Wednesday, April 24, 2013

அலேக் அனுபவங்கள் 19:: பிடிபட்டோம்!

         
போன பதிவில் எழுதி இருந்த அரட்டை மூலை பற்றி மீண்டும் ஞாபகப் படுத்திக்குங்க. இது சுட்டி!
             
தினமும் சாப்பிட்டு முடித்தவுடன், எங்கள் அணி அப்ரெண்டிஸ் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து அரட்டை அடிக்க, ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். ட்ரைனிங் செண்டர் செல்ல வேண்டியவர்கள், கம்பெனி பிரதான வாயிலில் நுழைந்தால், இடதுபுறம் திரும்பி, நீண்ட தூரம் நடக்க வேண்டும்.
           
பெரும் தலைகள் இருக்கின்ற பகுதி பிரதான வாயிலில் நுழைந்து, சற்று தூரம் நடந்து, வலது புறம் திரும்பினால் போதும்.
             
ட்ரைனிங் செண்டர் ஆட்கள், பெரும் தலைகள்  பெரும்பாலும் வராத இடம்,  படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நீல நிற இடம்.
   
இந்த இடம்தான் எங்களுடைய சீனியர் அப்ரெண்டிஸ்கள் அரட்டையடிக்க உபயோகித்த இடம் என்று காற்று வழி செய்தியும் உண்டு!

சாப்பாடு முடித்த பின், அரட்டை மூலைக்கு ஒவ்வொருவராக வருவோம். இருவர் அல்லது மூவராக அந்த இடத்திற்கு வந்தால் ஆபத்து. ட்ரைனிங் சென்டரில் இருக்கின்ற பாட்ரிக் என்னும் கழுகு கண்களில் நாங்கள் பட்டுவிட்டால், பேராபத்து. அவர் ட்ரைனிங் ஆபீசரிடம் சென்று, 'தஸ் புஸ்' என்று காற்றோடு ஆங்கிலத்தைக் கலந்து அவர் காதில் ஊற்றி, எங்களுக்கு உலை வைத்துவிடுவார்!
 
சற்றேறக் குறைய இரண்டு அல்லது மூன்று மாதங்கள், அரட்டை கச்சேரி (ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் பத்து நிமிடங்கள், அதிக பட்சம் முப்பது நிமிடங்கள்) இனிதே நடந்து வந்தது. அந்த நேரத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் மற்றவர்கள் பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஏற்கெனவே ஒரு டிபார்ட்மெண்டுக்கு பயிற்சி சென்றவர்கள், அந்த டிபார்ட்மெண்டில் யார் அப்ரெண்டிஸ்களுக்கு அனுகூலமாக நடந்துகொள்பவர், யாரு கடி மனிதர் என்று மற்றவர்களுக்கு சொல்லுவார். 
  
மற்றவர்கள் அந்த டிபார்ட்மெண்டுக்கு ட்ரைனிங் செல்லும் பொழுது, எங்கே படலாம், எங்கே தொடலாம், யார் பக்கம் செல்லக்கூடாது என்று நன்கு  தெரிந்து வைத்துக் கொள்வோம். மற்ற லோக விவகாரங்களும் பரிமாற்றம் நடைபெறும். (அப்பாதுரை சார்! கற்பனை குதிரையை ரொம்ப மேய விடாதீங்க! எல்லாமே சைவ சிந்தனைகள்தான்)
   
எப்படி பிடிபட்டோம்? 
நாங்கள் பிடிபட்ட நிகழ்ச்சி சற்றும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தது. மதிய உணவு வேளை முடிந்ததும், தன்னுடைய வொர்க் டயரியை ட்ரைனிங் ஆபீசர் பார்த்துக் கையெழுத்திட்டதை, திரும்பப் பெற சென்றிருந்தான், எங்கள் அணி நண்பன். அதை வாங்கிக் கொண்டு திரும்ப யத்தனித்தவனை, தடுத்து நிறுத்தியது, ஏ டி ஓ வின் குரல். ஏ டி ஓ = அசிஸ்டன்ட் ட்ரைனிங் ஆபீசர்.  யாருங்க அது? ஹி ஹி - நம்ம பாட்ரிக் அவர்களுக்கு நாங்க கொடுத்திருந்த பதவிப் பெயர் அது! கிளார்க் என்று சொன்னால் அவர் செய்கின்ற அலம்பல்களுக்கு அது சரியாக இல்லை என்பதால் இப்படித்தான் அழைத்து வந்தோம் அவரை!  
               
