Thursday, July 18, 2013

நான்மாடக் கூடல் வீதிகளில்!

            
மதுரை சென்று, இரயிலை விட்டு  இறங்கியதும், கூகிள் மாப் பார்த்த (கொடுத்த) தைரியத்தில், இருபது கிலோ எடை பைகளுடன், விடு விடுவென்று வீரமாக நடை போட்டேன். வழக்கம் போல திருமதி, பின் தொடர்ந்து வந்துகொண்டே 'நீங்க தப்பான பாதையில போய்கிட்டு இருக்கீங்க' என்று சொல்லியவாறு வந்துகொண்டிருந்தார். 
              

     
நான், கூகிளாண்டவரை மனதில் நிறுத்தி, ஸ்டேஷனை விட்டு வெளியே இரயில் வந்த திசைக்கு வலது பக்கம் செல்ல வேண்டும், பிறகு இரயில் வந்த திசையிலேயே செல்ல வேண்டும். அப்போ கட்டபொம்மன் சிலை கண்ணில் தெரியும். அதற்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் ரூம் புக் செய்த ஹோட்டல் என்று நெட்டுருப் போட்டு வைத்திருந்த கைடு மனதில் ஓட்டியவண்ணம் சென்று கொண்டிருந்தேன். 
              
எல்லாம் சரி. முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பார்கள். அவசரத்தில், இரயில் வந்து நின்ற திசையை தவறாக கணித்துவிட்டேன் போலிருக்கு  .... மதுரை சந்திப்பின் மறுபுறம் இறங்கி, இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து, சந்தி (சிரி)ப்பாகி, ஓரிருவரை பஸ் ஸ்டாண்ட் எந்தப் பக்கம் என்று விசாரித்து, அவர்கள் எந்த பஸ் ஸ்டாண்ட் என்று கேட்டு, கட்டபொம்மன் சிலையருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் என்று விளக்கி ......... அவர்கள் எங்களை, வந்த வழியே திருப்பியனுப்பினார்கள். 
              
அப்புறம் மதுரை சந்திப்புக்கு மீண்டும் வந்து, ஓவர் பிரிட்ஜ் ஏறி, முன்பக்கம் வந்து இறங்கி, கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தவருக்கு நன்றி கூறி, ஹோட்டல் ரூமையடைந்தோம். 
                 
பல் தேய்த்து, ஸ்நான பானாதிகள் முடித்து, கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமா என்று நான் யோசிக்கும்பொழுது, திருமதிக்கு, 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..... நண்பியே, நண்பியே, நண்பியே ஏ ஏ !!!!' என்று நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அந்த மதுரை மண்ணிலே தான் நடந்து வந்த பாதைகளைப் பார்க்கவேண்டும், அதையும் நடந்தே பார்க்கவேண்டும், தன்னுடைய பாட்டி வீட்டைக் காணவேண்டும் என்று அடங்காத ஆர்வம் ஏற்பட்டது.  
                  
"கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, அப்புறம் போகக்கூடாதா?"
               
"அதெல்லாம் முடியாது. வெயிலுக்கு முன்பாகக் கிளம்பிடலாம். அப்புறம் வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்."
               
"லாம்." 
              
கிளம்பிவிட்டோம். 
            
"இரயில்வே ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் வரை நீங்க வழி சொல்லுங்க. அப்புறம் பாட்டி வீடு வரை நான் கண்ணை மூடிக் கொண்டு நடப்பேன், நீங்க என் பின்னாடியே நடந்து வந்தா போதும்!"  
              
மதுரை இரயில் நிலைய வாசல் வரை, காலையில் வந்த வழியை நினைவில் வைத்திருந்து நான் லீட் செய்தேன். 
               
"அம்மா தாயே - இதோ இருக்கு இரயில் நிலைய வாசல். இனிமே நீ கண்ணை (முடிந்தால் வாயையும்) மூடிக் கொண்டு நட" என்றேன். 
               
கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டுதான் நடந்தார். கொஞ்ச தூரம் வேகமாக, பிறகு கொஞ்சம் மெதுவாக அதற்குப் பிறகு சுற்று முற்றும் எச்சரிக்கையாகப் பார்த்தவாறு நடந்தார். 
    
"நீங்க நன்றாகப் பார்த்தீர்களோ? நம்ம நடக்க ஆரம்பித்தது மதுரை இரயில்வே ஸ்டேஷன் முகப்பிலிருந்துதானே? அங்கே மங்கம்மா சத்திரம் இருந்ததோ?"
     
"மங்கம்மா சத்திரமா? அது சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும் பேசின் பாலம் ஸ்டேஷனுக்கும் நடுவுல இல்ல வரும்?"
  

