திங்கள், 2 ஜூலை, 2012

நிக்காதே, ஓடு!

       
'எங்களி'ன் ரத்தக் காட்டேரிப் பதிவுக்கு பதில் பதிவாக ஒரு அற்புதப் பதிவு தந்த அப்பாதுரையின் பதிவில் வந்த குறி சொல்பவர் பற்றிய வரிகள் எனக்கு எங்கள் வீட்டு அனுபவங்கள் சிலவற்றை நினைவு படுத்தின.
          
(பெரிதாக எதுவும் அந்தப் பதிவுகளின் தொடர்ச்சியாக இதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!)
              
இது சிறுவயதில் பார்த்த, அனுபவித்த ஒரு அனுபவத்தின் பகிர்வு!
               
உறவினர் ஒருவர் இருந்தார். அவரும் அவர் மனைவியும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தாலும் இவருக்கு  ஒரு பழக்கம் இருந்தது. குறி சொல்வார். காந்திமதி அம்மன் என்று ஞாபகம், அவர் (அது?) வந்து அவர் நாக்கிலிருந்து பேசுவதாகச் சொல்வார்! ஆனால் அவர் அந்த பொழுதில் சொல்லும் சில வார்த்தைகளை அம்மன் சொல்லுமா என்று சந்தேகம் வரும்.
 
              
"கெட்ட தேவதை குறுக்க குறுக்க வருதுடா.... அதைத் துரத்த வேண்டி அப்படிச் சொல்ல வேண்டியிருக்கு" என்பார்.
              
வெள்ளி மாலைகளிலும் ஞாயிறு மாலைகளிலும் சாதாரணமாகக் குறி சொல்வார். அப்புறம் விரும்பும் நேரத்திலும் குறி சொல்வார். வெற்றிலை பாக்கு, பழம், ஐந்து ரூபாயோ பத்து ரூபாயோ தட்சிணையுடன் கஸ்டமர்கள் வந்ததும் (இவரும் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருப்பார்) குளித்து விட்டோ அல்லது முகம் கழுவி விட்டோ வந்து சுவாமி முன் அமர்வார். விபூதியை எடுத்து நெற்றி பூரா அப்பிக் கொள்வார். 

கண்கள் மூடியிருக்க நிமிடங்கள் கரையும். போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு சந்தைக்குப் போகும் நாட்களில் போய் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மாட்டிக் கொண்டதுண்டு. இது மாதிரி சமயங்களில் அமைதி காக்க வேண்டும். கஸ்டமர்கள் எதிரில் பயபக்தியுடன் அமர்ந்திருப்பார்கள். அவரின் திருமதி சமயலறையில் வேலையாய் இருப்பார். அவர்களின் செல்வங்கள் இப்படி ஒரு காட்சியே நடக்கவில்லை போல தங்கள் ஹோம்வொர்க்கில் கவனமாக இருப்பார்கள்.
                       
நிமிடங்கள் கரைந்த பின் கண்மூடியிருக்கும் அவர் வாயால் 'உஸ்.... உஸ்..ஸ்......' என்று சத்தம் செய்தபடியே தலையை இடம் வலமாக ஆட்டத் தொடங்குவார். மெல்ல மெல்லப் பேசத் தொடங்குவார். 'அதானே... இதானே'  என்று கேள்விகள் கேட்டு பதில்கள் சொல்லி கடைசியாக எல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரம் சொல்வார். சொல்லி முடித்ததும் அவ்வளவுதான் எழுந்து போ என்று சொல்லி கையை, 'படார்' என்று சத்தம் செய்வார். கண்கள் மூடியபடியே இருக்க, விபூதியை அள்ளி வாயில் போட்டுக் கொள்ளுவார். முன்னும் பின்னுமாக ஆடி, ஒரு வழியாக 'ஆச்' என்ற கூச்சலுடன் கண் திறப்பார். சுவாமி மலையேறி விட்டதாம்!
 