"மிஸ்டர் ...... வுட் யூ மைன்ட் கிவிங் பேக் திஸ் டயரி டு மிஸ்டர் .......... இப் யூ ஹாப்பென் டு ஸீ ஹிம்?" என்று அரட்டை அணியின் மற்ற நண்பர் ஒருவருடைய டயரியை எடுத்து நீட்டினார். இந்த நண்பன், உடனே, 'எஸ் ஐ ஹாவ் நோ மைன்ட்' என்று பேத்தியவாறு, அதை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். 
   
பாட்ரிக்குக்கு ஒரே அதிசயம்! அப்ரெண்டிஸ்கள் யாரையாவது கம்பெனிக்குள் தேடவேண்டும் என்றால், அவருடைய உதவியின்றி, யாராலும் தேட இயலாது. யார் யாருக்கு எங்கெங்கே போஸ்டிங் போட்டிருக்கிறோம் என்பது அவருக்கு மட்டும்தான் (தன்னுடைய சித்ரகுப்தன் நோட்டு பார்த்து) தெரியும். அப்படி இருக்கையில், இந்த ஆள் டயரியை எடுத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல நடந்து சென்றதைப் பார்த்தவுடன், ஒரு சிறிய சந்தேகம் வந்தது. 
   
பாட்ரிக், அருகில் இருந்த ட்ரேட் அப்ரெண்டிஸ் ஒருவரை அழைத்து, டயரியுடன் செல்கின்ற நண்பர் எங்கே போகிறார் என்று வேவு பார்த்து வந்து தன்னிடம் சொல்லச் சொன்னார். அசோக் லேலண்டில் ஆள்காட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. அந்த ஆ.கா. பாட்ரிக் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு, வந்து, பார்த்து, விவரங்களை பாட்ரிக்கிடம் கூறிவிட்டார். 
    
நாங்கள் செய்த புண்ணியம், அன்றைக்கு ட்ரைனிங் ஆபீசர் அலுவலகத்தில் மதியம் இல்லை. எங்கோ வெளி வேலையாக சென்றிருந்தார். 
   
பாட்ரிக் பின் வாசல் வழியாக எங்களின் அரட்டை மூலைக்கு வந்து, பத்து நிமிட கீதோபதேசம் நிகழ்த்தினார். 'மறுபடியும் எங்களில் யாரையாவது ட்ரைனிங் நேரத்தில் அங்கு கண்டால், அதை ட்ரைனிங் ஆபிசரின் கவனத்திற்கு உடனே எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியிருக்காது' என்று அவர் சொன்னார் என்று அவருடைய தஸ் புஸ் மொழியை உரித்துப் பார்த்துப் புரிந்து கொண்டோம். 
                      

15 comments:

T.N.MURALIDHARAN said...
This comment has been removed by the author.
T.N.MURALIDHARAN said...

ஒவ்வொரு அலுவலகத்திலும் போட்டு கொடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் உண்டு . அனுபவங்கள் சுவாரசியம்

jaisankar jaganathan said...

திண்டுக்கல் தனபாலன் கமெண்ட் ஏன் வரவில்லை?

சீனு said...

ஹா ஹா ஹா நீ மாட்டினப்ப முளிச்ச திருட்டு முழியப் பத்தி ஏன் எழுதல சார்...

kg gouthaman said...

