Wednesday, July 10, 2013

சுசீ.....


வைகையில் ஏறி 'சைட் பர்த்' இருக்கை எண் சரிபார்த்து ஷோல்டர் பேக்கை இருக்கையில் சரித்தபோது ஓரமாய் அமர்ந்திருந்த அந்தப் பெண் இன்னும் சற்று ஒதுங்கி உட்கார்ந்து கொண்டவள், நிமிர்ந்து பார்த்து விட்டுக் குனிந்து கொண்டாள். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவள் முகத்தையே பார்த்தவாறிருந்தான்.

"என்ன காரணம்னு ஒருதடவை சொல்லு
சுசீ.. நான் போயிடறேன்" என்றான் அந்த இளைஞன் சற்றே சன்னமான குரலில். 

இவள் அவனை லட்சியம் செய்யாதது போலத் தோன்றியது. 'ஈவ் டீசிங் மாதிரியோ' என்று எண்ணமிட்டபடி பெட்டியை ஸீட்டுக்கடியில் தள்ளியபோது அவனும் உதவி செய்தான். தன்மேல் அவன் முழங்கை இடிக்காமல் அந்தப் பெண் கால்களை ஒதுக்கிக் கொண்டாள்.

இருக்கையின் இந்த ஓரத்தில் அமர்ந்து அவளைப் பார்த்தபோது அவள் தன நகங்களை ஆர்வமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"எத்தனை தடவைஃ போன் பண்றேன்.... எடுக்கவே மாட்டேங்கறே..."


".........................."


"சொல்லு சுசீ.." என்றான் அவன் மறுபடியும். 

சுசீ! 

பெயர்ப் பொருத்தம் எப்படி இருக்கிறது என்று வழக்கமாகப் பார்க்கும் சுபாவத்தில் அவளைப் பார்த்தபோது இப்போது அணிந்திருக்கும் இந்த நாகரீக உடையை விட,  இவள் புடைவையில் பொருத்தமாகத் தெரிவாள் என்று தோன்றியது. அவள் முகம் 'என்னிடம் தவறில்லை' என்றதாகத் தோன்றியது. 22 லிருந்து 25 வயதுக்குள் இருக்குமா?

பெட்டியில் மற்றவர்கள் பார்ப்பது தெரிந்தும் அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான். ஏனோ மற்றவர்கள் தலையிடவில்லை. அவள் மெளனமாக இருந்தாலும் ஆட்சேபிக்கவில்லை, கோபப் படவில்லை என்பதிலிருந்து அவர்களிருவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று தெரிந்திருக்கலாம் என்று தோன்றியது.

எதிரே ஜன்னலோரம் அமர்ந்திருந்த வெள்ளை வேஷ்டி, வெள்ளை ஜிப்பாப் பெரியவர் மடியில் விரித்து வைத்திருந்த பஞ்சாங்கம், இன்னொரு ஜோதிடப் புத்தகத்துடன் அலைபேசியில் யாரிடமோ சற்றே பெரிய குரலில் 'ரஜ்ஜு தட்டுகிறது..' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் யாரையும் லட்சியம் செய்யாமல் ஒரு பள்ளியில் படிக்கும் வயதுடைய பையன் காதில் கருவி பொருத்திப் பாட்டுலகில்
ண்மூடி ஆழ்ந்திருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த அவன் அக்கா போன்ற பெண் கையில் வைத்திருந்த ஆங்கிலக் கதைப் புத்தகத்தை இரண்டு வரி படிப்பதும், இந்த ஜோடியை கவனிப்பதுமாக இருந்தாள்.

"சுசீ... நான் என்ன தப்பு செஞ்சேன்னு தெரியலை... இப்படி சட்டுன்னு சொல்லாம ஊருக்குக் கிளம்பிட்டே... நீ பேசி ரெண்டு நாளாச்சு... இப்படியே இருந்துடுவியா.... சொல்லு... "

"........................"

ரயில் கிளம்பப் போவுது சுசி... ப்ளீஸ்.." அவன் தவிப்பாக நிமிர்ந்து பெட்டியிலிருந்தோரை ஒரு நோட்டமிட்டான்.

