசியமாக இருக்கும். அதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பது!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!