வியாழன், 12 ஜூலை, 2012

அலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்!

                     
அசோக் லேலண்டு எழுத்துத் தேர்வு முடிந்த இரு மாதங்கள் கழித்து, நேர்முகம் காணலுக்கான அழைப்பு வந்தது. 

அதற்குள்ளாகவே நான் சென்னையில் மற்றும் பெங்களூரில் இரண்டு மூன்று கம்பெனிகள் நேர்முகம் சென்று வந்தேன். சென்னை அண்ணா சாலையில் கே சி பி எஞ்சினீரிங் பிரிவுக்கான டிராஃப்ட்ஸ் மேன் வேலைக்கு, பெயர் தெரியாத 'வால்வ்ஸ் அண்ட் பைப் பிட்டிங்க்ஸ்' கம்பெனி ஒன்று, எம் எப் எல், பாம்பே கம்பெனி ஒன்றிற்காக பெங்களூரில் ஹோட்டல் பிருந்தாவனில் ரூம் போட்டு டெஸ்ட் வைத்து, நேர்முகம் கண்ட கம்பெனி ஒன்று. 
     
ஹிந்து பேப்பரில் ஒரு மருந்து மாத்திரை கம்பெனியில் டி எம் இ படித்த ஆட்கள் வேலைக்கு வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து, அதற்கும் அப்ளிகேஷன் அனுப்பினேன். பதில் வரவில்லை. ஒருவேளை 'டி எம் இ' என்று மருத்துவ சம்பந்தப்பட்ட படிப்பு ஏதேனும் இருந்திருக்குமோ அல்லது டி எம் ஓ (டிஸ்ட்ரிக்ட் மெடிக்கல் ஆபீசர்?) என்பது போன்ற அச்சுப் பிசாசு (பிரிண்டர்'ஸ்  டெவில்) செய்த வேலையோ  .... தெரியவில்லை! அசோக் லேலண்டு செய்த புண்ணியம் - என்னை வேறு யாரும் அதற்குள் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை! 
                 
நான் பாலிடெக்னிக் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போதே, டி என் பி எஸ் சி (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) பரீட்சை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து, இதே நேரத்தில், என்னை வேலைக்கு வந்து சேரும்படி (மதுரையில், ஷிப்பெர்ஸ் - செய்லர்ஸ் அலுவலகத்தில்  எழுத்தராக சேரும்படி ) ஒரு சாணிக் கலர் காகிதத்தில் டைப் அடித்து, அனுப்பி வைத்திருந்தார்கள். நான் போய் வேலையில் சேர்ந்தவுடன், அங்கு வேலையில் இருக்கும் 10A1 கிளார்க் ஒருவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டு, அவருக்கும் ஒரு நகல் அனுப்பப்பட்டிருந்தது. அவர் அநேகமாக என்னை திட்டிக்கொண்டே இருந்திருப்பார். ஆனால், வேலையில் சேரவேண்டிய கடைசி நாள் வரையில் நான் வந்து சேரவில்லை என்று தெரிந்த பிறகு, என்னை வாழ்த்தியிருப்பார் என்று நினைக்கின்றேன்! 
              
அசோக் லேலண்டு எண்ணூர் பயிற்சி மையத்தில் எனக்கும், மற்ற நண்பர்களுக்கும், நேர்முகம் காணல் நடைபெற்றது. அதுவரையிலும் எனக்கு, எண்ணூர், சென்னையின் எந்தக் கோடியில் இருக்கின்றது என்பது கூட தெரியாது. அண்ணனிடம் இருந்த பழைய சிடி மேப்பில், பொத்தல்களுக்கு  நடுவே பார்த்ததில், ஜியார்ஜ் டவுனுக்கு வடக்கே வெற்றுத் தாளாக விட்டிருந்தார்கள். ஒரு அம்புக்குறி போட்டு, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் (செல்லும் வழி) என்று போட்டிருந்தார்கள். 
             
அண்ணன் குடியிருந்த போர்ஷனுக்குப் பக்கத்துப் போர்ஷனில், தாம்சன், ஜான் என்று இரண்டு நடத்துனர்கள் (சென்னை நகரப் போக்குவரத்து) இருந்தனர். இருவரும் எனக்கும், அண்ணனுக்கும் நண்பர்கள். அதில், ஜான், என்னை அசோக் லேலண்டில் நேர்முகம் காணல் அன்று என்னை அங்கே கொண்டு போய் விடுவதற்கு வந்தார். புரசவாக்கத்திலிருந்து ஒரு பேருந்து பிடித்து தங்கசாலைக்கும், பிறகு அங்கிருந்து வேறு ஒரு பேருந்து பிடித்து, எண்ணூருக்கும் போய்ச் சேர்ந்தோம். 