விபூதிக்குத்தான் நிறைய செலவு. விபூதியை அள்ளி எதிரே அமர்ந்திருக்கும் ஆள்  கையில் தருவார். சைகையிலேயே நெற்றியில் பூசிக் கொள்ளச் சொல்வார். இன்னும் கொஞ்சம் தந்து தொண்டையில், அப்புறம் கையில், அப்புறம் வயிற்றில்.... அப்புறம் கொஞ்சம் கொடுத்து வாயில் போட்டுக் கொள்ளச் சொல்வார். அப்புறம் கொஞ்சம் விபூதி எடுத்து தலையில் வைத்து ஷாம்பூ தேய்ப்பது போல மெல்லத் தேய்த்துக் கையை எடுக்காமல் கழுத்து முதுகு என்று வந்து கால் பக்கம் வந்து கையை உதறுவார். இப்படிச் செய்யும் போதெல்லாம் அவர் கண்கள் முக்கால் வாசி மூடியே இருக்கும். வாய் அந்தக் காலத் தமிழ்ப் படங்களில் பாடல் காட்சிகளில் ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்கு அல்லாடுவது போல வாயைத் திறந்து திறந்து மூடுவார்களே அபபடி மெல்லச் செய்து கொண்டிருப்பார்!
                 
சில நேரங்களில் கொஞ்ச நேரக் கண் மூடல், தலையாட்டலுக்குப் பின் 'அம்மன் வரவில்லை, அருள் கிடைக்கவில்லை' என்று தோல்வி அறிவிப்பு ஒன்று கொடுத்து ஒரிஜினாலிட்டி டச் கொடுத்ததும் உண்டு!
             
நினைத்த நேரத்தில் அவரால் அம்மனை வரவழைக்க முடிந்தது. சில சமயங்களில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் சமயங்களிலும் கேட்காமலேயே அம்மன் அவர் மீது ஆஜராகி விடுவதும் உண்டு. எங்களுக்குத்தான் தொல்லை. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்த நேரம் அது. குறி சொல்லி விட்டு கண்கள் மூடியபடியே விபூதி சாப்பிட்டு, ஒரு சொம்பு தண்ணீரும் கேட்டு வாங்கிக் குடிப்பார். ("நல்ல பெரிய சொம்புல தண்ணி எடுத்து வா") குறி சொல்வதற்கு நடுவிலேயே சில நேரம் அமைதியாக இருப்பார். தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டி மறுப்பார். சைடில் பார்த்து "சீ போ நாயே..... ஓடிப்போ.... தள்ளிப்போ...." என்பார். "ஒ.....ளி...ஒ...ளி (கெட்ட வார்த்தை!)" என்பார். இதைத்தான் 'அம்மன் இப்படிச் சொல்லுமா' என்று கேட்போம். அதில் அவர் மனைவிக்குக் கோபம் வரும். அருகில் வந்து குறி சொல்ல விடாமல் துர்த் தேவதைகள் தடுக்குமாம். அவற்றை விரட்டுகிறாராம். அமைதியாக இருக்கும் நேரத்தில் நாமும் அமைதி காக்க வேண்டும். பொறுமை இன்றி எதாவது பேசி விட்டால் அம்மனுக்குக் கெட்ட கோபம் வந்து விடும்.
                   
இதில் எங்களுக்கு என்ன தொல்லை என்றால் இவர் சொல்லும் கன்னா பின்னா பரிகாரங்களை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்குத்தானே....
                  
உதாரணத்துக்கு ஒன்று.
 
                     


"சர்க்கரைப் பொங்கல் ரெண்டு டம்ப்ளர் அளவுக்கு செஞ்சி எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து எடுத்துப் போ.... துணிப்பை வேண்டாம்... பிளாஸ்டிக் பேக் அல்லது வொயர் கூடை பரவாயில்லை. ரெண்டு எலுமிச்சம் பழம் எடுத்துக்கோ. ஒண்ணை வெட்டி அதுல குங்குமம் தடவி 'பேக்'ல போட்டுக்கோ... மீனாட்சி அம்மன் கோவில் போய் அம்மன் சன்னதிக்கு வெளில... எங்க... அம்மன் சன்னதிக்கு வெளில....  நின்னுக்கோ... சுவாமி சன்னதி போகக் கூடாது. ஒருத்தர் சன்னதிக்குள்ள போய் அம்மனைக் கும்பிட்டு விட்டு வந்து 'பேக்'கை பார்த்துக்கணும். அடுத்தவர்கள் அப்புறம் உள்ளே போய் அம்மனைப் பார்த்து வரணும். வெளில நின்னு நல்ல பழுத்த சுமங்கலியாப் பார்த்து இந்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் மாதிரி ஒரு ஒரு ஸ்பூன் குடு. மூணு கன்னியாப் பொண்ணுக்கு ரெண்டு ரெண்டு ஸ்பூன் குடு. அவங்க சாப்பிட்டதும் எலுமிச்சம் பழத்துல இருக்கற குங்குமத்தை அவர்களிடம் காட்டு. இப்படி ஒன்பது சுமங்கலிப் பொண்ணுங்களுக்கும், மூணு கன்னியாப் பொண்ணுங்களுக்கும் கொடுத்த பின் அந்த எலுமிச்சம் பழத்தை கோவிலுக்கு வெளியே தெற்கால ஒரு பாதி, வடக்கால ஒரு பாதின்னு போட்டுட்டு மீதி இருக்கற வெட்டாத எலுமிச்சம்பழத்தைப் பூ சுத்தி அம்மனுக்கு முன்னால காட்டிட்டு, எடுத்துட்டு வந்து நம்ம பூஜையறைல வைங்க... மூணு நாள் போகட்டும். அப்புறம் என்ன செய்யணும்னு சொல்றேன்"
  
