ரொ.....ம்ப வருடங்களுக்கு முன்னால் படித்த 'பாரீஸுக்குப் போ' நாவலை மறுபடி
சமீபத்தில் படித்தேன் புதிய பார்வைகள் கிடைத்தன. 1965 இல் விகடனில்
வெளிவந்த தொடர். அப்போது இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு, மற்றும் விமர்சனங்கள்.
கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும், ஜெயகாந்தனின் கருத்துகளை எதிர்த்தும்
நிறையக் கடிதங்கள் வந்தன என்று முன்னுரையில் ஜெ குறிப்பிடுகிறார்.
படிக்கும் வயதில் உறவினரோடு லண்டன் சென்று விட்ட சாரங்கன் நீண்ட பல
வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்புகிறான்(ர்). 40 வயது. தாய் நாட்டிலேயே செட்டில் ஆகி விடும் எண்ணங்களோடு வருகிறான். திடீரென தனக்கு உறவுகளே இல்லை என்று உணர்வது போல நினைக்கிறான். 15
வருடங்களுக்குமுன் கடைசிமுறை வந்தபோது ஏற்பட்ட மனத்தாங்கலில் வரவேற்க
சாரங்கனின் அப்பா உட்பட்ட உறவு யாரும் விமான நிலையம் வராத
நிலையில் சாரங்கனின் அண்ணனின் தோழர் மகாலிங்கமும் அவர் மனைவி லலிதாவும்
ஏர்போர்ட் வந்து வரவேற்று, அவனை அவன் வீடு கொண்டு விடுகிறார்கள்.
வயதான தந்தை சேஷையா பழைய சாஸ்த்ரீய சங்கீத விற்பன்னர். அவருக்கு
மேல்நாட்டு சங்கீதம் போலவே சாரங்கனின் கொள்கைகளும், நடத்தையும்
பிடிக்கவில்லை. ஆனாலும் பாசத்தில் அவனை இங்கேயே ஏதாவது பிசினெஸ் செய்ய
வைத்து வாழ்க்கையில் செட்டில் செய்ய முடியுமா என்று பார்க்கிறார். அவன்
ஏற்கெனவே வெளிநாட்டுக்காரி ஒருத்தியைத் திருமணம் செய்தானே, என்ன ஆயிற்று
என்று தெரியவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டே இங்கு திருமணம் செய்விக்க
முடியுமா என்று சாரங்கனின் தமக்கை மகன் முரளி மூலம் தூது அனுப்புகிறார். இரண்டுக்குமே சாரங்கன் மறுத்து விடுகிறான். சேஷையாவுக்குக் கோபம் வருகிறது.
முரளிக்கு சொந்த பிசினெஸ் செய்யும் ஆசையை தாத்தா சேஷையா மறுப்பதில் ஆத்திரம்.
தமக்கை
கணவர், அதாவது தன மாமனார் சாமியாராகப் போய் விட்டார் என்ற செய்தியை நம்ப
மறுக்கிறாள் லீலா முரளியின் மனைவி. முரளிக்கு அப்பாவைப் பற்றித்
தெரிந்திருக்கிறது. பின்னாளில் தாத்தாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை
விட்டு வெளியேறி சொந்த பிசினெஸ் ஆரம்பித்து வெற்றிக் கொடி கட்டுவதற்குமுன்
ஆரம்ப நாட்களில் தனது தந்தை மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று தெரிந்து,
சாரங்கன் உடன்வர,
மற்றும் மனைவி லீலாவுடன் அவரையும் அவருடன் வாழும்
முன்னாள் நாட்டியக்காரி கங்காவையும் சந்திக்கின்றனர். பாலம்மாள் கணவரைக் காண வர மறுத்து விடுகிறாள். மரணமடையுமுன்னர்
முரளியின் அப்பா தன் பக்க நியாயத்தை - லீலாவின் பார்வையில் சப்பைக்கட்டு -
லீலாவிடமும் முரளி, சாரங்கனிடமும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
கணவனுக்குக் கள்ளத் தொடர்பு இருந்தது என்பதால் அவரை விட்டுப் பிரிந்த
சாரங்கனின் தமக்கை பாலம்மாள் கடைசி வரை கணவரைப் பார்ப்பதில்லை. கணவர்
அறியாமல் உணர்ச்சி வசத்தில் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான்
தாயைப் போன்ற குணத்துடன் இருக்க வேண்டிய மனைவியின் பண்பு என்பது அவள் கணவர் நரசய்யா வாதம்.