    
"உங்களை நம்பி வந்தா இப்படித்தான். தெரிஞ்ச ஊரிலேயே என்னால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்க நண்பர் ரங்கராஜு சொன்னதைக் கேட்டு நம்ம பத்ரிநாத் கேதார்நாத் என்றெல்லாம் கிளம்பியிருந்தால் - இப்படித்தான் நட்டாற்றில் நிற்கணும்."
   
நான் ஒன்றும் சொல்லவில்லை. (சொல்வதற்கு ஏதேனும் இருக்கா?) 
    
"சரி வாங்க இன்னும் கொஞ்சம் நடந்து பார்ப்போம். ஸ்டேஷனை ஒட்டியே இடது பக்கமாகவே போனால் ஒரு இடதுபக்கம் திருப்பம் - அங்கே ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கும். இதோ ஒரு இடது பக்கத் திருப்பம். ... போஸ்ட் ஆபீஸ் எங்கே காணோம்?"  
    
"தந்தி சேவை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். அதனால போஸ்ட் ஆபீசை விற்றிருப்பார்கள்!"
      
"ஆ அதோ இருக்கு பாருங்க போஸ்ட் ஆபீஸ்! முன்பு இந்த ஏரியா முழுவதும் போஸ்ட் ஆபீஸ்தான் இருக்கும். இப்போ இவ்வளவு சின்ன அலுவலகம் ஆகிவிட்டதே!"
       
"நாந்தான் சொன்னேனே - தபால் - தந்தி அலுவலகத்தில், தபாலை மட்டும் வைத்துக் கொண்டு, தந்தி பகுதியை விற்றுவிட்டார்கள்!"
         
"சோத்துப் பட்டி ஸ்கூல் எங்கே இருக்குன்னு கடையில விசாரியுங்க...." 
     
"இதோ பாரு - எனக்கு இடது காது சரியா கேக்காது. நீ அந்தப் பக்கத்திலிருந்து என்ன பேசினாலும் எனக்கு சரியா காதுல விழாது...  ... "
               
எதிரே வந்தவரிடம், "ஐயா சோத்துப்பட்டி ஸ்கூலு எங்கே இருக்கு?" என்று ஆர்வமாகக் கேட்டேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தபடி கடந்து சென்றார். 
               
"கண்ட்ராவி ... சோத்துப் பட்டியும் இல்ல, சொக்கப்பானையும் இல்ல. சேதுபதி ஹைஸ்கூல். -- இதோ இருக்குப் பாருங்க! வேகமா வாங்க." 
       
இதோ இன்னும் கொஞ்ச தூரத்தில் பாட்டி வீடு இருக்கின்ற தெரு வந்து விடும். 
              
இரண்டு மூன்று தெருக்களை சந்தேகமாக நோட்டமிட்டபடி நடந்தோம். 
                  
மனைவி கேட்கச் சொன்னதால், மீண்டும் எதிரே வந்த ஒருவரிடம், "சார் - கிருஷ்ணதேவராயர் தொப்பை குளம் எங்கே இருக்கு?" என்று கேட்டேன். 
          
"ஐயோ - இனிமே நீங்க வாயைத் திறக்காதீங்க. நான் பார்த்துக்கறேன். கிருஷ்ணராயர் தெப்பக் குளத் தெரு எங்கே இருக்கு?" என்று அவரிடம் கேட்க, அவர் தெருவைக் கைகாட்டி விட்டு சென்றார். 
              
"இதுதாங்க அந்தத் தெரு. இந்தத் தெருக்கோடியில் இதோ ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கு பார்த்தீர்களா! நாலு மாமாங்கம் முன்னாடி நான் இங்கே வராத நாட்களே கிடையாது. அப்புறம் கோயம்புத்தூரில் இருந்த நாட்களில், இந்த ஆஞ்சநேயரை ரொம்ப மிஸ் பண்ணினேன். "
     
"அதற்கப்புறம்?"
                       
"கல்யாணம் ஆன நாளிலிருந்து, உங்க மூஞ்சியைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொண்டிருக்கின்றேன். பாட்டி வீட்டிலிருந்து திரும்பி வரும்பொழுது இங்கே வந்து ஆஞ்சநேயரை தரிசிப்போம்."  
                 
"போம்."
           
"ஆஞ்சநேயர் கோவில் தாண்டி, அதே சாரியில் நாலைந்து வீடுகள் தள்ளி இருப்பதுதான் பாட்டி வீடு. வீட்டு வாசலிலே ஒரு பைப்பு இருக்கும். தெருவுல பாத்துகிட்டே வாங்க."
            
"சார் இந்தத் தெருவுல பைப்பு எங்கே இருக்கு?" 
               
