Tuesday, April 23, 2013

லால்குடி குரு

                     


லால்குடி ஜி ஜெயராமன். 
வயலின் வித்வான். 
தோற்றம்: 17 -09 - 1930.
மறைவு: 22 - 04 - 2013. 

இன்று இசை வானில் ஜ்வலிக்கும் பல (வாய்ப்பாட்டு, வாத்யம் இசைக்கின்ற) நட்சத்திரங்களின் குரு. 
             

ஒரு பழைய விகடன் கட்டுரை அவரைப்பற்றி-கீழே

மனதைக் கரைக்கும் உன்னத இசைக்கு லால்குடி ஜெயராமன் சொந்தக்காரர். இசையின் பல பரிமாணங்களை `இதோ, இதோ’ என பல கதவுகளைத் திறந்து காட்டிய இசை மேதையின் பெர்சனல் பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...

லால்குடி கோபால அய்யர்-சாவித்ரி தம்பதியினரின் மூத்த மகனாக 1930 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார் லால்குடி ஜெயராமன்.

லால்குடியின் தாயார் சாவித்ரி அம்மாள் 97 வயதிலும் உடன் இருந்து தன் மகனுக்கு இன்றும் ஆசிர்வதித்துக்கொண்டு இருக்கிறார். `அம்மாவின் அர்ப்பணிப்பும் ஆசிர்வாதமுமே தன் புகழுக்குக் காரணம்!’ என்பார் லால்குடி!

லால்குடியின் தந்தை கோபால அய்யர், வயலின் உட்பட பல்வேறு வாத்தியங்களில் விளையாடுவதிலும், வாத்தியங்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர். ஆனால், தன் வித்வத் திறமையை மக்களிடம் இவர் கொண்டுசென்றது இல்லை!

ஜி.என்.பி., செம்மங்குடி அரியக்குடி, மதுரை மணி, மதுரை சோமு, ராம்நாட் கிருஷ்ணன், ஆலத்தூர் சகோதரர்கள், பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், மகாராஜபுரம் சந்தானம் என பல இசை சிகரங்களின் கச்சேரிகளைத் தன் வயலினால் அழகுபடுத்தியவர் லால்குடி!

தந்தை கோபால அய்யர்தான் லால்குடியின் குரு, நாலு வயதில் இருந்தே அதிகாலை 3 ½ மணிக்குத் தொடங்கும் சாதகம் காலை 9 மணி வரை தொடருமாம். `அந்த கடினப் பயிற்சிதான் தன்னை ஒரு வடிவத்தில் பொருத்தியது’ என்கிறார்!

இவரின் மூன்று சகோதரிகளும் இசைக் கலைஞர்களே. பத்மாவதி வீணைக் கலைஞர், ராஜலட்சுமி, ஸ்ரீமதி இருவரும் வயலின் கலைஞர்கள். தன் சிறு பிராயத்தில் இருந்தே ஸ்ரீமதியுடன் சேர்ந்து நிறைய டூயட் கச்சேரிகள் வாசிக்கத் தொடங்கினார் லால்குடி!

மதுரை மணி, ஜி.என்.பி., செம்மங்குடி போன்ற பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் அப்போது வானொலி மூலம் லால்குடியில் உள்ள பூங்கா, கோயில்களில் பெரிய ஸ்பீக்கர்களில் ஒலிபரப்பாகுமாம். சிறு வயதிலேயே அந்தக் கச்சேரிகளைக் கிரகித்து வீட்டுக்கு வந்து அப்படியே வயலினில் வாசிக்கும் திறமை இருந்தது லால்குடியிடம்.

இந்தப் பழக்கம் பின் நாட்களில் மேற்சொன்ன பெரியவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும்போது லால்குடிக்குக் கைகொடுத்தது. `எனக்கு நீ ஏற்கெனவே பல கச்சேரிகள் வாசித்திருப்பதைப்போல பிரமிப்பை உன் வாசிப்பு ஏற்படுத்துகிறது’ என்று அலைவரிசை ஒற்றுமையால் ஆச்சர்யப்பட்டு இருக்கிறார்கள் மகாமெகா வித்வான்கள்!
              
வாய்ப்புகள், கச்சேரிகள், இசைத் தொடர்புகள் எனப் பல்வேறு காரணங்களுக்காக லால்குடியின் குடும்பம் சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலைக்கு இடம் பெயர்ந்தது. பிறகே, தற்போது உள்ள தி.நகர் ராமானுஜம் தெரு வீட்டுக்கு மாறியது!

லால்குடியின் வயலினும் பேசும்’ என்பார்கள், ஆம், இவரது தனிக் கச்சேரிகள் வாய்ப்பாட்டு நடையிலேயே அமையும். குறில் நெடில் அறிந்து பாடுவதுபோல இவரது வயலினில் இருந்து எழும்பி வரும் இசை, கேட்பவர்களுக்கு வார்த்தைகளாக ஒலிக்கும் இதனை `சாகித்திய வில் ‘ என்பார்கள்!