பரிகாரம் ஒரே மாதிரிச் சொல்லக் கூடாது அல்லவா.... அடுத்தமுறை தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் பரிகாரம் சொல்வார். அதுவும் லேசில் செய்யக் கூடியதாய் இருக்காது. செய்யாவிட்டால் அலட்சியப் படுத்துகிறோம் என்ற கோபமும் அதனால் அப்பாவுக்குக் கோபமும் வரும். அவர்களுக்கென்ன.... நாங்கள்தானே கோவிலில் போய் அங்கு வருபவர்களின் சந்தேகப் பார்வையையும் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்?  
                        
அய்யா... யோசித்துப் பாருங்கள்... இப்படியெல்லாம் கொடுத்தால் வாங்குவார்களா... நம்மை உண்டு இல்லை என்று செய்து விட மாட்டார்களா.... எங்கள் மீது அவருக்கு ஏதோ தீராத கோபம் இருந்தது என்று எங்களுக்குத் தோன்றும். கைரேகை ஜோசியம் எல்லாம் பார்ப்பார். அப்பா அம்மாவை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள், யார் சுயநலம் என்றெல்லாம் எங்களைப் பற்றி அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக்கவில்லை என்று இன்று தெரிகிறது!
                          
அண்ணனின் கல்யாணத்திலும் அவருக்கு அம்மன் வந்ததே பார்க்கணும். ஓட முடியாதது அண்ணன்தான். நாங்கள் எல்லாம் ஓடி விட்டோம். தெரியாத ஊரில் யார் அய்யா 'பரிகாரம்' செய்வது!  
                    

23 கருத்துகள்:

 1. //ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்கு அல்லாடுவது போல வாயைத் திறந்து திறந்து மூடுவார்களே //
  ஏன்? ஏன்? சீரியஸா படிச்சுட்டு வரும்போது இப்படி ஒரு காமெடி!! :-)))

  பரிகாரங்கள்... செயல்படுத்தும்போது கிடைச்ச சுவையான அனுபவங்களையும் பதிவாக்குங்க.

  பதிலளிநீக்கு
 2. //பின் அந்த எலுமிச்சம் பழத்தை கோவிலுக்கு வெளியே தெற்கால ஒரு பாதி, வடக்கால ஒரு பாதின்னு போட்டுட்டு //

  If some 10 people do (even 1 person does) it then it's nothing but public nuisance...

  பதிலளிநீக்கு
 3. //அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக்கவில்லை என்று இன்று தெரிகிறது! //

  Really good post !

  பதிலளிநீக்கு
 4. //அப்பா அம்மாவை யார் வைத்துக் காப்பாற்றுவார்கள், யார் சுயநலம் என்றெல்லாம் எங்களைப் பற்றி அவர் அப்போது சொல்லிய அருள்வாக்குகள் ஒன்றும் பலிக்கவில்லை என்று இன்று தெரிகிறது!//

  ;)

  விழிப்புணர்வு தரும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ம்ம் ஆனாலும் சிலர் சொல்லுவது நிஜம் தான் சகோ! நம்பிக்கை வேறுபடும்!

  பதிலளிநீக்கு
 6. சுவாரஸ்யமான மனிதர்கள்
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. மிகவும் அருமை. எழுத்து நடை, நகைச்சுவை, கதை சொல்லும் நேர்த்தி .... அருமை. எழுத்தாளர் பெயர் என்னவோ ?