ரங்கையா என்ற சாரங்கனின் அண்ணன் ஒருவன் மரணம் பற்றித் தெரிவிக்காத
செய்தி சாரங்கனுக்குக் கோபத்தையும், சேஷையாவுக்குக் குற்ற உணர்வையும்
தருகிறது. ரங்கையாவின் மனைவியும் குழந்தையும் சேஷையாவின் கண்ணில் படாமல்
அதே வீட்டில் வாழ்கிறார்கள். பின்னர் யாருமில்லா உடல்நிலை
சரியில்லா தனிமையில் திருந்தும் சேஷையா இவன் பிறந்த நேரம்தான் தன மகன்
ரெங்கையா மரணமடையக் காரணம் என்ற குருட்டு நம்பிக்கையில் வெறுத்து ஒதுக்கிய
பேரன் கண்ணனை அணைத்து மகிழ்வதோடு, அவன் தாய்- தன மருமகளிடமே - குடும்பப்
பொறுப்பை விடுகிறார்.
சாரங்கனை பேட்டி எடுத்து, தான் எழுதும் பத்திரிகையில் 'ஆர்ட்டிகிள்'
எழுதுகிறாள் லலிதா. சங்கீதம் பற்றிய சாரங்கனின் பார்வை, ஃபாரின் ரிடர்ண்ட்
என்ற மயக்கத்தில் இவனின் கொள்கைகள் மேல் பொதுமக்களுக்கு
ஏற்படும் விருப்பமான மற்றும் வெறுப்பான பதில்கள், ஆகியவை பல விவாதங்கள்
மூலம் சொல்லப் படுகின்றன. இந்தக் கொள்கைகளால் கவரப் பட்டு லலிதா தன்
மனதையும் உடலையும் சாரங்கனிடம் பகிர்கிறாள். தான் காப்பாற்றிய தன்
குடும்பத்தால் இளமையில் வெளியில் விரட்டப்பட்ட, மற்றும் தனது கடந்தகாலக்
கசப்பான வாழ்க்கை அனுபவங்களையும், மகாலிங்கம்தான் தன்னைக் கரை சேர்த்தார்
என்றும் சம்பவங்களையும் சாரங்கனுடன் பகிர்கிறாள்.
திரைப்படத்துக்கு இசையமைக்கச் சொல்லி அழைத்துப் போகும் டைரக்டர்
கோபிநாத் மூலம் ஏற்படும் கசப்பான உணர்வுகள் மற்றும் காசில்லாத நிலை, சேஷையா
இவன் மீது காட்ட நினைக்கும் அதிகாரம் என்று பல காரணங்களால் பாரிசுக்கே
திரும்ப முடிவு செய்யும் சாரங்கன். பதறும், மறுக்கும், மயங்கும் லலிதா.
மகாலிங்கத்திடம் விவாகரத்து கோரச் சொல்லும் சாரங்கன். அதை
ஆமோதித்தாலும் மகாலிங்கத்தின் அன்பால் தயங்கும், மருகும்
லலிதா. மகாலிங்கத்தின் உணர்வுகள் ஒருநாள் 'அன்னா கரீனா' ஆங்கிலப் படம்
பார்த்த இரவில் லலிதாவிடம் ஆவேசமாக வெளிப் படுகின்றன. எனவே விவாக ரத்து
கோரும் எண்ணம் தயக்கமடைகிறது லலிதாவிடம். கடைசியில் 'உங்களிடமே முடிவை
விடுகிறேன்... கணவரோடு வாழு என்று சொன்னால் வாழ்கிறேன். என்னோடு வந்து விடு
என்று நீங்கள் சொன்னால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் உங்களுடன் வந்து
விடுகிறேன்' என்று சாரங்கனிடம் அவன் நாட்டை விட்டு வெளியேறும் முந்தைய நாள்
இரவில் கேட்கிறாள்.