எத்தனை நேரமாக நடக்கிறதோ இந்த நாடகம்? அவர்களிருவரையும் பொறுத்தவரை எத்தனை நாட்களாகவோ!


அந்தப் பெண் எதிர் இருக்கைக்கு ஜோதிடர் அருகே மாறியது. இவனும் அவள் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டான்.


'இவன் பெயர் என்னவாக இருக்கும்?' இவன் தோற்றத்தை வைத்துப் பார்த்தால் பரத் என்று சொல்லலாமா? சீ... அது புகழ்பெற்ற எழுத்தாளர்களுடைய கேரக்டர் பெயர். இவள் பெயர் 'சுசீ'யாக இருந்தால் அவன் பெயர் பரத்தாகத்தான் இருக்க வேண்டுமா என்ன! சிவா என்று சொல்லலாமா?


"ப்ளீஸ் சுசீ..." சில பழைய சம்பவங்களை மெல்லிய குரலில் அவளிடம் நினைவு படுத்தினான்.

'மதுரைக்குத்தானே போகிறாள்.... மறு உலகத்துக்கா போகிறாள்? சமயம் இருக்கிறது இளைஞனே...என்ன கலக்கம்?' பெயர் தெரியா இளைஞனிடம் மனம் பேசியது!


அவளின் நீண்ட மௌனம் இவன் எதோ பெரிய தவறு செய்திருப்பான் என்று தோன்றியது. என்னவாக இருக்கும்?

அவள் ஏதாவது பேசினால் தெரியலாம். 'பேசேன் சுசீ....'


அவள் எப்போது பேசுவாள் என்று அங்கிருந்த அனைவர் மனத்திலுமே எண்ணம் ஓடுமோ என்று தோன்றியது!


அவனைப் பார்த்தபோது தற்போதைய இளைஞர்களின் பிரதிநிதியாகத் தெரிந்தான். அவனுக்கும் அவள் வயதுதான் இருக்கும். சிவந்த முகம். கண்ணாடி அணிந்திருந்தான். ஒரு காதில் கடுக்கன் இருந்தது. வேண்டுதலோ, ஸ்டைலோ! நல்லமுறையில் உடையணிந்திருந்தான். இரண்டு மூன்று முறை அவன் அலைபேசியில் வந்த அழைப்புகளை யாரென்று பார்க்காமலேயே புறக்கணித்தான். அடிக்கடி
வாட்ச்சை வாட்ச்சைப் பார்த்துக் கொண்டான்.

பெட்டியுடன் தாண்டுபவர்களும், ஏற்கெனவே வந்து பெட்டியை வைத்துவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்த சிலரும் இவர்களை கவனிக்காதது போல கவனித்துக் கொண்டிருந்தனர்.


சுசி கைப்பையுடன் எழுந்து வாசலுக்காய் நடந்தாள். அவனும் பின் தொடர்ந்தான்.

"ஏதாவது ஷூட்டிங்கோ? குறும்படம் போல...." ஒரு திடீர்ச் சந்தேகத்தில் சுற்றிலும் பார்த்தபோது அப்படி எதுவும் இல்லையென்று தெரிந்தது!


சுவாரஸ்யம் அதிகரித்தது. எழுத நல்ல ஒரு கரு கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறு!

ரயில் கிளம்ப குரலெழுப்பியது. ஒரு மாமி அவசரமாக இவர்களைத் தள்ளிக் கொண்டு ஏறி உள்ளே வர, சுசி கீழே இறங்கி விட்டாள் என்று தெரிந்தது. மாமியுடன் வந்த இரண்டு வாண்டுகள் உள்ளே இடித்துக் கொண்டு ஓடிவர, மாமியின் கணவர் போலத் தெரிந்த நபர் மூன்று பெட்டிகளை வண்டியில் ஏற்றினார்.