ஒரு ஆட்டோக் காரர், "இந்தத் தெருவுல பைப்பு எதுவும் கிடையாது. அது இன்னும் ரெண்டு மூணு கிலோ மீட்டர் போவனும். ஆட்டோவுல ஏறிக்குங்க, நான் கொண்டு போய் விட்டுடறேன்" என்றார். 
             
ஒரு வீட்டு வாசலில் புதிய நம்பர் / அதற்குக் கீழே பழைய நம்பர் கேட்டில் எழுதியிருந்தது. அந்தப் பழைய நம்பரை வைத்து, வீட்டை சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் திருமதி. 
         
(அந்த பைப்பை மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அகற்றிவிட்டார்களாம், மதுரை கார்ப்பரேஷன் மக்கள்ஸ். எவ்வளவு பேரீச்சம் பழங்களோ? யார் தின்றார்களோ!) 
             

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

லாம்.. போம்... வேறு "வழி"யில்லை...!

என்னா அலைச்சல் சாமீ...@?!

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, கிருஷ்ணாராயர் தெப்பக்குளத்தெரு ஆஞ்சநேயர் கோயிலில் வடை ரொம்ப டேஸ்டா இருக்கும். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே, ஒரு மாத்வ பட்டாசாரியார் இருந்தார். இப்போ யார் இருக்காங்கனு தெரியலை. அப்படியே கோயில்லே இருந்து திரும்பி மறுபடி வடக்கு வெளி வீதி வந்தா வலப்பக்கமா ஒரு காமாட்சி அம்மன் கோயில் இருக்கு. அதன் சொந்தக்காரங்க வீட்டிலே தான் நாங்க குடி இருந்தோம். அந்த வீடு வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெருவும், மேலாவணி மூலவீதியும் சேரும் இடத்திலே இருக்கு. கண்டுபிடிச்சுக்குங்க. :)))))

Geetha Sambasivam said...

சேதுபதி ஹைஸ்கூலிலே தான் அப்பா வேலை செய்தார். அது சரி உங்க மனைவி எந்த ஸ்கூல்லே படிச்சாங்களாம்?? அதைச் சொல்லவே இல்லையே. நான் மதுரைக்குப் போறச்சே எல்லாம் ஓசிபிஎம் பள்ளியை தரிசனம் செய்துடறது வழக்கம். :))))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் ரயில்வே ஸ்டேஷன்லே இருந்து வெளியே வரச்சே இடப்பக்கமாத் திரும்பினால் சேதுபதி ஹைஸ்கூல் போயிடலாம். கொஞ்சம் நடக்கணும். ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரேயே மங்கம்மா சத்திரம். நீங்க சொல்லற மங்கம்மா பேசின் பிரிட்ஜுக்கும் சென்ட்ரலுக்கும் நடுப்பற! இப்போல்லாம் அங்கே ஜாஸ்தி எந்த ரயிலும் தங்கறதில்லை. அதெல்லாம் அந்தக் காலம்! :)))))

Geetha Sambasivam said...

உங்க மனைவி நடந்தே போகலாம்னுசொன்னது சரி. அந்தப்பக்கமிருந்து இங்கே சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் மற்றும் தெற்குப் பக்கம், கோயில் பக்கம்னு போகலாம். இங்கே இருந்து அங்கே போக ஒன்வே! அப்புறமா கட்டபொம்மன் சிலைக்குப் பக்கத்து பஸ் ஸ்டான்டுனு கஷ்டப்பட்டிருக்கவே வேண்டாம். ஒருகாலத்திலே அதான் சென்ட்ரல் பஸ் ஸ்டான்டாக இருந்தது. இப்போப் பெரியார்னு பேரை மாத்தி இருக்காங்க. :)))))

Geetha Sambasivam said...

நீங்க ஆரப்பாளையம், அரசரடிப் பக்கம் போயிட்டீங்க போலிருக்கு! அங்கிருந்து தினத்தந்தி ஆஃபீஸ் இருக்குமே அதற்கருகே உள்ள பாலத்தில் தானே வந்தீங்க! ஒரு ஆட்டோ வைச்சிருக்கலாம். ஆட்டோக்காரர் இன்னும் நல்லாச் சுத்திக் காட்டி இருப்பார்! :)))))) வெள்ளிக்கிழமை மட்டும் கோயிலுக்குப் போய் மாட்டிக்காதீங்க! தேவஸ்தான ஆஃபீஸ் தாண்டி வரிசை நிற்கும். :(

s suresh said...

உங்கள் கஷ்டத்தை இனிமையாக பகிர்ந்தமை அழகு! நன்றி!

அமைதிச்சாரல் said...

மதுரைத்தெருகளை நடந்தே அளக்கணும்ன்னு ஏதாவது வேண்டுதலா என்ன :-))

சே. குமார் said...