'என்னதான் சொல்லுங்க சாரங்கன்.... வெளிநாட்டு இசை லலிதா கேட்கும்போது
நானும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன் இசை முடிந்து பாட்டு
ஆரம்பிக்கும்போது சிரிப்பு வந்து விடுகிறது' என்றும் 'அதே சினிமா சங்கீதம்
மற்ற பெரும்பான்மையினரைப் போலவே தன்னையும் கவர்வதாகச் சொல்லும்
மகாலிங்கத்திடம் வடநாட்டுச் சங் கீதம் கேட்டுச் சிரிக்கும் நம் மக்கள்,
மேல்நாட்டு இசையை மகா கேவலமாகக் காபி அடிக்கும் திரை இசை என்று நீண்ட
லெக்சர் அடிக்கிறான் சாரங்கன். லலிதா மகாலிங்கம் அறியாமல் மயங்கிப் போய்க்
கிடக்கிறாள். பத்திரிகையில் எழுத குறிப்பெடுத்துக் கொள்கிறாள்.
மிகுந்த தர்ம நியாயங்கள் பேசும் சாரங்கன் மகாலிங்கத்தின் மனைவியான
லலிதாவிடம் வைத்துக் கொள்ளும் உறவுக்குக் கட்டும் சப்பைக்கட்டுகள்.
லலிதாவின் மனநிலை உணர்வுகள், முரளியின் உணர்வுகள்.. அதே வீட்டில் இருக்கும்
சமயல்காரத் தம்பதியினர், மகாலிங்கத்தின் வீட்டு சமையல்காரர் நாணா ஐயர், சாரங்கனுடன் புகை பிடிக்கும், மது அருந்தும் நவநாகரீக,மாதர் சங்க மாதவி,ஆகியோர் கதைப்போக்கில் அவ்வப்போது வந்து செல்கிறார்கள்.
சர்ச்சைகள், விவாதங்கள் என்று தொடர்ந்து கொடிருந்த கதை
'சட்'டென முடிவது போலத் தோன்றுவது உண்மைதான் என்கிறார் ஜெயகாந்தன்,
முன்னுரையில்.
இதிலிருந்து எடுத்துதான் கொஞ்ச நாள் முன்பு 'இலக்கியம்' என்ற
தலைப்பில் பகிர்ந்திருந்தேன்.
இந்தியக் கர்நாடக இசைக்கும், வெளிநாட்டு இசைக்கும் உள்ள வேறுபாடுகள்,
சண்டைகள் பற்றி, சினிமா சங்கீதம் பற்றி என்று நீ....ண்ட சர்ச்சைகள்
கதையில்.
கதியற்று நின்ற குடும்பத்தை படாத பாடு பட்டு முன்னுக்குக்
கொண்டு வந்து, ஆனால் அந்தக் குடும்பமே இவள் நடத்தையில் சந்தேகப் பட்டு
வெளியில் துரத்த, கையறு நிலையில் தற்கொலை செய்ய தைரியமில்லாமல் ஊரை
விட்டுச் செல்ல முடிவெடுக்கும் நிலையில் மகாலிங்கம் ஆதரவு கொடுத்து,
திருமணம் செய்கிறார். இவள் அறிவால் கவரப் பட்டு தேவதையைப் போல ஆராதனை
செய்கிறார். இவளுக்கும் அவர் மூலம்தான் அந்தஸ்து வருகிறது.