"கவலைப் படாதே... ஸ்ரீ ஸ்டேஷனுக்கு வந்துடறேன்னு சொல்லியிருக்கான்... " என்று சொல்லிக் கொண்டே பெட்டியை ஜோதிடர் மாமா பக்கத்திலிருந்த சீட்டுக்குக் கொண்டு வந்து தள்ளி விட்டு, கிளம்பி விட்ட ரயிலிலிருந்து கீழே இறங்க ஓடினார். 

                                                       

இந்த ஜோடி என்ன ஆயிற்று என்று பார்க்க எழுந்த இயல்பான ஆர்வத்தில் வாசலுக்காய் மெல்ல நகர்ந்தபோது புத்தகம் படித்த பெண்ணும் எழுந்து வந்தாள்! ஆர்வம்!

மாமி ஏறியதுமே கீழே இறங்கி விட்ட சுசியைத் தொடர முடியாமல் அந்த இளைஞன்
, வாண்டுகள், மாமா மற்றும் பெட்டிகள் தன்னைத் தாண்டும் வரைக் காத்திருந்து, கீழே இறங்கியவன் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டு அலைந்தான். இந்த இடைவெளியில் சுசீ எந்தப் பக்கம் சென்றாள் என்று பார்க்க முடியவில்லை என்று தெரிந்தது.

கூட்டத்தில் தேடினான். அவனை இங்குமங்கும் தள்ளிக் கொண்டு கூட்டம் பயணிப்போரை
வழியனுப்ப முண்ட.. அவன் கண்களில் தவிப்பு தெரிந்தது. சுசியைக் காணோம் என்று தேடுகிறான் என்று தெரிந்தது. கண்கள் கலங்கியிருந்தன.

                                                    

ரயில் வேகமெடுத்தபோது அவன் கூட்டத்தின் நடுவே பரபரப்பாகத் தேடியபடி தன்னுடைய அலைபேசியை எடுத்து வேகமாக டயல் செய்வது தெரிந்தது.

ஒருவேளை அடுத்த பெட்டியில் ஏறி 'வெஸ்டிபில் கோச்' என்பதால் சுசீ இந்தப் பக்கமாக உள்ளே வருவாளோ என்று தோன்றியது. 

காணோம்! வேறு பெட்டியிலேயே உட்கார்ந்து விட்டாளோ!

ம்....ஹூம்! எழுதக் கிடைத்த நல்ல ஒரு கரு கிடைக்காமல் போச்சு!

26 comments:

T.N.MURALIDHARAN said...

//புத்தகம் படித்த பெண்ணும் எழுந்து வந்தாள்! ஆர்வம்!//
எங்களுக்கும்தான் அந்த ஆர்வம்! அடுத்த கதையில கண்டிநியு பண்ணுங்க

வெங்கட் நாகராஜ் said...

அட.... ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் குறையவே இல்லை! என்ன நடக்கப் போகிறது எனும் ஆர்வம்...

கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை.... :(

கவியாழி கண்ணதாசன் said...

இதுவே ஒரு கதையுமாச்சே?

middleclassmadhavi said...

Rayil payanangalil thaan evvaluvu mudivu theriyaadha kadhaigal!!

அப்பாதுரை said...

நல்லாத்தான் இருக்கு இதுவும்.
//ஷூட்டிங்கோ? குறும்படம் போல
nice.

அமைதிச்சாரல் said...

இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கு.

இமா said...

சுவாரசியமான எழுத்து.

கோமதி அரசு said...

ஒருவேளை அடுத்த பெட்டியில் ஏறி 'வெஸ்டிபில் கோச்' என்பதால் சுசீ இந்தப் பக்கமாக உள்ளே வருவாளோ என்று தோன்றியது.//

அப்புறம் என்னவாகும் என்ற ஆவலை தூண்டிய சிறு கதை.

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்து விடும், எப்போதும் உங்கள் கதைகள். முடிவும் நன்று:)!

geethasmbsvm6 said...

இதுக்கு மேலே என்ன ஆச்சு என்ற தவிப்பு இருந்தாலும் இந்தக் கதையை இதுக்கு மேலே தொடரவும் முடியாது; கூடவும் கூடாது. அருமை. தேர்ந்த எழுத்தாளராக மாறி வருகிறீர்கள். வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

தொடர,

ஹிஹிஹி, நான் தொடர்வதற்கு இது. கதையைத் தொடர இல்லை. :)))))

Ranjani Narayanan said...

