புதன், 3 ஏப்ரல், 2013

குப்புசாமி


காலை 9 மணிக்கு ஸ்லீப்பர் பெர்த்தில் படுத்துத் தூங்க முடியுமா? ஆனாலும் A/C கோச்சில் காலை படுத்தபடி பயணம் என்றதும் புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டது உபயோகமாக இருந்தது.

                                             
 
ஜெயமோகனின் 'அறம்' புத்தகம் எடுத்து வைத்திருந்தேன். மாமா, அக்காவுடன் அவ்வப்போது பேசிக் கொண்டே, புத்தகம் படித்துக் கொண்டே திருக்கடையூர் நோக்கிப் பயணம் தொடங்கியது.

எங்கள் கம்பார்ட்மெண்டில் பக்கத்து இருக்கைகள் நிரம்பியிருந்தாலும் நாங்கள் இருந்த பகுதியில் நாங்கள் மட்டுமே இருந்தது எங்கள் அதிருஷ்டம்! 'கொஹி பகோரி... கொஹி பகோரி' என்று என்ன விற்கிறார்கள் என்று நிமிர்ந்து பார்த்தால் மெது பக்கோடா.

                                              
 
அவ்வப்போது பேசிக்கொண்டே புத்தகம் படித்துக் கொண்டே பயணம்.

நடுவே ஒரு மணிக்கு, அக்கா வீட்டிலிருந்து கலந்து எடுத்து வந்திருந்த தயிர்சாதமும், மாங்காய்த் தொக்கும் வயிற்றை நிறைத்தன.

                                            
 
சாதாரணமாக இது மாதிரி ட்ரெயின்களில் டீ, காபி எதுவும் வாங்கிச் சாப்பிட்டு விடக் கூடாது. ஸஹிக்காது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் 'நன்றாக இருக்கும்' என்று நம்பி வாங்கிய மசால் வடையும் முரடாக இருந்தது.

'அறம்' புத்தகத்தில் அதே பெயர் கொண்ட கதை படித்து நெகிழ்ந்து போனேன். ஜீவி சார் அந்தக் கதை பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்ததும் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. 

                                                 

விழுப்புரம், சீர்காழி என்று ஸ்டேஷன்களில் இறங்கி நின்று மாற்று ரிலாக்ஸ் செய்து விட்டு, தொடர்ந்த பயணத்தை மதியம் 3 மணிக்கு மாயவரத்தில் முறித்து இறங்கினோம். ("சீர்காழியில் கூட இறங்கியிருக்கலாம் சார்... அங்கேருந்து இன்னும் பக்கம்")

கோமதி அரசு மேடம் நினைவுக்கு வந்தார். அவர் ஊராச்சே...!


'கார் கொண்டு வருகிறேன்' என்று சொன்ன தன் மாப்பிள்ளையை 'எதற்குச் சிரமம்' என்று மாமா தடுத்து விட்டதில் திருக்கடையூர் செல்ல பஸ் ஏற மெயின் பஸ் ஸ்டேண்ட் செல்ல வேண்டும். வாசலில் பஸ் நிற்கிறது என்றதும் விரைவாக நடந்தோம்.


பஸ்ஸிலிருந்து எட்டிப் பார்த்தபடிக் காத்துக் கொண்டிருந்த டிரைவர் "மெதுவா வாங்க...நீங்க வந்து தான் பஸ் எடுப்போம்" என்றா புன்னகையுடன். அது முதல் ஆச்சர்யம். (திருக்கடையூர் செல்ல மெயின் பஸ் ஸ்டேன்ட் செல்ல வேண்டும் என்று இந்த பஸ்சின் டிரைவர்தான் கூறினார். அது மட்டுமல்ல கால் டாக்சி போல வைத்தால் எவ்வளவு ஆகும் என்று கேட்டதும், 'ஐயோ வேணாம், 400, 500 கேட்பார்கள். பஸ் ஸ்டேண்டில் இறக்கி விடறேன்.. அங்கேருந்து நிறைய பஸ் இருக்கு.. 10 ரூபாய், 12 ரூபாய் டிக்கெட்டில் போய் விடலாம் என்றும் ஆலோசனை கூறினார். இது இரண்டாவது ஆச்.)