இந்நிலையில் அவரை விட்டு விட்டு சாரங்கனுடனான லலிதாவின் உறவு, மகாலிங்கத்தைத் துறக்க அவளுக்கு வரும் எண்ணம், கங்காவின்
கலையில் மயங்கி நரசய்யா ஆவலுடன்
ஓரிரவில் இணைந்தாலும், ஒரு ஆண் என்ற முறையில் அவர் பாலம்மாளைத்தான்
காதலிக்கிறார் என்னும் நரசய்யாவின் வாதம், என சில கருத்துகள், சம்பவங்களை
ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ரசிக்க வைப்பது ஜேகேயின் எழுத்து ஆளுமை.
இந்தியாவின்
பாரம்பர்ய இசை, திரை இசை பற்றிய விவாதங்கள் நமக்குள் பல நினைவுகளைக்
கிளறுகின்றன அதில் ஒன்று 'உன்னால் முடியும் தம்பி'யில் வரும் சங்கீதச்
சண்டை.
இந்தக்கதை வெளிவந்த காலத்தில் ஜேகேயுடனேயே பத்திரிகைகளில் எழுதி வந்த ஜீவி
இந்தக் கதை பற்றியும், அவர் அபிப்ராயம், அப்போது இந்தக் கதைக்கு வந்த
தாக்கங்கள் பற்றியும் சுவாரஸ்யமாய்ப் பின்னூட்டமிடுவார் என்ற எதிர்பார்ப்பு
இருக்கிறது.
புத்தகத்தின் விலை...! 6.75.....! முதல் பதிப்பு டிசம்பர் 1966, இரண்டாவது 1969, மூன்றாவது 1972. மதுரை மீனாட்சி புத்தக நிலையம்!
நல்ல விமர்சனம்... நன்றி... உ.மு.தம்பியில் வரும் சண்டை மறக்க முடியாதது...
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்
பதிலளிநீக்குஅடேயப்பா கதையில இத்தனை கதாபாத்திரமா... இந்தப் புத்தகத்திற்கு இவ்வளவு தெளிவான விமர்சனம் எழுதுவதே சற்று சிரமமான விஷயம்... தெளிவாக எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குமுதலில் கதை குழப்புவது போல் இருந்தது அவ்வளவு கதாபாத்திரம்... மீண்டும் ஒருமுறை விமர்சனம் படித்த பொழுது தான் மண்டையில் ஏறியது.... இப்படி ஒரு கதை எழுதினால் நம் சமுதயத்தால் ஏற்றுக் கொள்வது கடினம் தான்... இருந்தும் நிதர்சனம் அது தானே..
பதிலளிநீக்குஉண்மையில் நிதர்சனத்தை ஒப்புக்கொள்வது ரொம்ப கஷடம்.
அதுவும் நம்ம வூட்டு நபரே அந்த நிகழ்வுகளிலே ஒன்னா இருக்கும்பொழுது
ரொம்பவே எம்பராஸ்மென்ட் தான்.
என்ன செய்யறது....
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினாலே...
யாரு சொன்னாக.... ஞாபகம் இல்ல... இருந்தாலும் சொல்லப்பட்ட விசயம் முக்கியம்.
அன்னிக்கு விஜய் டிவிலே அந்த ஒரு கோடி நிகழ்ச்சிலே அத்தனை தமிழ்ப்பெண்மணிகள் அடேங்கப்பா...என்ன தைரியமா.
வந்து..... ,,,
இதெல்லாம் அந்தக்காலத்துலே...ஏன் ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி நினைச்சுப்பார்த்திருக்க முடியுமா?
ஒரு பக்கம் உமன் எம்பவர்மென்ட் இது தானோ என்று தோண்றது.
ஜெயகாந்தன் கதை எல்லாமே பாரம்பரியத்தை கட் அன்ட் ரைட்டா எது தப்பு எது ரைட்டுன்னு
சொல்ற சமாசாரம்.
பின்னே, ஒரு பாரம்பரியத்தை கடைப்பிடிக்கணுமா வேணாமா என்பதெல்லாம் அவங்கவங்க சௌகரியத்தையும்
பொருளாதார நிலையையும் பொறுத்தது.