நானும் கீதாவின் கட்சி. இந்தக் கதையை இப்படியே விட்டுவிடுங்கள். அவரவர்களே ஊகித்துக் கொள்ளட்டும்!

அருமையான விவரிப்பு!

வல்லிசிம்ஹன் said...

நீங்களாவது பயணத்தைத் தொடர்ந்தீர்களா. இல்லை இறங்கிவிட்டீர்களா:)
சுவாரஸ்யம்.

ஜீவி said...

ரஜ்ஜூ தட்டினது தான் காரணம். அதனால் தான் இருவருக்கும் இடையே காரணம் தெரியாத இடமாற்றம். பயணத்தை பாதியிலேயே வெட்டிய காரணத்தை ஒரு சின்ன க்ளூவில் அடக்கிக் காட்டியிருக்கிறீர்களே!

பாராட்டுகள்; சுவாரஸ்யமாய் எழுதினது க்கும் சேர்த்து.

சே. குமார் said...

எதுவுமே பேசாத கதாபாத்திரன் பெயர் சொல்லி மற்றவர்களின் பெயர் விடுத்து அருமை...

ஆமா சுசீ எங்கே போனாள்?

சீனு said...

//ம்....ஹூம்! எழுதக் கிடைத்த நல்ல ஒரு கரு கிடைக்காமல் போச்சு!//

ம்....ஹூம்! மிகப் பெரிய தேசியப் பிரச்சனை ஹா ஹா ஹா

ரொம்ப நல்ல இருந்தது சார், இது அனுபவமா இல்ல கதையான்னு எனக்கு இன்னும் தெரியல..

பட் ஜோதிடர மாமான்னு விளிச்ச உங்க நேர்ம எனக்குப் புடிச்சிருக்கு ஹா ஹா ஹா

Madhavan Srinivasagopalan said...

// வைகையில் ஏறி 'சைட் பர்த்' இருக்கை எண் சரிபார்த்து //

அதெப்படி?...... சம்திங் ராங்..

ம்ம்ம்ம்ம் எப்பலேருந்து வைகைல படுக்கை வசதி (SL) ஆரம்பிச்சாங்க ?

Or
//வைகையில்//
வைகறையில் ?

Moral of this Story(Post)
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோனும்.. ஆமா..

ezhil said...

சுசி எங்கேன்னு மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருக்குது

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம் எப்பலேருந்து வைகைல படுக்கை வசதி (SL) ஆரம்பிச்சாங்க ?//

அட???ஆமா இல்ல! தோணவே இல்லை பாருங்க, மாதவன் ஶ்ரீநிவாசகோபாலன், சரியாப் பிடிச்சீங்க/ மாட்டிக்கிட்டாரே ! :)))))))))))

s suresh said...

சுவாரஸ்யமான கதை! முடிவு தெரியாவிட்டாலும்!.. நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவு....? சுவாரஸ்யம்....!

Ananya Mahadevan said...

முதல் ரெண்டு வரியிலேயே கொக்கி போட்டு இழுத்து விட்டது.. அருமையான நடை சுவாரஸ்யமான வர்ணனை, முடிவு தெரியாமல் வருத்தம். அடிபொளி!

HVL said...

படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் எழுத்து நடை.கரு கிடைக்கவில்லை என்றால் என்ன, ஒரு பதிவுக்கான விஷயம் கிடைத்துவிட்டதே!

கோவை2தில்லி said...

சுவாரசியமான எழுத்து. சுசீயின் கூட வந்தவருக்கு பெயர் யோசித்தது வித்தியாசமாக இருந்தது...:)

மோ.சி. பாலன் said...

விறுவிறுப்பான கதை இப்படி முடிந்துவிட்டதே....

devadass snr said...

தங்களது தவிப்பை எங்கள் மனதிலும் விதைத்து இனம் தெரியாத ஒரு வலியை மனதில் எழ வைத்து விட்டீர்களே?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!