இந்தப் பயணத்தில் நான் தெரிந்துகொண்ட ஒரு சிறிய தகவல் - இங்கே எழுதுகின்றேன். ஜானுக்கு டூட்டி பாஸ் இருந்ததால், அவர் எனக்காக (மட்டும்) காசு கொடுத்து, டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுதெல்லாம், அந்தந்தப் பேருந்தில் இருந்த நடத்துனர்கள், அவரிடம் காசை வாங்காமல், அவரிடமே கொடுத்துவிட்டு, அவரை தோளில் ஒரு தட்டு, என்னை தோளில் ஒரு தட்டு என்று செல்லமாகத் தட்டிச் சென்றனர்!  பிறகு ஜான் என்னிடம், அவருடைய யூனியனைச் சேர்ந்த நடத்துனர்கள் என்றால் இப்படி செய்வார்கள் என்றும், வேற்று யூனியன் ஆள் என்றால், எனக்கு பைசா வாங்கிக் கொண்டு, பயணச் சீட்டு கொடுத்திருப்பார் என்றும் சொன்னார். 
           
அசோக் லேலண்டு வாசலில் நாங்கள் இருவரும் இறங்கியவுடன், கம்பெனி காம்பவுண்டைப் பார்த்ததுமே, ஜான் உறுதியாகச் சொன்னார்: "சாரே! உனக்கு நிச்சயம் இங்கே வேலை கெடச்சிடும்"  எனக்கு ஒரே சந்தோஷம்! அவருக்கு நன்றி கூறினேன். பிறகு அவர் விடை பெற்று சென்றார். நான் கம்பெனியின் கேட் அருகே சென்று, அங்கு இருந்த செக்யூரிட்டி அலுவலரிடம், என்னுடைய நேர்முகம் காணல் அழைப்புக் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம், "இண்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா? உள்ளே போய், லெப்டுல திரும்பி கடைசி வரை போங்க. அங்கே லெப்டுல இருக்கு டிரெயினிங் செண்டர்." என்றார். சென்னை மாநகரத்தில், முதன் முதலாக ஒருமையில் பேசாமல், பன்மையில் மரியாதையாக 'நீங்க, வாங்க, போங்க' என்று ஒருவர் பேசியதைக் கேட்டு, எனக்கு மயக்கமே வந்தது.
                  
மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் மீண்டும் தொடர்கின்றேன்! 
             

10 கருத்துகள்:

 1. மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் மீண்டும் தொடர்கின்றேன்!


  heheமயக்கத்திலேயும் எழுதற ஒரே ஆள் நீஙக்ளாத் தான் இருக்கும். :)))

  பதிலளிநீக்கு
 2. அதெப்படிங்க? ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கக் கூடாதா? :P:P:P:P

  பதிலளிநீக்கு
 3. //"இண்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களா? உள்ளே போய், லெப்டுல திரும்பி கடைசி வரை போங்க.//

  சார்.. சார்.. நா பேசுறது உங்களுக்கு கேக்குதா ?
  இதில 'நீங்க, போங்க' ரெண்டுமே இல்லையே.. எதுக்கு பில்டப் கொடுத்து எதுதுறீங்க...
  (நா, சார்னு சொல்லி எக்ஸ்ட்ரா மரியாத வேற தந்திருக்கேன்.. )

  பதிலளிநீக்கு
 4. சென்னையிலா அப்படி?

  பின்றீங்களே மாதவன்?

  பதிலளிநீக்கு
 5. அப்பாதுரை சார்.. ரொம்பப் புகழாதீங்க.. எனக்கு வெக்கமா இருக்கு..

  பதிலளிநீக்கு
 6. அலேக்கில் முதல் இன்டர்வியூ வரை வந்தாச்சு... தொடரட்டும் சுவாரஸ்யமான அனுபவங்கள்.

  பதிலளிநீக்கு
 7. அசோக் லேலண்டு செய்த புண்ணியம்// அப்படித்தான் நினைக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 8. //10A1 கிளார்க் ஒருவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டு//

  அந்தக் காலத்திலே இப்படியெல்லாம் உண்டா? ஆச்சர்யமா இருக்கு!! ஏற்கனவே ஒருத்தர் இருக்கார்னா, அப்புறம் எதுக்கு இன்னொருத்தரை அந்தப் பதவிக்குன்னு செலக்ட் செய்யணும்?

  //அசோக் லேலண்டு செய்த புண்ணியம்//
  அப்போ, இப்போ அசோக் லேலண்டு நட்டத்திலயா இருக்கு? :-D

  பதிலளிநீக்கு
 9. ஹுஸைனம்மா!
  அந்தக் காலத்தில் டென் ஏ ஒன் என்ற பிரிவு - தற்காலிகப் பணியாளர்களை குறித்தது என்று என்னுடைய அண்ணன் கூறியதுண்டு. அவர் அரசுப் பணியில் பழம் தின்று, எதையும் போடாதவர். தற்காலிக பணியாளர் இடத்துக்கு முழு நேரப் பணியாளர் வந்துவிட்டால், இந்தத் தற்காலிகப் பணியாளர், அதே சம்பளத்தில் வேறு ஒரு ஊருக்கு மாற்றலாகி செல்வார் என்று ஞாபகம். சரியான விவரங்கள் கிடைத்தால் பிறகு பகிர்கின்றேன்.
  அசோக் லேலண்டு செய்த புண்ணியம் என்றுதான் சொல்லி இருந்தேனுங்கோ! அசோக் லேலண்டுக்குக் கிடைத்த லாபம் நான் என்று சொல்லவில்லை! :)))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!