இந்த பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிற எதிக்ஸ் எல்லாமே ஒரு மிடில்க்ளாஸ் மொராலிடி தான்.
இது அதீத பணக்காரர்களுக்கும் பரதேசிகளுக்கும் பொருந்தாத விசயம்.
நடுவிலே நிக்கறோம் பாருங்க... அவங்க தான் எதித்த வூட்டுக்காரங்க...பக்கத்து ஊட்டுக்காரங்க, நம்ம ஊரு சனங்க,
மாமன் மச்சான் உறவுங்க இவங்க என்ன சொல்லிடுவானோ அப்படின்னு நினைச்சுகினு இருக்கோம்.
சுப்பு தாத்தா.
எதிர்பார்க்கவே இல்லை, ஸ்ரீராம்! உங்கள் எதிர்பார்ப்பை படித்தபோது திகைப்பு தான் ஏற்பட்டது, பலவருடங்களுக்கு முன் படித்ததை இப்பொழுது அலச வேண்டுமானால் மீள் வாசிப்பு இல்லையெனில் சாத்தியப்படாது. அதனால் இன்னொரு சமயத்தில் அதைப் பார்க்கலாம்.
பதிலளிநீக்கு'ஜேகேயுடனேயே' என்பதற்கு பதில்
ஜேகே காலத்தில் என்றிருந்திருக்க லாம். 'எழுதுவது எப்படி?'என்கிற கல்வியைக் கற்பித்த ஆசானாக அவரும், அவர் எழுதியவை அக்கல்வியை கற்பதற்கான புத்தகங்களாகவும் இருந்த காலம் அது. எழுத்துலகில் ஒரு யுகபுருஷனாய் அவரை மனதில் வரித்துக் கொண்ட காலம் அது.
அவர் எழுதியதைப் படித்து நிறைய விஷயங்களில் கொண்டிருந்த அசட்டுத்தனங்கள் மாறின.முன்முடிவு கள் தகர்த்தெறியப்பட்டன.முக்கியமாக எதைப்பற்றியும் நுணுகி ஆழமாக யோசிக்கும் ஆற்றல் கிடைக்கப்பெற்று மனசில் debate செய்யும் பக்குவம் ஏற்பட்டது அவரால் தான்.மணிபிரவாள நடை மனதை கொள்ளை கொண்டதற் கும் காரணம் அவர் தான்..
அவர் காட்டிய பாரதி அதுவரை தெரிந்திருந்த பாரதியை விட ஆற்றல் மிக்கவனாய் இருந்தான். மஹாத்மாவின் மகத்துவமும் கூட அவரைப் படித்ததினால் தான் தெரிந்தது. விரிந்த பாரதம் என்கிற போதத்தை மனசில் விதைத்தது கூட அவர் தான்.
இந்திய சாஸ்திரீய சங்கீதம் பற்றியும், மேனாட்டு இசை பற்றியும் அவற்றுக்குள்ளான வேறுபாடுகள் பற்றியும் இசை என்றால் என்ன என்பது பற்றியும் தான் எண்ணுவதை
சொல்லத்தான் இந்த நாவலையே எழுதினாரோ என்று கூட நான் நினைத்ததுண்டு. 'பாரீசுக்குப்போ"வை படித்த அக்காலத்து, நீங்கள் இங்கு சண்டை, சர்ச்சை என்று குறிப்பிட்டி ருப்பவை எல்லாம் மனசு மோஹித்த லாஹிரி ஆயின.
இளம் வயதில் மனதை ஈர்த்தவர்கள்
முதுமை வரை நினைவில் கூட வருவார்கள். ஜேகே அதில் முன்வரிசையில் சிம்சானமிட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
என் பதிவில் எழுத்தாளர் பகுதியில் அவரைப் பற்றி நான் எழுதியிருப்பதை யும் படித்திருப்பீர்கள். தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி.
பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நினைவுகளைக் கிளப்பிவிட்டீர்கள்.:)
பதிலளிநீக்குகோபுலுவின் ப்டங்கள் அப்படியே கண்முன் வருகின்றன.
கலைந்த தையும் சங்ளாஸும் போட்டுக் கொண்டு சாரங்கன். பறக்கும் புடவைத் தலைப்போடு லலிதா.
அந்தக் குட்டிப் பையன்..
ஆனா கரீனினா என்று படம்வந்ததே இந்தத் தொடர் படித்துதான் தெரியும். ஜயகாந்தனின் எழுத்துகள் எங்கள் வாழ்வில் புதுக் கோணங்களைக் காண்பித்தன.
இவாளவு பெரிய கதையை ஒரே மூச்சில் கொடுத்துவிட்டீர்களே. மனம் நிறைந்த பாராட்டுகள் ஸ்ரீராம்.
கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குகிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குகிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குகிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குகிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநான் இந்த கதை படித்தது இல்லை .என் அம்மா இந்த தொடர்கதை படிப்பார்கள் அப்போது பார்த்த படம் நினைவு இருக்கிறது.கோபுலு அவர்களின் ஓவியத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டு கையில் வயலின் வைத்துக் கொண்டு நிற்கும் படம்.
உங்கள் கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.
நான் வாசித்தது இல்லை. மிக அருமையாகக் கதையை எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசின்ன வயதில் எங்கள் வீட்டில் இந்தக் கதையை படிக்கத் தடை! ஆனாலும் யாருக்கும் தெரியாமல் படித்து பல விஷயங்கள் புரியாமல் போயிருக்கின்றன. பின்னாளில் முழுவதையும் நிதானமாகப் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகோபுலுவின் சாரங்கன் கண் முன் நிற்கிறான்!
பின்னூட்டத்தில் ஹேமா பலமுறை தேடித் பார்த்திருக்கிறார்...
பலமுறை படித்தால்தான் இத்தனை கதாபாத்திரங்களையும் வைத்துக் கொண்டு ஜெயகாந்தன் குழப்பமில்லாமல் கதையை சொல்லியிருக்கும் விதம் புரியும்.
கதையை நீங்கள் சொல்லியிருக்கும் விதம் நன்றாக இருக்கிறது.
நான் படிக்காத ஒரு புத்தகம்!விமர்சனம் நாவலை வாசிக்க தூண்டுகிறது! அருமை!
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன் படித்த கதை! கோபுலுவின் ஓவியங்களில் பல விமர்சனக்களைத்தாங்கி வந்த கதை! வீட்டின் நூலகத்தில் பைண்ட் செய்த இந்த நாவல் இருக்கிறது. உங்களின் கதைச்சுருக்கம் படித்த பின் தஞ்சை செல்லும்போது அவசியம் எடுத்துப் படிக்க ஆசை வந்திருக்கிறது!!
பதிலளிநீக்குநூலகத்தில் தேடிப் பிடித்து படிக்க வேண்டிய ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் விமர்சனம்.....
பதிலளிநீக்குசிறப்பான ஓர் அறிமுகத்திற்கு நன்றி.
ஆனந்த விகடனிலே வந்திருந்தாலும் இந்தக் கதை வெளிவந்த சமயம் கதை வந்த பக்கங்கள் நான் படிக்கும் முன்னர் கிழிக்கப்பட்டே அப்பா கொடுப்பார். :)))) ஸ்கூல் மாணவியாக இருந்த சமயம் அது! :))) போகட்டும், அதுக்கப்புறமா பைன்டிங்கிலே ஒரு முறையும் புத்தகமா வெளிவந்தப்புறமா ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்திலே இருந்து எடுத்து இன்னொரு முறையும் படிச்சிருக்கேன். ஆனாலும் இது என்னைக் கவரவில்லை. கதைச் சுருக்கம் அபாரம்.