தன் சகோதரி ஸ்ரீமதியுடன் டூயட் கச்சேரிகள் செய்தவர், பிறகு மகள் லால்குடி விஜயலக்ஷ்மி, மகன் ஜி.ஜே.ஆர் கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கச்சேரிகள் செய்துவந்தார்!  

`சிருங்காரம்’என்ற பெயரில் தான் எடுக்க உள்ள திரைப்படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று சாரதா ராமநாதன் என்ற இயக்குநர் லால்குடியை அணுகினார். பொதுவாக, அவ்வளவாக சினிமா ஆர்வம் இல்லாத லால்குடி , கொஞ்சம் தயங்கிய பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான் லால்குடிக்கு 2006-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது!

இவரது மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி, இருவரும் பிரபல வயலின் வித்வான்கள், கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, விட்டல் ராம்மூர்த்தி, ஹரிசுதா காலட்சேபம் செய்யும் விசாகா ஹரி போன்ற இவரது மாணவர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளில் இவருக்குப் புகழ் சேர்த்தபடி இருக்கிறார்கள்!

குருவிடம் பணம் கொடுத்து இசை கற்க உதவியாக மத்திய அரசு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பாகத் தரும் பணத்தை லால்குடி இதுவரை ஏற்றதில்லை. கட்டாயப்படுத்தும் மாணவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு, அது பன்மடங்காகப் பெருகித் திரும்பும்போது, அதை அந்த மாணவனுக்கே வழங்கிவிடுவார்!.

`வயலின் வேணு வீணா! இந்த டைட்டிலில் உலகம் முழுவதும் இவர் தலைமையில் நடந்த நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. `வேணு’ என்றால் வேணுகோபாலன். அதாவது, கிருஷ்ணபகவானின் வாத்தியமான புல்லாங்குழல், `வீணா’ என்றால் வீணை, வயலினுக்கு லால்குடி, புல்லாங்குழலுக்கு என்.ரமணி, வீணைக்கு வெங்கட்ராமன் என்று மூவரும் சேர்ந்து பின்னியெடுத்த பிர்க்காக்களை நினைத்து சிலாகிக்காத இசை ரசிகர்களே இல்லை!. 
                    
காஞ்சி பெரியவர் பரமாச்சாரியார் ஒரு சமயம் ஏதோ கோபத்தில் `காஸ்ட மவுன’த்தில் ஆழ்ந்தார். அதாவது எவருடனும் பேசுவதில்லை. ஆசிர்வதிப்பது இல்லை எனத் தன் அறையிலேயே அமைதியாக முடங்கினார். தகவல் தெரிந்து, பெரியவரின் அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தனியாக வயலினை வாசிக்கத் தொடங்கினார் லால்குடி அவர் வாசிக்க வாசிக்க.... பெரியவர் வெளியே வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கத் தொடங்கியது நெகிழவைத்த நிகழ்வு! 
   
வர்ணம் அமைக்க கடினமான ராகங்களான `நீலாம்பரி,’ `தேவகாந்தாரி’, ஆகிய இரண்டு ராகங்களிலும் இவர் இசைத்த வர்ணம் இன்றும் இசை மேதைகளை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்!.  
   
கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு சென்னை மியூஸிக் அகாடமி தரும் `சங்கீத கலாநிதி’ விருது ரொம்பவே ஸ்பெஷல். ஆனால், என்ன காரணமோ, காலதாமதமாக லால்குடிக்கு விருதை அறிவித்தபோது, விருதை வாங்க மறுத்துவிட்டார். தனது 80-வது ஆண்டு விழாவில், 'வாழ்நாள் சாதனையாளர்’ ஆண்டு விழாவில், `வாழ்நாள் சாதனையாளர்’ விருதை லால்குடிக்கு வழங்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது மியூஸிக் அகாடமி!

லால்குடி சிறந்த ஓவியரும்கூட மாணவர்களின் ரஃப் நோட்புக்கில் யானை, மயில் என்று வெரைட்டியான படங்களை அழகாக வரைந்து கொடுப்பார்!

இன்று வரை வாழ்நாளில் தான் வாசித்த கக்சேரிகள் பற்றி தகவல்களை நோட்புக்கில் தன் கைப்பட அழகாகக் குறிப்பு எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்!

இவர் கம்போஸ் செய்து அரங்கேற்றிய `ஜெயஜெயதேவி’ நாட்டிய நாடகம் பல்வேறு நாடுகளில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது! 
    