ஏறியவுடன் எனக்கு ஸீட் இல்லாமல் நான் நிற்பதைப் பார்த்து அவருக்கு நேர் எதிரே இருந்த இருக்கையில் உட்கார சைகை காட்டினார். அதில் ஒரு Bag வைக்கப் பட்டிருந்ததைக் காட்டினேன். "அது என்னுதுதான்...எடுத்து கைல குடுத்துட்டு நீங்க உட்காருங்க" என்றார். 6 ரூபாய் பயணச் சீட்டு என்று நினைவு.


பஸ் மெள்ளத்தான் கிளம்பியது. அந்த ரயில் வரும் நேரத்துக்குத் தக்கவாறு விடப் பட்ட பஸ் போலும். ஆட்டோக் காரர்களும் டாக்சிக்காரர்களும் இவரை முறைக்க,  இவர் அவர்களைப் பார்த்துக் குழைவாகச் சிரித்தபடி, "பாவம்... லேடீஸ்.. பாவம் குழந்தைங்களோட வர்றாங்க... இதோ..இதோ கிளம்பிடுவேன்பா" என்று மேக்சிமம் பயணிகளை ஏறிக் கொண்டுதான் கிளம்பினார். திருப்பம் வரை இன்னும் ஏதாவது பயணிகள் வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தது 3 வது ஆச்.


பெரிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் மறுபடியும் வழி கூறினார். "வெளியில் சென்று இடது பக்கம் போய் உடனே வலது பக்கம் திரும்பி மார்க்கெட் வழியா நேராப் போங்க... அங்கே பஸ்கள் நிற்குமிடம் வரும். ரெடியா நிற்கற பஸ்ல கூட்டமிருந்தால் அதை விட்டுடுங்க... உடனே அடுத்த பஸ் வரும்" இந்த அளவு விவரங்கள் மறுபடி மறுபடிக் கூறிக் கொண்டே வந்தார்.

                                         

 
இறங்கியதும் எதிர்த் திசையில் மாமா நடக்கத் தொடங்க, பின்னாலேயே இறங்கிய குப்புசாமி- அதுதான் அவர் பெயர் - "தப்பு... இந்தப் பக்கம்...இந்தப் பக்கம் வாங்க..." என்று எங்களுடனே நடந்து வந்து வழியைக் காட்டி விட்டுச் சென்றார். நாலாவது ஆச்சர்யம்.

25 கருத்துகள்:

 1. கோமதி அரசு அவர்களின் ஊர் இன்று தான் அறிந்தேன்...

  பயணத்தை தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. குப்புசாமிகள் எல்லா டயத்தைலயும் கிடைப்பதில்லை.
  கோஹி பொரின்னு நம்ம ஊர்ல விற்கிறார்களா! என்ன ஆச்சு தமிழுக்கு.
  தெரிந்திருந்தால் தயிர்சாதம் மாவடுக்கு அங்கே கழுகா வந்திருப்பேன்:)
  தொடருவேன்.

  பதிலளிநீக்கு
 3. //'அறம்' புத்தகத்தில் அதே பெயர் கொண்ட கதை படித்து நெகிழ்ந்து போனேன். ஜீவி சார் அந்தக் கதை பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்ததும் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. //

  கூடவே லேப்டாப் எடுத்துச் சென்றிருந் தால், சூட்டோடு சூடாக எனது 'மறம்' கதையையும்படித்திருக்கலாமில்லையா?

  'நான் குப்புசாமி இல்லை' என்ற என் சிறுகதையும் நினைவுக்கு வந்தது.
  இந்த குப்புசாமி வேறே;அந்த குப்புசாமி வேறே.

  பதிலளிநீக்கு
 4. மதியம் 3 மணிக்கு மாயவரத்தில் முறித்து இறங்கினோம். ("சீர்காழியில் கூட இறங்கியிருக்கலாம் சார்... அங்கேருந்து இன்னும் பக்கம்")

  கோமதி அரசு மேடம் நினைவுக்கு வந்தார். அவர் ஊராச்சே...! //

  சென்னையிலிருந்து வந்தால் திருக்கடையூருக்கு செல்ல சீர்காழியில் இறங்கினால் பக்கம் தான்.