  பதிலளிநீக்கு
 8. விதவிதமான பரிகாரங்கள்.. வித்தியாசமான அனுபவங்கள். நிறைவேத்துனீங்களா இல்லையான்னும் பகிர்ந்துக்கோங்க :-)

  பதிலளிநீக்கு
 9. // BhanuMurugan said...
  மிகவும் அருமை. எழுத்து நடை, நகைச்சுவை, கதை சொல்லும் நேர்த்தி .... அருமை. எழுத்தாளர் பெயர் என்னவோ ?//

  கஸ் பண்ணுங்க! - உங்களுக்கு அஞ்சு சான்ஸ்!

  பதிலளிநீக்கு
 10. இந்த அஞ்சு சான்ஸ் குடுக்கறதை சான்ஸ் கிடைச்சா விட மாட்டீங்களே?

  பதிலளிநீக்கு
 11. அஞ்சு சான்ஸ் கொடுக்கறதை சான்ஸ் கிடைச்சால் விடுவோமா விடமாட்டோமா - கஸ் பண்ணுங்க ..... உங்களுக்கு அஞ்சு சான்ஸ்!

  பதிலளிநீக்கு
 12. 'ஆம்' - 'இல்லை' என்று இரண்டு சாய்ஸ் இருக்குமிடத்திலும் ஐந்து சான்ஸ் ?

  பதிலளிநீக்கு
 13. சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 14. எப்பிடிச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.ஆனாலும் படங்களைப் பாத்தால் ஒரு பயம் இருக்குத்தான் !

  பதிலளிநீக்கு
 15. உங்கள் அந்த உறவினரின் சொந்த ஊர் திருநெல்வேலி. சரியா?

  ஒரு சின்ன பரிகாரம்:

  பதிவின் கடைசி பாராவிற்கு இரண்டு பாராக்கள் முந்தி பதிவின் நட்ட நடுவில் வெள்ளை அடிக்கப்பட்டிருக்கல்லவா?

  அது போக வழி:

  நல்ல வெளிச்சத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கணினித்திரையிலும் நன்றாக வெளிச்சம் விழ வேண்டும்.
  இரவென்றால் திரையின் பின்பக்கம்
  ட்யூப் லைட் இருக்கிற மாதிரி. இதெல்லாம் எதற்கென்றால், இதெல்லாம் இல்லையென்றால் அந்த வெள்ளையே தெரியாது.

  இப்பொழுது தான் வேலையே ஆரம்பிக்கப் போகிறது. இந்தப் பதிவிற்கான Posts-யைக் கிளிக்கி, வந்த திரையில் இந்தப் பதிவுக்கான Edit-யை கிளிக்கவும். பின் கிளிக்க வேண்டியது:HTML. இப்பொழுது HTML format வந்தாச்சா? அதில் வெள்ளையடித்திருக்கும் இடத்திற்கு வாருங்கள். Span-ல் ஆரம்பித்து white வரை delete செய்யுங்கள். பிறகு compose format கிளிக்கி அதற்கு வந்து save செய்து விட்டு update செய்தால், இந்த வெள்ளையடிப்பு நீங்கியிருக்கும்.

  -- இந்தப் பரிகாரமெல்லாம் உங்களுக்கு பிச்சாத்து;தெரிந்திருக்கும். இதுவரை இரண்டு தடவைகள் உங்கள் பதிவுகளில் இந்த வெள்ளையடிப்பைப் பார்த்ததினால் சொல்லத் தோன்றிற்று. இன்னொரு காரணமும் இருக்கு. நானா தெரிந்து கொண்ட இதை இன்னொருத்தருக்குத் தெரிவிக்கணும் என்று ஒரு (அல்லது ஓர்?) அல்ப ஆசை. அதான். ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 16. வழக்கம் போல எனக்கு இது அப்டேட் ஆகலை. இது அந்த உம்மாச்சி அம்மன் வேலையா இருக்குமோனு சந்தேகமா இருக்கு. :P:P:P

  //வாய் அந்தக் காலத் தமிழ்ப் படங்களில் பாடல் காட்சிகளில் ஹீரோ பாடும்போது ஹீரோயின்கள் ஒரு மாதிரி மூச்சுக்கு அல்லாடுவது போல வாயைத் திறந்து திறந்து மூடுவார்களே அபபடி மெல்லச் செய்து கொண்டிருப்பார்!//

