புதன், 23 ஜனவரி, 2013

புத்தகச் சந்தை 2



இந்தமுறை காம்பவுண்டு உள்ளே நுழைந்து ஸ்டால்களைப் பார்க்க நடக்க வேண்டிய தூரம் பெரிய மைனஸ்.
                               
புத்தகச் சந்தையில் இந்த முறை உள்ளே நுழையும்போதே விகடன்காரர்கள் எந்த பதிப்பகம், எத்தனாம் நம்பர் ஸ்டால் என்று புக்லெட் போட்டிருந்ததைக் கையில் கொடுத்தார்கள். வசதிதான்.... ஆனாலும் அதைப் புரட்டிப் பார்க்கவில்லை. வரிசையாக பார்த்துக் கொண்டே முதலிரண்டு ரவுண்டு!

முத்து காமிக்ஸ் அரங்கில் நான் தேடிய தலைப்புக்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததை வாங்கிச் சிறுவனானேன். 35 காசுக்கும் 50 பைசாவுக்கும் வாங்கிய புத்தகங்கள் 100 ரூபாய்.  நான்கைந்து புத்தகங்களை ஒரு கவரில் போட்டு 210 ரூபாய், 400 ரூபாய் என்று போட்டிருந்தார்கள். அதில் நான் கேட்கும் புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டபோது 'அதிருஷ்டம் இருந்தால் கிடைக்கும்' என்றார் அரங்க உரிமையாளர். தனியாகத் தர மாட்டாராம். தனியாக இருந்த புத்தகம் ஒன்றைத்தான் வாங்க முடிந்தது. அதுவும் லயன் காமிக்ஸ்!



                                                      

 

அவர்கள் விற்க விரும்பும் புத்தகங்கள் உங்கள் கண்ணில்படும் வகையில் முன்னால் வைத்திருந்தார்கள். நீங்கள் தேடும் புத்தகம் பின்னா....ல் எங்கோ, அல்லது அடி வரிசையில் இருக்கும். தே....ட வேண்டும்! அரங்க உரிமையாளரிடம் கேட்டால் சில சமயம் கிடைக்கலாம் - பதில்.

ராஜ் டிவிக்காரர்கள் ஸ்டால் இருந்தது. இந்த வருடம்தான் முதல் முறையா என்று கேட்டதற்கு ராஜ் சகோதரர்களில் ஒருவர் 'இரண்டாம் முறை, சென்ற வருடமே போட்டிருந்தோம்' என்றார்.  நான் தேடிய, கேட்ட சிடிக்கள் இல்லையென்றார்.
    
பதினோரு ரூபாய்க்கும், பத்தொன்பது ரூபாய்க்கும் புத்தகங்கள் வாங்க முடிந்த இடம் மதுரை மீனாக்ஷி புத்தக நிலையம். குறிப்பாக சுஜாதா புத்தகங்கள். என்ன, அடுத்த புத்தகச் சந்தைக்குள் அதிலிருக்கும் எழுத்துகள் மறைந்து விடுமோ என்று கொஞ்சம் சந்தேகம் வரும்!


அருகில் புத்தகம் புரட்டியவர்கள் எல்லோரும் முதலில் பார்ப்பது விலையைத்தான். அவர்கள் வாங்க என்று திட்டமிட்டு வரும் புத்தகங்கள் தவிர மற்றவற்றை இப்படித்தான் பார்க்கிறார்கள்.


கேப்டன் டிவியில் ஒரு பெண் புத்தகக் கண்காட்சி பற்றிப் பேசினார். "புத்தகங்கல் வாங்கிக் கொல்ல எல்லோருக்கும் ஆர்வம்தான் ஆன்கல் பென்கல் எல்லோருமே நிறையப் பேர் வந்தார்கல். வனிக எழுத்தாளர் சுஜாதா புத்தகங்கலும் நிறைய விற்றன.....கன்னதாசனின் வனவாசம் நிறைய போகிறது.."  


கடவுலே! இவர்கலைக் மண்ணித்துக் காப்பார்று! 

அவர் இப்போதே கணக்குச் சொல்லி விட்டார். பொன்னியின் செல்வன்தான் அதிக விற்பனை. அப்புறம் காந்தியின் சுயசரிதை. தற்கால இலக்கிய ஜாம்பவான்கள் ஜெயமோகனும், எஸ்ராவும்....