  மாயவரம் வந்து திருக்கடையூர் சென்று இருக்கிறீர்கள்! ரயில் நிலையம் அருகில் தான் வீடு .முன்பே தகவல் தெரிவித்து இருந்தால் சொல்லி இருப்பேன்.
  அடுத்தமுறை வந்தால் வீட்டுக்கு வாருங்கள்.
  மாயவரம் வந்தவுடன் என் நினைவு வந்தது மிகவும் மகிழ்ச்சி.

  குப்புசாமி அவர்கள் போல உதவும் நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு மாயவரத்தில்.

  ரயில் நிலையத்திலிருந்து திருக்கடையூர் பஸ் நிலையத்திற்கு ஆட்டோக்காரர்கள் 70 ரூபாய் கேட்பார்கள்.

  நடக்கும் தூரம் இருக்கும் எங்கள் வீட்டுக்கே ஆட்டோ 50 ரூபாய் வாங்குகிறார்கள்.

  குப்புசாமி அவர்கள் பேச்சைக் கேட்டு பஸ்ஸில் போனது பணம் மிச்சம்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல மனிதர் குப்புசாமி. முதல் படம் லீடிங் லைனுடன் அருமையாக எடுத்துள்ளீர்கள்!

  பதிலளிநீக்கு
 6. அடடே நீங்களும் பயணக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்து விட்டீர்களே ஐந்தாவது ஆச்சரியம்

  பதிலளிநீக்கு
 7. இந்தக் குப்புசாமியை ஏற்கெனவே பார்த்திருக்கேனே, எங்கள் ப்ளாகிலேயா? ஸ்ரீராம் காணாமல் போனப்போவா? ம்ம்ம்ம்ம்ம்ம்??? எப்போ மின்சாரம் போகுமோனு இருக்கறச்சே, எங்கேனு தேடறது! :))))

  பதிலளிநீக்கு
 8. சென்னையிலிருந்து கும்பகோணத்துக்குக் காலம்பர டே எக்ஸ்ப்ரஸ் எனப்படும் சோழனில் தான் போயிட்டிருந்தோம். அதிலேயும் குளிர் வசதி கொண்ட 2 அடுக்குத் தூங்கும் பெட்டி அல்லது 3 அடுக்க்ப் பெட்டிதான். நடைமேடையில் வண்டிக்காகக் காத்திருந்து பின்னர் வண்டி ஒருவழியா நடைமேடைக்கு வந்ததும் முதல் ஆளா ஏறி உட்காருவோம். உட்கார்ந்த உடனே கொண்டு போன காலை ஆகாரம், காஃபி(காஃபி கையிலே கொண்டுபோயிடுவோம்) முடிச்சுட்டு, மாத்திரைகளையும் விழுங்கிட்டு பயணச்சீட்டுப் பரிசோதகருக்குக் காத்திருப்போம். இதிலே நம்ம ரங்க்ஸ் முதல் ஆளா மேலே ஏறிப் படுக்கை போட்டுப் படுத்துடுவார். பரிசோதகர் வந்தால் நீ காட்டுனு சொல்லிடுவார். அவர் வந்ததும் காட்டிட்டுப் படுத்துடுவேன்.

  பின்னே? காலம்பர மூன்றரை மணிக்கே எழுந்து வீடு பெருக்கித் துடைத்து, வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் காபி போட்டுக் குளித்துச் சமைத்து காலம்பர சாப்பிட, மதியத்துக்குச் சாப்பாடுனு எடுத்து வைத்துக் கொண்டு ஒழித்துப் போட்டுப் பாத்திரமும் தேய்த்து வைத்துவிட்டு வந்தால் தூக்கம் வராதா? :)))))

  இப்போவும் கிட்டத்தட்ட இங்கிருந்தும் அப்படித்தான். என்ன, காலை ஆறரைக்குக் கிளம்புவோம். கார் என்பதால் காலை ஆகாரம், மதிய சாப்பாடு, காஃபி எல்லாமும் கொண்டுபோயிடுவோம். அங்கே கிராமத்தில் ஒண்ணும் கிடைக்கவும் கிடைக்காது. :))))))

  பதிலளிநீக்கு
 9. ஒருத்தர் கூட ஜெ.மோ.வைக் கண்டுகிட்டதாகவே தெரிலே,பாருங்க!
  இதுவே தேவன், கொ.சு.,ரா.கி.ரா.,
  பி.வி.ஆர்., ஜ.ரா.சு-ன்னா இப்படி விட்டிருப்பாங்களா?..