பதிலளிநீக்குஇந்தக் கதையின் லலிதா தான் பாலசந்தரின் அரங்கேற்றம் கதாநாயகிக்கு வழிகாட்டியது என நினைக்கிறேன். இந்த லலிதா மாதிரித் தான் பாலசந்தரின் அரங்கேற்றம் லலிதாவும் குடும்பத்துக்காகப் பாடுபட்டு விபசாரி பட்டம் பெற்று குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு மனநோயாளியாவாள்னு திரைப்படத்தில் மாற்றப்பட்டிருந்தாலும் மூலக்கரு இது தான். :))))
அதே போல் உன்னால் முடியும் தம்பி படமெல்லாம் நான் பார்த்ததில்லை என்பதால் அதைக் குறித்து ஒண்ணும் சொல்ல முடியவில்லை. இனியொரு முறை புத்தகம் கிடைச்சாலும் மறு வாசிப்புக்கும் காத்திருக்கேன்; கிடைக்குமா பார்க்கலாம்.
ஆனந்த விகடனிலே வந்திருந்தாலும் இந்தக் கதை வெளிவந்த சமயம் கதை வந்த பக்கங்கள் நான் படிக்கும் முன்னர் கிழிக்கப்பட்டே அப்பா கொடுப்பார். :)))) ஸ்கூல் மாணவியாக இருந்த சமயம் அது! :))) போகட்டும், அதுக்கப்புறமா பைன்டிங்கிலே ஒரு முறையும் புத்தகமா வெளிவந்தப்புறமா ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்திலே இருந்து எடுத்து இன்னொரு முறையும் படிச்சிருக்கேன். ஆனாலும் இது என்னைக் கவரவில்லை. கதைச் சுருக்கம் அபாரம்.
பதிலளிநீக்குஇந்தக் கதையின் லலிதா தான் பாலசந்தரின் அரங்கேற்றம் கதாநாயகிக்கு வழிகாட்டியது என நினைக்கிறேன். இந்த லலிதா மாதிரித் தான் பாலசந்தரின் அரங்கேற்றம் லலிதாவும் குடும்பத்துக்காகப் பாடுபட்டு விபசாரி பட்டம் பெற்று குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு மனநோயாளியாவாள்னு திரைப்படத்தில் மாற்றப்பட்டிருந்தாலும் மூலக்கரு இது தான். :))))
அதே போல் உன்னால் முடியும் தம்பி படமெல்லாம் நான் பார்த்ததில்லை என்பதால் அதைக் குறித்து ஒண்ணும் சொல்ல முடியவில்லை. இனியொரு முறை புத்தகம் கிடைச்சாலும் மறு வாசிப்புக்கும் காத்திருக்கேன்; கிடைக்குமா பார்க்கலாம்.
நிறைய எழுத்துப் பிழைகளோடு பின்னூட்டம் இட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்..
பதிலளிநீக்கு//நிறைய எழுத்துப் பிழைகளோடு பின்னூட்டம் இட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்..//
பதிலளிநீக்குYou must have possibly read ALDUOUS HUXLEY 's essay IN PRAISE OF MISTAKES.
IN THOSE DAYS, THAT ESSAY WAS CONSIDERED AS THE PIONEER OF ALL PROSE IN ENGLISH LITERATURE.
IN ESSENCE, HE WROTE THAT ONLY WHEN U WRITE WITH A MISTAKE U ATTRACT ATTENTION OF THE READERS AROUND .
IN TODAY'S MANAGERIAL WORLD ALSO, IT IS WIDELY BELIEVED, THAT ONLY THOSE WHO COMMIT MISTAKES, DO.
SUBBU THATHA.
www.subbuthatha.blogspot.in
டிசம்பரில் (1966)வெளிவந்திருந்தால் அப்பா அனுமதித்திருப்பார் இந்தத் தொடரைப் படிக்க. அப்போழுது எனக்கு குழந்தை பிறந்துவிட்டதால் அடல்ட் புத்தகம் படிக்க சரின்னு சொல்லிட்டாரோ!!
