செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பறவைகளுக்கு அருள்வாய் !

              
மீண்டும் கோடை காலம் வந்துவிட்டது.
               
வீதியில் இறங்கி நடந்தால், எவ்வளவுதான் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு வந்தாலும், ஒரு தெரு கடப்பதற்குள் நமக்கு தாகம் எடுக்கின்றது.
             

வெயிலிலேயே பறந்து திரிகின்ற காக்கைகள், குருவிகள், புறா எல்லாம் தாகம் எடுத்தால்  யார் வீட்டிலும் வந்து கதவைத் தட்டி,  குடிக்கத் தண்ணீர் கேட்காது. மினரல் வாட்டர், ரயில் நீர் எல்லாம் வாங்க அவைகளிடம் பைசாவும் இல்லை! நீர் நிலைகள்  வற்றி விடுவதால் நீர் தேடி பறக்கின்ற சிறு பறவைகளுக்கு, நாம் உதவ வேண்டும். 
             

எப்படி உதவலாம்? 
            
அகலமான பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து, அதை வீட்டின் மேல் மாடி திறந்த வெளியில் வைக்கலாம். வீட்டில் நமக்குப் பயன் படாத தானியங்களை மாடியில் வைக்கலாம். பழையதாகிப் போன பருப்புகள், குழந்தைகள் சாப்பிட மறுத்த உணவு, பழங்கள் இத்யாதி  - இவைகளை, வீட்டின் மேற்கூரையில் வைக்கலாம். 
      
இன்று அருகில் உள்ள பார்க் ஒன்றில் நடை பயிற்சிக்குச் சென்ற போது, அங்கு நடை பாதையில் உதிர்ந்திருந்த வாதாம் பழங்களைக் கொண்டு வந்தேன். அவற்றை பறவைகளுக்கு அளிப்பதற்காக மாடியில் வைக்க முடிவு செய்தேன். 
           
அடையார் ஆனந்தபவன் கடையில் வாங்கிய மைசூர் பாக் பெட்டியில் முழுவதும் நீர் நிரப்பி, அதையும் எடுத்துக் கொண்டேன்.
          
எல்லாவற்றையும் மாடியில், பறவைகளின் பார்வை படும் இடத்தில், கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாச்சு. 
                

பறவைகள், இவைகளை பயன்படுத்தியதா இல்லையா என்பதை, நாளை பதிவில், படத்துடன் பதிகின்றேன். 
       
உங்கள் வீட்டிலும், மேல் மாடியில், பறவைகளுக்காக தண்ணீர் வையுங்கள். மறக்காமல், உடனே, இன்றே, இப்பொழுதே! 
                      

13 கருத்துகள்:

 1. குருவிகள் மட்டும் வருவதில்லை... ஒரு வேலை எங்கள் ஊரில் இல்லையோ...? நான் பார்க்கவில்லையோ...?

  பதிலளிநீக்கு
 2. எங்க வீட்டிற்கு அருகில் மரங்கள் அதிகம் அதனால் சின்னச் சின்ன குருவிகள் அதிகம் பார்க்கிறேன். நல்ல பகிர்வுங்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது நல்லது தான். நான் எப்போதும் மண் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விடுவேன்.
  கோடைக் காலம் என்றால் அதற்கு அவசியம் தண்ணீர் வைக்க வேண்டும்.


  //வீட்டில் நமக்குப் பயன் படாத தானியங்களை மாடியில் வைக்கலாம். பழையதாகிப் போன பருப்புகள், குழந்தைகள் சாப்பிட மறுத்த உணவு, பழங்கள் இத்யாதி - இவைகளை, வீட்டின் மேற்கூரையில் வைக்கலாம்.//


  அந்தக் காலத்தில் பாழாய் போவது பசுவயிற்றில் என்று அரிசி கழுவிய நீர், காய்கறி தோல்கள், இட்லிக்கு கறுப்பு உளுந்து கழுவிய நீர் தோல்(இப்போது வெள்ளை உளுந்து தான் வாங்கி இட்லிக்கு அரைக்கிறோம் அதனால் .உளுந்து தோல் கிடைக்காது.) எல்லாம் ஒரு வாளியில்
  வெளியே வைத்து விடுவார்கள் மாடு வைத்து இருப்பவர்கள் அதை குடங்களில் சேகரித்து சென்று மாட்டுக்கு கொடுப்பார்கள்.
  சிலர் தெருவில் சுற்றும் மாட்டுக்கும் வைப்பார்கள் மிஞ்சிய உணவுகளையும் கொடுப்பார்கள்.
  யானை வந்தால் அரிசி, வெல்லம் கொடுப்பார்கள்.
  சில பண்ணையார் வீடுகளில் வாசலில் கஞ்சி தொட்டி என்று அந்தக் காலங்களில் உண்டு அதில் அரிசி கஞ்சி வடித்துக் கொட்டுவார்கள். பக்கத்தில் சிமெண்டில் கட்டிய தண்ணீர் தொட்டியும் உண்டு. கஞ்சியை குடித்து தண்ணீரைக் குடித்து மகிழ்ச்சியாக போகும்,ஆடு, மாடுகள்.

  உதவும் மனப்பான்மை எல்லோருக்கும் வந்து விட்டாலே உணவு பஞ்சம், நீர் பற்றாக்குறை எல்லாம் தீர்ந்து நாடு நலம் பெறும்.

  நாளை வருகிறேன்.
  பதிலளிநீக்கு
 4. திருமதி கோமதி அரசு கூட இதைப்போல காலையில் தங்கள் வீடு தேடிவரும் புறாக்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

  நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள் கட்டாயம் எல்லோரும் செய்வோம்!

  பதிலளிநீக்கு
 5. நானும் இத்தலைப்பில் ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன்.கோடைக்காலத்தில் நல்லதொரு பதிவு.

  பதிலளிநீக்கு
 6. கோடையில் தேவையான பதிவு. நாங்க வேண்டாத பாத்திரத்திலே வைப்போம். மதுரையில் நான் பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் முனிசிபாலிடியே ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டி கட்டி ஆடு, மாடு,குதிரைகள் சாப்பிடத் தண்ணீர் நிரப்பி வைப்பாங்க. வீடுகளிலும் வாசலில் தண்ணீர்த்தொட்டிகள் இருந்து பார்த்திருக்கேன். இப்போ எல்லாம் போச்சு. மறைந்து வருகிறது. சொல்ல வேண்டி இருக்கு. :)))))

  பதிலளிநீக்கு
 7. எத்தனை இரக்கமான மனசு ஷோபனா மேடம் உங்களுக்கு...! நல்ல யோசனை! நானும் விடுமுறை தினத்தன்று இதை நிச்சயம் செய்கிறேன். அருமையான விஷயத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. நல்லா சொல்லியிருக்கீங்க...
  சின்ன வயதில் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகள் வந்து விளையாடும்... இப்போ சிட்டுக்குருவிகளையே காணோம்...

  பதிலளிநீக்கு
 9. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாயில்லா ஜீவன்கள் மகிழ்ந்து வாழ்த்தும்.

  பதிலளிநீக்கு
 10. உண்மைதான் அவைகள் எங்கே போகும்...அருமையான எண்ணம்..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!