  பதிலளிநீக்கு
 10. குப்புசாமி நிச்சயம் ஆச்சரிய மனிதர்தான்! பயணங்கள் எப்போதும் ரசனையானவை தான்!

  பதிலளிநீக்கு
 11. படங்களும் பகிர்வும் ரசனைக்குறியது.

  பதிலளிநீக்கு
 12. சென்னையை தாண்டி உள்ளே தஞ்சாவூர், திருச்சி, மாயவரம் பக்கம் போய்விட்டால் இதைப் போல நிறைய குப்புசாமிகளைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

  போன வெள்ளிக்கிழமை ஒரு கல்யாண ரிசப்ஷன். பத்திரிகையில் குழப்படியாக ஒரு விலாசம். ஆட்டோ ஓட்டுனர் 'எனக்குத் தெரிஞ்சு ஸ்ரீ கிருஷ்ணா கல்யாண மண்டபம் இதுதான் என்று நேராகக் கொண்டு போய் விட்டுவிட்டார்.
  ஒருவேளை ஆட்டோவிற்குள் 70 ம் 60 ம் இருந்ததாலோ என்னவோ!
  பெங்களூர் குப்புசாமி!

  பதிலளிநீக்கு
 13. ஆச்சர்யம் ஆச்சர்யமாக சொல்லி கடைசி ஆச்சர்யத்தில், அதான் அந்த குப்புசாமி இறங்கி வந்து உங்களுக்கு வழிகாட்டினாரே அதைப் படித்ததும் மயக்கம் வராத குறை தான்.

  நல்லார் ஒருவர் உளரேல்......போதும்

  பதிலளிநீக்கு
 14. இது போன்ற நல்லவர்கள் இன்னும் இருப்பதால் தான் ஏதோ கொஞ்சமாவது திருப்தி!

  பயணம் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 15. //ஒருத்தர் கூட ஜெ.மோ.வைக் கண்டுகிட்டதாகவே தெரிலே,பாருங்க!
  இதுவே தேவன், கொ.சு.,ரா.கி.ரா.,
  பி.வி.ஆர்., ஜ.ரா.சு-ன்னா இப்படி விட்டிருப்பாங்களா?..//

  ஹிஹிஹி, உண்மை. ஜெ.மோ. தனி ரகம் தான். இவங்களோட ஒப்பிட முடியாது. என்ன இருந்தாலும் தேவன் தேவன் தான். ஸ்ரீமான் சுதர்சனம் ஒண்ணு போதுமே. இல்லைனா சாம்புவுக்கு ஈடு எது?

  பதிலளிநீக்கு
 16. உங்க கண்ணுல மட்டும் எப்படி இப்படிபட்ட ஆளெல்லாம் படறாங்க?

  பதிலளிநீக்கு

 17. - நன்றி DD

  - நன்றி middleclassmadhavi

  - நன்றி வல்லிம்மா. தயிர்சாதம் மாவடு இல்லை, தயிர் சாதம் மாங்காத் தொக்கு!

  - ஜீவி சார்... 'மறம்' கதை? தேடிப் படிக்கிறேன். ஜெமோ ரசிகர்கள் யாரும் இந்தப் பதிவைப் படிக்கவில்லை என்று தெரிகிறது! ஒன்று லேபிளில் அவர் பெயர் கொடுத்திருக்க வேண்டும். அல்லது தனியாக அவர் பற்றி மட்டும் எழுதியிருக்க வேண்டும்! ஒன்றிரண்டு பேராவது சொல்லியிருக்கக்..........கூடும்! :)))

  - கோமதி அரசு மேடம்... முன்பே உங்கள் பதிவிலாவது சொல்லியிருக்கலாம்! அடுத்த முறை செய்கிறேன்! நன்றி மேடம். திரும்பும் வழியில் மாயவரத்தில் மாமாவின் நண்பர் வீட்டில் முக்கால் மணி நேரம் செலவழிந்தது. இடம் பெயர் தெரியவில்லை! இந்த குப்புசாமி என்றாவது உங்கள் கண்ணில் பட்டு பார்த்த ஞாபகம் இருக்கிறதா?!

