செவ்வாய், 2 ஜூலை, 2013

பொன்னியின் செல்வன், ஒலிப்புத்தகம், சிவசங்கரி, பாரதிராஜா, பறக்கும் தட்டு - வெட்டி அரட்டை

     
30 மணி நேர 'சிவகாமியின் சபதம்' ஒலிப் புத்தகத்தைத் தொடர்ந்து 78 மணிநேர ஒலிப்புத்தக்மாக "பொன்னியின் செல்வன்" நாவலை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடல்கள், வெவ்வேறு குரல்களில் கதை மாந்தர்கள் பேசும் வகையில் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் பம்பாய்க் கண்ணன். தயாரிப்புச் செலவு சி. கே வெங்கட்ராமன். சென்ற வாரம் நாரத கான சபாவில் வெளியீடு. இது படித்த செய்தி.

                                                 

கிழக்குப் பதிப்பகத்தில் விற்ற தி.ஜா கதைகளா புதுமைப்பித்தன் கதைகளா  ஒன்று ஒலி வடிவில் வந்திருப்பதை வாங்க  என்று எண்ணியிருந்தேன். அப்புறம் ஸுஜாதா வெங்கட்ராமன் எழுதிய ஒரு சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒலிப்புத்தகம். அவை எல்லாம் விட்டுப் போயிற்று.     

                                                    

'பொன்னியின் செல்வனை'யாவது அப்படி விட்டு விடாமல் இருக்க வேண்டும்.


யாராவது வாங்கியிருந்தால் கொடுங்கப்பா.... கேட்டு விட்டுத் தருகிறேன்!

                                                          


சுஹாசினி அன்ட் கோ கூட பொன்னியின் செல்வனைப் படமாக எடுக்க நினைத்திருந்தார்களாம்! கமல் கூட அப்படி ஒரு ஐடியா வைத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறார். முன்னதாக எம் ஜி ஆர்! ஆனால் ஒன்று. மறுபடி மறுபடிச் சொன்னாலும் புத்தகமாகப் படித்தவர்களுக்கு இந்த நாவலைத் திரைப் படமாகப் பார்க்கப் பிடிக்காதுதான். முதலில் படிக்கிறோமோ, பார்க்கிறோமோ... அதுதான் மனதில் நிற்கும்!    

================================================

சிவசங்கரி விகனில் எழுதியுள்ள ராட்சசர்கள் கதை பற்றி முகநூலில் ஒரு சிறு விவாதம் இருந்தது. பிடிக்காதவர்கள் 'ராட்சசிகள்' என்று எதிர்க்கதை எழுதி விடுங்களேன்!   
==========================================  

                                                

பாரதிராஜா பதில்கள். முன்பு அல்லது முதலில் மணிவண்ணன் பற்றிச் சொன்னார். இப்போது விஜயகாந்த் பற்றி. அடுத்த வாரக் கேள்வி முன்னோட்டமாக இளையராஜா பற்றிய கேள்வி ஒன்று இருக்கிறது!  என்ன பதில் வருமோ! ஆக, மணிவண்ணன் பற்றியும் விஜயகாந்த் பற்றியும் சொல்லியிருக்கும் பதில்களால் பாரதிராஜாவின் மீது இருந்த மதிப்பு குறைகிறது. ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் பேசுவதே இல்லை பாரதிராஜா!   
=====================================

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாங்கள் வரக் கூடாது என்று எல்லா அரசியல் கட்சிகளுமே நினைக்கின்றன.மற்றவர்களை மாட்டி விடும்போது இருக்கும் உற்சாகம் தங்களுக்கு என்றவுடன் பதுங்கிக் கொள்கின்றன!    
======================================
              