மூன்றாம் சுழி அப்பாதுரையை புத்தகக் கண்காட்சியில் பார்க்க முடிந்தது. அவர் என்னென்ன புத்தகங்கள் தெரிவு செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

               
ரிசர்வ் பேங்க் வைத்திருந்த கவுண்டரில் அவ்வப்போது பதிப்பாளர்கள் வரிசையில் நின்று சில்லறை மாற்றிக் கொண்டார்கள். சத்யம் டிவி, புதிய தலைமுறை டிவிக்கள் ஸ்டால் அமைத்திருந்தார்கள். அகில இந்திய வானொலிக் காரர்கள் வழக்கம் போல பழைய கர்னாடக சங்கீதப் பாடல்களை 4 பாடல்கள், 5 பாடல்கள் முன்னூறு, முநூற்றைம்பது என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.
           
"ஏதாவது முன்னால தமிழ் 'ஆத்தர்'ஸ் படிச்ச ஞாபகம் இருக்கா... பெயர் தெரிஞ்சாக் கூட விசாரிச்சு நாமளும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணலாம்.." ஒரு இளம் கணவர் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இனிமேல் பெயர் ஞாபகம் வந்து....
             
"கம்பராமாயணம் விளக்க உரை வாங்கணும்... எளிமையாப் புரிகிற மாதிரி, அதே சமயம் விலை குறைச்சலா வாங்கணும்னா எது வாங்கலாம்..." ஒருவர் என்னிடம் வந்து கேட்டார்.
           
" இதை நான் எப்படிச் சொல்ல முடியும்?  எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கலாம். எடுத்துப் புரட்டிப் படித்து முடிவு செய்யுங்கள்" என்றேன்.


                                          

மூன்று பாகம் நான்கு பாகம் என்று இருக்கும் புத்தகங்களை சென்ற வருடம் வரை ஒவ்வொரு பாகமாக வாங்க முடிந்தது. ஏற்கெனவே இரண்டு பாகம் வாங்கி விட்ட ஒரு புத்தகத்தை மூன்றாம் பாகம் மட்டும் கொடுங்கள் என்று கேட்டபோது 'செட்'டாகத்தான் தருவோம்' என்று மறுத்து விட்டார். 'சரி, போ' என்று விட்டு விட்டோம்.

 நிறைய ஸ்டால்களை மக்கள் பக்கவாட்டில் முறைத்தபடியே தாண்டிச் சென்றார்கள். கிழக்குப் பதிப்பகம், அல்லையன்ஸ், விகடன், டிஸ்கவரி, என்று இதைப் படிக்கும் நீங்களும் எதிர்பார்க்கும் பெயருள்ள ஸ்டால்களில்தான் கூட்டம். திருக்குடந்தைப் பதிப்பகம் (முக்தா ஸ்ரீனிவாசன்) போன்ற இன்னும் சில ஸ்டால்களில் மிகக் குறைந்த புத்தகங்களுடன் இருந்ததை என்ன பார்ப்பது என்று மக்கள் தாண்டிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

                                                

 

குறைந்த புத்தகங்கள் என்றில்லை, நிறையப் புத்தகங்கள் இருந்த பல ஸ்டால்களின் கதையும் அதே, அதே!

உள்ளே நுழையும்போது எதிரில் வந்து கொண்டிருந்த சிலரின் கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் பார்த்த போது 'எப்படி இவர்களால் கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது?' என்று பொறாமையாக இருந்தது.

தினமணியில் ஒரே பெயரில் ஒரு புத்தகத்தை வெவ்வேறு பதிப்பகங்களில் போட்டு விற்பனை செய்வது சரியா என்று கேட்டிருந்தார் எடிட்டர்.
  புத்தகங்களின் விலை....  விடுங்கள். வாங்கிவிட்டு அப்புறம் குறை சொல்லக் கூடாது.  :)))

                                            
 
வாசலில் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளைப் பார்க்க முடியாமல் போனது வருத்தம். அவர்கள் மூன்றாவது நாள் முதல்தான் கண்களில் பட்டார்கள். அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் சரியில்லை, இந்த வருடம் நஷ்டம்தான் என்று சொன்னதாகக் கல்கியில் போட்டிருந்தார்கள்.