  - நன்றி ராமலக்ஷ்மி.. அது செல்லில் எடுத்த படம். உங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது. கேமிரா செயலிழந்து விட்டது! ("என் பெயரையே கெடுக்கறே நீயி... இனி நான் வேலை செய்யமாட்டேன்" என்று சொல்லாமல் சொல்லி விட்டது!)

  - சீனு... இது பயணக் கட்டுரை என்று யார் சொன்னது! தொடர்ந்து எழுத ஒன்றுமில்லையே...!!

  - கீதா மேடம்... //இந்தக் குப்புசாமியை ஏற்கெனவே பார்த்திருக்கேனே, எங்கள் ப்ளாகிலேயா? //
  பார்த்திருக்க மாட்டீர்கள். படித்திருப்பீர்கள்! அது வேற குப்பு. முன்னாடி எல்லாம் டிரெயினில் மற்றவர்கள் பார்த்திருக்க, பொட்டலம் பிரித்து சாப்பிடுவது கூச்....சமாக இருந்தது. இப்போதெல்லாம் உதிர்ந்து விட்டது! :))

  - நன்றி RR (ராஜராஜேஸ்வரி) மேடம்... ரெண்டு தபா எடுக்கு ஆச்சர்யப் பட்டிருக்கீங்கன்னு தெரியலை! :)))

  - நன்றி T R M

  - நன்றி பால கணேஷ். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்...

  - நன்றி ஸாதிகா மேடம்.

  - நன்றி ரஞ்சனி மேடம்...

  - நன்றி வெங்கட்.

  - நன்றி ஹேமா(HVL).. கறுப்புச் சட்டையில் வெள்ளை புள்ளி போல 'சட்'டெனத் தெரிகிறது!!

  - நன்றி அமைதிச்சாரல்.

  பதிலளிநீக்கு
 18. //முன்னாடி எல்லாம் டிரெயினில் மற்றவர்கள் பார்த்திருக்க, பொட்டலம் பிரித்து சாப்பிடுவது கூச்....சமாக இருந்தது. இப்போதெல்லாம் உதிர்ந்து விட்டது! :))//


  ஹிஹிஹி, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வேளை சாப்பிட்டிருப்பீங்களா? அல்லது இரண்டு வேளை?? நாங்கல்லாம் ரயிலிலே குடித்தனமே பண்ணி இருக்கோமே! சலிக்காமல் மூணு நாட்கள் போனதெல்லாம் உண்டு.
  அதுவும் முதல் வகுப்பில் முன்பதிவு செய்துட்டு, அந்த இணைப்பு வண்டியை விட்டுட்டு, இன்னொரு வண்டியில் பொதுப் பெட்டியில் முன்பதிவே இல்லாமல் சாமான்களைப் போட்டுக் கொண்டு அது மேலே உட்கார்ந்து அல்லது கழிவறைக்கு அருகே உட்கார்ந்தெல்லாம் போயிருக்கோம். :)))) இதெல்லாம் ஜுஜுபி!

  பதிலளிநீக்கு
 19. // 'மறம்' கதை? தேடிப் படிக்கிறேன்.//

  இந்த 'அறம்' கதை படித்தவுடனே கிளர்ந்த உணர்வில் எழுதிய கதை.
  உங்கள் பார்வையில் அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடமுடியுமென் றால், உங்கள் உணர்வைச் சொல்லுங்கள்.

  // ஜெமோ ரசிகர்கள் யாரும் இந்தப் பதிவைப் படிக்கவில்லை என்று தெரிகிறது! ஒன்றிரண்டு பேராவது சொல்லியிருக்கக்..........கூடும்! :))) //

  ஒருவரை எனக்குத் தெரியும். அவர் பதிவு பின்னூட்டங்களில் உங்களைப் பார்த்திருக்கிறேனே தவிர, 'எங்களி'ல்
  அவரை இதுவரை பார்த்த நினைவில்லை.


  பதிலளிநீக்கு
 20. இந்த குப்புசாமி என்றாவது உங்கள் கண்ணில் பட்டு பார்த்த ஞாபகம் இருக்கிறதா?!//

  பார்த்த மாதிரி நினைவு இருக்கிறது.
  உங்கள் பதிவில் பார்த்ததால் இனி பார்த்தால் நினைவு வரும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!