திருட்டு முழியா! அப்படி எல்லாம் தனியா எதுவும் கிடையாது! பிறந்ததிலேருந்தே எனக்கு ஆந்தைக் கண்ணன் என்றுதான் பெயர்!
நிற்க.
பாட்ரிக் கீதோபதேசம் முடிந்ததும், "எல்லாம் சரி சார், இதை எல்லாம் சொல்வதற்கு, எங்களை ஏன் இங்கே வரச் சொன்னீர்கள்? நீங்க எங்களை எல்லாம் இங்கே வரச் சொன்னதா, எங்கள் டிபார்ட்மெண்டில் வந்து (போட்டுக் கொடுத்த) அப்ரெண்டிஸ் சொன்னாரே?" என்று கேட்டேன்.
பாட்ரிக் அசந்துபோய் விட்டார்!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான அனுபவம்...

ஆள்காட்டிகள் எங்கும் உண்டு...

Geetha Sambasivam said...

hihihihiபாட்ரிக்கிடம் சொன்னதாக நீங்க சொன்னதை அப்படிச் சொல்லவே இல்லைனு கேள்விப் பட்டேனே! அதானே உண்மை? :)))))

kg gouthaman said...

//Geetha Sambasivam said...
hihihihiபாட்ரிக்கிடம் சொன்னதாக நீங்க சொன்னதை அப்படிச் சொல்லவே இல்லைனு கேள்விப் பட்டேனே! அதானே உண்மை? :)))))//

பாட்ரிக் என்று ஒருவர் இருந்ததாகக் கேள்விப்பட்டீர்களா?

வெங்கட் நாகராஜ் said...

பொட்டுக் கொடுப்பவர்களும் காட்டிக் கொடுப்பவர்களும் நிறைந்த உலகமிது......

வெங்கட் நாகராஜ் said...

போட்டு! இங்கேயும் ஏதோ ஒன்று போட்டுக் கொடுத்துவிட்டது - பொட்டு என! :)

சீனு said...

தவறுக்கு வருந்துகிறேன் சார் // நீ// என்று தவறுதலாக வந்துவிட்டது, அது நீங்க என்று தான் இருந்திருக்க வேண்டும்... இந்த உலகம் என்னை மன்னிக்கா விட்டாலும் பரவாயில்லை நீங்கள் மன்னித்துவிடுங்கள் போதும் :-)

kg gouthaman said...

//சீனு said...
தவறுக்கு வருந்துகிறேன் சார் // நீ// என்று தவறுதலாக வந்துவிட்டது, அது நீங்க என்று தான் இருந்திருக்க வேண்டும்... இந்த உலகம் என்னை மன்னிக்கா விட்டாலும் பரவாயில்லை நீங்கள் மன்னித்துவிடுங்கள் போதும் :-)//
சீனு சார்! ஆத்மாவுக்கு வயது கிடையாது. அதை ஒருமையில் அழைத்தாலும், பன்மையில் அழைத்தாலும் தவறு ஒன்றும் இல்லை. கவலைப்படாதீர்கள்!

jaisankar jaganathan said...

//ஆத்மாவுக்கு வயது கிடையாது. அதை ஒருமையில் அழைத்தாலும், பன்மையில் அழைத்தாலும் தவறு ஒன்றும் இல்லை. கவலைப்படாதீர்கள்!/

kg gowthaman sir,
உள்ள பொருள் ஒன்றே. அதுவே ஆத்மா. அப்படின்னா யார் யாரை அழைப்பது?

மோ.சி. பாலன் said...

கௌதமன், நாங்கள் சேர்ந்தபோது இந்த கெடுபிடிகள் குறைந்துவிட்டதோ?

kg gouthaman said...

மோ சி பாலன், எல்லா கஷ்டங்களும் எஞ்சினீரிங் அப்ரெண்டிஸ்களுக்குத்தான். பட்டதாரி பயிற்சியாளர்கள் எல்லோரும் ராஜா வீட்டுக் கன்றுக் குட்டிகள், அந்தக் காலத்திலிருந்து, இந்தக் காலம் வரை! தவிர, நான் சேர்ந்தபொழுது இருந்த ட்ரைனிங் ஆபீசர் - மிக மிக கண்டிப்பானவர்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!