பதிலளிநீக்குகாண்ட்ரவர்சியே உன் பெயர் ஜெகேயா.
பதிலளிநீக்குநன்றி DD
நன்றி ஸாதிகா
இது விமர்சனம் அல்ல படித்ததன் பகிர்வு!
நன்றி சீனு... கதையில் இன்னும் கூட சில பாத்திரங்கள் உண்டு. சாரங்கனின் வேலையாள் கன்னியப்பன், ஓவியக் கல்லூரி முதல்வர் மேனன், ஓவியக் கல்லூரி மாணவர்கள், சாரங்கனின் அண்ணன் மனைவி ராஜம், சாரங்கனின் வாசக நண்பர் சுந்தரம்,...!
நன்றி சூரி சிவா சார்... விஜய் டிவி நிகழ்ச்சி நானும் பார்த்தேன். மெட்ரோ ப்ரியாவுக்குதான் என்ன தைரியம்! ஜேகே கதைகள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். உங்களுக்குத் தெரியாததா?
நன்றி ஜீவி சார்! படைப்பைப் பற்றிச் சொல்ல மீல்வாசிப்புத் தேவை. அப்போது சுடச்சுட வாசித்த உங்கள் அனுபவங்கள் அப்போதைய எழுத்தாளர் வட்டத்திலும், வாசகர் வட்டத்திலும் என்ன பாதிப்பு இருந்தது, என்ன விமர்சனம் எழுந்தது என்றெல்லாம் சொல்லலாமே... ஆயினும் உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.
நன்றி வல்லிம்மா..... கோபுலு ஓவியங்களோடு நினைவு வைத்திருக்கிறீர்கள். எழுத்துப் பிழைகளை விடுங்கள்! சொல்லவந்த கருத்துதானே முக்கியம்! பாராட்டுக்கு நன்றி.
ஹேமா(HVL)... தே.....டி விட்டீர்கள்! நூலகத்தில் கிடைக்கும்.
நன்றி கோமதி அரசு மேடம்... நீங்கள் இந்தக் கதை படித்ததில்லையா? பாராட்டுக்கு நன்றி.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி ரஞ்சனி மேடம். //பின்னூட்டத்தில் ஹேமா பலமுறை தேடித் பார்த்திருக்கிறார்...// சில சமயம் கூகிள் இதுமாதிரிக் குழப்பங்கள் செய்து விடும்! எனக்கும் இதுமாதிரி அனுபவம் உண்டு.
நன்றி 'தளிர் சுரேஷ்.
நன்றி மனோ சாமிநாதன் மேடம். நான் கூட இந்தப் புத்தகத்தை தஞ்சை நூலகத்தில்தான் முதலில் படித்தேன்.
நன்றி வெங்கட்
நன்றி கீதா மேடம். அப்படிக் கிழித்து வைத்துப் படிக்க விடாமல் செய்வதற்கு கதையில் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அக்காலத்துக்கு அப்படித் தோன்றியிருக்கலாம் போலும்! அரங்கேற்றம் படத்துக்கு இந்த லலிதாதான் இன்ஸ்பிரேஷன்! படத்தில் பிரமீளா பெயரும் லலிதாதானோ! மௌனராகம் கிளைமேக்ஸ் பார்த்திருக்கிறீர்களா? நான் இந்தப் படம் பார்த்தபோது எனக்கு ஜேகேயின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்' நினைவுக்கு வந்தது!
பின்னூட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கிய ஹேமா(HVL), கீதா சாம்பசிவம், வல்லிம்மா, சுப்பு தாத்தா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றிகள்!!!!!
அன்பு சுப்பு சார்,
பதிலளிநீக்குஅன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
இருந்தாலும் தப்பாக எழுதிவிட்டுத் திருப்பிப்படிக்க வரும்போது எங்கள் தமிழ் மாஸ்டர் வந்து மிரட்டும் தொனி என்னுள் எழுகிறது:)
நன்றி ஸ்ரீராம்.இனிமேல் கவனமாக டைப்புகிறேன்.:)