  வி.வி.சி. ஸ்ரீராம், நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. :))))))))

  பதிலளிநீக்கு
 17. எங்க தெருவிலேயும் ஒரு அம்மா இப்படி இருந்தாங்க. நான் சொல்றது அம்பத்தூரிலே. அவங்க இத்தனைக்கும் போஸ்ட் கிராஜுவேட். பெண் தொழிலதிபர். கடைசியிலே பார்த்தால் அவங்க அம்மாவுக்கு இந்த மாதிரி உம்மாச்சி வருவாங்களாம். அவங்க சாகிறச்சே பொண்ணு கிட்டே கொடுத்துட்டுப்போயிட்டாங்களாம். இவங்களுக்குப் பரத நாட்டியம் வேறே தெரியுமா, வரவங்க அதையும் சேர்த்துப் பார்த்தாகணும். குறத்தி வேஷத்தில் ஆடிப் பாடுவாங்கனு கேள்விப் பட்டிருக்கேன்.

  நான் போய் மாட்டிண்டது இல்லை. ஆனால் இதெல்லாம் ஆரம்பிக்கும் முன்னர் நல்ல சிநேகிதியா இருந்தாங்க. இது ஆரம்பிச்சதும் பேச்சு வார்த்தையே கிடையாது. :((( எங்க மாமியார் போய்க் கேட்பாங்க. அவங்களுக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. இந்தக் குறிமாமியோட பெயர் ராதா. நான் ராதா மாமினு குறிப்பிட்டா எங்க மாமியாருக்குக் கோபமே வந்துடும். அம்மாவோட பெயரை எல்லாம் மரியாதைஇல்லாமச் சொல்றேனு கோவிப்பாங்க. ஒரு தரம் அவங்க சாப்பிடச் சொன்னதாச் சொல்லி ஒரு முழு எலுமிச்சம்பழத்தை வாயிலே போட்டுக் கொண்டு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கஷ்டப்பட்டு , எங்க கிட்டே வாங்கிக் கட்டிண்டாங்க.

  இப்போ அந்தக் குறிமாமி உம்மாச்சி கிட்டேயே போயிட்டாங்க. பாவம். :((((((( போய் மூணு வருஷத்துக்கு மேல் ஆகிறது. நல்ல வேளையா அவங்க பொண்ணுங்க யார் கிட்டேயும் உம்மாச்சி மாற்றம் நடந்ததாய்த் தெரியலை. பெரிய பெரிய சினிமா டைரக்டர்கள் புதுப்பட ரிலீஸுக்கு முன்னால் படப்பெட்டியோடு வருவாங்க. :)))))

  பதிலளிநீக்கு
 18. //பரிகாரம் ஒரே மாதிரிச் சொல்லக் கூடாது அல்லவா.... // உண்மையா பொய்யா என்று ஆராய்ச்சி செய்ததில்லை. நம்பவா வேண்டாமா என்று முடிவெடுத்ததும் இல்லை.

  ஒன்று மட்டும் உறுதி மனிதர்களை மட்டும் தெய்வமாகப் பார்க்கும் பழக்கத்தை அடியோடு வெறுக்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. தலை சுற்ற வைக்கிற பரிகாரங்கள். ஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு காரணமிருக்கிறது என்பது போல அப்பாவி ஜனங்களை பயமுறுத்துகிற தந்திரங்கள்.

  /அய்யா... யோசித்துப் பாருங்கள்... இப்படியெல்லாம் கொடுத்தால் வாங்குவார்களா... நம்மை உண்டு இல்லை என்று செய்து விட மாட்டார்களா..../

  கேட்க முடிந்ததா:)?

  /ஓட முடியாதது அண்ணன்தான். நாங்கள் எல்லாம் ஓடி விட்டோம்./

  :)). சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகிர்வு. சிறப்பான நடை.

  அனுபவப் பகிர்வு தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 20. ரசித்துப் படித்தேன். :)

  நெய்வேலியில் இருக்கும் போது எங்கள் எதிர் தெருவில் குடியிருந்ததோர் குடும்பத்தலைவி இப்படித்தான் சாமி வந்து உட்கார்ந்து தலைவிரித்தபடி கையை தரையில் தட்டி குறி சொல்வார்.... அவர் செய்யும் செயல்களைப் பார்க்கவே, அம்மாவிடம் திட்டு வாங்கியபடியே ஓடிப் போவோம்....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!