இந்தியாவில், ஏன் அயல்நாடுகளிலிருந்தும் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் தொலைபேசியிலேயே ஆர்டர் கொடுத்து வீட்டு வாசலில் பெற்றுக் கொள்ள ஒரு நம்பர் கொடுத்திருக்கிறார்கள். டயல் ஃபார் புக்ஸ் : 9445901234, 94459 79797 என்ற எண்களில் நம் முகவரி, நமக்குத் தேவையான புத்தகங்களை  நம் குரலிலேயே பதிவு செய்து விடலாம் என்ற வசதி வந்துள்ளது. பெயர் மட்டும் தெரிந்தால் கூட விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமாம்.

புத்தகம் வாங்க வந்தவர்களை விட அரட்டை அடிக்க வந்தவர்கள் அதிகம் என்று ஏதோ ஒரு தொலைக் காட்சியில் சொன்னார்கள்.


                                                

 

ஆக, நிறைவுற்றது இந்த வருடப் புத்தகத் திருவிழா!

15 கருத்துகள்:

  1. நடைக்கும் பள்ளங்களுக்கும் பயந்தே போகவில்லை.
    இருக்கும் புத்தகங்களைப் பாதி படித்துமுடித்துவிட்டேன். மிச்சத்தையும் படித்தால்தான் புது புத்தகங்கள் உள்ளே வரலாம்:)
    அழகாக விவரித்திருக்கிறீர்கள்.நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  2. கண்காட்சி அனுபவங்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நானும் ரெண்டாவது ரவுண்டு முடிச்சாச்சு

    புத்தகங்கல் நிரைய வாங்கி விட்டேன் உங்கலுக்கு மகிள்சியா ..... :-)

    புத்தகக் கண்காட்சியை மீண்டும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள் சார்.... இன்னும் வருடம் காத்திருக்க வேண்டும் என்பதை விட, வாங்கிய புத்தகங்களை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்

    பதிலளிநீக்கு
  4. சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப ரொம்ப நன்றி. கண்காட்சி பற்றி சுவாரசியமா, அழகா சொல்லிடீங்க.
    இரண்டு வருடம் முன்பு நான் சென்றபோது அதிகமாக புத்தகங்கள் வாங்கவேயில்லை. நிலையாக ஓரிடத்தில் இல்லாத போது புத்தகங்கள் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. செல்லும் இடங்களுக்கெல்லாம் அதை எடுத்து செல்ல முடிவதில்லை. வாங்கிய பின் விட்டு வரவும் மனமும் வராது.
    வலைபூக்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் நிறைய சிறந்த புத்தகங்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாங்க வேண்டிய புத்தக பட்டியல் என்னாவோ நீண்டு கொண்டேதான் இருக்கிறது. ஆனால் எப்பொழுது வாங்க முடிய போகிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. சின்னப் புகைச்சல்:-))))))

    எனக்கு வாசிக்க இன்னும் ரெண்டேபுத்தகம்தான் நம்ம வீட்டு அலமாரியில் பாக்கி.

    அப்புறம் பார்க்கலாமுன்னு எடுத்துவச்ச ரெண்டும் சென்னை இஸ்கானில் வாங்கியது.

    பதிலளிநீக்கு
  7. அழகான உலா உங்க கூட சுத்தி வந்தாச்சு. வீடு மாறும் போது புத்தகங்களை மட்டுமே நாலஞ்சு மூட்டை கட்ட வேணடியிருக்குன்னு அம்மா திட்டினாலும்கூட வாங்காம இருக்க முடியலை; படிக்காம இருக்க முடியலை. ஒண்ணு ரெண்டு புக்கோட வர்றவங்க, வெறுங்கையோட வர்றவங்களைப் பாக்கறப்பல்லாம் எனக்கும் ஆச்சர்யம்தாங்க!

    பதிலளிநீக்கு
  8. முத்து காமிக்ஸ் அரங்கில் நான் தேடிய தலைப்புக்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததை வாங்கிச் சிறுவனானேன். 35 காசுக்கும் 50 பைசாவுக்கும் வாங்கிய புத்தகங்கள் 100 ரூபாய். நான்கைந்து புத்தகங்களை ஒரு கவரில் போட்டு 210 ரூபாய், 400 ரூபாய் என்று போட்டிருந்தார்கள்.//

    உங்கள் புத்தக கண்காட்சி அனுபவங்கள் அருமை.