விகடனில், 'அறிவிழி' பக்கத்தில் அன்டன் பிரகாஷ் எழுதியிருக்கும் பகுதியில் ஒரு பாரா...: ...."கேமிரா வசதி இல்லாத கணினிகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது. வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தேவையான internet explorer, Firefox பிரவுசர் மென்பொருட்களை வீடியோ ஆடியோ போன்றவற்றைக் கேட்க/பார்க்க உதவும் Flash தொழில்நுட்பம் மூலமாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வலைப்பக்கத்தின் மூலம் கணினியில் இருக்கும் கேமிராவை இயக்கி உங்களைப் பார்க்க முடியும். இது எப்படி நடக்கிறது என்பதை விளக்க, டெக் ஆசாமி ஒருவர் வலைப்பக்கம் தயாரித்திருக்கிறார்.  அந்தப் பக்கத்துக்குச் செல்பவர்களின் கேமிரா இயக்கப்படும் சாத்தியக்கூறு இருப்பதால், அதைப் பகிரங்கமாக இந்தக் கட்டுரையில் கொடுக்க விரும்பவில்லை. உங்களுக்குத் தேவையெனில் @antonprakash க்கு ட்வீட் அனுப்புங்கள். நான் Direct Message ஆகத் தருகிறேன்..."    
============================================
          
கடந்தமாதம் 23ம் தேதி சென்னையில் ஒரு வங்கி அலுவலர் குடும்பம் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகச் சொன்னதாக ஹிந்துவில் நியூஸ் வந்ததாக தினமணி ஞாயிறு 'சொல்வேட்டை'யில் படித்தேன். பளிச்சிடும் மஞ்சள் நிற ஒளியோடு 5 தட்டுகள் தெற்கிலிருந்து வடக்கே பயணித்ததைத் தானும் தன குடும்பத்தாரும் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறாராம். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அவை விண்ணிலிருந்து விழும் எரிகற்களாக இருக்கலாம் என்று சொன்னதாம்.   

                    

   

பல வருடங்களுக்கு முன் இந்தப் பறக்கும் தட்டு விஷயம் தனிக் கட்டுரைகளாக நிறைய பத்திரிகைகளில் படித்த நினைவு. மயன் உலகம் பற்றிச் சொல்லும்போது கூட இவர்களுக்கு அயல் கிரக மனிதர்கள் உதவி இருந்திருக்கலாம் என்றுதானே படித்தோம்? அவர்கள் சிற்பங்களிலும் அப்படிப்பட்ட உருவங்கள் காணப்படுவதாகவும் படித்தேன்.

             
இந்தச் செய்தி இங்கு (தினமணி சொல்வேட்டைப் பகுதியில்) எதற்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றால் இந்தவார சொல்வேட்டையில் பாராநார்மல் என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல்லை ஆராய! அடுத்தவாரச் சொல் surrogate, surrogacy.
 =======================================

                                                      
"ஒரு காலத்தில் தமிழ் சினிமா எப்படி மும்பையைப் பார்த்து கெட்டுபோய் இருந்ததோ, அப்படி இப்போது மலையாள சினிமா, தமிழ் சினிமாவைப் பார்த்துக் கெட்டுப்போய் இருக்கிறது. தமிழகத்தில் வெளியாகும் நான்காம் தர கமர்ஷியல் படங்களை அப்படியே பிரதியெடுத்து, ஏழாந்தர சினிமாவாக மலையாளத்தில் வெளியிடுகிறார்கள். ஒரு காலத்தில் நல்ல படங்களை மட்டுமே கொடுத்த கேரளா சினிமா, இப்போது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆர்ட் படங்கள் முற்றிலுமாகத் தொலைந்து விட்டன. வேறென்ன சொல்ல?"  
                

-விகடனில் மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். 

25 கருத்துகள்:

 1. மனதில் நிற்பது உண்மை...

  பா பாவம்...

  substitute...?

  பதிலளிநீக்கு
 2. பாரதிராஜா இங்க்லிஷ் பேசுறாரா? காமெடி தாங்கலியே.

  குரோம்பேட்டையில் இருந்தப்ப எங்க காலனியில் பறக்கும் தட்டு நிறையப் பார்த்திருக்கிறேன். காலை மாலை இரண்டு வேளையிலும். கூடவே பெருத்த ஓசையுடன் "என்னாடி இழவு சமையல் இது?" என்ற இரைச்சலும் கேட்கும்.

  ஆக மொத்தம் பொசெ யாராவது படமாக எடுத்தால் எனக்கும் பொசெ கதை தெரியும் என்று சொல்லிக்கலாம்.. யாராவது எடுங்கப்பா. கமல்ஹாசன் அதுல ஒரு முஸ்லிம் கேரக்டரைப் போட்டு சும்மா எதுனாவது கிளப்பிவிட்டு கொஞ்சம் காசு பாத்தாருனு வைங்க.. நானும் காசு கொடுத்து டிகெட் வாங்கிப் பாக்குறேன் (நிசமா).