சில வருடங்களுக்கு முன்பு லால்குடிக்குச் சென்றவர், அங்குள்ள அரசுப் பள்ளியின் சிதைந்த நிலைமையைச் சீரமைக்கப் பல்வேறு கச்சேரிகள் மூலமும் நண்பர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார்
.
எஸ்.பி.பி-யின் வாய்ஸ் மாடுலேஷனை ரசிப்பார், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகளின் பாடல்கள் பிடிக்கும் . மெஹதிஹாசனின் கஜலும் விருப்பம்! 
     
இவரின் மனைவி ராஜலட்சுமியிடம், `ஏம்மா ராஜம், அது என்ன கச்சேரி?’ என்று இவர் ஏதாவது சந்தேகம் கேட்டால், `அன்னிக்கி புறப்படுறதுக்கு முன்னால இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டுட்டுப் போனீங்களே?’ என்று நாள், கிழமை, மெனு உட்பட அனைத்தையும் சொல்லும் ஆதர்ஷ மனைவி.  
      
இசையில் பல்வேறு சாதனைகள், எட்ட முடியாத உயரங்கள் தொட்ட பிறகும் இன்றும் ஒரு மாணவனாகவே வாழ்ந்து வரும் லால்குடி (2010 September) இம்மாதம் 17-ம் தேதி 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரின் இசை ரசிகர்கள் `லால்குடி -80’ என்ற பெயரில் ஆத்மார்த்தமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்!  
   
தொகுப்பு: 
திருமதி ஆனந்திராம்குமார் 
நன்றி :: ஆனந்த விகடன். 
                          

11 comments:

அப்பாதுரை said...

பல தனிமைகளை இனிமையாக்கியவருக்கு வந்தனம்.

கோமதி அரசு said...

பெரியவரின் அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தனியாக வயலினை வாசிக்கத் தொடங்கினார் லால்குடி அவர் வாசிக்க வாசிக்க.... பெரியவர் வெளியே வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கத் தொடங்கியது நெகிழவைத்த நிகழ்வு! //

உண்மையில் நெகிழ வைத்த நிகழ்வு.
லால்குடி அவர்களைப் பற்றிய அரிய செய்திகள் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

லால்குடி அவர்களைப் பற்றிய பல செய்திகளுக்கு நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

பெரியவரின் அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தனியாக வயலினை வாசிக்கத் தொடங்கினார் லால்குடி அவர் வாசிக்க வாசிக்க.... பெரியவர் வெளியே வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கத் தொடங்கியது நெகிழவைத்த நிகழ்வு!

rajalakshmi paramasivam said...

//பெரியவரின் அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தனியாக வயலினை வாசிக்கத் தொடங்கினார் லால்குடி அவர் வாசிக்க வாசிக்க.... பெரியவர் வெளியே வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கத் தொடங்கியது நெகிழவைத்த நிகழ்வு! //
மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகத்தான் இருந்திருக்கும்.
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

sury Siva said...

லால்குடி ஜெயராமன் அவர்கள் இயற்றிய தில்லானாக்கள்
அவரது அபார வித்வத்தை எடுத்துக்க்காட்டுகின்றன.
ராகங்களின் முழு பரிமாணத்தையுமே தனது வாசிப்பிலே
அவர் வாய்ப்பாட்டுக்கச்சேரிக்கு பக்கவாத்யமாக வாசிக்கும்பொழுது கூட
எடுத்துக் காண்பிப்ப்பதிலே வல்லவர்.
குரு பக்தி என்றால் என்ன என்பதற்கு இவர் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் சாட்சி.
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது
நமது பாக்யம்.

சுப்பு தாத்தா.

Ranjani Narayanan said...

மிகச்சிறந்த கலைஞருக்கு நல்ல ஒரு அஞ்சலி.

இவரது தில்லானாக்கள் பாரத நாட்டியக் கலைஞர்களிடமும் மிகவும் பாபுலர்.

Geetha Sambasivam said...

அருமையான அஞ்சலி. தொகுப்புக்கு நன்றி. வழக்கம் போல உங்கள் பதிவுகள் அப்டேட் ஆவதில்லை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வந்து பார்த்தால், இந்தப் பதிவு! :(

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான அஞ்சலி.....

திறமை மிகுந்த மனிதர் பற்றிய தொகுப்பிற்கு நன்றி.......

raman said...

If there could be one soul that could be resting in peace without our prayers, it is Sri Jayaraman's. A true nadhayogi and a gem of a human being. A remarkable lecdem expert on music.

வல்லிசிம்ஹன் said...

ஒரு பெரிய சகாப்தம். இனிய கச்சேரி.
அனைவரையும் நாத வெள்ளத்தில் இன்பமாக மிதக்க வைத்தவர்.உயர்ந்த கானத்துக்கு உரியவர்.
அவருக்கு உரித்தான அஞ்சலி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!