மதுரைக்குள் கால்நடை யாத்திரையா என்ன... சுத்தி சுத்தி வாறீங்க போல...

kg gouthaman said...

திருமதி படித்தது கேப்ரன்ஹால் ஹைஸ்கூல் என்கிறார். அதற்கு முன்பு 'சாந்தி வித்யாலயா' என்கிறார்.

Ranjani Narayanan said...

உங்கள் வீட்டில் திருமதி; எங்கள் வீட்டில் திருவாளர். மதுரை போய்விட்டால் கால் நடைதான். தல்லாகுளம், காலேஜ் ஹவுஸ், டவுன்ஹால் ஹோட்டேல்,மீனாட்சி அம்மன் கோவில், தங்கம் டாக்கீஸ், அமெரிக்கன் காலேஜ், தமுக்கம் க்ரௌண்ட்ஸ் என்று சுத்தி சுத்தி வந்து தன் பதின்ம வயது நினைவுகளை யெல்லாம் rewind பண்ணிப் பார்க்காமல் வரவே மாட்டார். எத்தனை முறை போனாலும் அலுக்காமல் சலிக்காமல் அதே இடங்களுக்குப் போவோம்!

கீதா மாதிரியே நானும் மதுரைக்குப் போய்விட்டு வந்தேன்!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் கேப்ரன் ஹாலா?? ஓசிபிஎம்முக்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். :)))) ஆனால் ஓசிபிஎம் ஸ்கூல் பஸ்ஸில் கேப்ரன் ஹால் மாணவியர் சிலரையும் ஏத்திட்டு வந்து
ஸ்கூல்லே முதல்லே விடுவாங்க. எங்களோட அப்படி நாலு மாணவிகள் வந்திருக்காங்க. தனியா உட்கார்ந்து அவங்களுக்குள்ளே பேசிப்பாங்க. :))))

Geetha Sambasivam said...

சாந்தி வித்யாயலயா கேட்டதில்லை. கேப்ரன் ஹால் பக்கமா ரயில் தண்டவாளத்தை ஒட்டி சரஸ்வதி வித்யாலயா தான் இருந்தது. அறுபதுகளில் தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் போன வேகத்திலேயே அந்த ஸ்கூல் இடிஞ்சு விழுந்து பல மாணவிகள் காயம், உயிர்ப் பலி போன்றவை. :((((( வரேன் திரும்ப வேலை வந்துடுச்சு.

kg gouthaman said...

திருமதி படித்த சாந்தி வித்யாலயா இருந்தது, விளாங்குடி ஏரியா. பாத்திமா கல்லூரிக்கு எதிரில் / அருகில்.

Geetha Sambasivam said...

ஓஹோ, விளாங்குடியிலா? அந்தப் பக்கம் ஜாஸ்தி தெரியாது. மதுரை டவுன் மட்டுமே நல்லாத் தெரியும். அதுவும் சரஸ்வதி வித்யாலயா விழுந்ததில் எங்க வீட்டுக்கு எதிரிலிருந்து அந்த ஸ்கூலுக்குப் போன பெண்ணெல்லாம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் ஆறுமாசம் இருந்தாள். :(( இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் அப்போ ரயில் முப்பது மைல் வேகத்தில் போயிருக்கலாம். அதுக்கே கட்டடம் விழுந்தது. எட்டு கிரஹ சேர்க்கைனால அப்படினும் மதுரை மக்கள் பேசிப்பாங்க. :)))))

சீனு said...

//கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தவருக்கு நன்றி கூறி, // ஹா ஹா ஹா என்னா நக்கலு

//சொல்வதற்கு ஏதேனும் இருக்கா?// ஹா ஹா ஹா ஒன்னும் பேச முடியாது

//மாமாங்கம் // மாமாங்கம் என்பது எத்தனை வருடங்கள்

Geetha Sambasivam said...

பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் மாமாங்கம் பற்றித் தெரியாதா சீனு சார்??? :)))))

வெங்கட் நாகராஜ் said...

பிறந்த/பழகிய ஊரில் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதே ஒரு சுகம் தான்....

நல்ல ரசிச்சு இருப்பாங்க! நீங்க ரசிக்கலைன்னாலும் அவங்களுக்காக போனதுக்கு உங்களுக்கு ஒரு பூங்கொத்து [வேற வழியில்லை என்பது தெரிந்திருந்தாலும்! )

குலசேகரன் said...

Mangamma Chattiram - the name should not mislead you to think it is an old historical monument. But it was previously. Now it has been recently renovated and AC rooms are available for visitors exactly opposite to Madurai Junction. In the same bldg., an exhibition of Madurai is permanently available. Everything new.

Sethupathi School's former Tamil teacher is the famous Tamil poet Subramania Bharatiyaar.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!