  பதிலளிநீக்கு
 3. படிப்பவர்கள் இருந்த பொழுது புத்தகம், அதில் சுணக்கம் காணும் பொழுது கேட்க ஒலி வடிவம்,அதுக்கும் நோகுதுனா பார்க்க சினிமா வடிவம்.. அத்தனை உரு மாற்றங்களுக்கு பின்னாடியும் ஆதி பழசின் மகிகை மட்டும் மாறவில்லை என்றால்..

  'பொன்னியின் செல்வனை'ப் புறந்தள்ளுகிற மாதிரி இன்னொன்றைச் சொல்ல முடியவில்லையே, ஏன்? ஏன்?

  சமீபத்தில் தாராசுரம் போயிருந்தேன். அருமையான கைடு கிடைத்தார்.
  இராஜராஜ சோழனிலிருந்து இரண்டாம் இராஜேந்திரன் வரையிலான சரித்திர காலம் சிற்பங்களாய் கதை சொல்ல
  நெஞ்சின் அடி ஆழத்திலோ கல்கி அவர்கள் புன்னகையுடன் நிழலாடினார்.
  மன்னவன் புகழ் மங்காதடீ, தோழி!

  பதிலளிநீக்கு
 4. பறக்கும் தட்டை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன்.புதிய செய்திக்கு நன்றி.எல்லா செய்திகளும் பயனுள்ளதாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 5. பாரதிராஜா பதில்கள். முன்பு அல்லது முதலில் மணிவண்ணன் பற்றிச் சொன்னார். இப்போது விஜயகாந்த் பற்றி. அடுத்த வாரக் கேள்வி முன்னோட்டமாக இளையராஜா பற்றிய கேள்வி ஒன்று இருக்கிறது! என்ன பதில் வருமோ! ஆக, மணிவண்ணன் பற்றியும் விஜயகாந்த் பற்றியும் சொல்லியிருக்கும் பதில்களால் பாரதிராஜாவின் மீது இருந்த மதிப்பு குறைகிறது. ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் பேசுவதே இல்லை பாரதிராஜா! //

  நல்லவேளையா வாராந்தரிகளையே படிப்பதில்லை. எல்லாருமே மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று சொல்வார்கள் போலிருக்கு. :((((

  பதிலளிநீக்கு
 6. பறக்கும் தட்டு பற்றிப் பல கதைகள் சிறுவர் கதைகளாகப் படித்திருக்கிறேன். :)))))

  பதிலளிநீக்கு
 7. அடூர் கோபாலகிருஷ்ணன் சொல்வது நூற்றுக்கு ஆயிரம் சதம் உண்மை. மலையாள சினிமா கெட்டுப் போய்விட்டது என்பதும் உண்மை. தமிழ் சினிமா முன்னேறவே இல்லை. நான் சொல்வது தொழில் நுட்பத்தில் இல்லை. உண்மையான சினிமா என்ன என்பதில் தமிழ் சினிமாவுக்கு இன்னமும் குழப்பம். மெதுவாகப் புரியாமல் வசனம் பேசினால் போதும்னு நினைக்கிறாங்க போல! :((((( அதிலும் இப்போதைய திரைப்படங்கள் தரத்தில் மிகவும் மோசம்.

  பதிலளிநீக்கு
 8. சிவசங்கரி எழுதின ராக்ஷசர்கள் பத்தித் தெரியாது. தேடிப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நாளைய முதல்வர் விஜயகாந்த்!
  (இப்பல்லாம் இந்தமாதிரி கூச்சல் போடுறாங்களா?)

  பதிலளிநீக்கு
 10. மலையாள சினிமா எப்போ ஒழுங்காக இருந்தது இப்போ கெட்டுப் போக?