    கிடைத்ததை வாங்கி சிறுவனானேன்//.

    ரசித்தேன்.


    என் கணவர் , குழந்தைகள் சேர்த்த முத்து காமிக்ஸ் வீட்டில் நிறைய இருக்கிறது. விடுமுறையில் மகள் ,மகன்இங்கு வந்தால் படிப்பார்கள்.

    நான்கைந்து புத்தகங்களை ஒரு கவரில் போட்டு 210 ரூபாய், 400 ரூபாய் என்று போட்டிருந்தார்கள்.//
    அந்த கவருக்குள் என்ன் புத்தகம் இருக்கிறது என்று போட்டால் நம்மிடம் இல்லாத புத்தகம் வாங்க வசதியாக இருக்குமே!
    எங்கள் ஊரிலில் புத்தக கண்காட்சியில் தேவன் அவர்கள் கதைகள் 5 வாங்கினேன். படித்துக் கொண்டு இருக்கிறேன்.சிலவற்றை
    பரிசளிக்க வாங்கினேன். அவற்றை பரிசளித்து விட்டேன்.
    புத்தக கண்காட்சிக்கு போனால் ஒரு புத்தகம் மட்டும் வாங்கி வருபவர்களை கண்டால் எனக்கும் ஆச்சிரியமாகத்தான் இருக்கும்.




    பதிலளிநீக்கு
  9. உங்கள் புத்தகதிருவிழா அனுபவம் சுவாரஸ்யம்.ஒரு பதிவராக இருந்தும்,வீட்டில் இருந்து நடக்கும் தூரமாயினும் இவ்வருடம் நான் புத்தகதிருவிழாவுக்கு போகமுடியவில்லை.:(ஆனால் பதிவர்கள் எழுதிய சில புத்தகங்கள் வீடு தேடி வந்துவிட்டன.:)அவைகளை இன்னும் வாசித்து முடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நல்லா சுவாரஸ்யமா பகிர்ந்து இருக்கீங்க! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. தங்களுடன் நாங்களும் சுற்றி வந்த உணர்வு. சென்ற வருட உலக புத்தக கண்காட்சி நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
  12. சென்ற வருட விசிட்டிற்கும், இந்தத் தடவை சென்று பார்த்து அனுபவப்பட்டதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    //மூன்றாம் சுழி அப்பாதுரையை புத்தகக் கண்காட்சியில் பார்க்க முடிந்தது. அவர் என்னென்ன புத்தகங்கள் தெரிவு செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.//

    புத்தகச் சந்தையிலிருந்து அப்பாஜி தொடர்பு கொண்டது தான் விசேஷம். அதனால்அவருக்கு இரு புத்தகங்களை பரிந்துரைக்க முடிந்தது.

    1. யாத்ரா -இதழ்த் தொகுப்பு (இரண்டு பாகங்கள்)

    2. கலை உலகில் ஒரு சஞ்சாரம்

    -- இரண்டும் சென்னை சந்தியா பதிப்பகத்தின் வெளியீடுகள்.

    புத்தகங்களை அப்பாஜி வாங்கி கொஞ்சம் வாசித்துப் பார்த்து மகிழ்ந்தையும் பின்னால் அவர் மூலமாகவே அறிந்த பொழுது மிகுந்த சந்தோஷமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. புத்தகக் காட்சியின் காட்சியை நீங்கள் விவரித்தது நேரில் பார்த்த உணர்வினை ஏற்படுத்தியது....

    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. இதுவரையிலும் புத்தகக் கண்காட்சிக்கே போனதில்லை. இனிமேலும் போவேனா சந்தேகமே! ஏற்கெனவே வீட்டில் உள்ள புத்தகங்களை எனக்கு அப்புறமா யாருக்குனு இப்போவே உயில் எழுதச் சொல்லி எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்க. யாருக்குக் கொடுக்கிறதுனு புரியலை! :)))))

    பதிலளிநீக்கு
  15. முத்து காமிக்ஸ் படிச்சிருந்தாலும் எனக்குப் பிடிச்ச காமிக்ஸ் ஆர்ச்சி காமிக்ஸ் தான். இப்போக் கூட அதான் படிச்சுட்டு இருந்தேன். :)))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!