  பதிலளிநீக்கு
 11. நான் பார்க்காமல் விட்டேனே. இந்தக் குரோம்பேட்டை அதிசயங்களுக்கு அளவே இல்லை:)பொன்னியின் செல்வன் அப்படியே இருக்கட்டும். யாரும் நடித்துக் குழப்பவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 12. //30 மணி நேர 'சிவகாமியின் சபதம்' ஒலிப் புத்தகத்தைத் தொடர்ந்து 78 மணிநேர ஒலிப்புத்தக்மாக "பொன்னியின் செல்வன்" நாவலை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்//
  நல்ல விஷயம் ரயில் பயணங்கங்களில் கேட்கலாம்.
  நல்ல அரட்டை.

  பதிலளிநீக்கு
 13. //படிப்பவர்கள் இருந்த பொழுது புத்தகம், அதில் சுணக்கம் காணும் பொழுது கேட்க ஒலி வடிவம்,அதுக்கும் நோகுதுனா பார்க்க சினிமா வடிவம்.. அத்தனை உரு மாற்றங்களுக்கு பின்னாடியும் ஆதி பழசின் மகிகை மட்டும் மாறவில்லை என்றால்..

  'பொன்னியின் செல்வனை'ப் புறந்தள்ளுகிற மாதிரி இன்னொன்றைச் சொல்ல முடியவில்லையே, ஏன்? ஏன்?

  சமீபத்தில் தாராசுரம் போயிருந்தேன். அருமையான கைடு கிடைத்தார்.
  இராஜராஜ சோழனிலிருந்து இரண்டாம் இராஜேந்திரன் வரையிலான சரித்திர காலம் சிற்பங்களாய் கதை சொல்ல
  நெஞ்சின் அடி ஆழத்திலோ கல்கி அவர்கள் புன்னகையுடன் நிழலாடினார்.
  மன்னவன் புகழ் மங்காதடீ, தோழி!// Brilliant!

  பதிலளிநீக்கு
 14. பொன்னியின் செல்வனை கல்கியின் பொன்னியின் செல்வனாக எடுத்தால் பார்க்க நான் ரெடி :-)

  அதனால் தான் பா.ராஜா பதில்களைத் தவிர்த்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
 15. -பொன்னியின் செல்வன் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பாதிப்பையும் திரைப்படம் நிச்சயம் தராது.
  -பாரதிராஜா பேசும் பட்லர் இங்கிலீஷை நீர்தான் மெச்சிக்கணும்!
  -சிவசங்கரி சாவி ஸார் காலத்துல கதை எழுதின ஞாபகத்துலயே இப்பவும் எழுதியிருக்காங்க. இப்ப ட்ரெண்ட் வேறம்மா தாயி! நல்ல டமாஸு!
  -அடூரின் ஸ்டேட்மெண்ட் தப்புன்னு தான் தோணுது எனக்கு. இப்பவும் அவங்க பீல்டுல நல்ல படங்கள் வந்துட்டுதானே இரு்க்கு...! கமர்ஷியலும் கலையும் எல்லக் காலத்துலயும் எல்லா மொழிலயும் இருக்கத்தான் செய்யுது.

  பதிலளிநீக்கு
 16. எல்லாமே அருமை...

  பாரதிராஜா எல்லாரையும் கேவலமாக பேசுவார் என்பதால்தான் இப்படிப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 17. //சிவசங்கரி விகனில் எழுதியுள்ள ராட்சசர்கள் கதை //

  எப்போதைய விகடன்? விகடனின் புதிய (வலைத்)தோற்றம் பிடிக்கவேயில்லை, குழப்புகிறது. ஏற்கனவே இணையத்தில் புத்தகங்கள் வாசிக்க சிரமமாக இருக்கிறது. இப்போ இதுவேற.. பணத்தைக் கட்டியது வீணாகுதேன்னு அப்பப்போ போய்ப் பாத்துக்கறேன். :-((

  பதிலளிநீக்கு
 18. //சிவசங்கரி விகனில் எழுதியுள்ள ராட்சசர்கள் கதை //

  தேடிப் படிச்சுட்டேன். நிஜம். எவ்வளவோ செய்திகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உண்மையான நிகழ்வுகள் கண்டும், கேட்டும், படித்தும்கூட சில தாய்மார்கள் இப்படி இருப்பது வேதனை. இன்னொரு விஷயம், பெண்குழந்தைகள் மட்டுமல்ல, ஆண்குழந்தைகளுக்கும் கவனம் தேவையே. :-(

  //பிடிக்காதவர்கள் 'ராட்சசிகள்' என்று எதிர்க்கதை//
  இப்போ போன வாரம்னு நினைக்கிறேன், ஆஸ்திரேலியாவோ எங்கயோ, 11-வயசு சிறுவனை அவனின் தோழியின் அம்மா.... கொடுமை! ஆனா, ஆண்குழந்தைகளும் ஆண்களால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அரிதிலும் அரிது(ன்னு நம்புறேன்).

  பதிலளிநீக்கு
 19. ஹூசைனைம்மா, இணையத்தில் சிவசங்கரியின் ராட்சசர்கள் கிடைச்சால் சுட்டி கொடுங்க. படிக்கலாம். :))))

  பதிலளிநீக்கு
 20. பல தகவல்கள். நல்ல பகிர்வு.

  பெயர் பெற்ற கதைகள் படமாக்கப்படுகையில் வாசகருக்கு மட்டுமல்ல எழுதியவருக்கும்(அவர் காலத்திலேயே வெளிவருகையில்) திருப்தி கிடைத்ததில்லை பெரும்பாலும்.

  ராட்சசர்கள் கதை தேடி வாசித்து விடுகிறேன் நானும்.

  பதிலளிநீக்கு
 21. //சிவசங்கரியின் ராட்சசர்கள் கிடைச்சால் சுட்டி கொடுங்க. படிக்கலாம். :))))//

  கீதாம்மா.. 26.6.13 தேதியிட்ட விகடனில் 'நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில்' வந்திருக்கிற கதை.

  புதுசாக ஒன்றுமில்லை. கதையைச் சொன்ன விதமும் வெகு சாதாரணமாய் இருந்தது இன்னொரு ஏமாற்றம்.

  பதிலளிநீக்கு
 22. பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் ஒலிப்பதிவின் நேரம் பல சமயங்களில் பம்பாய் கண்ணனுடன் நான் இருந்துள்ளேன்.இதைக் கொண்டுவர அவரின் உழைப்பு ஏராளம்.தவிர்த்து, அதில் என் பங்கும் வேண்டும் என கண்ணனிடம் வாதாடி, கோவில் குருக்களாக மூன்று, நான்கு அத்தியாயங்களில் பேசியுள்ளேன் என்பதால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 23. // T.V.ராதாகிருஷ்ணன் said...
  பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் ஒலிப்பதிவின் நேரம் பல சமயங்களில் பம்பாய் கண்ணனுடன் நான் இருந்துள்ளேன்.இதைக் கொண்டுவர அவரின் உழைப்பு ஏராளம்.தவிர்த்து, அதில் என் பங்கும் வேண்டும் என கண்ணனிடம் வாதாடி, கோவில் குருக்களாக மூன்று, நான்கு அத்தியாயங்களில் பேசியுள்ளேன் என்பதால் மகிழ்ச்சி.//
  தகவலுக்கு நன்றி - திரு டி வி இராதாகிருஷ்ணன்.
  திரு பாம்பே கண்ணன் எங்கள் ஊர்க்காரர். (நாகப்பட்டினம்) என்னுடைய அண்ணனின் நண்பர் பட்டாளத்தில் ஒருவர். அண்ணனின் வகுப்புத் தோழர். அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த 'கண்ணன்' என்கிற சிறுவர் பத்திரிக்கையை, நான் இந்தக் கண்ணன் வீட்டிற்குச் சென்று தவறாமல் படித்து வந்து விடுவேன். அவருடைய வீடு எங்கள் வீட்டிற்கு நாலைந்து வீடுகள் தள்ளி இருந்தது. திரு கண்ணன் அவர்களின் தாத்தா (பெயர் வெங்கடாச்சாரி) அந்த ஊரிலேயே பெரிய வக்கீல். விருந்தோம்பலில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

  பதிலளிநீக்கு
 24. விகடன் வாரப்பத்திரிகையைப் பார்த்தே மாமாங்கம் ஆச்சு. நெட்டில் கிடைக்குதானு பார்க்கிறேன். :)))) தேடச் சோம்பல்! :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!